அறிவுத்தளங்கள், அறிவுத்தொடர்ச்சி, சமூக உரையாடல்
தமிழ் என்றால் இலக்கியம். இலக்கியம் என்றால் சிறுகதை, புதினம், கவிதை, காவியம் என்ற தோற்றப்பாடு தமிழ்ச் சூழலில் உள்ளது. இந்த வரையறையை மீறுவது படைப்பாளிகளுக்கு முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
சமூகக் கருத்துக்களை எடுத்துரைக்க வந்தவர்களுக்கும் இந்த வடிவங்களுக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக சாதியம், பெண்கள் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்ற சமூக நோய்களை அலச முற்பட்ட இடதுசாரி அல்லது பகுத்தறிவுவாதச் சிந்தனையாளர்கள் இந்த வரையறைக்குள் வரும்வரை, தமிழின் இலக்கிய வட்டத்துக்கு அப்பாலேயே வைக்கப்பட்டனர். அப்படி அவர்கள் இத்தகைய இலக்கியம் படைத்தாலும், அந்த படைப்பில் அழகியல் அல்லது நுட்பப் பிழையை தூக்கிவைத்து சிறுமைப்படுத்தப்படுவது வழமை. எனவே தமிழில் அறிவுத்தளங்கள் மொழி இலக்கியம் என்ற வரையறையைத் தாண்டி உருவாக ஒரு வகை மரபுத் தடை உள்ளது.
இந்த மரபில் சிற்றிதழ்கள் ஒரு பெரும் உடைப்பைச் செய்தன. தமிழில் சமூகம் தொடர்பான சீரிய உரையாடல்கள், விவாதங்கள், கலைச்சொல் உருவாக்கம், நடை விருத்தி சிற்றிதழ் தளத்தில் நிகழ்ந்தன. இன்று அரசியல், பொருளாதாரம், சமூகச் சிக்கல்கள், சமூகவியல் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய கருத்தாடல்கள் தமிழில், துல்லியமாக நடைபெறுகின்றன. குறிப்பாக மேற்கோள்கள் தந்து, தர்க்க முறையான, கோட்பாடுகள் பற்றிய கருத்தாடல்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இதே போன்ற வளர்ச்சி தமிழில் அறிவியல் தொழில்நுட்ப தளத்தில் இதுவரை நடைபெறவில்லை. எம்மிடம் உள்ள தொழிற்கலைகள் (கப்பற்கலை, தச்சுத் தொழில்நுட்பம், கட்டிக்கலை, வேளாண்மை, மீன் பிடிப்பு), நுட்பங்கள் பற்றிய கருத்தாடலோ, அல்லது தற்போது வளர்ச்சி பெற்று வரும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய கருத்தாடலோ நடைபெறுவதில்லை. ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு பண்டைய தொழிற்கலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கலைச்சொற்கள் சில துறைகளுக்குத் தொகுக்கப்பட்டது. இதில் தற்போதுதான் சில முயற்சிகள் காணப்படுகின்றன. பொது மக்களுக்கான துறைசார் இதழ்கள் கணினியல், மருத்துவம், வேளாண்மை, சூழலியல், சட்டம் போன்ற துறைகளில் வெளிவருகின்றன. ஆனால் இயற்பியல், வேதியல், வானியல், உற்பத்தி, தானியங்கியல் போன்ற துறைகளில் எந்த இதழ்களும் வெளிவருவதாக நான் அறிய முடியவில்லை. நிச்சியமாக இவை எதுவும் ஆய்வேடுகள் தரத்தில் இல்லை.
இந்த துறைசார் கருத்தாடல்களுக்கு, இதழ்களுக்கு, ஆய்வேடுகளுக்கு தேவை உள்ளதா என்ற கேள்வி உள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் தமது துறைகள் பற்றி தமது மொழியில் உரையாடல் நிகழ்த்துவது என்பது இயல்பாக இருக்கக் கூடிய விடயம் தான். இவை தவிர இலங்கை, மலேசியா, தமிழ்நாடு போன்ற இடங்களில் அறிவியல் தொழில்நுட்பம் தமிழிலும் கற்பிக்கப்படுகிறது. எனவே தமிழ் மொழி மாணவர்களின் அறிவை வளர்க்க இந்த ஆக்கங்கள் அவசியம். தொழிற்கலைகள், வேளாண்மை, சூழலியல், மீன் பிடிப்பு போன்ற பல துறைகளில் தமிழ் மொழி ஊடாக ஒரு உரையாலை மேற்கொள்ளும் போதும், நாம் எமது பாரம்பரிய அறிவை மீட்டெக்கவும், பயன்படுத்தவும் பேணவும் ஒரு பலமான தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
அறிவியல் தொழில்நுட்பத் துறைகளுக்கான ஒரு நல்ல தளமாக இணையம் உள்ளது. சமூகம் தொடர்பான உரையால்கள் அறிவியல் தொழில்நுட்பம் துறைகள் பற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை நிகழ்த்துவதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. அதன் ஒரு தொடக்க கட்டமே தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலகத் திட்டம். தமிழில் வெளிவந்த அறிவியற் கலைக்களஞ்சியம், மருத்துவக் கலைக்களஞ்சியம், சித்த மருத்துவக் கலைக்களஞ்சியம் போன்ற துறைசார் ஆக்கங்கள் இணையத்துக்கு எடுத்து வருவது ஒரு முக்கிய அடுத்த கட்டம். இதை அடுத்து ஒவ்வொரு முக்கிய துறைசார் களங்களும் கட்டமைக்கப்படவேண்டும்.
இப்படிக் கோருவதால், ஆங்கிலத்தை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல, அது சாத்தியமும் அல்ல. மாற்றாக இன்று அறிவியல் ஆய்வுகள் கூடிதலாக நடைபெறும் சீனம், யேர்மன், யப்பானிசு போன்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் திறமை பெறுவது அவசியமாகும். விரைவில் மொழிமுறைப் மொழிபெயர்ப்புச் சாத்தியம் ஆகலாம். ஆனால் அது ஒருபோதும் ஒரு சமூக அறிவுத்தளங்களையோ, கருத்தாடலையோ நிகழ்த்தாது. இவை எம்மால் மட்டும் முடிந்த செயற்பாடுகள்.
மேலும் வாசிக்க:
மொழியும் இணையமும்