Monday, May 2, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைச் சூறாவளி


கடந்த இரு மாதங்களாக தமிழ் விக்கிப்பீடியா இதுவரை சந்தித்திராத ஓர் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பலகாலமாக 68ஆம் இடத்திலே இருந்த தமிழ் விக்கிப்பீடியா 64 வரை முன்னேறக்கூடிய நிலையை அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான உந்துசக்தியாகவும் தொடர் உழைப்பாளராகவும் இருப்பவர் தன்னந்தனியே 3000 கட்டுரைகளை மூன்றே மாதங்களில் ஆக்கிய இலங்கைச் சூறாவளி விக்கிப்பீடியர் புன்னியாமீன் ஆவார்.

பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். கல்வித்துறையில் பல பொறுப்புகளுக்குப் பிறகு, தற்போது வெளியீட்டு நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இதழியலில் ஆர்வம் மிக்க இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கிய பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 200 கட்டுரைகள் எழுதும் சாதனை நிகழ்த்த திட்டமிட்டார். தனது அலுவலக உதவியாளர்கள், மனைவி மற்றும் மக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் எண்ணியதற்கு மேலாக ஒரே நாளில் 300 கட்டுரைகள் இட்டு சாதனை படைத்தார். சமூகமாக இயங்கும் விக்கிப்பீடியாவின் நெறிகளுக்குட்பட்டு இவர் நிகழ்த்தியுள்ள இந்த வேள்வி மற்ற தமிழர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருந்து தமிழ் விக்கிப்பீடியா விரைவில் 50000 கட்டுரைகளை எட்ட வழிசெய்யும்.

6 comments:

  1. இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த வேளையிலேயே கிடைத்த மற்றுமொரு வலைப்பதிவு

    ReplyDelete
  2. சமூகமாக இயங்கும் விக்கிப்பீடியாவின் நெறிகளுக்குட்பட்டு இவர் நிகழ்த்தியுள்ள இந்த வேள்வி மற்ற தமிழர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருந்து தமிழ் விக்கிப்பீடியா விரைவில் 50000 கட்டுரைகளை எட்ட வழிசெய்யும்.//
    பாராட்டுக்களும்.மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. அந்தத் தகவலுக்கு நன்றி மணியன். புன்னியாமீனின் பணி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். அவரது கூட்டுழைப்பு அனைவருக்கும் முன்மாதிரியானது.

    ReplyDelete
  4. உளமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா, இவரது அதிகளவான புத்தகங்களை படித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை கூறுவதில் பெருமைப்படுகிறேன்..

    ReplyDelete
  6. பாராட்டுதலுக்குரிய மனிதர்.

    தொடர்க அவர் சேவை.

    ReplyDelete