Sunday, November 24, 2013

மருந்துகள் பற்றிய தகவல்கள் ஏன் இந்திய மொழிகளில் இல்லை

ஒரு மருந்து விற்பனைக்கு வர முன், அந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பெருந்தொகையான ஆவணப்படுத்தல் பணிகளைச் செய்ய வேண்டும்.  மருந்து தொடர்பான ஆய்வுகள், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு (Drug Regulatory Organizations, எ.கா US FDA, Health Canada) அனுப்ப வேண்டிய சமர்ப்பித்தல்கள் (Submissions), மருத்துவர்களுக்கு, நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள், மருந்துப் பொதி தாங்கி இருக்க வேண்டிய அடையாளங்கள் (Labels) எனப் பெருந்தொகை ஆவணங்களை சீர்தரங்களுக்கு ஏற்ப (எ.கா Standard Product Labeling - SPL) அந்த நிறுவனம் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான பெரும் அறிவுச் சொத்து ஆகும். 

வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, யப்பான், அரபு நாடுகள் ஆகியவற்றில் ஒரு மருந்து விற்க அனுமதி பெற வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டுச் சட்ட சீர்தர முறைமைகளுக்கு ஏற்ப பெருந்தொகை ஆவணங்களை ஒரு நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.  எ.கா ஐரோப்பிய ஒன்றியத்தில் மருந்து பற்றிய ஆய்வுகளும், அடையாளங்களும் 27 மொழிகளில் சமர்பிக்கப்பட வேண்டும்.  ஒரு மருந்து பற்றிய விபரங்கள் அந்த நாட்டு மொழியில், அதனைப் பயன்படுத்தும் மக்களின் மொழியில் இருக்க வேண்டும் என அந்த அந்த நாடுகள் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை.  ஒருவர் ஒரு மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அந்த மருந்தால் விளையக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் அவரது தாய்மொழியில் அமைவது அவரது நலத்துக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான தகவல்கள் ஆகும். 

இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மொழிபெயர்ப்பு வசதிகளைச் சிறப்புக் கவனம் எடுத்து ஆவண உருவாக்க மென்பொருட்கள் (Authoring Tools), ஆவண மேலாண்மை மென்பொருட்கள் (Document Management Systems), செயலாக்க மேலாண்மைத் தொகுதிகள் (Workflow Management Systems) பல உள்ளன.  இவற்றில் தொகுக்கப்படும் தகவல்கள் பொதுமக்கள், துறைசாரார் அணுகக் கூடிய முறையில் பொருளுணரப்பட்டு (semantically extracted) வலைவாசல்களாக அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பல நாடுகள் அந்த அந்த நாட்டு மொழிகளில் மருந்து பற்றிய ஆய்வுகளையும் தகவல்களையும் வழங்க இந்தியா அப்படிச் செய்வதில்லை.  இந்தியச் சட்டத்தின் (Drug and Cosmetics Act) படி ஒரு மருந்து அனுமதி தொடர்பான பொறுப்பு நடுவன் அரசைச் சார்ந்தது, உற்பத்தி விற்பனை தொடர்பான பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்தது.  இரு நிலைகளிலும் இந்திய மொழிகளில் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்ற எந்த விதிகளோ(Regulations), பரிந்துரைகள் கூட இல்லை.  குறைந்த பட்சம் இந்த இரு நிலைகளின் வலைத்தளங்கள் கூட (http://cdsco.nic.in, http://www.tnhealth.org/) கூட பன்மொழியில் இல்லை. 

ஒரு நிறுவனம் ஐரோப்பாவில், சீனாவில், யப்பானில், அரபு நாடுகளில், இசுரேலில் அந்த அந்த நாட்டு மொழியில் தனது தகவல்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருந்தால், அதே நிறுவனம் இந்தியாவில் அப்படி ஏன் செய்ய முன்வராது.  இது ஒரு நுட்ப அல்லது நிதிச் சிக்கல் இல்லை.  இந்திய அரசின் விதிமுறைகள் சார்ந்த ஒரு சிக்கலே. 

மருத்துவம் (Medicine), நலம் (Health), மருந்துகள் (Drugs) தொடர்பான தகவல்கள் மக்களின் மொழியில் இருத்தல் அவசியமானதாகும்.  விக்கியில் இவற்றின் தகவல்களைத் தொகுப்பதில் அவை இந்திய மொழிகளில் இல்லாமல் இருப்பது பெரும் தடையாக அமைகிறது.  சிறிய மொழிபெயர்ப்புச் செலவுடன், ஒரு பெரும் பலனைத் தரக் கூடிய இந்த மாதிரி விதிகள் தொடர்பாக அறிவு அணுக்கம் தொடர்பான செயற்திட்டங்கள் (Centre for Internet Society's Access To Knowledge - http://meta.wikimedia.org/wiki/India_Access_To_Knowledge) கவனத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. நல்ல தகவல் நல்ல கேள்வி
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete