தமிழ் விக்கிப்பீடியா - தமிழின் அறிவியல் தொழில்நுட்ப களம்
எத்தனையோ சமய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ் சமய மொழியாக இருக்க முடியுமா என்பதை சிலர் கேள்விக்குட்படுத்தினர். தமிழில் அர்ச்சனையா என்றும் சிலர் முரண்பட்டனர்.
தமிழரின் தாயகங்களிலேயே தமிழ் அரச மொழியாக வழங்குவதற்கு பல தடைகள் இருந்தன. இந்தி, சிங்களம் என மொழித் திணிப்பு முயற்சிகளும் இடம்பெற்றன. இதை மீறியும் தமிழ் இந்தியா (தமிழ்நாடு), இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாகியது.
தமிழில் சமூகவியல், மெய்யியல் கதையாடல்கள் சாத்தியமா எனப் பலர் கேள்வி எழுப்பினர். சிற்றிதழ்களின் எழுச்சி இது நிச்சயம் முடியும் என்றே நிரூபித்திருக்கின்றன.
அதேபோல் தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் முடியுமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இது தேவையா என்றும் கேட்கப்படுகிறது. தமிழில் மருத்துவம், கணிதம், மொழியியல் என பல அறிவியல் துறைகளில் மரபு வழி அறிவு இருக்கிறது என்பதை இவர்கள் ஏனோ இலகுவில் மறந்துவிடுகிறார்கள். அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்கில மொழியுடன் இணைத்துப் பார்ப்பது குறுகிய பார்வை. சீன, உருசிய, ஜப்பானிய, அரபு மற்றும் பல மொழிகளிலும் அறிவு இருக்கின்றது என்பதை எளிதில் மறைத்துவிடுகிறது. தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் முடியும், அது அவசியமும் கூட. அதற்கு தமிழ் விக்கிப்பீடியா(http://ta.wikipedia.org/) ஒரு நல்ல களம்.
தமிழ் கலைச்சொற்கள் பல காலமாக உருவாக்கப்பட்டு வந்தன. இத்தகைய 100 000 கலைச்சொற்கள் தமிழ் விக்சனரியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தகுந்தவாறு கருத்துப் புலத்தில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை என்பதுவே ஒரு பெரும் குறையாக இருந்தது. கருத்துப் புலத்தில் அல்லது சூழலில் சொற்கள் பயன்படும்பொழுது தான் அவற்றின் குறை நிறைகள் தெரியும். இதற்கு தமிழ் விக்கிப்பீடியா ஒரு சிறந்த களம்.
தமிழ் கலைச்சொற்களில் இலங்கை வழக்கம், தமிழக வழக்கம் இன்னும் பிற வழக்கங்கள் என்று சீர்தரம் இன்றி இருந்தன. இதுவரை இவற்றை சீர்தரம் செய்ய ஒரு நல்ல களம் இருக்க வில்லை. குறைந்த பட்சம் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது.
இலக்கியம் இலக்கியம் இலக்கியம் என்று தமிழ் அறிஞர்கள் இலக்கியத்துக்கு தந்த அக்கறையை சற்று நுட்ப எழுத்துக்கும் தரத் தொடங்கி உள்ளார்கள். ஆங்கிலத்தில் Technical Writing, Science Writing என்று சிறப்பு கவனம் பெற்ற துறைகள் தமிழில் இப்போதே அரும்பத் தொடங்கி உள்ளன. உணர்ச்சி வயப்பட்டு இல்லாமல் தகவல் செறிவுடன் தர்க்க சீர்மையுடன் நுட்ப எழுத்து தமிழிலும் முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் இப்பொழுது உண்டு.
அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அறிமுகம் அல்லது துணுக்க கோவை என்றே ஒரு காலத்தில் தமிழில் வழக்கம் இருந்தது. அகல உழுவது மட்டுமல்ல ஆழ உழுவதும் தேவை. ஆழமான துல்லியமான கட்டுரைகளை ஆக்கிப் பகிர்வதற்கும், அறிமுகக் கட்டுரைகளைப் பகிர்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல களம்.
தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் முடியும் என்று தெரிகின்றது. தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் தேவையா? இதற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழருக்கு தேவை என்றால், அது தமிழிலும் தேவை. தமிழின் மரபுவழி அறிவைப் பேணி, பயன்படுத்தி, இன்று பல்மொழிச் சூழலில் ஆக்கப்படும் அறிவியல் தொழில்நுட்ப அறிவை உள்வாங்கி வளர இது தேவை. எனவே பயனர்களே உங்களின் சிறு பங்களிப்பையும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செய்ய முன்வருவீர்.