ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ், தமிழர் குறித்த கட்டுரைகளில் திரிபுகளைத் தடுப்பது எப்படி?
ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ், தமிழர் குறித்த கட்டுரைகளில் காணப்படும் திரிபுகளைக் குறித்து தமிழ் வலைப்பதிவர்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறார்கள். தமிழ், தமிழர் நலனுக்குப் புறம்பான ஒரு சிலர் திட்டமிட்டு விசமத்தனமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் உண்மை தான். பொதுவாக விக்கிபீடியாவின் திறந்த நிலை காரணமாக, சமயம், இனம், மொழி போன்று உணர்ச்சிப்பூர்வமான , இருநிலைக்கருத்துக்களுக்கு இடம் அளிக்கக்கூடிய கட்டுரைகள் யாவும் இப்படி தாக்குதலுக்கு உள்ளாவது உண்டு. ஆனால், இந்த நிலை தொடராமல் தடுப்பது எப்படி?
ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள தமிழ், தமிழர் கட்டுரைகளுக்குத் தமிழர்களும் பங்களிக்க முனைவதே இத்திரிபுகளைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.
எப்படி பங்களிப்பது?
1. முதலில் தமிழ், தமிழர் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் அனைத்தையும் வாசித்துப் பாருங்கள். அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் தவறான தகவல்களை ஆதாரத்துடன் திருத்துங்கள். விசமிகளின் உணர்ச்சிப்பூர்வத் தாக்குதல்களைத் தடுக்க முறையான தகவல் ஆதாரங்களை நாம் காட்டுவதே சிறந்த காப்பாகும்.
2. தகவல் தவறு என்று தெரிகிறது. ஆனால், சரியான ஆதாரத்துடன் உங்களால் கட்டுரையைத் திருத்த இயலவில்லையா? குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இப்பிழையைக் குறித்துத் தெரியப்படுத்துங்கள். கட்டுரையில் பிழையான தகவல்கள் உள்ளன என்று கட்டுரையின் முகப்பில் அறிவியுங்கள்.
3. சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து உண்மை நிலையை எடுத்துரைத்து ஏற்கனவே கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் எவரேனும் உரையாடிக் கொண்டு இருக்கலாம். அவருடைய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அவரது கருத்தை வலுப்படுத்த மேலதிக ஆதராங்களை நீங்கள் தந்து உதவலாம். பொதுவாக, உண்மையை விளக்கப் பேசுபவர்கள் தகுந்த ஆதரவு இல்லாததால் சோர்வடைவது உண்டு. உங்களைப் போன்றோரின் ஆதரவு உண்மை உரைப்பவருக்கு உற்சாகமளிப்பதாகவும் எதிர்த் தரப்புக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும். தவிர, முக்கியமான முடிவுகள் வாக்கெடுப்பு அடிப்படையில் நடப்பது உண்டு. அப்போது, உங்களைப் போன்றோரின் கூடுதல் ஆதரவு முக்கியம். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கு கூடுதல் ஆதரவு, உதவி தேவை எனில் தமிழ் விக்கிபீடியாவில் தெரியப்படுத்துங்கள். தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்களும் உங்களுக்கு உதவக்கூடும்.
கவனிக்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பு தான் விசமிகளுக்கு முதல் தூண்டுகோல். மேற்கண்டபடி, விவரம் அறிந்தவர்கள் கட்டுரையைக் கவனிக்கிறார்கள் என்று விசமிகளுக்குத் தெரிய வந்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
பொதுவாக, சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் மட்டும் நீங்கள் புகுந்து கருத்து சொல்லும் போது உங்கள் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படலாம். எனவே, சர்ச்சைக்குரிய கட்டுரைகளைத் தவிர்த்த பிற கட்டுரைகளிலும் நல்ல முறையில் தொடர்ந்து பங்களித்து உங்கள் நம்பகத்தன்மையை உயர்த்திக் கொள்வது முக்கியம். பிற கட்டுரைகளில் நீங்கள் பெறும் நம்பகத்தன்மை சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் உங்கள் கருத்துக்களுக்கான கூடுதல் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்றுத் தரும். தொடர் பங்களிப்பினால் நீங்கள் பயனர் நிலையில் இருந்து முன்னேறி நிர்வாக அணுக்கங்களையும் பெறலாம். சர்ச்சைக்குரிய சில பக்கங்கள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், நம்பத்தகுந்த பலர் இப்படி நிர்வாக அணுக்கங்களைப் பெறுவதும் முக்கியம் ஆகும்.
3 comments:
சில உறுப்படியான தகவல்களை நீங்கள் தொடர்ந்து அளித்துவருகிறீகள் அதற்காக எனது தொடர் நன்றிகள்
இரா.சுகுமாரன்
நன்றிகள் அண்ணா =D>
ஆமாம் ரவி, தமிழ், தமிழர் பற்றிய கட்டுரைகள் மாத்திரம் அல்ல தமிழர் பிரதேசங்கள் பற்றிய கட்டுரைகள் கூட ஆங்கிலவிக்கிபீடியாவில் (எடுத்துக்காட்டாக வவுனியா) அபத்தமாக எழுதப்பட்டுள்ளது. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" என்றார் வள்ளுவர். நாளுக்குநாள் விக்கிபீடியைவை ஓர் உசாத்துணை ஊடாகமாகப் பாவிப்பவர்களும் பெருகிவரும் இந்நாளில் இப்படியான போக்குகள் தமிழர்களைப் பற்றியும் தமிழைப் பற்றியும் தமிழ்ப் பிரதேசங்களைப் பற்றியும் தவறான புரிதலுக்கே இட்டுச்செல்லும். வெள்ளம் வருமுன்னெரே அணைகட்டவேண்டும். நாம் அனைவரும் இயன்றவரை தீவிரவாதப் போக்குள்ளவர்களிடம் இருந்து கட்டுரைகளைப் பாதுகாத்து உதவுவோம்.
Post a Comment