ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?
அஃது - aHdhu
அஃறிணை - aHRiNai
எஃகு - eHhu
போன்ற சொற்களை ஒலித்துப் பார்த்தால் ஃ என்று குறிக்கப்பெறும் ஆய்த எழுத்தின் ஒலிப்பு, H என்னும் ஆங்கில ஒலிப்புக்கு நெருங்கி தொண்டைக்கு அருகில் இருந்து எழுவதைக் காணலாம். இதுவே ஃ என்ற தமிழ் எழுத்தின் இயல்பொலி.
ஆனால், இந்த இயல்பொலிக்கு மாறாக
Felix - ஃபெலிக்ஸ்
Francis - ஃப்ரான்சிஸ்
Fan - ஃபேன்
என்று எழுதும்போது நம்மை அறியாமல் தமிழ் எழுத்து ஒன்றின் இயல்பொலியைச் சிதைத்து விடுகிறோம். H, Fம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய ஒலிகள் இல்லை. அதே போல் தமிழிலும் எந்த இரு எழுத்துக்களுக்கு இடையிலும் தெளிவான ஒலி வேறுபாடு உண்டு. காசா என்று எழுதி பாசா என்று உச்சரிப்பது எப்படிப் பிழையோ அதே போல், ஃப (iHpa) என்பதை Fa என்று உச்சரிப்பதும் பிழையாகும்.
எனினும், இந்த ஒலிச்சிதைவை உணராமல் எழுதும் வழக்கு வெகுமக்கள் ஊடகங்களிலும் அதைப் பின்பற்றி பெரும்பாலான தமிழர்களிடமும் காணப்படுகிறது.
இப்படி F என்ற ஒலிக்கு இணையாக ஃப் பயன்படுத்தும் வழக்கம் என்று, யாரால் தொடங்கப்பட்டது என்று தெளிவில்லை. எனினும் இந்தப் பயன்பாட்டிற்கான காரணத்தை ஊகித்து அறிய முடியும். F என்ற ஒலிக்கு இணையான தமிழ் எழுத்து இல்லை; அதே வேளை, அந்த ஒலியைத் தமிழில் எழுதிக் காட்டும் அவசியமும் இருக்கிறது. இந்த அடிப்படையில் ஃ என்று எழுத்துக்கு அடுத்து பகரம் வந்தால் F என்று ஒலிப்பது என்ற புரிதல், பரவலான பயன்பாடு வந்திருக்கிறது. அதாவது, பகரத்துக்கு முன் ஃ வந்தால் அது அதன் இயல்பொலியில் இருந்து திரிந்து Fa என்னும் ஒலிப்பைச் சுட்டும் குறியீடாக மட்டுமே விளங்கும். ஆக, இங்கு ஃ ஒரு எழுத்தாக இல்லாமல் குறியீடாகப் பயன்படுகிறது.
F ஒலிக்கு குறியீட்டின் தேவையை உணர்ந்த முன்னோர்கள் புதிய குறியீடை அறிமுகப்படுத்தாமல் தவறுதலாக ஏற்கனவே உள்ள அதிகம் பயன்படாத தமிழ் எழுத்தைக் குறியீடாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு என்னால் ஊகிக்கக்கூடிய ஒரே எளிய காரணம்:
அச்சு இயந்திரங்கள் மூலம் தமிழ் அச்சடிக்கப்பட்ட காலங்களில் புதிதாக ஒரு குறியீட்டுக்கான விசையைச் செலவு செய்து உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ள எழுத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப் பிழையான குறியீட்டை இடாமலும் ஆய்தத்தின் ஒலிப்பைச் சிதைக்காமலும், ஃபெலிக்ஸ் என்று எழுதுவதற்குப் பதில் பெலிக்ஸ் என்று எழுதும் வழக்கமும் இருக்கிறது. எனினும் F என்று ஒலிக்கு இணையாக பகரத்தைப் பயன்படுத்தும்போது box-fox-pox, boot-foot போன்ற வேறுபாடுகளைக் காட்ட இயல்வதில்லை. விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களில் உலகெங்கும் உள்ள பல அன்னிய மொழிச் சொற்கள், பெயர்களில் இந்த b-p-f வேறுபாட்டைக் காட்ட வேண்டி இருக்கையில் எல்லா இடங்களிலும் Fக்கு இணையாகப் பகரத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த போதாமைகள் இருக்கின்றன.
இந்த இடத்தில், Fக்கும் பகரத்துக்கும் உள்ள ஒலிப்பு நெருக்கத்தையும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் செல்வகுமார் கேள்விக்குள்ளாக்குகிறார். அதாவது Foot ball, France போன்ற சொற்களில் உள்ள F ஒலியை உச்சரிக்கும்போது கீழ் உதடு உள்ளே மடங்கி வ என்ற ஒலிப்புக்கு நெருங்கியே வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள v என்ற எழுத்துக் குறி ஜெர்மன், டச்சு போன்ற மொழிகளில் F என்று ஒலிக்கப்பெறுவதும் கவனிக்கத்தக்கது. டச்சு மொழியில் voet ball என்றே Footballஐ எழுதுகின்றனர். Fa- ஃப என்ற ஒலிப்பெயர்ப்புக்கு எந்த மொழியியில் அடிப்படையும் இல்லாதபோது தலைமுறைகளுக்கும் நிலைக்கக்கூடிய விக்கிபீடியா போன்ற அறிவு சார் கூட்டு முயற்சிகளில் மொழியியல் ரீதியில் கூடுதல் கவனமும் துல்லியமும் தரவும் தமிழ் ஒலிகளைச் சிதைக்காமல் இருப்பதன் பொருட்டும் பொருத்தமான குறியீடுகளை அறிமுகப்படுத்துவதின் தேவையை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆக, Fஐ ஒலிப்பதற்கு ஆய்தத்தைத் தவிர்த்த ஒரு குறியீட்டையும் அதை அடுத்துப் பகரத்துக்குப் பதில் வகரம் பயன்படுத்தலாம் என்றும் பேராசிரியர் செல்வகுமார் பரிந்துரைக்கிறார்.
எடுத்துக்காட்டுக்கு,
Fan - `வேன் (Fan)
France - `வ்ரான்ஸ் (France)
என்று எழுதப்படும். இங்கு ஆய்தத்துக்குப் பதில் ` என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அடைப்புக்குறிகளுக்குள் Fan என்றும் எழுதிக் காட்டப்படுவதால் உச்சரிப்பு குறித்த குழப்பங்களும் வரா.
F ஒலி வரும் அன்னியச் சொற்கள், பெயர்களுக்கு மேற்கண்ட முறையில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதிக் காட்டினால், அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று அறிய விரும்புகிறோம். குறுகிய காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய வாசிப்புப் பழக்க மாற்றங்களுக்கு எதிராகத் தொலை நோக்கில் தமிழ் எழுத்தான ஆய்தத்தின் ஒலிப்பு சிதையாமல் பாதுகாக்க வேண்டிய நம் கடமையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதனால் குழப்பங்கள் வருமா, தொலை நோக்கில் இதன் சாதக பாதங்கள் என்ன, இந்த மாற்றத்தின் தேவை உணரப்படுகிறதா, இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வீர்களா என்பதை தமிழ் விக்கிபீடியா பயனர்கள் என்ற முறையில் உங்கள் அனைவரையும் நோக்கிக் கலந்தாலோசிக்க விரும்புகிறோம்.
இது தொடர்பாக பதிவின் வலப்பக்கப் பட்டையில் உள்ள கருத்துக் கணிப்பிலும் உங்கள் எண்ணத்தைத் தெரிவியுங்கள். உங்கள் வாக்குகள், மறுமொழிகள் இந்த விசயத்தில் வாசகர்களின் கருத்தை அறியவும் தெளிவாக யோசித்து ஒரு முடிவை எடுப்பதற்கும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கு உதவும்.
24 comments:
//Fan - `வேன் (Fan)
France - `வ்ரான்ஸ் (France)// இந்த முறை சரியாகப்படவில்லை ரவி. இதையே Van என்று படிக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள முறைப்படியே F க்கு ஃபான் வந்தால் நன்றாக தானே இருக்கிறது? அப்படியே பழக்கப்பட்டதை ஏன் மாற்ற வேண்டும்? ஆங்கிலத்தில் know-வை நோ என்று தானே படிக்கிறோம் - அது போல் ஃ வரும் இடத்தை வைத்து அதன் படி படித்துக் கொள்வோமே?
//பழக்கப்பட்டதை ஏன் மாற்ற வேண்டும்?//
பழக்கப்பட்டதை மாற்றுறது சிரமம் தாங்க. ஆனா, நம்ம பழக்கம் தவறுன்னு தெரிஞ்சும் மாறாம இருக்கிறது சரியா? நூறு ஆண்டுகளாக இப்படி எழுதிப் பழக்கப்பட்டு விட்டோம் என்றாலும் இனி வரும் பல நூற்றாண்டுகளுக்கும் இந்த பிழையான பழக்கமே தொடரும் என்பதை உணர்கிறீர்களா? திருத்தாமலே போவதை விட தாமதமாகவேனும் திருத்துக் கொள்வது நல்லது தானே?
//ஆங்கிலத்தில் know-வை நோ என்று தானே படிக்கிறோம் - அது போல் ஃ வரும் இடத்தை வைத்து அதன் படி படித்துக் கொள்வோமே?//
k silent, b silent என்பதெல்லாம் ஆங்கில இலக்கணம்ங்க. தமிழில் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தையும் திருந்த உச்சரிக்க வேண்டும் என்பது தானே இலக்கணம். அப்படி இருக்க ஆய்தத்தைத் திரித்து உச்சரிக்க வேண்டும் என்ற பிழையான பழக்கத்தை ஏன் எழுதப்படாத விதியாக வைத்திருக்க வேண்டும்?
எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடுண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் நாமெல்லாம் இப்படி ஒரு திருத்தத்தை பயன்படுத்துவது எந்த அளவுக்கு பயன் தரும் என்று எனக்குப் புரியவில்லை. இதை அரசல்லவா நடைமுறைப் படுத்த வேண்டும். விக்கிபீடியாவில் மட்டும் இதைக் குறிப்பிடுவதால் இந்த பிரச்சனை தீருமென்று நான் நம்பவில்லை. கூட்டெழுத்துக்கள் எப்படி மாற்றப் பட்டனவோ அப்படியே இதுவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப் படவேண்டும். அல்லாது ஒரு சிறு பிரிவினர் மட்டும் இதை உபயோகிப்பதால் படிப்பவருக்கு குழப்பமே மிஞ்சுமென்பது என் கருத்து. முதலில் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துப் போகலாம்.
விக்கிபீடியாவில் மட்டுமல்லாது நல்ல மாற்றங்கள் அனைத்துலகத் தமிழ் பயன்பாட்டிலும் வெளிப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமும். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் கலைச்சொல் உருவாக்கத்தில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இவற்றைக் களைய தமிழக அரசு என்பதைத் தாண்டி உலக அளவிலான தமிழ் மொழி ஆணையம் ஏதும் இருந்தால் கூட நன்று தான். அப்படி ஒன்று இல்லாவிட்டால் அதை உருவாக்க முனைவதும் சிந்திக்கத்தக்கது.
இந்த ஃ பிரச்சினைக்கும் அரசை அணுகி நடவடிக்கை எடுப்பது மிகுந்த பயன் தரும். ஆனால், அதற்கான வழிமுறைகள், network, contact sources விக்கிபீடியர் என்ற முறையில் எங்களுக்குக் குறைவே. அதற்கான காலமும் அதிகம் தேவைப்படும். இன்னொன்று, ஃ பயன்படுத்துவது, கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு அரசு சட்டம் ஏதும் காரணமாக இல்லை. பொது ஊடகங்களில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு வந்தால் அரசின் தலையீடு இன்றியும் நல்ல மாற்றங்கள் வரலாம் என்று எதிர்ப்பாரக்கிறோம்.
தமிழ் எழுத்துக்கள் காலத்தோடு மாறியே வந்திருக்கின்றன. நிலையான உருவெதுவும் இல்லை. அதனால் உங்கள் சிந்தனை செல்லும் வழி ஒப்பானதே.
இருப்பினும் ' போன்ற குறியிடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். ரோமன் லிபியில் லத்தீன் அடிப்படை மொழிகளின் வெவ்வேறு ஒலிகளைக் குறிக்க பயன்படுத்தப் படும் accent குறியீடுகளையோ அன்றி தனியான குறியீட்டை உருவாக்கியோ பயன்படுத்தலாம். கிரந்த லிபி எழுத்துக்களைக் குறிக்க ஷ,ஜ,ஸ,ஹ எனக் குறிப்பதுபோல ஒரு குறியீட்டை உருவாக்கிக் கொள்ளலாம். Fஐக் கூட தமிழ்மொழியில் சேர்த்துக் கொள்ளலாம் :)
//தமிழ் எழுத்துக்கள் காலத்தோடு மாறியே வந்திருக்கின்றன.//
ஒலிகளைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள் மாறுவது வழமையே. ஆனால், என்றுமே தமிழில் ஒரு எழுத்து ஒரு காலத்தில் ஒரு ஒலியைக் குறிப்பது தானே வழமை. இங்கு பிழையாக ஃ என்று எழுத்தைக் கொண்டு இரண்டு ஒலிகளைக் குறிக்கிறோம் என்பதையே சுட்டிக் காட்ட விழைந்தேன்.
//ஆனால், என்றுமே தமிழில் ஒரு எழுத்து ஒரு காலத்தில் ஒரு ஒலியைக் குறிப்பது தானே வழமை. இங்கு பிழையாக ஃ என்று எழுத்தைக் கொண்டு இரண்டு ஒலிகளைக் குறிக்கிறோம்//
கங்கா, காகம்.
இங்கு 'க' முதலிலும் இடையிலும்..
வெவ்வேறாக ஒலிக்க வில்லையா?
அது போல ஃ எழுத்து முதலில் வந்தால் ஒரு உச்சரிப்பையும், இடையில் வந்தால் வேறொரு உச்சரிப்பையும் தரட்டுமே..
தமிழ் வட்டெழுத்துக்களில் ' போன்ற குறியீடுகள் இடம் பெறலாமா..
ரவிசங்கர்,
முக்கியமான வாதமொன்றைத் தொடக்கியிருக்கிறீர்கள். ஆனால் முடிபு எதுவும் கிடைக்காதென்பது உறுதி. ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பாக அமையுமென்பதற்கு அப்பால் எதுவும் நடைபெறாதென்பதே உண்மை.
சரி, இனி சிக்கலுக்கு வருகிறேன்.
"நடைமுறையிலிருப்பதை மாற்றுவது" என்ற பெரும் சிக்கலைத் தவிர்த்துப் பார்த்தால் 'ப'கரத்தை விட 'வ'கரம் எனக்குப் பொருத்தமாகப் படுகிறது. ஆனால் நடைமுறையிலிருப்பதை மாற்றுவதிலுள்ள சிக்கலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதிருப்பதையே தொடரலாம் என்பதே என் கருத்து. (இது, நடைமுறைச் சிக்கலைக் கருத்திற்கொண்டு பிழையானதைத் தொடர்வது என்று பொருளாகாது. மாறாக, இரு 'பொருந்தாத' வடிவங்களுள் ஒன்றைத் தெரிந்து மாற்றுவதைவிட உள்ளதே தொடரட்டும் என்ற கருத்துடன் எழுதப்படுகிறது.)
விவாதம் தொடரட்டும்; ஓர் ஓரமாக நின்று பார்க்கிறேன்.
இதன் மறுவளமாக - அதாவது தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பில் எனக்கும் சில கேள்விகளுள்ளன. தமிழின் 'ழ'கரத்தை ஆங்கிலத்தில வெளிப்படுத்த 'zh' அல்லது 'z' ஐக் கண்டுபிடித்தவர் யார்? 'ழ' கரத்துக்கும் மேற்படி ஆங்கில எழுத்துக்கள் தரும் உச்சரிப்புக்களுக்கும் என்ன தொடர்பு? இப்படி வந்தால் இதுதான் உச்சரிப்பு என்று உணர்ந்தவர்கள் மட்டுமே சரியாக வாசிப்பர். அதாவது தமிழர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் எழுதப்படும் 'ழ'கரத்தை உச்சரிக்க முடியும்.
இதுபோல் சொல்லின் இடையில் தன்னின மெய்யையும் இனத்தையும் தொடராமல் வரும் 'க'கரத்தை ஆங்கிலத்தில் எழுதும்போது ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? ('G' உம் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.) உச்சரிப்பின் படி 'H' தானே வரவேண்டும்?
காகம் என்ற நான் சொல்லை ஆங்கிலத்தில் எழுதினால், Kaaham என எழுதுவேன். இடையில் வரும் 'க'கரம் எனக்கு 'h' உச்சரிப்பைத் தருகிறது. ஆனால் பொதுவாக Kaagam அல்லது Kaakam என்றுதான் எழுதப்படுகிறது. தமிழ்நெற் செய்தித்தளத்தில் மாதகல் என்ற ஊர் Maathahal என்று முன்பு எழுதப்பட்டிருந்தது. அட! என்னைப் போலவே எழுதுகிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் இப்போது அவர்கள் வெளியிட்டிருக்கும் எழுத்துருமாற்றி Maathakal என்று பெயர்க்கிறது. அவர்களின் செய்திகளிலும் Maathakal என்று எழுதுகிறார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேரமிருந்தால் இது தொடர்பாக எனது வலைப்பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
ஒரு தகவலுக்காக,
தமிழ் வலைப்பதிவுகளில் பெயரிலி உட்பட இரண்டொரு பேர் மட்டுமே தமிழ்ச்சொற்களில் ஃ ஐப் பயன்படுத்துகிறார்கள்.
மற்றவர்களெல்லாம் - நானுட்பட, ஆங்கிலச் சொல்லைத் தமிழில் எழுத மட்டுமே அவ்வெழுத்தைப் பயன்படுத்துகிறோம்.
//கங்கா, காகம்.
இங்கு 'க' முதலிலும் இடையிலும்..
வெவ்வேறாக ஒலிக்க வில்லையா?
அது போல ஃ எழுத்து முதலில் வந்தால் ஒரு உச்சரிப்பையும், இடையில் வந்தால் வேறொரு உச்சரிப்பையும் தரட்டுமே..//
தமிழ் வாலிபன் - ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலித்தே ஒலிக்கும். (உசாத்துணை)
காகம், கங்கா ஆகியவற்றில் க முறையே ka, ga ஒலி பெறுவது மேல் சொன்னபடி தமிழ் இலக்கணத்துக்குட்பட்டே. ஆனால், ஃ சொல்லின் முதலில் வந்தால் ஒரு ஒலி என்றும் இடையில் வந்தால் வேறு ஒலி என்றும் தமிழ் இலக்கணத்தில் சொல்லவில்லையே? 2000 ஆண்டுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த தமிழ் இலக்கணம் தெளிவாக ஒலியியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
//
தமிழ் வட்டெழுத்துக்களில் ' போன்ற குறியீடுகள் இடம் பெறலாமா..//
குறிப்பிடத்தக்க பிற மொழி ஒலிகளைத் தமிழில் எழுதிக் காட்ட ஒரு குறியீட்டின் தேவை உணரப்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டுக்கே ` பரிந்துரைக்கப்பட்டது. குறியீடு சரியா, எந்தக் குறியீட்டைப் பயன்படுத்தலாம், குறியீடு இல்லாமல் இதை எப்படிச் செய்யலாம் என்பவை எல்லாம் தொடர் விவாதத்துக்கு உரியதே.
வசந்தன் - இது வரை வந்திருப்பதில் உங்கள் கருத்து நம்பிக்கை அளிக்கிறது :) பேராசிரியர் செல்வகுமார் சுட்டிக் காட்டும் வரை ஆய்தத்தை Fக்குப் பதிலாகப் பயன்படுத்தவதின் பிழையை நான் உணர்ந்திருக்கவில்லை. அது போல் ஒரு சிலர் உணர்ந்து தத்தம் படைப்புகளில் மாற்றிக் கொண்டாலும் இந்த இடுகைக்கு வெற்றியே. தமிழ் எழுத்துலகையே புரட்டிப் போடும் முடிவு இங்கு எட்டப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இது குறித்த விழிப்புணர்வு, உரையாடலுக்கு ஒரு களமாக இருக்கும்.
z, zh குறித்து நீங்கள் சொன்னது சரி. இது குறித்துத் தெரிந்த தமிழர்கள் தவிர வேறு யாருக்கும் இதை உச்சரிக்கத் தெரியாது. அகராதிகளில் IPA குறிகளில் ழகரத்துக்கு வேறு குறியீட்டு முறை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
kaaham, kaagam குறித்து மேலே தமிழ் வாலிபனுக்கு அளித்துள்ள மறுமொழியில் காணலாம். தொடர்புடைய இன்னொரு உரையாடலுக்கு இந்தப் பக்கத்தில் 2.1 பதில்கள் பகுதியைப் பாருங்கள்.
மணியன் சொல்வது போல் Fஐயும் தமிழில் சேர்த்து விடலாம்.. ஷ, ஸ, மாதிரி.. F அச்சில் வர கடினமாக இருக்குமென்றால் இருக்கும் குறியீடுகளைக் கொண்டே ஒரு சொல் செய்து விடலாம்.. க்ஷ் மாதிரி...
ரவி,
நீங்கள் தந்த இணைப்பைப் பார்த்தேன்.
அதில், சொல்லின் இடையில் வரும் 'க' கர உச்சரிப்புப் பற்றி திரு செல்வகுமார் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. Magan, Kaagam என்பதெல்லாம் சரியான உச்சரிப்பில்லையென்பதே என் நிலைப்பாடு. அவை முறையே Mahan, Kaaham என்று வந்திருக்க வேண்டும்.
தனது இனவெழுத்தைத் தொடர்ந்து வருமிடங்களில் வேண்டுமானால் அப்படியான உச்சரிப்பு வரக்கூடும். (சங்கம் = Snagam, பங்கம் = Pangam)
காகம் என்ற சொல், திரு. செல்வகுமார் சொல்வதைப் போல்தான் உச்சரிக்கச் சொல்லித் தரப்படுகிறதென்றால் அது எனக்கு வியப்பான செய்தி. அப்படி உச்சரிக்கும் யாரையும் பார்த்த அனுபவம் எனக்கில்லை.
அல்லது இது ஈழ - தமிழக வித்தியாசமா?
ரவி, நீங்கள் kaaham ஆ? kaagam ஆ? (மனிதன் எண்டு பதில் தர வேண்டாம் ;-))
இது 'ச'கரத்துக்கும் பொருந்தும்.
பச்சையில், ஒற்றைத் தொடர்ந்து வருவதால் ch,
பஞ்சத்தில், இனவெழுத்தின் மெய்யைத் தொடர்ந்து வருவதால் J,
பாசத்தில், சொல்லின் இடையில் தனித்து வருவதால் S.
(காகம் = Kaagam என்றால், பச்சை = Pajjai என்று ஒலிக்க வேண்டுமோ?. இந்தக் கேள்வி விதண்டா வாதத்துக்கன்று.)
//காகம், கங்கா ஆகியவற்றில் க முறையே ka, ga ஒலி பெறுவது மேல் சொன்னபடி தமிழ் இலக்கணத்துக்குட்பட்டே.//
நீங்கள் சொன்னதில் கங்கா சரி. (இதுவே,Ganga வா Kanga வா சரி?)காகம் என்பதில்தான் நான் வேறுபடுகிறேன். அச்சொல்லின் இடையில் வரும் க, Ka என்று ஒலிப்பதில்லையே? நான் Ha என்கிறேன், திரு. செல்வகுமார் Ga என்கிறார்.
நான் சொல்லும் உச்சரிப்பு, தமிழகத்திலிருந்து மாறுபட்டதில்லையென்று நம்புகிறேன். காரணம் இருக்கிறது. முருகன் என்பதை முருஹன் என்று தமிழகத் தமிழர்கள் சிலர் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். (அதேவேளை, ஆங்கிலத்தில் எழுதும்போது இதேபெயரை Murugan என்று எழுதுவதையும் பார்க்கிறேன். இது திரு. செல்வகுமாரின் வாதத்தை வலுவாக்குகிறது).
இராம.கி. ஐயாவும் தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் எழுதும்போது, ககரத்துக்கு தேவையற்ற இடத்தில் G பயன்படுத்துவதை விமர்சித்ததாக நினைவு. நான் பிழையாக விளங்கினேனோ தெரியாது.
----------------------------------
தொடர்பற்ற இன்னொரு துணுக்கு.
கறுப்பு - கருப்பு பற்றி ஏற்கனவே வலைப்பதிவில் பேசியாகிவிட்டது. கறுப்பு என்பது ஈழத்து வழக்காகவும், கருப்பு என்பது தமிழக வழக்காகவும்தான் நான் கருதி வைத்திருந்தேன், VOW இன் இடுகையைப் பார்க்கும்வரை.
தானறிய தமிகத்தில் கருப்பு என்ற சொற்பயன்பாடு இருந்ததில்லையென்றும் இணையப்பயன்பாடு வந்தபின்பே இந்தச் சொல் தமிழர்களிடம் புகுந்துகொண்டதென்றும், கருப்பு என்பது தவறான வடிவமென்றும் அவர் எழுதியிருந்தார். தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட பிரபலமான அகராதிகள் எவற்றிலும் 'கருப்பு' என்ற சொல் இல்லை.
ஆனால் இந்த விவாவத்தில் கருப்பு என்பதற்கான விளக்கத்தை திரு. இராம. கி ஐயா இட்டிருந்தார்.
-----------------------------------
பொன்ஸ் - மணியன் போட்டிருக்கும் smileyஐப் பார்த்தால் அவர் seriousஆக இதைப் பரிந்துரைக்கவில்லை என நினைக்கிறேன். இருக்கிற நான்கு கிரந்த எழுத்துக்கள் மற்றும் அதிகம் பயன்படாத ஸ்ரீ, க்ஷ ஆகியவற்றையே விலக்கி வைக்கலாம் என்று தமிழார்வலர்கள் கருதும்போது புதிதாக இன்னும் ஒரு எழுத்தா???
செல்வகுமாரால் தற்போது உரையாடலில் கலந்து கொள்ளவில்லை. விரைவில் சேர்ந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன். அவரது விக்கிபீடியர் உரையாடலில் இருந்து ஒரு மேற்கோள் கீழே
//எல்லா ஒலிப்புகளையும் எந்த
மொழியாலும் எத்தனை ஒலிக்குறிகள் இட்டாலும் எழுத இயலாது. ஏனெனில், ஒலி வேறுபாடுகள்
எண்ணிறந்தன (நுட்ப வேறுபாடுகள் உட்பட). இதனை நன்கு உணர்ந்தே தமிழர்கள், மிக மிகப்
பழங்காலத்திலேயே, மிக மிகத் துணிவாய், இது போதும் என்று வரையறை செய்து தம்
மொழி எழுத்துக்களைத் தேர்ந்து கொண்டனர். இது மிகத் துணிவான பொறுக்கு ஆகும் (unique, deliberate,
conscious). புதுமை மிக்கதும் ஆகும்! மற்ற மொழிகளில் இப்படி தேர்ந்து கொள்ளப்பட்டது
என்று கூறுவதற்கு இல்லை. தமிழில் ஒலிகளையும், மொழியையும் மிகுந்த கருத்தோடு,
ஆழ எண்ணி முறை செய்து கொண்டனர். தமிழின் நெடும் வரலாற்றுக்கும் இதுவே கரணியம்.//
வசந்தன் - நான் kaagam தான் :) இது ஈழம் - தமிழகம் வேறுபாடு என்று பார்ப்பதை விட mahan, muruhan , kaaham எல்லாம் ஆங்கில / வட மொழித்தாக்கத்தால் புகுந்த திரிந்த நகர்ப்புற ஒலிப்புகள் என்பதே என் புரிதல். எங்கள் ஊர் உட்படத் தமிழகச் சிற்றூர்களில் magan, murugaa, murugan என்று அழுத்தம் திருத்தமாகத் தான் இன்னும் உச்சரிக்கிறார்கள். கிரந்த எழுத்தை ஒதுக்கி எழுதினால், பேசினால் தனித்தமிழ்க் காரர்கள், வெறியர்கள், தீவிரவாதிகள் :) என்று பலவாறாக முத்திரைக் குத்தப்பட்டாலும் இன்னும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு harish, suresh போன்ற சொற்கள் வாயில் நுழையாது. இயல்பாகவே அரீசு, சுரேசு என்று தான் அழைக்கிறார்கள் :) நாம் செய்வது எழுதினவன் ஏட்டைக் கெடுத்த கதையை படித்தவன் பாட்டைக் கெடுத்த கதையா என்று தெரியவில்லை. பிற மொழித் தாக்கம் படியாத சிற்றூர் வழக்குகளில் உண்மையான தமிழ்ச் சொற்கள், ஒலிப்புகளைக் கண்டு கொள்ளலாம் என்பது என் நம்பிக்கை.
சகர உச்சரிப்பு குறித்த உங்கள் கேள்விகளுக்கு அறிந்தவர் விளக்கத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
//
தமிழ் வலைப்பதிவுகளில் பெயரிலி உட்பட இரண்டொரு பேர் மட்டுமே தமிழ்ச்சொற்களில் ஃ ஐப் பயன்படுத்துகிறார்கள்.//
இது என்ன புதுக்கதையா இருக்கு :) தமிழில் இயல்பாகவே ஃ வரும் இடங்கள் குறைவு. அதுவும் பேச்சுத் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளில் இந்த சொற்கள் தலை காட்டாமல் இருப்பது புரிந்து கொள்ளத்தக்கதே. அஃறிணை, எஃகு போன்ற சொற்கள் எடுத்துக்காட்டுக்கள்.
தமிழில் மகனை மஹன், மவன் என்று ஒலிப்பது கொச்சை. magan என்று ஒலிப்பதுதான் சரியான ஒலிப்பு. அதுவே வழக்கமும் கூட. பலர் கொச்சையாக பேச்சு வழக்கில் மஹன், மவன், மோன் என்றேல்லாம் கூறுகின்றனர். சகரத்தைத் தவிர்த்த மற்ற எல்லா வல்லினங்களும் இன்றளவும் மிகவும் சீரொழுக்கத்துடந்தான் ஒலிக்கப்படுகின்றன. முதல் எழுத்து சகரம் எப்பொழுதும் வல்லினம்தான். ஆனால் இன்று பல இடங்களில் சகரவொலி காற்றொலி கலந்து வருகின்றது. எனினும் இன்னும் முறைப்படி வல்லினமாக ஒலிப்பவர்கள் மிகவுண்டு (தமிழகத்தில் திருநெல்வேலி, இராமனாதபுரம் முதலிய இடங்களில்). சட்டி என்றால் சிலர் satti என்றும் சிலர் chatti என்றும் ஒலிக்கின்றனர். அச் சட்டியை எடு என்று சொல்லும் பொழுது இயல்பொலியாகிய வல்லின சகரம் வருவதைப் பார்க்கலாம். அதே போல அச் சொல், எச்சொல்லும் ஏறாது என்றெல்லாம் சொல்லும் பொழுது இயல்பொலியாகிய சகர வல்லினம் தெளிவாக உணரற்பாலது. இன்று சொல் என்பதை சிலர் ஷொல் என்று ஒலிக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவரவர் கொச்சையாக ஒலிப்பதெல்லாம் சரியான ஒலிப்பு என்று கொள்வது அறிவுடைமை ஆகாது. சகரத் திரிபு உண்மையானது. சகரத்திற்கு மூன்று ஒலிப்புகள் தோன்றியது ஒரே ஒரு விதி விலக்கு. சகர வல்லினம் (சட்டி), சகர காற்ரொலி (காசு), சகர மூக்கொலி (பஞ்சு). ஆனால் இங்கு கூட பசிக்கிறது என்பதை குழந்தைகள் இயல்பாய் "அம்மா பஜிக்குது" என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இது ஒரு காலத்தில் இயல்பொலியாக இருந்திருக்கலாம் (உறுதியாக சொல்ல இயலாது). ஆனால் பிற வல்லின எழுத்துக்களுக்கு ஒலிப்புகள் மிகவும் சீரானது. கொச்சை ஒலிப்பு வேறு சீரொலிப்பு வேறு. நேரம் கிடைக்கும் பொழுது மேலும் எழுதுகிறேன்.
நல்ல பதிவு!
நன்றாக விளக்கியுள்ளீர்கள்!
இது போன்ற பதிவுகள் மற்றும் விவாதங்கள் தேவை.
ஆங்கில எழுத்துக்கு(F) நாம் ஏன் இவ்வளவு முக்கிய("முக்கியம்" என்பது தமிழா?) இடம் கொடுக்கிறோம் என்பதை நாம் சற்று அதிகமாக சிந்திக்க வேண்டும். ஃ போட்டு எழுதினாலென்ன வ போட்டு எழுதினாலென்ன. த்கவல், படிப்பவருக்கு சரியாய்ப் போய்ச் சேர்ந்தால் சரி.
France என்பதை நாம் பிரான்சு என எழுதவில்லையா? அதுபோல் Fஇல் துவங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிறையவே தமிழில் எழுத இடம் இருக்கிறது. fan ஐ விசிறி, footballஐ கால்பந்து என்றவாரெல்லாம் எழுதிவிட எளிதாகத்தானே இருக்கிறது! ஃபேன் என்கிற ஆங்கில வார்த்தைக்கு இலக்கணம் வேறு வேண்டுமோ!
வேண்டாம் புதுக் குழப்பம்.
தமிழ் தமிழாகச் சாகட்டும்.
தமிழ்த்தென்றல் - fan, football போன்ற சொற்களுக்குத் தமிழ்ப் பெயர்களை நிச்சயம் எழுதலாம். எழுத வேண்டும். அதே வேளை Ford, Franklin போன்ற பெயர்களைத் துல்லியமாக ஒலிக்க முயல்வதும் தவறு இல்லை. தமிழ் என்பதை டேமில் (Tamil) என்று வெளிநாட்டவர் உச்சரிப்பது நமக்கு உவப்பளிப்பதா? தவிர, தமிழ் மூலம் ஆங்கிலம், பிற மொழி கற்றுக் கொள்ளும்போது பிற மொழி ஒலிகளை நம் எழுத்துக்களில் எழுதிக் காண்பிப்பதற்கான தேவை இருப்பதை ஒதுக்க முடியாது.
பிற மொழிகளை தமிழில் எழுதுவதற்காக தமிழ் இலக்கண்த்தை வளைப்பது அவ்வளவு நல்லதல்ல. வேண்டுமானால் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முறைமையை ஏற்படுத்தி கொள்ளலாம். ஆங்கிலத்தை தமிழில் எழுத ஒரு முறைமை தற்போதைக்கு ஒரு முக்கிய தேவையாக இருக்கின்றது.
ஃப், ஃப போன்றவற்றை f என்ற எழுத்துக்குரிய ஒற்றை எழுத்தாகப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இதிலிருந்து ஆய்த எழுத்தைப் பிரிப்பது 'போ' என்ற எழுத்தில் இருக்கும் இரட்டைக் கொம்பைப் பிரிப்பது போன்றது. பானாவுக்கு முன் ஆய்த எழுத்தைப் போட்டு f-ஐ ஒலிபெயர்ப்பது பொருத்தமான தீர்வு என்பது என் தாழ்மையான கருத்து. தமிழ் எழுத்தில் இதை விடப் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன.
சாத்தான் - பிரெஞ்சு மொழியில் ழ என்ற ஓசையே இல்லை. அதனால் பிரெஞ்சுப் பெயர்களில் ழகரத்தைப் பயன்படுத்துவது தவறு என்கிறீர்கள். பிற மொழியின் ஒலிப்புத் துல்லியத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படம் நாம் நம் மொழியின் ஒலிப்புத்துல்லியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாமா? பிற மொழி ஏதும் அறியாத ஜப்பானியர் தமிழைக் கற்கத் தொடங்கும்போது ஃபேன் என்று எழுதினால் ihpEn என்று பிழையாக வாசிக்க வாய்ப்பு உண்டல்லவா? எழுதியபடியே வாசிப்பது என்பது தமிழின் இனிமைகளுள் ஒன்று. இது போன்ற விதிகள் புதியவர்கள் நம் மொழியைக் கற்கச் சிரமப் படுத்தலாம். தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு automated transliteration செய்ய வேண்டி வந்தாலும் இந்த ஃ விதி உறுத்தும்.
ரவி,
Fan என்பதை தமிழில் மின்விசிறி எனவே எழுதுகிறோம். எழுத்து சீர்திருத்தம் மட்டுமல்ல தமிழ் சொற்களின் பயன்பாட்டை பெருக்குவதும் மொழியின் நிலைத்திருக்கும் தன்மைக்கு அவசியம். மற்றபடி தமிழ்மொழி இந்த சீர்திருத்தங்களின் வழியே தான் வளர்ந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை லை, னை எழுதிய விதம் பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை அரசு ஏற்ற பின்னர் இன்றைய முறைக்கு மாறியது. தமிழ்மொழியின் சீர்திருத்தத்தில் பலநாடுகளின் வாழும் தமிழறிஞர்களின் ஒருமித்த கருத்தும் அவசியம். விக்கிப்பீடியா போன்ற திறந்ததளங்கள் இந்த கருத்து பரிமாற்றத்தை உருவாக்கலாம்.
fan போன்ற காரணப்பெயர்களை நிச்சயம் தமிழாக்க வேண்டும். francis, french போன்ற மொழிபெயர்க்கப்படக்கூடாத இடுகுறிப் பெயர்களின் ஓரளவு துல்லியமான உச்சரிப்பை எப்படி தமிழில் எழுதிக் காட்டுவது என்பது தான் தேடல்
Post a Comment