Wednesday, November 28, 2007

முழு ஆங்கில விக்கிபீடியாவையும் உங்கள் கணினியில் தரவிறக்கிப் பார்க்கலாம்

Webaroo தளத்தின் மூலம் முழு ஆங்கில விக்கிபீடியாவையும் உங்கள் கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இந்தக் கோப்பில் கட்டுரைப் பக்க உரை மட்டுமே கிடைக்கும். படங்கள் மற்றும் பிற விக்கிபீடியா பக்கங்கள் காணக் கிடைக்காது.

Thursday, October 25, 2007

விக்கிமீடியா திட்டங்களுக்கு நிதியுதவி தாரீர் !



விவரங்களுக்கு: http://donate.wikimedia.org/

Tuesday, October 16, 2007

விக்கி என்றால் என்ன?

Saturday, September 29, 2007

தமிழ் விக்கிபீடியாவுக்கு நான்கு வயது நிறைவு !

2003 செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிபீடியாவுக்கென தனிப்பக்கம் தொடங்கி, இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைந்து ஐந்தாவது ஆண்டில் தமிழ் விக்கிபீடியா அடி எடுத்து வைக்கிறது. இச் செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்வதில் மகிழ்கிறோம்.

Sunday, September 23, 2007

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ், தமிழர் குறித்த கட்டுரைகளில் திரிபுகளைத் தடுப்பது எப்படி?

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ், தமிழர் குறித்த கட்டுரைகளில் காணப்படும் திரிபுகளைக் குறித்து தமிழ் வலைப்பதிவர்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறார்கள். தமிழ், தமிழர் நலனுக்குப் புறம்பான ஒரு சிலர் திட்டமிட்டு விசமத்தனமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் உண்மை தான். பொதுவாக விக்கிபீடியாவின் திறந்த நிலை காரணமாக, சமயம், இனம், மொழி போன்று உணர்ச்சிப்பூர்வமான , இருநிலைக்கருத்துக்களுக்கு இடம் அளிக்கக்கூடிய கட்டுரைகள் யாவும் இப்படி தாக்குதலுக்கு உள்ளாவது உண்டு. ஆனால், இந்த நிலை தொடராமல் தடுப்பது எப்படி?


ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள தமிழ், தமிழர் கட்டுரைகளுக்குத் தமிழர்களும் பங்களிக்க முனைவதே இத்திரிபுகளைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.


எப்படி பங்களிப்பது?

1. முதலில் தமிழ், தமிழர் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் அனைத்தையும் வாசித்துப் பாருங்கள். அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் தவறான தகவல்களை ஆதாரத்துடன் திருத்துங்கள். விசமிகளின் உணர்ச்சிப்பூர்வத் தாக்குதல்களைத் தடுக்க முறையான தகவல் ஆதாரங்களை நாம் காட்டுவதே சிறந்த காப்பாகும்.

2. தகவல் தவறு என்று தெரிகிறது. ஆனால், சரியான ஆதாரத்துடன் உங்களால் கட்டுரையைத் திருத்த இயலவில்லையா? குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இப்பிழையைக் குறித்துத் தெரியப்படுத்துங்கள். கட்டுரையில் பிழையான தகவல்கள் உள்ளன என்று கட்டுரையின் முகப்பில் அறிவியுங்கள்.

3. சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து உண்மை நிலையை எடுத்துரைத்து ஏற்கனவே கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் எவரேனும் உரையாடிக் கொண்டு இருக்கலாம். அவருடைய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அவரது கருத்தை வலுப்படுத்த மேலதிக ஆதராங்களை நீங்கள் தந்து உதவலாம். பொதுவாக, உண்மையை விளக்கப் பேசுபவர்கள் தகுந்த ஆதரவு இல்லாததால் சோர்வடைவது உண்டு. உங்களைப் போன்றோரின் ஆதரவு உண்மை உரைப்பவருக்கு உற்சாகமளிப்பதாகவும் எதிர்த் தரப்புக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும். தவிர, முக்கியமான முடிவுகள் வாக்கெடுப்பு அடிப்படையில் நடப்பது உண்டு. அப்போது, உங்களைப் போன்றோரின் கூடுதல் ஆதரவு முக்கியம். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கு கூடுதல் ஆதரவு, உதவி தேவை எனில் தமிழ் விக்கிபீடியாவில் தெரியப்படுத்துங்கள். தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்களும் உங்களுக்கு உதவக்கூடும்.

கவனிக்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பு தான் விசமிகளுக்கு முதல் தூண்டுகோல். மேற்கண்டபடி, விவரம் அறிந்தவர்கள் கட்டுரையைக் கவனிக்கிறார்கள் என்று விசமிகளுக்குத் தெரிய வந்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

பொதுவாக, சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் மட்டும் நீங்கள் புகுந்து கருத்து சொல்லும் போது உங்கள் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படலாம். எனவே, சர்ச்சைக்குரிய கட்டுரைகளைத் தவிர்த்த பிற கட்டுரைகளிலும் நல்ல முறையில் தொடர்ந்து பங்களித்து உங்கள் நம்பகத்தன்மையை உயர்த்திக் கொள்வது முக்கியம். பிற கட்டுரைகளில் நீங்கள் பெறும் நம்பகத்தன்மை சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் உங்கள் கருத்துக்களுக்கான கூடுதல் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்றுத் தரும். தொடர் பங்களிப்பினால் நீங்கள் பயனர் நிலையில் இருந்து முன்னேறி நிர்வாக அணுக்கங்களையும் பெறலாம். சர்ச்சைக்குரிய சில பக்கங்கள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், நம்பத்தகுந்த பலர் இப்படி நிர்வாக அணுக்கங்களைப் பெறுவதும் முக்கியம் ஆகும்.

Thursday, August 9, 2007

தமிழ் விக்கிபீடியாவில் 2,000+ பயனர் கணக்குகள்

தமிழ் விக்கிபீடியாவில் பதிவு செய்த பயனர் கணக்குகள் எண்ணிக்கை 2000த்தைத் தாண்டி உள்ளது.

பயனர் கணக்கில் புகுபதிந்தால் விக்கிபீடியாவில் கட்டுரைப் பக்கங்களின் மிக அண்மைய பதிப்பைக் காண இயலும். இல்லாவிட்டால், ஓரிரு நாள் பழைய பதிப்பைக் காண நேரிடலாம் என்பதை அறிவீர்களா?

தவிர, நீங்கள் பல தளங்களில் பயன்படுத்தும் உங்களுக்குப் பிடித்தமான இணையப் பெயர் (online profile / user name) இருந்தாலும் அவற்றை முந்தி இங்கு பதிவு செய்து கொள்ளலாம். இது, பிறர் உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

விக்கிபீடியா மட்டுமல்லாது அதன் துணைத்திட்டங்களான விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மூலம், விக்கி மேற்கோள் முதலிய தளங்களிலும் பயனர் கணக்கு உருவாக்க வரவேற்கிறோம்.

Tuesday, July 17, 2007

ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?

அஃது - aHdhu

அஃறிணை - aHRiNai

எஃகு - eHhu

போன்ற சொற்களை ஒலித்துப் பார்த்தால் ஃ என்று குறிக்கப்பெறும் ஆய்த எழுத்தின் ஒலிப்பு, H என்னும் ஆங்கில ஒலிப்புக்கு நெருங்கி தொண்டைக்கு அருகில் இருந்து எழுவதைக் காணலாம். இதுவே ஃ என்ற தமிழ் எழுத்தின் இயல்பொலி.

ஆனால், இந்த இயல்பொலிக்கு மாறாக

Felix - ஃபெலிக்ஸ்

Francis - ஃப்ரான்சிஸ்

Fan - ஃபேன்

என்று எழுதும்போது நம்மை அறியாமல் தமிழ் எழுத்து ஒன்றின் இயல்பொலியைச் சிதைத்து விடுகிறோம். H, Fம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய ஒலிகள் இல்லை. அதே போல் தமிழிலும் எந்த இரு எழுத்துக்களுக்கு இடையிலும் தெளிவான ஒலி வேறுபாடு உண்டு. காசா என்று எழுதி பாசா என்று உச்சரிப்பது எப்படிப் பிழையோ அதே போல், ஃப (iHpa) என்பதை Fa என்று உச்சரிப்பதும் பிழையாகும்.

எனினும், இந்த ஒலிச்சிதைவை உணராமல் எழுதும் வழக்கு வெகுமக்கள் ஊடகங்களிலும் அதைப் பின்பற்றி பெரும்பாலான தமிழர்களிடமும் காணப்படுகிறது.

இப்படி F என்ற ஒலிக்கு இணையாக ஃப் பயன்படுத்தும் வழக்கம் என்று, யாரால் தொடங்கப்பட்டது என்று தெளிவில்லை. எனினும் இந்தப் பயன்பாட்டிற்கான காரணத்தை ஊகித்து அறிய முடியும். F என்ற ஒலிக்கு இணையான தமிழ் எழுத்து இல்லை; அதே வேளை, அந்த ஒலியைத் தமிழில் எழுதிக் காட்டும் அவசியமும் இருக்கிறது. இந்த அடிப்படையில் ஃ என்று எழுத்துக்கு அடுத்து பகரம் வந்தால் F என்று ஒலிப்பது என்ற புரிதல், பரவலான பயன்பாடு வந்திருக்கிறது. அதாவது, பகரத்துக்கு முன் ஃ வந்தால் அது அதன் இயல்பொலியில் இருந்து திரிந்து Fa என்னும் ஒலிப்பைச் சுட்டும் குறியீடாக மட்டுமே விளங்கும். ஆக, இங்கு ஃ ஒரு எழுத்தாக இல்லாமல் குறியீடாகப் பயன்படுகிறது.

F ஒலிக்கு குறியீட்டின் தேவையை உணர்ந்த முன்னோர்கள் புதிய குறியீடை அறிமுகப்படுத்தாமல் தவறுதலாக ஏற்கனவே உள்ள அதிகம் பயன்படாத தமிழ் எழுத்தைக் குறியீடாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு என்னால் ஊகிக்கக்கூடிய ஒரே எளிய காரணம்:

அச்சு இயந்திரங்கள் மூலம் தமிழ் அச்சடிக்கப்பட்ட காலங்களில் புதிதாக ஒரு குறியீட்டுக்கான விசையைச் செலவு செய்து உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ள எழுத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பிழையான குறியீட்டை இடாமலும் ஆய்தத்தின் ஒலிப்பைச் சிதைக்காமலும், ஃபெலிக்ஸ் என்று எழுதுவதற்குப் பதில் பெலிக்ஸ் என்று எழுதும் வழக்கமும் இருக்கிறது. எனினும் F என்று ஒலிக்கு இணையாக பகரத்தைப் பயன்படுத்தும்போது box-fox-pox, boot-foot போன்ற வேறுபாடுகளைக் காட்ட இயல்வதில்லை. விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களில் உலகெங்கும் உள்ள பல அன்னிய மொழிச் சொற்கள், பெயர்களில் இந்த b-p-f வேறுபாட்டைக் காட்ட வேண்டி இருக்கையில் எல்லா இடங்களிலும் Fக்கு இணையாகப் பகரத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த போதாமைகள் இருக்கின்றன.

இந்த இடத்தில், Fக்கும் பகரத்துக்கும் உள்ள ஒலிப்பு நெருக்கத்தையும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் செல்வகுமார் கேள்விக்குள்ளாக்குகிறார். அதாவது Foot ball, France போன்ற சொற்களில் உள்ள F ஒலியை உச்சரிக்கும்போது கீழ் உதடு உள்ளே மடங்கி வ என்ற ஒலிப்புக்கு நெருங்கியே வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள v என்ற எழுத்துக் குறி ஜெர்மன், டச்சு போன்ற மொழிகளில் F என்று ஒலிக்கப்பெறுவதும் கவனிக்கத்தக்கது. டச்சு மொழியில் voet ball என்றே Footballஐ எழுதுகின்றனர். Fa- ஃப என்ற ஒலிப்பெயர்ப்புக்கு எந்த மொழியியில் அடிப்படையும் இல்லாதபோது தலைமுறைகளுக்கும் நிலைக்கக்கூடிய விக்கிபீடியா போன்ற அறிவு சார் கூட்டு முயற்சிகளில் மொழியியல் ரீதியில் கூடுதல் கவனமும் துல்லியமும் தரவும் தமிழ் ஒலிகளைச் சிதைக்காமல் இருப்பதன் பொருட்டும் பொருத்தமான குறியீடுகளை அறிமுகப்படுத்துவதின் தேவையை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆக, Fஐ ஒலிப்பதற்கு ஆய்தத்தைத் தவிர்த்த ஒரு குறியீட்டையும் அதை அடுத்துப் பகரத்துக்குப் பதில் வகரம் பயன்படுத்தலாம் என்றும் பேராசிரியர் செல்வகுமார் பரிந்துரைக்கிறார்.

எடுத்துக்காட்டுக்கு,

Fan - `வேன் (Fan)

France - `வ்ரான்ஸ் (France)

என்று எழுதப்படும். இங்கு ஆய்தத்துக்குப் பதில் ` என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அடைப்புக்குறிகளுக்குள் Fan என்றும் எழுதிக் காட்டப்படுவதால் உச்சரிப்பு குறித்த குழப்பங்களும் வரா.

F ஒலி வரும் அன்னியச் சொற்கள், பெயர்களுக்கு மேற்கண்ட முறையில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதிக் காட்டினால், அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று அறிய விரும்புகிறோம். குறுகிய காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய வாசிப்புப் பழக்க மாற்றங்களுக்கு எதிராகத் தொலை நோக்கில் தமிழ் எழுத்தான ஆய்தத்தின் ஒலிப்பு சிதையாமல் பாதுகாக்க வேண்டிய நம் கடமையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதனால் குழப்பங்கள் வருமா, தொலை நோக்கில் இதன் சாதக பாதங்கள் என்ன, இந்த மாற்றத்தின் தேவை உணரப்படுகிறதா, இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வீர்களா என்பதை தமிழ் விக்கிபீடியா பயனர்கள் என்ற முறையில் உங்கள் அனைவரையும் நோக்கிக் கலந்தாலோசிக்க விரும்புகிறோம்.

இது தொடர்பாக பதிவின் வலப்பக்கப் பட்டையில் உள்ள கருத்துக் கணிப்பிலும் உங்கள் எண்ணத்தைத் தெரிவியுங்கள். உங்கள் வாக்குகள், மறுமொழிகள் இந்த விசயத்தில் வாசகர்களின் கருத்தை அறியவும் தெளிவாக யோசித்து ஒரு முடிவை எடுப்பதற்கும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கு உதவும்.

Sunday, July 15, 2007

விக்கிபீடியா அறிமுக நிகழ்படம்

தமிழ் விக்கிபீடியா குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 41.4 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Tuesday, June 5, 2007

செய்திகளில் தமிழ் விக்கிபீடியா

பிற தளங்கள், செய்திகளில் தமிழ் விக்கிபீடியா குறித்து வரும் தகவல்கள் இங்கு தொகுத்து வைக்கப்படும்.

--

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தமிழ் விக்கிபீடியா, தமிழ் wikisource முதலிய திட்டங்களுக்கு சக எழுத்தாளர்களின் கட்டுரைகள், படைப்புகளைத் திரட்டித் தந்து வருகிறார். குமுதம் தீராநதி 01.06.2007 இதழில் வெளிவந்துள்ள அவரது நேர்காணலில், தமிழ் விக்கிபீடியா குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதை கீழே காணலாம்.

--
அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும்
பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது.
ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள்
இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி,
கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால்
பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.

ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க
தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும்
natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


--
இது போன்று இன்னும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் தமிழ் விக்கி திட்டங்களில் இணைந்து பங்களிக்க வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
--

தகவலுக்கு நன்றி - மதி கந்தசாமி.

Thursday, May 10, 2007

தமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது

கட்டற்ற நூலகத் திட்டமான WikiSource தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. பார்க்க - http://ta.wikisource.org

நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள அல்லது காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ள பழங்கால மற்றும் தற்காலத் தமிழ் நூல்களை இங்கு சேகரித்து வைக்கலாம். ஏற்கனவே இயங்கி வரும் நூலகம் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நூல்களையும் இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் விக்கி நூல்கள் திட்டத்தில் ஏற்கனவே திருக்குறள் போன்ற நூல்கள் கிடைக்கின்றன. அவற்றையும் கூடிய விரைவில் இங்கு நகர்த்துவோம்.

நன்றி.

பி.கு - தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம். இந்தப் பெயர் பொருத்தமானது தான் என்று உறுதி செய்த பிறகு, இப்பெயரை அதிகாரப்படியாகப் பயன்படுத்த இருக்கிறோம். வேறு பெயர் பரிந்துரைகள் இருந்தாலும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

Saturday, May 5, 2007

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு முதற்பக்த்தில்

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு பற்றிய ஆங்கில கட்டுரை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu சென்று அதைப் படிக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு தனிக்கட்டுரையாக இன்னும் ஆக்கப்படவில்லை. எனினும் தமிழ்நாடு பற்றிய கட்டுரையை இங்கு http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு சென்று படிக்கலாம். ஆர்வம் இருந்தால் தமிழ்நாடு வரலாறு பற்றிய தமிழ்க் கட்டுரையை நீங்களே தொடங்கலாம்.

Wednesday, May 2, 2007

தமிழ் விக்கிபீடியா - பங்களிப்பாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

1. தமிழ் விக்கிபீடியாவில் யார் யார் எழுதலாம்?

யார் வேண்டுமானாலும் எழுதலாம். வயது, கல்வி, நாடு போன்ற தகுதிகள் ஏதும் தேவை இல்லை. ஓரளவாவது பிழை இல்லாமல் தமிழில் எழுதத் தெரிந்தவர் அனைவரையும் வரவேற்கிறோம்.

2. அடையாளம் காட்டாமல் எழுத இயலுமா?

தாராளமாக. ஏதேனும் ஒரு புனைப்பெயரில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் உண்மை விவரங்கள் எதையும் தரத் தேவையின்றி கட்டுரை எழுதலாம். ஒரு பயனர் கணக்குக்கு உரியவர் எந்த IP முகவரியில் இருந்து இயங்குகிறார் என்ற விவரம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. பிற பயனர்களுக்கும் தெரியாது. அதே வேளை, பயனர் கணக்கில் புகுபதியாமல் கட்டுரைகள் எழுதினால், உங்கள் IP முகவரி பதியப்பட்டு பொதுப் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை இங்கு கருத்தில் கொள்ளவும்.

3. என்னென்ன தலைப்பில் கட்டுரைகள் எழுதலாம்?

விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது என்று நீங்கள் நினைக்கும் எதைக் குறித்தும் எழுதலாம். மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் பிற பயனர்களுடன் உரையாடி முடிவு காணலாம். அறிவியல், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, சமயம், அரசியல், பொது அறிவு, புவியியல், பொறியியல், தமிழ், இலக்கியம், திரைப்படங்கள் என்று எண்ணற்ற தலைப்புகளில் உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் எழுதலாம்.

4. கட்டுரைகள் மட்டும் தான் எழுத வேண்டுமா?

அவசியம் இல்லை. ஏற்கனவே, இருக்கும் கட்டுரைகளைப் படித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்த கருத்து தெரிவிக்கலாம். அவற்றில் உள்ள தகவல், எழுத்து. கருத்துப் பிழைகளைத் திருத்தலாம். விக்கிபீடியா நிர்வாகம் மற்றும் ஒழுங்கமைப்பில் உதவலாம்.

5. ஒரு துறை குறித்து எழுத அதில் வல்லுனராக இருக்க வேண்டுமா?

நீங்கள் எழுதும் துறையில் நீங்கள் வல்லுனராக இருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஆர்வம், அக்கறை, அறிவு உள்ள துறைகளில் நீங்கள் எழுதலாம்.

6. ஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதலாமா?

தாராளமாக எழுதலாம். காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட எந்த ஆக்கத்தில் இருந்தும் மொழிபெயர்த்து தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

7. கட்டுரை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்?

நீங்கள் கட்டுரையைத் தொடங்கும் போது குறைந்தது மூன்று வரி அளவாவது இருந்தால் பரவாயில்லை. விக்கிபீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால், உங்கள் கட்டுரைத் தலைப்புகளில் ஆர்வமுடைய பிற பயனர்களும் இணைந்து கட்டுரையை மேம்படுத்துவர். நீங்களும் நேரம் கிடைக்கும்போது உங்கள் கட்டுரைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தலாம். விரிவுபடுத்தலாம்.

8. தமிழில் வெளியாகி உள்ள நூல்கள், தளங்களில் இருந்து அப்படியே எடுத்து எழுதலாமா?

ஒரு நூலையோ தமிழ்த் தளத்தையோ முழுமையாகப் படியெடுத்துத் தமிழ் விக்கிபீடியாவில் இடுவதை நாங்கள் வரவேற்பதில்லை. காப்புரிமை உள்ள ஆக்கங்களுக்கு மதிப்பளிக்க முற்படுகிறோம். பொருத்தமான இடங்களில் மேற்கோளாக ஓரிரு வரிகளைக் குறிப்பிடலாம். உசாத்துணையாக அந்நூல், தள விவரங்களைத் தரலாம். கட்டுரையில் வெளியிணைப்பாக அத்தளத்தை இணைக்கலாம்.

9. வலைப்பதிவில் உள்ள கட்டுரைகளை அப்படியே விக்கிபீடியாவில் இடலாமா?

வலைப்பதிவு எழுத்து நடை வேறு. கலைக்களஞ்சிய எழுத்து நடை வேறு. தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சில கட்டுரைகளை பார்வையிட்டாலே, கலைக்களஞ்சிய நடை என்றால் என்ன என்று புலப்படும். எனவே, வலைப்பதிவுக் கட்டுரைகளை அப்படியே இட இயலாது. தகுந்த மாற்றங்களைச் செய்த பிறகே இட இயலும். உங்களால், இயன்ற மாற்றங்களைச் செய்து நீங்கள் இட்டால் விக்கியாக்கத்தில் அனுபவமுள்ள பிற பயனர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

10. குறைந்தது எத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும்?

விக்கிபீடியா ஒரு தன்னார்வல முயற்சி. உங்களால் இயன்ற எண்ணிக்கையில் இயன்ற போது எழுதலாம். ஒரு கட்டாயமும் இல்லை. குறைந்தபட்ச எண்ணிக்கைத் தேவையும் இல்லை.

11. யார் விக்கிபீடியா கட்டுரைகளை அங்கீகரிக்கிறார்கள்?

நீங்கள் கட்டுரையை எழுதி இடும் முன் யாருடைய அனுமதியும் பெறத் தேவை இல்லை. நேரடியாக நீங்கள் கட்டுரைகளை இடலாம். நீங்கள் கட்டுரைகளில் செய்யும் மாற்றங்கள் உடனுக்குடன் பொதுப்பார்வைக்கு வரும். உங்கள் கட்டுரையில் பெரிய மாற்றங்களை விரும்பும் பயனர்கள் உங்களுடனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் உரையாடி மாற்றங்களைச் செயற்படுத்துவார்கள்.

12. என்னை அறியாமல் கட்டுரையில் பிழை விட்டால் என்ன செய்வது?

தமிழ் விக்கிபீடியா மாற்றங்களை 24 மணி நேரமும் உலகெங்கும் உள்ள தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், எளிதில் புலப்படும் பிழைகளை அவர்களே களைந்து விடுவார்கள். நீங்கள் விடும் பிழைகளுக்காக உங்களைக் குறை சொல்ல மாட்டார்கள். மாறாக, அப்பிழைகளைக் களைய இயன்ற அளவு உதவுவார்கள். அதனால், பிழை விட்டு விடுவோமோ என்ற தயக்கத்தின் காரணமாக பங்களிக்காமல் இருக்கத் தேவை இல்லை.

13. கட்டுரைகளில் எழுதியவர் பெயரை இடலாமா?

கட்டுரைப்பக்கங்களில் உங்கள் பெயரை இட இயலாது. எனினும், ஒவ்வொரு கட்டுரையிலும் யார், என்னென்ன மாற்றங்களை, எப்போது செய்தார்கள் என்பது அக்கட்டுரையோடு இணைந்து வரலாற்றுப் பக்கத்தில் அறியக் கிடைக்கும்.

14. கட்டுரைகளில் தூய தமிழில் தான் எழுத வேண்டுமா?

அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு தற்போதும் என்றும் புரியும் வகையில் இயன்ற அளவு நல்ல பொதுத் தமிழில் எழுதப் பரிந்துரைக்கிறோம். இயன்ற இடங்களில் வடமொழி, ஆங்கிலம், பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து விடுவது நல்லது. தகுந்த சொற்களுக்கான ஆலோசனைகளை பிற பயனர்கள் அளிப்பர்.

15. தமிழ் விக்கிபீடியா பங்களிப்பால் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், மன உளைச்சல் வர வாய்ப்புண்டா?

இல்லை. தமிழ் விக்கிபீடியா பயனர்கள் மிகுந்த கண்ணியத்துடனும் நன்னோக்கத்துடனும் நட்புணர்வுடனும் செயல்படுகிறார்கள். இங்கு கருத்துக்களை மட்டுமே கண்ணியமான முறையில் விமர்சிக்கிறோமே தவிர, கருத்தைச் சொன்னவர்களையோ அவர்களின் பின்புலத்தையோ விமர்சிப்பதில்லை. இதனால், ஓர் இணக்கமான சூழல் உறுதிப்படுத்தப்படுகிறது.

16. தமிழ் விக்கிபீடியா குறித்த சந்தேகங்களை எங்கு கேட்பது?

இந்த வலைப்பதிவில் கேட்கலாம். இல்லை, இந்தப் பக்கத்தில் கேட்கலாம்.

Friday, April 27, 2007

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் தொடர்பாக துல்லியமான விபரமான தகவல்கள் தமிழ் விக்கிபீடியாவில் கிடைக்கின்றன. படித்துப் பார்க்க வரவேற்கிறோம்.

தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் !

தற்போது, தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் உள்ளன.

2005 ஆகஸ்டில் 1, 000 கட்டுரைகள் என்ற முதல் இலக்கை அடைந்த பிறகு, குறுகிய காலத்தில் 10, 000 கட்டுரை இலக்கை எட்டிப் பிடித்திருப்பது தமிழ் விக்கிபீடியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ், தமிழ்நாடு, இலங்கை, இந்தியா, இலக்கியம், கட்டடக்கலை, தமிழ்த் திரைப்படங்கள், நூல்கள், விளையாட்டு முதலிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

அறிவியல், வரலாறு, புவியியல், உலக நடப்புகள், நடப்பு நிகழ்வுகள் முதலிய தலைப்புகளில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் இருக்கிற கட்டுரைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

இவ்வேளையில், இன்னும் பலர் தமிழ் விக்கிபீடியாவில் பயனர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் இணைந்து இந்தக் கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறோம்.

நன்றி,

தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக,

ரவிசங்கர்.

Saturday, February 24, 2007

விக்கிபீடியா- கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து

இம்மாதம் வெளிவந்த மல்லிகையின் 42வது ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரையின் இலக்கு வாசகர்கள் மல்லிகை வாசகர்களே..

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கலைக்களஞ்சியத்தைத் திறந்த நிலையில் உருவாக்க முடியுமா?

திறந்த கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும்?

அது முற்றிலும் இலவசமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்த முடியும். எவரும் அதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரைகளை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந்தால் அத்தகவல்களை எவரும் அக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்த கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த விடயங்கள் தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை அந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதற்கும் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்து தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கேயுள்ள கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகமடித்து விற்க முடியும். எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாக செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிட்வும் முடியும்.


இப்படி ஒரு கலைக்களஞ்சியம் சாத்தியமா?

சரி, இப்படி ஒரு கலைக்களஞ்சியம் கட்டாயம் இருக்கவேண்டுமா?

ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஏராளமான அறிஞர்களைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைப் பயன்படுத்தப்போகும் பயனர்களான நீங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அதனை அணுக அனுமதிக்கப்படுவீர்கள்.

ஒன்று நீங்கள் அதனை விலைகொடுத்தே வாங்க வேண்டும். அங்கே உள்ள கட்டுரைகளையோ அதன் பகுதிகளையோ எக்காரணம் கொண்டும் நீங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தமுடியாது. காப்புரிமைச் சட்டங்களின் கீழ் நீங்கள் சிறைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட, தவறுதலாக செய்யப்பட்ட தகவற் தவறுகளை நீங்கள் உடனடியாக திருத்திவிட முடியாது. கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் தகவல்கள் ஒரு சிலருக்கு சார்பாக இருக்கிறது என்று உரிமையோடு வாதிட்டு கட்டுரைகளை திருத்திவிட முடியாது. உங்களுக்கு தெரிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை அதில் நீங்கள் உடனடியாக சுதந்திரமாகச் சேர்க்கமுடியாது.

எப்போதும் உங்கள் கைகள் கட்டப்பட்டே இருக்கும். காப்புரிமை எனும் சங்கிலி எப்போதும் உங்களைப் பிணைத்தே இருக்கும்.

இந்தக் காப்புரிமைச் சங்கிலிகள் சுரண்டலுக்கே பெரிதும் துணைபோகின்றமை கண்முன்னே காணும் யதார்த்தம்.

இந்த கட்டுத்தளைகளை அறுத்து, புலமைச்சொத்துக்களைத் திறந்த நிலையில், கட்டற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும். பகிர்வதற்கான சுதந்திரம் வேண்டும், கூட்டுழைப்புக்கான வழிதிறக்கவேண்டும் என்று கோரும் ஒரு புதிய போக்கு இணைய வெளியில், மின்வெளியில் ஏற்பட்டிருக்கிறது.

"தனியுரிமை" என்பது அநீதி, பொதுமக்கள் உரிமையாக புலமைச்சொத்துக்கள் இருப்பதே மனித குலம் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று இந்த "தளையறுப்பு" இயக்கம் உரத்துச்சொல்கிறது.

இணைய உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, மென்பொருட்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கலைப்பணிகள் அனைத்துமே "திறந்த" நிலையில் பொதுமக்கள் உரிமையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் மனித குலத்தின் சொத்துக்களாக, வியாபகத்துடன் இருக்கவேண்டுமே அல்லாமல், தனிமனிதர்களின் குறுகிய உரிமை கோரல்களுக்குள் அகப்பட்டுப்போய்விடக்கூடாது என்று இந்த எதிர்ப்பியக்கத்தை ஆதரிக்கும் அனைவரும் விரும்புகின்றனர்.

இந்தப் புதிய புரட்சிகரமான சிந்தனைப்போக்கு மென்பொருள் தொழிற்றுறையிலேயே முதலில் தோன்றியது. மக்கள் உடைமையாக, கூட்டுழைப்பாக மென்பொருட்கள் திறந்த நிலையில் உருவாக்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும் என்று ஆரம்பித்து இன்று எல்லா வகையான புலமைச்சொத்துக்களினதும் திறந்த நிலையை வலியுறுத்துகிறது. புலமைச்சொத்துக்களை குறுக்கி முடக்கும் "காப்புரிமை" ஒப்பந்தங்களைக் காட்டமாக எதிர்க்கிறது. காப்புரிமைக்கு மாற்றாக புலமைச்சொத்துக்களை உருவாக்கும் மனிதர்களது உழைப்பினையும் உரிமையையும் காத்து, அதனை பயன்படுத்தும் மனித குலத்தின் சுதந்திரத்தையும் காக்கும் "அளிப்புரிமை" யினை முன்வைக்கின்றது. சட்டரீதியான அளிப்புரிமை ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

புலமைச்சொத்துக்களின் திறந்த நிலையை, கூட்டுழைப்பினை, கட்டற்ற பகிர்தலை முன்னிறுத்தும் இயக்கம், அந்த இயக்கத்தின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட "திறந்த" புலமைச்சொத்து உருவாக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சாத்தியப்படுமா? அல்லது இதெல்லாம் வெறும் "அழகிய கனவுகள்" தானா?

இந்த நெற்றி சுருக்கும் சந்தேகங்களை எல்லாம் தமது வெற்றிகளால் சுட்டெரித்துக்கொண்டு அதி வேகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது "திறந்த மூல" இயக்கம். பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தையெல்லாம் அடித்து உடைத்தவாறு எல்லாத்துறைகளிலும் திறந்த முயற்சிகள் வெற்றிபெற்றுக்கொண்டு வருகின்றன.

இந்த மகத்தான வெற்றியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திறந்த கலைக்களஞ்சியமான "விக்கிபீடியா".

ஆங்கிலதில் மட்டுமல்லாது, உலகமொழிகளில் பெரும்பாலானவற்றில் இந்த கூட்டுழைப்பில் உருவாகும் கலைக்களஞ்சியம் வெற்றிகரமாக வளர்ந்துவருகிறது.

ஏறத்தாழ 6000 கட்டுரைகளோடு தமிழ் விக்கிபீடியாவும் இணையத்தில் வளர்கிறது.

ஆங்கில விக்கிபீடியாவோ, இன்று உலகின் ஆகக்கூடிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமாக, நுணுக்கமாக செவ்வை பார்க்கப்பட்டு பார்த்துப்பார்த்து வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியங்களுக்குச் சமமான நிலையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

எவரும் வந்து எதையும் தொகுத்து, அழித்து மாற்றக்கூடிய நிலையில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமற்ற கலைக்களஞ்சியம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது?

இதற்கு ஒரு சாதாரண விக்கிபீடியா பயனரின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் பதில்களை பெற்றுக்கொள்ளலாம்.

எனது ஊரைப்பற்றிய சில தகவல்கள் தேவைப்படுவதால் நான் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை இணைய வெளியில் ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகுகிறேன். "திருக்கோணமலை" என்று தேடி திருக்கோணமலை தொடர்பான கட்டுரையை வந்தடைகிறேன். ஏற்கனவே பலர் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் அந்த கட்டுரையிலிருந்து எனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுகிறேன்.

அப்போதுதான் என் கவனத்தில் படுகிறது அகிலேசபிள்ளை, தி. த கனகசுந்தரம்பிள்ளை, தி.த சரவணமுத்துப்பிள்ளை போன்றவர்கள் திருக்கோணமலையில் தான் பிறந்துவளர்ந்தவர்கள் என்ற தகவல் "திருக்கோணமலை இலக்கிய வரலாறு" என்ற தலைப்பின் கீழ் விடுபட்டுப்போயிருக்கிறது.

உடனடியாக அந்த கட்டுரையின் மேற்பகுதியிலிருக்கும் "தொகு" என்ற விசையினை அழுத்தி கட்டுரையில் தேவையான வரிகளைத் தட்டெழுதிச் சேர்த்துவிடுகிறேன். கீழே உள்ள "சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தியவுடன் நான் புதிதாக சேர்த்த வரிகளுடன் கட்டுரை தற்போது காட்சியளிக்கிறது. இனி இந்தகட்டுரையைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தென்படும்.

இந்தத் தொகுப்பினை செய்வதற்கு எனக்கு எந்த பயனர் கணக்கும் தேவை இல்லை. எந்த விதமான சிறப்பு அனுமதியும் தேவையில்லை. எவர் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம்.

மறுநாள் நான் செய்த மாற்றங்கள் கட்டுரையில் இருக்கிறதா என்று பார்க்க ஆசையாயிருக்கவே திருக்கோணமலை கட்டுரையை மறுபடி பார்வையிடுகிறேன். அங்கே நான் செய்த மாற்றங்கள் அப்படியே இருக்கிறது. அத்தோடு தி. த. கனகசுந்தரம்பிள்ளைக்கு து.க என்று எழுத்துப்பிழை விட்டிருந்தேன். அந்த எழுதுப்பிழை சரியாக்கப்பட்டு து, தி ஆக மாற்றப்பட்டிருந்தது . இந்த திருத்தத்தை யார் சேர்த்தார்கள்? என்னைப்போல இந்த கட்டுரையைப் பார்வையிட வந்த மற்றவர்கள் தான்.

இந்த விடயம் எனக்கு நம்பிக்கையூட்டவே பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறேன். எனது பெயரில் புதிய பயனர் கணக்கை உருவாக்கியாகிவிட்டது. இனி எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி புகுபதிகை செய்துகொண்ட பின் நான் செய்யும் மாற்றங்கள் யாவும் என்பெயரில் மற்ற பயனர்களுக்கு அறிவிக்கப்படும்.

அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்குச் சென்று அண்மையில் யார்யார் என்ன கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறார்கள், திருத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று கவனித்தால், மேமன்கவி, டொமினிக் ஜீவா தொடர்பான கட்டுரை ஒன்றை அண்மையில் உருவாக்கியிருப்பது தெரிந்தது. அந்த தலைப்பைச் சொடுக்கி கட்டுரைக்கு போனால் அங்கே டொமினிக் ஜீவா தொடர்பான சிறிய கட்டுரை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே மல்லிகை என்ற சொல் சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதை சொடுக்கினால், மல்லிகை என்ற தலைப்பில் கட்டுரை எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த தலைப்பில் கட்டுரை உருவாக்க விரும்பினால் தட்டெழுதிச் சேமிக்கவும் என்பது போன்ற அறிவித்தல் வந்தது. சரி மல்லிகைக்கு கட்டுரை எல்லாம் எழுதப்போகிறோமே, மல்லிகை பற்றி இரண்டு வரி போட்டால் என்ன என்ற நினைவில் எனக்கு தெரிந்த அளவில் மல்லிகை பற்றிய இரண்டு வரிகளை அந்த தலைப்பில் சேர்த்துச் சேமித்துவிட்டு வருகிறேன்.

அடுத்த நாள் நான் புகுபதிகை செய்யும்போது எனது பேச்சுப்பக்கத்தில் மேமன் கவி எனக்கு நன்றி சொல்லி இருப்பதோடு, மற்றப் பயனர்கள் பலரும் மல்லிகை பற்றிய பெரிய கட்டுரை ஒன்றினையே வளர்த்தெடுத்துவிட்டிருக்கின்றனர். பல புதிய நட்புக்களும் இந்த கட்டுரை ஊடாகக் கிடைக்கிறது.

இவ்வாறு தான் விக்கிபீடியா இயங்குகிறது.

சாதாராண மனிதர்கள் பலர் கூடி ஒரு பெரும் தகவற் களஞ்சியத்தையே உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பான அறிவு இருக்கும். கூட்டுழைப்பாக, ஒரு பெரும் சமுதாயமாக இந்த தனி மனிதர்கள் இணையும்போது இந்த கூட்டு மதிநுட்பம் அதி சக்திவாய்ந்ததாக மாறுகிறது.

கூட்டுழைப்பும், சமுதாய செயற்பாடுகளும் தான் இந்த மனித இனத்தை முன்னோக்கி நகர்த்தும். குறுகிய இலாப நோக்கம் கொண்ட வட்டங்கள் அல்ல.

சரி திறந்ததோ என்னவோ, எவரோ ஒருவரின் கலைக்களஞ்சிய வலைத்தளத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்? இப்போது திறந்து வைத்துவிட்டு பின்னொரு நாளில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட மாட்டார்களா?

இது நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பின்வரும் காரணிகளால் அற்றுப்போகிறது.

ஒன்று, விக்கிபீடியா எந்த தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. "மெட்டாவிக்கி" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக்கமைவாக) நன்கொடைகளுக்கான வரிவிலக்குச் சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ அடக்கப்பட முடியாது.

அனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் காலத்துக்குகாலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இரண்டு, விக்கிபீடியா இயங்கும் மென்பொருளான மீடியாவிக்கி எனப்படும் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியின் அனைத்து நிரல்களும் திறந்த மூலம். விக்கிபீடியாவைப்போலவே இந்த மென்பொருளின் நிரலாக்கமும் நிகழ்கிறது. மென்பொருள் திறந்திருப்பதால் மறைமுகமான எந்த செயற்பாட்டையும் இந்த மென்பொருள் செய்ய முடியாது.

மூன்று, விக்கிபீடியாவின் உள்ளடக்கம் க்னூ பொதுமக்கள் உரிமத்தினடிப்படையில் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகிறது.

இந்த க்னூ பொதுமக்கள் உரிமம் என்பது காப்புரிமை ஒப்பந்தங்கள் செய்யும் சுயநல கட்டுப்பாடுகளை களைந்து, புலமைச்சொத்து மீதான பொதுமக்களின் உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தமாகும். அதாவது அளிப்புரிமை. சுருக்கமாக கூறுவதானால், திறந்த நிலை உள்ளடக்கங்களை எவரும் எதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், அந்த உள்ளடக்கங்களை மூடி வைக்க முடியாது. பகிர்தல் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நிகழவேண்டும்.

இவ்வாறானதொரு சட்டப்பாதுகாப்பு இந்த உள்ளடக்கங்களுக்கு உண்டு. அதனால் பொதுமக்கள் உருவாக்கும் இந்த உள்ளடக்கங்கள் யாவும் பொதுமக்களுக்கு மட்டுமே சொந்தம். யாரும் உரிமைகோர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. மெட்டாவிக்கி நிர்வாகக்குழுவினர் இந்தச் சட்ட விடயங்களைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன்காரணத்தினாலேதான் இந்த விக்கிபீடியாவினை நாம் ஒவ்வொருவரும் எமதாக உணரமுடிகிறது. எவருக்கோ வேலைசெய்கிறோம் என்ற எண்ணம் தோன்றுவதற்கு மாறாக, எல்லோரும் எனக்காக வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதனால் பொறுப்புணர்வும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கிறது


சரி, திறந்த நிலையில் இருக்கும் இந்த கட்டுரைகளில் தவறான விடயங்களை யாரும் புகுத்திவிட்டால்? கட்டுரைகளை விசமத்தனமாக அழித்துவிட்டால்? வன்செயல்புரிந்தால்?

இந்த சவால், தத்துவரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது.

சுற்றியிருக்கும் எல்லோருக்கும் சொந்தமான ஒரு திறந்த வீட்டில் களவுகள் நிகழமுடியாதல்லவா? இந்தத் தத்துவமே இங்கும் செயற்படுகிறது. எல்லா விக்கிபீடியா பயனர்களும் தமது சொந்த கலைக்களஞ்சியமான விக்கிபிடீயாவில் அக்கறையாய் இருக்கிறார்கள். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எவரும் இந்த பக்கத்தை பார்வை இடலாம். ஒவ்வொரு மாற்றங்களும் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான பயனர்களால் அவதானிக்கப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் நான் உருவாக்கிய கட்டுரைகளில் தீச்செயல்கள் நிகழ நான் அனுமதிக்கமாட்டேன். எந்த சிறு செயல் விக்கிபீடியாவில் நிகழ்ந்தாலும் அது அடுத்த கணமே அனைத்து பயனர்களின் பார்வைக்கும் வந்துவிடும். இது தான் திறந்த நிலையின் பாதுகாப்பு. உலகில் தீயவர்கள் மிகச்சிலரே. அவர்கள் மிக இலகுவாக மாட்டுப்பட்டுவிடுவார்கள். இவ்வாறான விக்கிபீடியா குற்றங்கள் புரியப்பட்டால் அவை உடனடியாக களையப்பட்டுவிடும்.

தொழிநுட்பரீதியாக இந்தச் சவால் பல வழிகளால் எதிர்கொள்ளப்படுகிறது. அழிக்கப்பட்ட கட்டுரை ஒன்றினை மீட்டெடுக்கும் வசதி. ஒவ்வொரு மாற்றங்களும் எந்த IP முகவரியிலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து குறித்த முகவரியை விக்கிபீடியா தொகுத்தலிலிருந்து தடை செய்யும் வசதி. கட்டுரைகளைத் தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி போன்றன உண்டு.
அத்தோடு ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவிற்கும் அதற்கென நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து அவரவர் இயலுகை, அக்கறை போன்றனவற்றின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இத்தகு பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர். விக்கிபீடியாவுக்கென்று ஒழுக்கக்கோவையும் உண்டு.

இந்த சமுதாய உழைப்பு மின்வெளியில் மட்டுமல்ல, மெய் உலக நடவடிக்கைகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி.

மைக்ரோசொஃப்ட் போன்ற கணினி உலகின் மிகப்பெரும் மூலதன நிறுவனங்களின் சுரண்டல் அதிகாரத்தினைகூட இந்த சமுதாய உழைப்பு வெற்றிகொண்டு நடைபோடுகிறது.

இந்தத் தத்துவ அடிப்படையில் விக்கிபீடியாவை ஒத்த பல சகோதர செயற்றிட்டங்களும் உள்ளன. திறந்த அகரமுதலியான விக்சனரி, திறந்த புத்தகங்கள் எழுதுவதற்கான விக்கிபுத்தகங்கள், திறந்த செய்திவழங்கலுக்கான விக்கிசெய்திகள் போன்ற அவற்றுள் சில

இந்தத் திறந்த கலைக்களஞ்சியத்தைத் தமிழர்கள் தங்கள் அறிவினைச் சேகரித்துவைக்கும் மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக கருதுவதில் என்ன தடை இருக்கமுடியும்?

தேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?

தமிழ் விக்கிபீடியா அதிவேகமாக வளர்கிறது. உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழர்களின் இணையமூலமான கூட்டுழைப்பில் ஏழாயிரம் கட்டுரைகளை தொட்டு வளர்கிறது. தன்னைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் இந்த கலைகளஞ்சியத்தில் ஆவணப்படுத்திக்கொள்ள இந்த இனம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்தம். ஒவ்வொருவரும் தமதாக உணரக்கூடிய உள்ளடக்கங்கள். எவரும் எந்த் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.

எல்லாத்துறையினரும் இந்த கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால்மட்டுமே பன்முகத்தன்மைகொண்ட சிறந்த அறிவுக்களஞ்சியமாக இது உருவாகும். நாம் சார்ந்த தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் விடுபட்டுப்போக அனுமதிக்கலாகாது. படங்களை, ஒலிவடிவங்களை, ஒளிப்படங்களைக் கூட அளிப்புரிமை அடிப்படையில் இங்கே சேமித்துவைக்கமுடியும்

ஒரு பெரும் விக்கிபீடியர் சமுதாயத்தை நாம் எங்கள் இடங்களில் உருவாக்கிக்கொள்வதன்மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். அருகிலிருக்கும் விக்கிபீடியா பற்றி தெரிந்த ஒருவரை அணுகி, அவரது உதவியோடு பயனர் கணக்கொன்றை ஆரம்பித்து தகவல்களைத் தொகுக்க ஆரம்பிக்கலாம். சிறு தேனீர் விருந்துகளுடன் விக்கிபீடியர்கள் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தொழிநுட்பரீதியாக இவற்றை செய்ய முடியாமலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவலாம்.

எம்மைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் பாதுகாப்பாக, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு இதுவே மிக ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வழி.

தேசமிழந்த இனத்திற்கு இந்த அசைவியக்கம் ஓர் உடனடித்தேவை.

எமக்கான நிலம், எமக்கான தளம் நிரந்தரிக்கப்படும்வரை மின்வெளியில் ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் பெரும்பணியில் இந்த திறந்த கலைக்களஞ்சியமும் ஒரு பகுதி.

"From each according to her/his abilities, to each according to her/his needs" - Karl Marx

Thursday, February 22, 2007

2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியா அறிக்கை

தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் கீழ் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கி மேற்கோள்கள், தமிழ் விக்கி செய்திகள் ஆகிய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலத்தை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றுள் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவும் தமிழ் விக்சனரியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதுடன் தமிழ் இணையப் பயனர்களால் பெரிதும் அறியப்பட்டதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பிற தளங்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் சீரிய வளர்ச்சி மிக்கதாகவும் உள்ளன. இத்தளங்கள் தமிழ் இணையத்தில் முதன்மையான தகவல் களங்களாக உள்ளன. தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தோன்றக்கூடிய இணைய அணுக்கப் பரவல், இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உரமாக அமையும் என்பதால் இத்திட்டங்களின் வருங்கால முக்கியத்துவம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆங்கில இணையத்தளங்களை போலன்றி, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் உசாத்துணைக்கான முதன்மை களமாக இருப்பது குறிப்பிட்டதக்கது.




2 தமிழ் விக்கிபீடியா

தமிழ் விக்கிபீடியா 2003ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 7,075 கட்டுரைகள் உள்ளன; 1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன.


2.1 பயனர் விவரங்கள்

1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கணக்குகளை நிர்வாகப் பொறுப்புள்ளவர்கள் கொண்டு உள்ளனர். நிரவலாக, நாளொன்றுக்கு 4 பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. பயனர்கள் பெரும்பாலும் இந்திய, இலங்கை வேர்களை கொண்டவர்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் பங்களித்து வருகின்றனர்.


பங்களிக்கும் பயனர் அகவை பெரும்பாலும் 20-25 என்ற எல்லையில் அமைந்து இருக்கிறது. எனினும், முனைப்புடன் பங்காற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பயனர்களும் உள்ளனர். மாணவர்கள், மென்பொருள் வல்லுனர்கள் ஆகியோர் பங்களிக்கும் பயனர்களில் பெரும்பான்மையோர். எனினும், முனைப்போடு பங்காற்றுபவர்களில் சிறந்த தொழிற்பின்புலமும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர், கட்டிடக் கலை வல்லுனர் ஆகியோரும் உண்டு.


2.2 கட்டுரை எண்ணிக்கையும் தரமும்



  • 1000 கட்டுரைகள் - ஆகஸ்டு 14,2005.

  • 4000 கட்டுரைகள் - ஆகஸ்டு 22, 2006.

  • 7000 கட்டுரைகள் - பெப்ரவரி 18, 2007.


என்ற வளர்ச்சியை பார்க்கையில் கட்டுரைகள் எண்ணிக்கை கூடும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருவதை காணலாம். அதே வேளை, கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதை மட்டும் இலக்காக வைத்து உருவாக்கப்படும் பயனற்ற பக்கங்களை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவே தரம் மிகுந்து எண்ணிக்கையிலும் கூடுதலாக உள்ள இந்திய மொழி விக்கிபீடியாவாகும்.


விரிவான ஒப்பீடுகளை பார்க்க - Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)


2.2.1 ஜனவரி 2007 புள்ளிவிவரம்


கட்டுரை எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிக்கின்றது. தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிகமான கட்டுரைகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரிவான புள்ளிவிவர ஒப்பீடுகளுக்குப் இங்கு பார்க்கவும்


2.3 பிற அளவுகோல்கள்



  • கட்டற்ற தன்மை, நடுநிலைமை, இணக்க முடிவு, மெய்யறிதன்மை ஆகியவற்றில் சமரசமின்மை.

  • கட்டுரை எண்ணிக்கை, தரம் தவிர தள செயற்பாட்டுக்கான கொள்கை-உதவி போன்ற அடிப்படைகளில், உள்ளடக்கத்தில் (பரப்பு-ஆழம்-தரம்), பயனர் நல்லுறவுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

  • தமிழ்ச் சூழலில் தமிழ் விக்கிபீடியா ஒரு மாற்று ஊடக அல்லது மூலமாக வளர்வதற்கான வாய்ப்பை கருதி தொலைநோக்கு மற்றும் பொறுப்புடன் செயல்படுகிறோம்.

  • எத்துறையிலும் ஐரோப்பிய மையப் பார்வைய தவிர்த்து, எளிய தமிழில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறோம். எழுத்து தமிழ் நடை அல்லது பொதுத் தமிழ் நடையை பின்பற்றல், தமிழர்களை பற்றிய தகவல்களை கவனம் தந்து சேர்த்தல் போன்றவற்றுக்கும் முன்னுரிமை தருகிறோம்.


2.3 தடைக்கற்கள்



  • தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் பரவலான இணைய அணுக்கம் இல்லாமை.

  • தமிழ்க் கலைச்சொற்கள் ஒருங்கிணைப்பின்மை.

  • உலகளாவிய தமிழ் மொழி ஒலிப்பு-எழுத்து முறை வேறுபாடுகள்.

  • உசாத்துணைக்கான பிற இணைய வழி தமிழ் ஆதாரங்கள் இல்லாமை.

  • தமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வின்மை.


2.4 மறைமுகப் பங்களிப்புகள்


நேரடியாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதாதோரும் பிற வழிகளில் மறைமுகமாக தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிபீடியாவுக்கான இணைப்பை காணலாம். தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்த இணையக் கருவிகளின் உருவாக்கமும் தமிழ் விக்கிபீடியாவுக்கான மறைமுகப் பங்களிப்புகளே. தற்போது, தமிழ் விக்கிபீடியா குறித்த தொடர்பாடலுக்காக தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.


2.5 தற்போதைய முனைப்புகள்



  • இருக்கிற கட்டுரைகளில் தர மேம்பாடு.

  • படிம ஒழுங்குபடுத்துதல்.

  • தமிழ் விக்கிபீடியா குறித்த பொது விழிப்புணர்வு உருவாக்குதல்.


2.6 பலங்கள்



  • மற்ற இந்திய மொழிகளை போல் அல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியேயும் பேசப்படும் மொழி தமிழ். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழுடன் தொடர்ச்சியை விரும்பும் இவர்களுக்கு இணையதம் ஒரு முக்கிய தகவல் ஆதாரமாக இருப்பதால் விக்கிபீடியாவின் தேவை தமிழர்களுக்கு அதிகம்.

  • புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பதோடு தமிழார்வம் குன்றாமல் இருப்பதால் அனைத்துத் துறை கட்டுரைகளும் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்பு.

  • உலகெங்கும் பல நேர வலயங்களில் உள்ள தமிழர்கள் பங்களிப்பதால் 24 மணி நேரமும் தளம் இற்றைப்படுத்தப்படவும் கண்காணிக்கப்படுவதற்குமான வாய்ப்பு.




2.7 வருங்காலப் எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள்



  • தமிழ் நிலப்பகுதிகளில் இணைய அணுக்கம் பரவலாகப் பரவலாக தமிழ் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு, பயன்பாடு இரண்டும் கூடும்.

  • கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்குட்பட்டு அறிவு சார் துறைகளுக்கான தமிழர் விவாதக்களமாக தமிழ் விக்கிபீடியாவை உருவாக்குதல்.

  • தமிழ் நிலப்பகுதி பல்கலைக்கழகங்களுடன் பங்களிப்புகளுக்கான சாத்தியங்களை ஆராய்தல்.

  • முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை கட்டற்ற முறையில் தமிழ் விக்கிபீடியாவுடன் பகிர முன்வந்துள்ளார்கள்.




3. தமிழ் விக்சனரி


தமிழ் விக்சனரியில் தற்போது 5500+ சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் தமிழில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் - தமிழ் விளக்கச் சொற்கள். பயனர் கணக்குகள் எண்ணிக்கை 150+ ஆக உள்ளது. இவற்றில் 6 கணக்குகளை நிர்வாகிகள் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தமிழ் விக்கிபீடியா பயனர்களே அங்கும் பங்களித்தாலும் விக்சனரியில் மட்டும் பங்களிக்கும் பயனர்களும் உள்ளனர். இணையத்தில் இருக்கும் ஒரே தற்காலத் தமிழ் அகரமுதலியாக இருப்பது தமிழ் விக்சனரியின் சிறப்பு. பயனர் விவரங்கள், பக்க எண்ணிக்கை, தரக்கட்டுப்பாடு, தடைக்கற்கள், வருங்காலப் போக்குகள் ஆகியவை தமிழ் விக்கிபீடியாவை ஒத்தே இருக்கின்றன.


4. பிற திட்டங்கள்


தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மேற்கோள், தமிழ் விக்கி செய்திகள் ஆகியவற்றின் இருப்பும் முக்கியத்துவமும் தற்போது குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் இருக்கும் பயனர்களே அங்கும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்திட்டங்கள் வளரவில்லை. இத்திட்டங்களில் தனி ஆர்வம் உடைய பயனர்கள் வருகையில் நிலைமை மாறும். எனினும், இத்திட்டங்களின் தேக்கம் ஆங்கில விக்கித் திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகளுடன் ஒப்பிடத் தக்கதே. இத்தளங்களை காட்டிலும் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான தேவை மிகையாக உணரப்படுவதால் அதை அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாக அமையும் என்று சொல்ல இயலும்.

Wednesday, February 14, 2007

விக்கிபீடியா அறிமுகக் குறிப்புகள்

0. தமிழ் விக்கிபீடியா முக்கியத்துவமும் செயல்பாடுகளும் - மயூரனாதனின் அறிமுகம்

1. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பதிவுகள் இதழில் நற்கீரனின் விக்கிபீடியா அறிமுகம்

2. தமிழ் விக்கிபீடியாவுக்கு இணைப்பு தர - சந்தோஷ்குருவின் உதவிக் குறிப்பு

3. தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களியுங்கள் - வா. மணிகண்டனின் அழைப்பு

Monday, February 12, 2007

(2) விக்கிபீடியா என்ன கொம்பா?

== விக்கிபீடியா என்ன கொம்பா? ==

கடந்த பதிவில் [[விக்கிபீடியா]] என்றால் என்ன என்பதுபற்றிய ஓர் அடிப்படை வரைபடத்தை பெற்றுக்கொண்டோம்.

அடிப்படையில் விக்கிபீடியா என்பது ஒரு [[கலைக்களஞ்சியம்]] என்பதை தெரிந்துகொண்டோம். இணையத்தில் பேணப்படும் கலைக்களஞ்சியம்.

இவ்வாறு இணையத்தை அடிப்படையாகக்கொண்ட ஏராளம் கலைக்களஞ்சியங்கள் இருப்பதையும் பார்த்தோம்.

ஆனால், ஏன் விக்கிபீடியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? அது தமிழிலும் உள்ளதென்பது அதன் முக்கியத்துவத்தின் ஒரு மிகச்சிறு பகுதியே.

உங்களை அதிகம் அலைக்கழிக்காமல், நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.

விக்கிபீடியாவின் முக்கியத்துவம் அதன் பின்னணியில் உள்ள பலமான புரட்சிகர தத்துவத்தில் தான் இருக்கிறது.

மற்றைய கலைக்களஞ்சியங்களை பாரிய நிறுவனங்கள் பராமரித்து வரலாம். பில்கேட்ஸ் போன்ற உலகப்பெரும் தனவந்தர்களின் நிறுவனங்கள் கூட கலைக்களஞ்சியங்களை பராமரித்து, விற்று வருகின்றன. தொழிநுட்ப ரீதியிலும் வலைத்தள வடிவமைப்பிலும் பயன்பாட்டு எளிமையிலும் அவை மிகச்சிறப்பானவையாகவே இருக்கின்றன.

=== இலவசம் ===

விக்கிபீடியா முற்றிலும் [[இலவசம்]]. எப்போது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் விக்கிபீடியாவை எந்த கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தலாம். ஒற்றைச்சிறு [[விளம்பரம்]] கூட விக்கிபீடியாவின் பக்கங்களில் இடம்பெற்றிருக்காது. எந்த விதமான இலாபப்பெருக்கத்தையும், இலாப நோக்கத்தையும் விக்கிபீடியா கொண்டிருக்கவில்லை.

விக்கிபீடியா இலவசமாக படிக்கக்கிடைக்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவத்துக்கு இலவசம் என்பதுகூட ஒரு காரணம் அல்ல. என்கார்ட்டாவையும் தான் இலவசமாக படிக்கலாம்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி விக்கிபீடியாவிற்கு பெரும் பலமாக ஒரு தத்துவ அடிப்படை இருக்கிறது.

அதுதான் [[திறந்த மூலம்]] எனும் புரட்சிகரமான தத்துவம்.

எமது கட்டுரைத்தொடரின் இந்த அத்தியாயத்தில் இந்த தத்துவத்தைப்பற்றிய மேலோட்டமான சிறு அறிமுகத்தை பெற முயல்வோம். இதுபற்றி பின்னர் வரும் அத்தியாயங்களில் மிக விரிவாகவே பேசவிருக்கிறோம்.

=== அளிப்புரிமை ===

நீங்கள் புத்தகம் ஒன்றினை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் [[காப்புரிமை]] பற்றிய அறிவுறுத்தலை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஆங்கில எழுத்து c இனைச்சுற்றி வட்டம் போட்டதைப்போன்ற குறியீட்டுடன் காணப்படும். ஆங்கிலத்தில் copyright என்போம். இவ்வாறு காப்புரிமை செய்யப்பட்ட புத்தகங்களில் வரும் ஆக்கங்கள் எல்லாம் அக்காப்புரிமை யாருக்குரியதோ அவருக்கே சொந்தம். தனியுரிமை. தனியுடைமை. அந்த புத்தகத்தை நீங்கள் மீள பதிப்பிக்க முடியாது. அந்த புத்தகத்தில் வரும் கட்டுரை ஒன்றை நகலெடுத்து உங்கள் புத்தகத்திலோ, வேறு தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துதல் சட்டவிரோதம். நீங்கள் நீதியின் முன்னால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

இதேபோன்றே இணையத்திலுள்ள பிரபலமான பெரும்பாலான கலைக்களஞ்சியங்கள் தனியுரிமை பெற்றனவாக இருக்கின்றன. அரசாங்கம் வெளியிடுகின்ற கலைக்களஞ்சியங்கள், பாட நூல்கள் கூட தனியுரிமை பெற்றனவே.

இப்போது நாங்கள் அழகிய கனவொன்று காண்போம்.

தனியுரிமைகள் இல்லாத புத்தகங்கள், இணையத்தளங்கள் இருந்தால் என்னவெல்லாம் சாத்தியம்?

நீங்கள் புத்தகங்களை தாராளமாக எங்கு வேண்டுமானாலும் வைத்து எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். புத்தகம் வைத்திருக்கும் தகவல்களை விட உங்களுக்கு அதிகம் தெரியுமானால், அந்த புத்தகத்தின் பக்கங்களை நகலெடுத்து, மேலதிக தகவல்களை நீங்களே அச்சிட்டு சேர்த்து புதியதொரு புத்தகமாக தொகுத்து நீங்களே வெளியிடலாம். புத்தகத்தின் கட்டுரைகளை, ஆக்கங்களை உங்கள் சஞ்சிகையில், பத்திரிகையில் எந்ததயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

புத்தகம் என்று நினைப்பதை விட [[இணையத்தளம்]] என்று நினைத்துப்பாருங்கள். உங்கள் சுதந்திரம் எவ்வளவு வியாபகம் பெறுகிறதென்று?

ஒரு கலைக்களஞ்சிய வலைத்தளத்திலுள்ள ஆக்கங்களை எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவற்றை பள்ளிக்கூடங்களில் அச்சிட்டு விநியோகிக்கலாம். யாரும் அந்த ஆக்கங்களுக்கு உரிமைகோரப்போவதில்லை. யாரும் உங்கள் மீது வழக்குத்தொடரப்போவதில்லை. இப்படி ஒரு கலைக்களஞ்சியம், அதுவும் இணையத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?

நன்றாக இருக்குமல்லவா?

அதுதான் விக்கிபீடியா!!

விக்கிபீடியா, காப்புரிமைக்கு பதிலாக, காப்புரிமை எனும் அடக்குமுறையை உடைத்து எறிந்துவிட்டு "[[அளிப்புரிமை]]"யை பயன்படுத்துகிறது.
அதாவது கட்டுரைகளை, வரைபடங்களை, ஒளிப்படங்கள், ஒலிக்கோப்புக்களை மற்றவர்களுடன் பகிரவும், வேண்டியபடி பயன்படுத்தவும் ஊக்குவிக்கும் "அளிப்புரிமை".

இவ்வாறான அளிப்புரிமை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
அப்படியானல் விக்கிபீடியாவை உங்களுக்கு பிடித்திருக்கிறது.

பெருநிறுவனங்களின் காப்புரிமை பெற்ற இணைய கலைகளஞ்சியங்கள் எல்லாம் இறுகிய முரட்டு முகத்தோற்றத்தை உங்கள் மனதில் தருகிறதா?
அவற்றின் முகம் அதுவேதான்.

அவற்றிலிருந்து படங்களை உரை நகல்களை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானமாக இருங்கள்.
சுதந்திரமாக, எந்த பயமுமற்று விக்கிபீடியாவில் நகலெடுத்து சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துங்கள். அப்படி பயன்படுத்துமாறு அது உங்களை அன்போடு வேண்டுகிறது.

'''ஆனால் இந்த அளிப்புரிமையில் ஒரேயொரு கட்டுப்பாடு உண்டு. நீங்கள் சுதந்திரமாக பெற்ற இந்த உள்ளடக்கங்களை மற்றவர் பயன்படுத்தக்கூடாது என்று தடுக்கவோ மூடிவைக்கவோ தனியுரிமை ஆக்கவோ முடியாது.'''

இதுபற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்.


=== கூட்டுழைப்பு ===

விக்கிபீடியாவின் ஒவ்வொரு கட்டுரைகளும், விக்கிபீடியா இயங்கும் மென்பொருட்களும் உலகம் பூராகவும் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களால் வழங்கப்படும் சிறு சிறு உழைப்பின் மொத்த விளைவாகவே உருவாக்கி வளர்த்தெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு கூட்டுழைப்பில் உருவாகும் கட்டுரைகளுக்கோ மென்பொருளுக்கோ யாரும் உரிமை கோர முடியாது. இது உலகப்பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தம்.

விக்கிபீடியாவில் ஒரு சிறு துரும்பை சேர்த்தால்கூட நீங்களும் அப்பெரும் மானுடக்கூட்டத்தின் அங்கமாகலாம்.

அறிவுக்களஞ்சியமொன்றை இலவசமாக எல்லோரும் கூடி உருவாக்கி, அதனை எல்லோரோடும் தடைகள் இல்லாமல் பகிர்ந்துகொள்ளும் உயர் மனிதப்பண்பினை விக்கிபீடியா பேணுகிறது.

அங்கு நீங்களும் எந்த தடையுமில்லாமல் கட்டுரைகள் உருவாக்கலாம். மாற்றங்களை செய்யலாம். தகவல்களை சேர்க்கலாம்.

=== திறந்த மூலம் ===

உலகில் இன்று வெற்றிகரமான பாதையில் சென்றுகொண்டிருக்கும், வலிமை மிக்க தனியுரிமை நிறுவனங்களையும் உற்பத்திகளையும் முதலாளிகளையும் அச்சுறுத்தி முன்னேறிக்கொண்டிருக்கும் திறந்தமூல தத்துவத்தின் அடிப்படையிலேயே விக்கிபீடியா கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

திறந்தமூல தத்துவத்தின் வீரியத்துக்கும் வெற்றிக்கும் மிகத்தூலமான எடுத்துக்காட்டாக விக்கிபீடியா உயர்ந்து நிற்கிறது.


இவைதான், இந்த காரணங்கள்தான் விக்கிபீடியாவை மற்றைய எல்லா தனியுரிமை கலைக்களஞ்சியங்களிலிருந்து வேறுபடுத்தி உன்னதமான இடத்தில் வைத்திருக்கிறது.

அதன் திறந்த நிலை காரணமாகவே அதில் தமிழ் விக்கிபீடியாவை எம்மால் கூட்டுழைப்பில் உருவாக்க முடிந்தது.

இப்போது எம்மிடம் இந்த எல்லா உயர்ந்த பண்புகளுடனும் கூடிய தமிழ் விக்கிபீடியாவும், தமிழ் [[விக்கிபீடியர்]] சமூகமும் உண்டு.

இந்த சமூகம் எப்படி இயங்குகிறது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

********
விக்கிபீடியா பற்றிய இந்த அறிமுகக்கட்டுரைத்தொடர், விக்கிபீடியாவை பரந்தளவில் அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளில் ஒருபகுதியாக எழுதப்படுகிறது. இக்கட்டுரையில் செய்யவேண்டிய மாற்றங்கள், மேலதிகமாக சேர்க்கப்படவேண்டியவை எவை என்பதுபற்றிய உங்கள் ஆலோசனைகளை வேண்டிநிற்கிறேன். ஆலோசனைகளை தயவுசெய்து பின்னூட்டமாக இடவும். கட்டுரைத்தொடர் முற்றுப்பெற்றதும் உங்கள் ஆலோசனைகளையும் சேர்த்து முழுமையான அறிமுகக்கட்டுரையாக இதனை வடிவமைக்கலாம்.

*********

கட்டறுக்கும் அறிவு - கட்டற்ற பகிர்வு

== 1. விக்கிபீடியா என்றால் என்ன? ==

விக்கிபீடியா என்ற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கொஞ்சம் எடக்குமுடக்கான சொல்தான். சத்தியமாய் தமிழ் இல்லை.
wikipedia என்கிற ஆங்கிலச்சொல்தான் இது. (அடிச்சொல் ஆங்கிலம் இல்லை)

இது ஆங்கிலத்திலும் பல மொழிகளிலும் வேகமாக வளர்ந்துவரும் கலைக்களஞ்சியம் (encyclopedia). கலைக்களஞ்சியம் என்றால்?

எடுத்துக்காட்டாக, நீங்கள் பத்திரிகை படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு பத்திரிகைகளில் அடிக்கடி அடிபடும் சொல், "ஹெஸ்புல்லா" வை பார்த்துவிடுகிறீர்கள். உங்களுக்கு ஹெஸ்புல்லா என்பது ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கம் என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாது. வீட்டிலிருக்கும் சிறுமி வேறு அப்படி என்றால் என்ன என்று கேட்டு உங்களை குடைய ஆரம்பித்துவிடுகிறாள். உங்கள் பாடு பெரும்பாடாகிவிட்டது. என்ன செய்யலாம்? அகரமுதலியை(dictionary) பார்க்கலாமா?
ஆங்கிலச்சொல்லுக்கு, அல்லது ஏதாவது சொல்லுக்கு அர்த்தம் என்றால் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இது அப்படி இல்லையே?

வேறு பத்திரிகைகள் வாங்கி பார்க்கலாமா?

பத்திரிகைகளில் ஆயிரம் விஷயம் வரும் அதில் "ஹெஸ்புல்லாவை" எங்கே தேடி எப்படி கண்டுபிடிப்பது? நூலகத்துக்கு போனாலும் புத்தகக்கடலில் எப்படி இந்த அமைப்புபற்றிய திரட்டப்பட்ட விடயங்களை ஒரே இடத்தில் பெறுவது?

இந்த தேவையை பூர்த்திசெய்வதற்காகத்தான் கலைக்களஞ்சியங்கள் உருவானது. கலைக்களஞ்சியம் என்பது, இவ்வாறான பல்துறை சார்ந்த சொற்கள், விஷயங்களுக்கக தனிப்பக்கங்ககள் ஒதுக்கபட்டு, அப்பக்கங்களில், விளக்கங்களை விளக்கப்படங்களை தகவல்களை தொகுத்துத்தருகின்ற ஒரு புத்தகம். தலைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டு இலகுவாக தேடிப்பெறக்கூடியவண்ணம்
தொகுக்கப்பட்டிருக்கும்.

புத்தகம் முழுக்க இப்படியான தகவல்கள்மட்டும்தான் தலைப்புவாரியாக தொகுக்கப்பட்டிருக்கும்.

எனக்கு கவிதை எல்லாம் படிக்கதெரியும் கலைக்களஞ்சியத்தில் கவிதை வேணும் என்றெல்லாம் கேட்கக்கூடாது (!) அங்கே தகவல்கள், தகவல்களுக்கான விளக்கப்படங்கள் போன்றன மட்டுமே இருக்கும்.

அந்த புத்தகத்தில் இச்சொல்லை தேடினால், ஹெஸ்புல்லாபற்றிய பல்வேறு விபரங்கள், செய்திகள் தகவல்கள், படங்கள் போன்றவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இப்படியான ஒரு கலைக்களஞ்சியம் தான் விக்கிபீடியா.

அப்படியானால் விக்கிபீடியா என்பது ஒரு புத்தகமா?

ம்ம்ஹ்ம்ம்...!

அது ஒரு வலைத்தளம் (website)

வலைத்தளம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்றெல்லாம் உங்களுக்கு சொல்லப்போவதில்லை (ஏன் என்று கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்)

கலைக்களஞ்சிய புத்தகத்தை போன்று கலைக்களஞ்சிய வலைத்தளமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள்.

புத்தகங்களில் பக்கங்களை எச்சில்தொட்டு புரட்டி புரட்டி படிப்பீர்கள், இங்கே எல்லாம் சொடுக்கல்தான்.
திரும்ப பார்க்க வேண்டிய கட்டுரைகளை மெதுவாக அப்பக்கத்தின் மூலைகளை மடித்துவைத்து அடையாளப்படுத்துவீர்கள். இங்கே உலாவியில்(browser) புத்தகக்குறியிட்டு(book marks) வைத்துக்கொள்வீர்கள். இப்படியாக சின்ன சின்ன வித்தியாசங்கள்.


சின்ன சின்ன வித்தியாசங்கள் மட்டும்தானா?

இல்லை.

ஒரு வலைத்தளம் என்ற அடிப்படையில் அங்கே படங்களை தாண்டியும் ஒலிக்கோப்புகள், ஒளிப்படங்கள் எல்லாம் வைத்திருக்க முடியும். ஏனைய வலைத்தளங்களுக்கு தொடுப்பு கொடுக்க முடியும்.

அத்தொடு இன்னொரு முக்கியமான விஷயம், புதிதாக வெளிவரும் தகவல்களை சேர்த்து கலைக்களஞ்சியத்தை எப்போதும் புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள முடியும்.

புத்தக வடிவில் இருக்கும் கலைக்களஞ்சியத்தில் "சோழன்" பற்றி தேடினால் வேண்டிய தகவல்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் நாங்கள் தேடுவது "ஹெஸ்புல்லா"பற்றி ஆகிற்றே?

நீங்கள் கலைக்களஞ்சியப்புத்தகதை வாங்கிய பிற்பாடு அல்லது அப்புத்தகம் அச்சடிக்கப்பட்ட பிற்பாடு வந்த தகவல்கள் அங்கே சேர்க்கப்பட்டிருக்காதே?

வலைத்தளமாக இருக்கும் போது வலைத்தள நிர்வாகிகள் மிக இலகுவாக புதிய தகவல்களை சேர்த்து எப்போதும் கலைக்களஞ்சியத்தை புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியும். தவறுகளையும் உடனுக்குடன் திருத்திக்கொள்ள முடியும்.

சரி,

இப்போது சில இணையத்தை அடிப்படையாகக்கொண்ட கலைக்களஞ்சியங்களுக்கு சும்மா போய் பார்த்துவிட்டு வருவோம்
அங்கே சும்மா நேரத்தை மினக்கடுத்தாமல் விரைவாய் கட்டுரைக்கு வந்து சேருங்க. இன்னும் சொல்ல நிறைய இருக்கு...

கலைக்களஞ்சிய தளங்கள்

மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா
பிரிட்டானிக்கா
என்சைக்ளோபீடியா டொட் கொம்
விக்கிபீடியா


சரி. பார்த்தாகிவிட்டதா. இப்படித்தான் இணைய கலைக்களஞ்சியங்கள் இருக்கும்.
இவையெல்லாம் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது. தமிழில் இப்படி ஒன்றும் இல்லையா என்று நீங்கள் கேட்க முனைவீர்களானால், நெஞ்சை நிமிர்த்தி, பெருமையாய் சொவேன்.


இருக்கிறது இருக்கிறது இருக்கிறது.


அதுதான் தமிழ் விக்கிபீடியா.!



விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் கிளை.
இங்கே ஏராளமான கட்டுரைகள் தமிழிலேயெ உங்களுக்கு வாசிக்க கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு தமிழ் விக்கிபீடியா பக்கம் ஒன்றை பார்வையிடலாம்.

வலைப்பதிவு


இப்பதான் சில கலைக்களஞ்சியங்களை பார்த்தோம். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருக்கு. அப்படி இருக்க ஏன் விக்கிபீடியாவைப்பற்றி மட்டும் நாம் பேச வேண்டும்?
அப்படி என்ன விக்கிபீடியா பற்றி சாய்வை இந்த கட்டுரை வெளிப்படுத்த வேண்டும்?

எங்களுடைய கட்டுரைத்தொடர் இந்த கேள்வியிலிருந்தேதான் ஆரம்பிக்கிறது.

தமிழில் கிளை ஒன்றைக்கொண்டிருப்பதாலாக இருக்குமோ?
தளம் அதிக தகவல்களை கொண்டிருப்பதாலாக இருக்குமோ?
தளம் அழகாக இருப்பதாலாக இருக்குமோ?
பெயர் நல்ல பகிடியாக இருப்பதாலாக இருக்குமோ?


பார்க்கலாம்.


********
விக்கிபீடியா பற்றிய இந்த அறிமுகக்கட்டுரைத்தொடர், விக்கிபீடியாவை பரந்தளவில் அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளில் ஒருபகுதியாக எழுதப்படுகிறது. இக்கட்டுரையில் செய்யவேண்டிய மாற்றங்கள், மேலதிகமாக சேர்க்கப்படவேண்டியவை எவை என்பதுபற்றிய உங்கள் ஆலோசனைகளை வேண்டிநிற்கிறேன். ஆலோசனைகளை தயவுசெய்து பின்னூட்டமாக இடவும். கட்டுரைத்தொடர் முற்றுப்பெற்றதும் உங்கள் ஆலோசனைகளையும் சேர்த்து முழுமையான அறிமுகக்கட்டுரையாக இதனை வடிவமைக்கலாம்.

*********

அறிமுகம்

தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்கள், செய்திகள், அறிக்கைகள், உதவிக்குறிப்புகள், விளக்கங்கள், தொடர்பாடல்களுக்கான களமாக இந்த வலைப்பதிவு செயல்படும்.