Friday, October 14, 2011

தமிழ் விக்கிப்பீடியா 39 000 கட்டுரைகளைத் தாண்டியது

கடந்த ஆறு மாதங்களில் 9 000 புதிய குறு, நெடுங் கட்டுரைகள் உருவாக்கப்பட்டு, தற்போது தமிழ் விக்கிப்பீடியா 39 000 கட்டுரைகளைத் தாண்டி உள்ளது. கட்டுரைகளின் எண்ணிக்கையில் இந்திய விக்கிகளில் 3 ம் இடத்தில் இந்தி, தெலுங்குக்கு அடுத்தபடியாக தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. உலக அளவில் நாம் இப்போது 61 நிலையில் உள்ளோம். பெரும்பாலான கட்டுரைகள் தானியங்கிகள் இல்லாமல் பயனர்களால் நேரடியாக உருவாக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக இலங்கையில் இருந்து புன்னியாமீன், சிங்கப்பூரில் இருந்து கார்த்திக், ஃகொங்கொங்கில் இருந்து அருண், இந்தியாவில் இருந்து சங்கைப் பொதுவன், மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன், மற்றும் பல புதுப் பயனர்களின் பங்களிப்பு முதன்மையானது. இந்தக் குறுகிய கால கட்டத்தில் இந்தளவு கட்டுரைகளை எழுதியது தமிழ் விக்கியில் இதுவே முதல் முறை ஆகும்.

இந்தக் கால கட்டத்தில் தமிழ் இதழ்கள், துடுப்பாட்ட விளையாட்டு வீரர்கள், சிங்கப்பூர் மற்றும் ஃகொங்கொங் நகரங்களின் தொடரு நிலையங்கள், சங்க இலக்கியங்கள், மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், மருத்துவம், இரண்டாம் உலகப் போர் என பல வகைத் தலைப்புக்களில் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தலைப்புக்கள் பல தரப்பட்ட தகவல்கள் தமிழில் பகிரப்பட தமிழ் விக்கிப்பீடியா உகந்த களம் என்பதை உணர்ந்துகின்றன.

இந்தியாவில் வெறும் 10% மக்கள் கூட இன்னும் இணையத்தைப் பெறவில்லை. இலங்கையிலும் மலேசியாவிலும் இதைவிடச் சற்று மேம்பட்ட நிலை இருக்கலாம், ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் இன்னும் இணையத்துக்கு வரவில்லை. அவர்கள் வரும் போது, அவர்களுக்குப் போதுமான பயன் உள்ள உள்ளடக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை, பொறுப்பை இன்றைய தமிழ் இணையப் பயனர்கள் பெற்று உள்ளார்கள். ஆகவே வலைப்பதிவுகளில் மட்டும் அல்லாமல் கூட்டாக விக்கியூடகங்களிலும் உங்கள் படைப்பை வழங்குங்கள். தமிழ் விக்கிகளின் வளர்ச்சி வேகத்தை இன்னும் பல மடங்கு அதிகரியுங்கள். எண்ணிக்கையில் மட்டும் அல்ல கருத்து ஆழமான ஆக்கங்களையும் தாருங்கள். பங்களிப்பதில் ஏதும் நுட்பச் சிக்கலா, இன்றே எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

5 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

வாழ்த்துகள். நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

குறும்பன் said...

பாராட்டப்பட வேண்டிய பணி.

Simulation said...

நானும் பங்களிக்க ஆரம்பித்துள்ளேன். இலவசக் மடிக் கணினி பெற்ற பள்ளி மாணவர்கள் பலரும் அவரவர்கள் வசிக்கும் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டாலே தமிழ் விக்கிபீடியா பெருமளவில் பரிமளிக்கும். இது குறித்தான எனது இடுகை http://simulationpadaippugal.blogspot.com/2011/10/blog-post_09.html - சிமுலேஷன்

இராஜராஜேஸ்வரி said...

நான் பங்களிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்.
எப்படி கட்டுரைகளை அனுப்புவது?
விதிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா?

நற்கீரன் said...

அனைவருடைய கருத்துக்களுக்கும் நன்றி. இராஜராஜேஸ்வரி தயவு செய்து பின்வரும் பயிற்சி வழிகாட்டியைப் பார்க்கவும் http://ta.wikipedia.org/wiki/WP:TamilWikiTutorial.
மேலதிக உதவிகள் தேவைப்படின் இங்கு குறிப்பிடவும்.

Post a Comment