புது உலக மொழிகளின் விக்கிப்பீடியாக்கள்
இருண்ட காலத்தில் ஆழ்ந்திருந்த ஐரோப்பா 15 ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி கண்டது. அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், கலைகள் என பல துறைகள் வளர்ச்சி பெற்றன. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே வணிகப் பேட்டி மிகுந்தது. அன்று பல வழிகளில் சிறப்புற்று இருந்த இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ஒரு கடல் பாதையைத் தேடி கடடோலிய கிறிசுடோபர் கொலம்பசு 1492 ம் ஆண்டு அமெரிக்காவை வந்தடைந்தார். வைக்கிங்சு (Vikings) 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை வந்து தங்கிச் சென்ற பின்னர் முதன் முறையாக ஐரோப்பியர் இங்கு வந்தனர். அவர்களுக்கு இது ஒரு புது உலகம். விரைவில் எசுபானிய, பேர்த்துக்கீச, ஆங்கில, பிரான்சிய அரசுகள் ஆதரவுடன் நாடுபிடிப்பாளர்கள், நிறுவனங்கள் வட, தென் அமெரிக்காக்களை ஆக்கிரமித்தன.
ஐரோப்பியர் இங்கு வந்து அமெரிக்கா தம்மாலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்று தவறாக வரலாற்றை எழுதி வைக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பல நாடுகள், நாகரிகங்கள் இருந்தன. இன்கா, அசுரெக், மாயா போன்ற நகர மயப்படுத்தப்பட்ட நாகரிங்கள் நடு, தென் அமெரிக்காக்களில் இருந்தன. வட அமெரிக்காவின் கால நிலையை, சூழலை துல்லியமாகப் புரிந்து கொண்டு இயற்கையோ சேர்ந்து வாழ்ந்த பல இனக் குழுக்களின் நாடுகள் இருந்தன. தமது சொந்த அரசியல் பொருளாதார முறைமைகளையும், மொழிகளையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் இவர்கள் கொண்டிருந்தார்கள்.
ஐரோப்பியரின் வரவு இவர்களைச் சிதைத்தது. இனப்படுகொலையாலும், நோயாலும், தொடர்ச்சியான அடக்குமுறையாலும் பெரும்பான்மை அமெரிக்க முதற்குடிமக்களும், அவர்களின் நாடுகளும் அழிந்து போயின. எஞ்சியோர் ஒதுக்கப்பட்ட இடங்களில் (Indian reserve) வாழ அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடைய அடையாளத்தையும் ஐரோப்பியர் அதிகாரம் வைத்திருந்த அரசுகள் திட்டமிட்டு அழித்தன. இதனால் இவர்கள் தமது நிலங்களை, வாழ்வியலை, அறிவை, பண்பாட்டை, மொழிகளை இழந்த இனங்களாக ஆக்கப்பட்டனர். அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் தாழ்த்தப்பட்டனர். இவர்கள் அமெரிக்க கண்டங்களின் ஆதித் தமிழர்கள் அல்லது தலித்துக்கள் ஆயினர்.
ஆனால், அவர்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்கள். இந்த போராட்டங்களின் ஊடாக தமது இயல்புகளை ஓரளவு மீட்டுத்து வருகிறார்கள். அவற்றுள் முக்கிய ஒன்றுத்தான் அவர்களது மொழிகள்.
முதல் ஐரோப்பிய தொடர்பின் போது அமெரிக்க முதற்குடிகள் பல மொழிக் குடும்பங்களைச் சார்ந்த 1500 மேற்பட்ட மொழிகளைப் பேசினர். இன்று 350 வரையான மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. சுமார் 40 மில்லியன் நடு, தென் அமெரிக்கர்கள் (10%) முதற்குடிமக்கள் மொழிகளைப் பேசுகிறார்கள். சுமார் ஒரு மில்லியன் வரையான ஐக்கிய அமெரிக்கா, கனடா வாழ் மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள்.
முதற்குடிமக்கள் மொழிகளில் ஏழு மொழிகள் வரை மட்டுமே ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. எந்த மொழியும் 8 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படவில்லை. இன்கா நாகரிகத்தின் மொழியான கெச்சா மொழி இன்று 6-8 மில்லியன் மக்களால் பொலிவியா, பெரு, எக்குவடோர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இதே நாகரித்தின் இன்னுமொரு மொழியான அய்மாரா மொழி சுமார் 2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. எசுபானியா ஆக்கிரமிப்பை தீவரமாக எதிர்த்த குவரனி மக்களின் மொழியான குவரனி இன்று ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பராகுவேயில் இது கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், அன்றாடம் பயன்படும் மொழியாகவும் மக்களால் பெருமையுடன் பயன்படுத்தப்படுகிறது. மாய நாகரிகத்தின் மொழியான கீச்சி சுமார் ஒரு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. அசுரெக் நாகரிகத்தின் மொழியான நாகவற் 1.45 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
பண்டைய நாகரிங்களைச் சார்ந்த மொழிகள் எழுத்துமுறைகளைக் கொண்டிருந்தன. இதில் கணிதம், கட்டிடக்கலை, வானியல் உட்பட பல தரப்பட்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன. எனினும் பெரும்பான்மையான அமெரிக்க முதற்குடிமக்கள் மொழிகள் அண்மைக் காலத்திலேயே எழுத்து முறையைப் பெற்றன, அல்லது இன்னும் பெறவில்லை. பெரும்பான்மையான அமெரிக்க முதற்குடி மொழிகளின் எழுத்து முறைகள் இலத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.
வரலாற்றில் இனவழிப்புக்கு உள்ளான, இன்று மீண்டும் புத்துயிர் பெற முயலும் அமெரிக்க முதற்குடிமக்களின் மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 350 வரையான முதற்குடி மொழிகள் இன்று வழக்கில் உள்ளன. ஆனால், பெரிய முதற்குடி மொழிகள் சிலவற்றுக்கே விக்கிப்பீடியாக்கள் இன்னும் தொடங்கப்படவில்லை, அல்லது பரிசோதனையுல் உள்ளன. ஒரே ஒரு மொழி மட்டுமே 10 000 மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 4 மொழிகள் மட்டுமே 1000 மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளன.
அமெரிக்க முதற்குடிமக்கள் பல தடைகளை எதிர் நோக்குகின்றார்கள். தென் அமெரிக்கா ஒரு வளர்ந்து வரும் உலகத்தைச் சார்ந்தது, எனவே இணைய வசதி ஒரு முக்கிய தடையாக உள்ளது. ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் அமெரிக்க முதற்குடி மொழிகள் கல்வி, அரசியல், வணிக மொழிகளாக இல்லை. தமது தாய் மொழியில் பேசத் தெரிந்தாலும், பெரும் விழுக்காட்டினருக்கு எழுதத் தெரியாது. இலக்கிய மரபு இல்லாமை, மொழிகளின் விருத்தி இன்மை போன்றைவையும் தடைகளாக உள்ளன.
தென் அமெரிக்க மொழிகள்
* கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்) - 15656 கட்டுரைகள்
* பராகுவேயன் குவரனி மொழி - 5 மில்லியன் மக்கள் - (அர்சென்டீனா, பிரேசில்) - 1312 கட்டுரைகள்
* அய்மாரா மொழி - Aymara language - 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி) - 910 கட்டுரைகள்
* K'iche' language - 1 மில்லியன் மக்கள் - (குவாத்தமாலா) - விக்கிப்பீடியா இல்லை
* Yucatec Maya language - 800 000 மக்கள் - (குவாத்தமாலா) - பரிசோதனை விக்கிப்பீடியா
* Q'eqchi' language - 500 000 மக்கள் - (குவாத்தமாலா_ - விக்கிப்பீடியா இல்லை
* Papiamento - 329 002 மக்கள் - (கரிபியன் தீவுகள்) - 842 கட்டுரைகள்
* Wayuu language - 305,000 மக்கள் - (வெனசுவேலா, கொலம்பியா) - பரிசோதனை விக்கிப்பீடியா
* Mapudungun language - 240,000 மக்கள் - (சிலி, அசென்டீனா ) - பரிசோதனை விக்கிப்பீடியா
* Miskito language - 180 000 மக்கள் - விக்கிப்பீடியா இல்லை
* Ticuna language - 40,000 மக்கள் - (பிரேசில்) - விக்கிப்பீடியா இல்லை
வட அமெரிக்க மொழிகள்
* நாகவற் மொழி - 1.45 மில்லியன் மக்கள் - (மெக்சிக்கோ) - 6295 கட்டுரைகள்
* Otomi language - 240,000 - (மெக்சிக்கோ) - பரிசோதனை விக்கிப்பீடியா
* Totonacan languages - 250 000 மக்கள் - (மெக்சிக்கோ) - விக்கிப்பீடியா இல்லை
* நாவகோ மொழி - 170 000 மக்கள் - (ஐக்கிய அமெரிக்கா) - 1424 கட்டுரைகள்
* கிறீ மொழி - 117 000 மக்கள் - (கனடா, ஐக்கிய அமெரிக்கா) - 119 கட்டுரைகள்
* Ojibwe language - 56 531 மக்கள் - (கனடா, ஐக்கிய அமெரிக்கா) - விக்கிப்பீடியா இல்லை
* இனுக்ரிருற் மொழி - 35 000 மக்கள் - (கனடா, கிறீன்லாந்து) - 391 கட்டுரைகள்
* செரியோக்கி மொழி - 22 000 மக்கள் - (ஐக்கிய அமெரிக்கா) - 219 கட்டுரைகள்
* லக்கோட்டா மொழி - 6 000 மக்கள் - (ஐக்கிய அமெரிக்கா) - பரிசோதனை விக்கிப்பீடியா
ஐரோப்பியரின் வருகை முன்பு பெரும் நாகரிகங்களையும், தனித்து இயங்கிய பல நாடுகளையும் இந்த புதிய உலகம் கொண்டிருந்தது. முதலில் ஐரோப்பியர் வந்த போது, அவர்களுக்கு இங்கு வாழக் கற்றுக் தந்தது இவர்களே ஆவார். இவர்களின் சமூகங்களிலும் போர், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை இருந்தது. ஆனால் ஐரோப்பியரின் வரவு இவர்களைத் சிதைத்தது. இவர்களின் மக்கள் தொகையைச் சரித்தது. இன்று அவர்கள் தங்களின் வாழ்வியல் கூறுகளை மீட்டெடுக்க, பேண மிகவும் சிரத்தை எடுக்கின்றனர். ஆனால் வரலாறு அவர்களின் எதிரியாக இருக்கிறது.
அன்று இவர்க்ளுக்கு நடந்து, தமிழர்களுக்கும் நடந்தது, இன்றும் நடக்கிறது. சுமார் 700 000 தமிழர்கள் தென் ஆபிரிக்காவில் தமது மொழி அறியாமல் உள்ளார்கள். இன்று இலங்கையில் தமது மொழி பேண உரிமை கூறி போராடிய தமிழர்கள் நசுக்கப்பட்டு, அவர்களது அடையாளங்கள் சிதைக்கப்படுகின்றன. உலக மயமாதலில் சிக்கி உள்ளே இருந்தே தொலைக்காட்சிகளும், மோகங்களும் எம்மை சிறிதாய் சிறிதாய் கொல்கின்றன. இலக்கியம் உண்டு என்ற போதையில் நமது மொழிக்கு அறிவியல் கற்றுக் கொடுக்க காலம் பிந்தி விட்டோம். இலக்கியம் உண்டு என்ற போதையில் எமது வாய்மொழிச் சொல்வங்களை நழுவி விட்டுக் கொண்டு இருக்கிறோம். தமிழ் என்று பெருமையாகக் கூறி விட்டு அதைப் பேச வெக்கப்படுகிறோம், அத மொழிக்கும் சமூகத்துக்கும் எம்மால் முடிந்த பங்களிப்பை செய்ய மறுக்கிறோம். மொழி இவ்வளவு முக்கியமா, சிந்திந்துப்போம், செயற்படுவோம்.
உசாத்துணைகள்
* Indigenous_languages_of_the_Americas
* The Indigenous Languages of Latin America