Tuesday, March 8, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்கள் பங்களிப்பு

தொடர்ச்சியான போராட்டங்களின் பின்பு பெண்கள் வாக்கு, சொத்து, கல்வி, வேலைவாய்ப்பு என உரிமைகளைப் பெற்றார்கள். மேற்குநாடுகளிலும், சீனா, இந்தியா மற்றும் பிற பல நாடுகளிலும் பெண்கள் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறார்கள். இன்று மருத்துவம், சட்டம், கல்வி, ஊடகத்துறை போன்ற துறைகளில் ஆண்டுகளுக்கு நிகராக அல்லது ஆண்களை விட சிறப்பான பங்களிப்பை பெண்களே செய்து வருகிறார்கள். தமிழ்ச் சூழலிலும் பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பெண்களின் தலைமைத்துவம் தொடர்பாக பல புரட்சிகர மாற்றங்கள் நடைபெற்று உள்ளன. எனினும் இன்னும் பல துறைகளில் பெண்களில் பங்களிப்பும் தலைமைத்துவமும் முன்னேற வேண்டி உள்ளது.

தமிழ்ச் சூழலில் தமிழ் பெண்களின் பங்களிப்பு பொதுவாழ்வில் மிக அரிதாகவே உள்ளது. எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சமூக செயற்பாட்டாளர்களாக, சமூகத் தலைவர்களாக என ஒப்பீட்டளவில் பெண்களின் விழுக்காடு மிகச் சிறிதே. குடும்பச் சுமை, சமூக எதிர்பார்ப்புகள் வாய்ப்புகள், சூழல், தெரிவு என பல காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 50 வரையானோர் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்கள் எனலாம். தற்போது இவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். இந்த இருவரின் பங்களிப்பு அளப்பரியது. இதுவரை நான்கு பெண்கள் வரையிலேயே குறிப்பிடத்தக்க பங்களிப்ப்சைச் செய்துள்ளார்கள். இவர்களில் மூவர் ஈழத் தமிழர். இருவர் புகலிட நாட்டவர். பெண்களின் விழுக்காடு மொத்த பயன்ர்களில் ஒரு வீதத்தையும் தாண்டாது. இது ஆங்கில மற்றும் பிற விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் மிக மோசம் ஆகும். ஆங்கில விக்கிப்பீடியாவில் 15 % வரையில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று விக்கி ஒரு தொழில்நுட்பச் சூழலில் தோன்றிய திட்டம். அந்தத் துறையை ஆண்களே ஆக்கிரமிப்பதால், அதன் பிரதிபலிப்பாக இதைச் சொல்லாம். இந்திய, தமிழ்ச் சூழலில் பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கும் பொதுத் தோரணத்தின் ஒர் எடுத்துக் காட்டாகவும் இதைக் கொள்ளலாம். விக்கி சமூக அல்லது நுட்பக் கட்டமைப்பில் இருக்கும் தடைகள் காரணமாக இருக்கலாம். காரணங்கள் எவையாகினும் நாம் இவற்றை மீறி பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதும், வரவேற்பதும் முக்கியமாகும்.

அனைவருக்கும் அனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துக்கள்.

3 comments:

  1. மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர்த்து கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய பெண் பங்களிப்பாளர் தொடர்ந்து பங்களித்து வருகிறார். ஆனால் வெளிப்படையாக பெண் என்று சொல்வதில்லை - psuedonymous ஆகவே பங்களிக்கிறார்.

    ReplyDelete
  2. தமிழ் பதிவுலகில் பெண்கள் கணிசமான அளவு பங்களிக்கும்போது நுட்ப அறிவு ஓர் காரணியாக இருக்க வாய்ப்பில்லை. பொதுப்பணிகளில் ஈடுபாடும் குறைவு எனக் கொள்ள முடியாது. விக்கிப்பீடியா என்றால் மிகுந்த அறிவார்ந்த பங்களிப்பு வேண்டும் என்ற தவறான புரிதல் தடையாக பெரும்பாலோருக்கு , பெண்களுக்கு மட்டுமல்ல, இருக்கலாம். பாமரர் முதல் பண்டிதர் வரை கலந்து கொள்ளக்கூடிய பொது வேள்வி இது என்பதை விளம்பரப்படுத்துவதே ஒரே வழி.

    பாலாவின் கூற்று உண்மையானால், அவர் தம்மை வெளிக்காட்டாது இருப்பதன் பின்னணிகள் களையப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. இன்றுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.

    தொடர்ந்து இல்லையென்றாலும் தமிழ் விக்கிபீடியாவில் ரங்கமீனா என்ற பெயரில் ஏதோ நானும் பங்களித்திருக் கிறேன் நக்கீரன்.

    ReplyDelete