Sunday, November 29, 2009

தமிழ் உங்களின் தெரிவு

தமிழ் மொழியைப் பயன்படுத்துவதும், மேம்படுத்துவதும் ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள ஒரு தெரிவு, முடிவு. மொழி ஒரு நாட்டின் குடியுருமை போல் அல்ல, பிறந்தால் பெறுவதற்கு. பெற்றோர் தமிழ், அதனால் நான் தமிழ் என்ற மொழி அடையாளம் வலுவானதல்ல. தமிழ் ஒரு கட்டாய மொழியாக எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், இலங்கையில் சிங்களத்தில், மலேசியாவில் மலேய மொழியில் ஒருவர் தனது கல்வியைப் பெறலாம். தமிழ் முற்றிலும் உமது தெரிவு.

தமிழ் ஒரு சமுதாய மொழி. ஒரு மூதை நாகரீகத்தின் உயிர்த் துடிப்பு. சிந்தனை ஊற்றுக்களின், கலைகளின் களம். தமிழ் கற்பதால் பொருளியல் நோக்கில் நீங்கள் பெறுவது சிறிதே. சமுதாய, மொழியியல், கருத்து நோக்கில் நீங்கள் நன்மைகள் பெற முடியும். இதே நன்மைகளை நீங்கள் பிற மொழிகளைக் கற்றும் பெற முடியும். என்றாலும் இன்று பெரும்பான்மைத் தமிழர்களின் மொழியாக தமிழ் இன்னும் உள்ளது.

மலேசியாவில் வெளிவரும் தமிழ் ராக் இசை, தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ் அறிவியல் கருத்தரங்கம், சிங்கப்பூரில் மேடையேற்றப்படும் தமிழ் நாடகம், மொரிசியசில் நடைபெறும் தமிழ் வகுப்பு, அமெரிக்காவில் நடைபெறும் தமிழ்ச் சங்க மாநாடு, இலண்டனில் வெளியாகும் தமிழ் ராப் இசை, இலங்கையில் ஆக்கப்படும் தமிழ் மின்னூலகம், பிரான்சில் வெளிவந்த அறிவுக்களஞ்சியம், அமீரகத்தில் நடைபெறும் தமிழ் கணினிப் பயிலரங்கம், கனடாவில் நடைபெறும் கலைச்சொல்லாக்கம், யேர்மனியில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு என பல மில்லியன் மக்களின் தெரிவாக தமிழ் உள்ளது.

எனினும் மாறிவரும் பொருளாதார, அரசியல் சூழல் தமிழை இடர் நிலைக்கு தள்ளி வருகிறது. தமிழ் தமிழருக்கு ஒரு தெரிவாக இருக்கும் வாய்ப்பு அருகி வருகிறது. மொழியியல் நோக்கில் தற்காலத் தேவைகளுக்கும், அறிவியல் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சி போதாமல் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழைத் தேர்ந்து, தமிழில் பேசுவோரை இழிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அடிப்படைவாதிகளின் மொழி என்று அடையாள அரசியலில் சிக்கவைத்து சிதறடிக்கப்படுகிறது.

எமது மொழியை நாம் வளப்படுத்த வேண்டும். விரும்புவோர் எல்லோரும் கற்க வாய்ப்புக்கள் தொடர்ந்து பேணப்பட வேண்டும். உங்களின் தெரிவாகத் தமிழ் இருந்தால், தமிழ் வெல்லும்.

Sunday, November 22, 2009

தமிழ் விக்கியின் 20 000 கட்டுரைகள் மைல்கல்

தமிழ் விக்கிப்பீடியா 20 000 கட்டுரைகளை நவம்பர் 22, 2009 இல் தாண்டியது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இன்று இணையத்தில் பல்துறைத் தகவல்களைப் பகிரும் பெரும் தமிழ் வலைத்தளம் தமிழ் விக்கிப்பீடியா ஆகும். ஒருங்குறியில் தமிழில் தேடினால் பல குறி சொற்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் முதல் தேர்வாக வருகின்றன. இந்திய மொழிகளில் 1.5 கிபைட் மேற்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கையில் தமிழ் முதலாவதாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு Regional analysis of South Asian languages and their Wikipedias.

மேற்கூறியது நல்ல வளர்ச்சி எனினும் தமிழின் வளங்களுடன் ஒப்பிடுகையில் போதாது. தமிழ் பேசும் மக்கள் தொகை (70+ மில்லியன்) அடிப்படையில், மொழியியல் (2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கண, இலக்கிய வளர்ச்சி) நோக்கில் தமிழ் வளங்கள் நிறைந்த மொழி. இப்படிப்பட்ட வளங்கள் குறைந்த பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளை விட தமிழ் தேக்க நிலையில் உள்ளது. இதற்கு காரணங்கள் என்ன.

தமிழ் விக்கிப்பீடியா இன்னும் பெரும்பான்மைத் தமிழ் இணையச் சமூகத்துக்கோ, அல்லது பொதுத் தமிழ்ச் சமூகத்துக்கோ அறிமுகம் ஆகவில்லை. பெரும்பான்மைத் தமிழ் மக்களுக்கு இணைய இணைப்பு இன்னும் இல்லாமையே முதன்மைக் காரணம் ஆகும். அப்படி இருந்தாலும் தமிழ்க் கணிமை பற்றி அறிந்திராமை இன்னுமொரு காரணம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய பல செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழ் விக்கிப்பீடியாவை பஞ்சாபி, வங்காளம், இந்தி போன்ற வளங்கள் நிறைந்த இந்திய மொழிகளுடன் ஒப்பிடுதல் தகும். இந்த ஒப்பிடுதலில் இருந்து தெரிவது என்னவென்றால், அனைத்து இந்திய மொழி விக்கிப்பீடியாக்களும் அதிக வளர்ச்சி அடையாத திட்டங்களாகவே உள்ளன. பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா இன்னும் முறையாக தொடங்கப்படவே இல்லை. வங்காள மொழியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலை நிலவுகிறது. இந்தி தற்போது நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது, ஆனால் அவர்களின் வளங்களோடு ஒப்பிடுகையில் போதாது. மலையாளம் விக்கி மட்டும் இந்திய மொழிகளில் குறைந்த வளங்களோடு நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. அவர்களது தரம் சிறந்தது. ஆனால் தற்போது 11 400 வரையான கட்டுரைகளையே கொண்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவை தொடந்து பரந்த உலகளாவிய தமிழ்ச் சமூகத்து அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்கள் பங்களிப்பையும் நீங்கள் நல்க வேண்டும்.