Tuesday, September 24, 2019

ஒளிப்படப் போட்டி 2019

கீழடி தொல்லியல் செய்திகளையடுத்து நமது பாரம்பரியச் சுவடுகளைத் தேடிப் பார்த்துவிட அனைவருக்குள்ளும் ஒரு ஆர்வம் எழலாம். சிலர் வளைத்து வளைத்து, புராதன இடங்களுக்குச் சென்று படங்கள் எடுத்தும் வரலாம். அவர்களைப் போன்ற புகைப்படக் கலைஞர்களுக்கு வாய்ப்பாக ஒரு சர்வதேசப் போட்டி ஒன்று நடந்து வருகிறது. தமிழகத்தைச் சுற்றியோ, உங்கள் பகுதியைச் சுற்றியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்திய அளவில் 10 பரிசுகளும் அதனைத் தொடர்ந்து சிறந்த படங்கள் சர்வதேச அளவில் மேலும் பல பரிசுகளும் காத்திருக்கின்றன. போட்டியில் கலந்து கொள்ள புகைப்படக் கலைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை, நுழைவுக் கட்டணமில்லை, உங்களைச் சுற்றியுள்ள புராதன நினைவுச் சின்னங்களின் பட்டியல் வேண்டுமென்றால் இங்கே எடுத்துக் கொள்ளலாம். ஆக ஆர்வம் மட்டும் இருந்தால் போது.

https://www.wikilovesmonuments.org/participate/

இது விக்கிமீடியா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் "விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது" என்ற போட்டியாகும். இதில் உலகில் உள்ள யாரும் கலந்து கொள்ளலாம், நினைவுச்சின்னங்களைப் படமெடுத்து காமன்ஸ் எனப்படும் பொதுவகத்தில் உரிய குறிப்புகளுடன் அதாவது சரியான பெயர், விளக்கம், பகுப்பு என இட்டு தரவேற்றவேண்டும். இப்படி ஒருவர் எத்தனைப் புகைப்படங்களையும் எடுக்கலாம் போட்டிக்கு அனுப்பலாம். நீங்கள் எடுத்த படங்களை மட்டுமே இதில் ஏற்றமுடியும், மற்றவர்களின் படங்களை உங்கள் பெயரில் போட்டிக்குக் கொடுக்கமுடியாது. முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விதி என்னவென்றால் நீங்கள் எடுத்த புகைப்படத்தை கிரியேட்வ் காமன்ஸ் உரிமத்தில் தான் பகிரவேண்டும். இப்போட்டியின் இலக்கே அறிவுச் செல்வம் பொதுவுடைமையாகவேண்டும் என்பதே. அதாவது உங்கள் படத்தை மற்றவர்களும் உரிய மதிப்புடன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டின் போட்டியின் காலம் செப்டம்பர் முழுவதும். எனவே செப்டம்பர் ஒன்றிலிருந்து முப்பதிற்குள் சமர்ப்பிக்கப்பட்டவை மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்பே நீங்கள் எடுத்த படங்களைக் கூட இப்போது சமர்ப்பிக்கலாம்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கடந்த காலப் புகைப்படங்களையும் காணலாம். விக்கித்திட்டங்களில் உங்களுக்கு பயனர் கணக்கில்லை என்றால் உடனே தொடங்குங்கள். பொதுவாகவே எப்போது வேண்டுமானாலும் படங்களையோ, ஒளிக்கோப்புகளையோ தரவேற்றலாம் ஆனால் இக்காலத்தில் ஏற்றினால் போட்டியிலும் பங்கு கொள்ள முடியும். ஒரே இடத்தை வெவ்வேறு கோணங்களில் எடுத்தல், தெளிவான படப்புள்ளியுடன் இருத்தல், வெவ்வேறு ஒளிப் பின்புலத்தில் எடுத்தல் போன்று உங்கள் திறனை வெளிப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கும், செயல்முறைக் காட்சிகளுக்கும் இதைப் பார்க்கலாம்.

https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2019_in_India