மலையாளம், தமிழ், இந்தி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை
இந்திய மொழிகளில் மலையாளம், தமிழ், இந்தி ஆகியவை கட்டுரைகள் எண்ணிக்கை, தரம், பயனர் எண்ணிக்கை, பயனர் பங்களிப்பு ஆகிய மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்னிலையில் நிற்கின்றன. இவற்றை ஒப்பிட்டு வேறுபடுத்தி கருத்துக் கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.
தமிழ், மலையாளத்தை விட அதிக கட்டுரைகளைக் கொண்டிருக்கும் தெலுங்கு விக்கிப்பீடியாவின் (45,209) தற்போதைய பங்களிப்பு நிலை, தரம், வளர்ச்சி ஆகியவை நன்றாக இல்லை. தொடக்கத்தில் வேகமாகச் செயற்பட்டு வந்த வங்காள விக்கியும் தற்போது தேக்க நிலையிலேயே உள்ளது. மாராத்தி விக்கியில் 30 000 வரையாக கட்டுரைகள் உள்ளன என்று புள்ளிவிபரம் தெரிவித்தாலும், பல ஒரு வசனம் அல்லது சொல் உள்ள வெற்றுப் பக்கங்கள். குசராத்தி, கன்னடம், பஞ்சாபி உட்பட்ட இந்திய மொழிகள் இன்னும் தொடக்க கட்ட வளர்ச்சிப் பருவத்தையே அடையவில்லை. இந்த பின்புலத்திலேயே மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளின் நிலைகளை நாம் ஆய வேண்டும்.
இன்று தரம், பயனர் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னிலையில் இருப்பது மலையாள விக்கிப்பீடியா ஆகும். 13, 500 வரையான கட்டுரைகளையே கொண்டிருந்தாலும், தர அடிப்படையில் (கட்டுரைகளின் ஆழம் = 373) மலாயாள விக்கிப்பீடியாவே முதல் நிலையில் உள்ளது. 207 தீவர பங்களிப்பாளர்களையும், 17 நிர்வாகிகளையும் மலையாள விக்கிப்பீடியா கொண்டுள்ளது. மலையாள விக்கியின் தொகுப்புகளின் எண்ணிக்கை 864,594 ஆகும். எனவே ஒரு சராசரி கட்டுரை பல முறை விரிவாக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்படுகிறது. தற்போது 47 பயனர்கள் மிகத் தீவரமாகப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.
இன்று தரம், பயனர் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருப்பது தமிழ் விக்கிப்பீடியா ஆகும். தமிழ் விக்கிப்பீடியா 23,520 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. குறுங்க் கட்டுரைகளே பெரும்பான்மையாக இருந்தாலும், தனி வரிக் கட்டுரைகளோ அல்லது அதிக தானுந்துக் (bot articles) கட்டுரைகளே தமிழ் விக்கியில் இல்லை. ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக் கட்டுரைகள் நல்ல வளர்ச்சி பெற்ற கட்டுரைகள். பகுப்புமைப்பும், ஒழுங்கமைப்பும் தமிழ் விக்கியில் சிறப்பாக உள்ளது. தமிழ் விக்கியில் 222 தீவர பங்களிப்பாளர்களும், 15 நிர்வாகிகளும் உள்ளார்கள். தமிழ் விக்கியின் தொகுப்புகளின் எண்ணிக்கை 577,558 ஆகும். எனவே ஒரு சராசரி கட்டுரை சில முறைகளே தொகுக்கப்படுகின்றன. தற்போது 45 பயனர்கள் மிகத் தீவரமாகப் பங்களிப்புப் செய்து வருகிறார்கள்.
இன்று கட்டுரைகள் எண்ணிக்கை, பயனர் பங்களிப்பு, எதிர்கால வளர்ச்சிக் குறிகள் அடிப்படையில் இந்திய மொழிகளில் இந்தி மூன்றாம் நிலையில் உள்ளது. 55,729 கட்டுரைகளுடன் இந்திய மொழிகளில் அதிக கட்டுரைகளை இந்தியே கொண்டுள்ளது. எனினும் இவற்றில் பெரும் விழுக்காடு ஒரு வரிக் கட்டுரைகள், அல்லது ஒரே துறை தானுந்துக் (இந்தியாவில் உள்ள இடங்கள்) கட்டுரைகள். 240 தீவர பங்களிப்பாளர்களும், 24 நிர்வாகிகளும் இந்தி விக்கியில் உள்ளார்கள். எனினும் தற்போது 25 பயனர்களே மிகத் தீவரமாகப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.
இந்தி மொழியை சுமார் 350 மில்லியன் மக்கள் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். மேலும் நூறு மில்லியனுக்கு மேற்ப்பட்ட மக்கள் தமது இரண்டாம் மொழியாக கொண்டுள்ளார்கள். மொத்த இந்தியாவின் ஒரேயொரு இந்திய அலுவல் மொழி இந்தி ஆகும். எனவே இந்திய மொழிகளில் இந்திக்கே தற்போது அதிக மக்கள், அரச வளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி பெறுவதற்கு இந்தி விக்கிப்பீடியாவிற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் அதன் தற்போதைய நிலை மிக மோசமானது. 240 பங்களிப்பாளர்களில் 24 நிர்வாகிகளாகப் பெறுப்பேற்றிருப்பது பொறுப்புப் பரவலாக்கலைக் காட்டுகிறது. அது நல்ல அறிகுறி எனினும், அடிப்படைப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்க வேண்டும்.
36 மில்லியன் மக்களால் பேசப்படும், கேரளாவில் மட்டும் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் மலையாளம் தர, பங்களிப்பு அடிப்படையில் முன்னிற்கு நிற்பது வியக்கத்தக்கது. கேரள மக்கள் 95 % படிப்பறிவு பெற்றுள்ளமை, அவர்களுக்கு தீவர இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வம் போன்ற சூழல் காரணிகள் இதை ஓரளவு விளக்கலாம். நாள் தோறும் அதிகம் தொகுக்கப்படும் இந்திய விக்கி மலையாள விக்கியே. அவர்கள் திறமையாக கூட்டாகச் செயற்படுகிறார்கள். நிர்வாப் பொறுப்பும் பரவாலாக உள்ளது.
இந்தி மொழிக்கு அடுத்த படியாக அதிக வளங்களைக் கொண்டுள்ள மொழி தமிழே. நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா) அரச ஆதரவு உண்டு. 66 மில்லியன் மக்கள் தாய் மொழியாக தமிழைப் பேசுகிறார்கள். 74% மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களும், 90% மேற்பட்ட ஈழத் தமிழர்களும் படிப்பறிவு பெற்றவர்கள். இந்த அடிப்படைகளில் தமிழ் விக்கியின் வளர்ச்சி போதாது. குறிப்பாக மலையாள விக்கியுடன் ஒப்பிடும் போதே இந்தக் குறை தெளிவாகத் தெரிகிறது. நாளாந்த தொகுப்புகள், நிர்வாகப் பரவல் ஆகியவற்றில் வளர்ச்சி போதாது.
இன்று கூகிளில் இந்திய மொழிகளில் சொற்களை இட்டால், அதன் முதல் 10 தரவுகளில் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் இடம் பெறுகின்ற்னா. எனவே விக்கிப்பீடியாக்களின் பெறுமதி கணிசமானது. தற்போது விக்கியூடக அறக்கட்டளை இந்திய விக்கிகளை வளர்ப்பதில் கூடிய அக்கறை காட்டுகிறது. அதை நாம் பயன்படுத்தி மேலும் வளர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அனைவரும் எமக்கு ஈடுபாடுள்ள துறைகளில், எமக்கேற்ற முறையில் (ஆக்கம், திருத்தம், படம் சேர்த்தல், பராமரிப்பு) எங்கிருந்தாலும் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
குறிப்புகள்/தரவுகள்:
* மேலே குறிப்பிட்ட தரவுகள் ஆகத்து 2, 2010 நாளில் பெறப்பட்டவை.
* http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
* மலையாள விக்கித் தரவுகள்
5 comments:
மிகச் சிறப்பான ஆய்வுக்கு நன்றி நக்கீரன்.
தமிழுக்கு...
//நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா) அரச ஆதரவு உண்டு.// ?!
இலங்கையில் தமிழுக்கு அரச ஆதரவு இல்லை. தமிழர்களை, தமிழை அழிக்க சிங்கள அரசு முயற்சிக்கிறது என்பதே உண்மை. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் தமிழை வளர்க்கிறார்கள்
நற்கீரன், மலையாள விக்கியை ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது தமிழ் விக்கி பின் தங்கவில்லை. அவர்கள் நாளொன்றுக்கு 6-9 கட்டுரைகள்தாம் உருவாக்குகிறார்கள் (கடந்த 3 மாதக் கணக்கு). தமிழ் விக்கி 14-15 கட்டுரைகள் உருவாக்குகின்றன. தொகுப்புகளும் நாம் ஈடாகவே செய்கின்றோம். தமிழ் விக்கியின் பரும பை'ட் அளவு 200 மெகா பை'ட். மலையாள விக்கி 97 மெகா பை'ட். மலையாள விக்கியை நல்ல முறையில் வளர்த்து வருகின்றார்கள் என்றாலும், நம்மைவிட சிறந்த முறையில் இல்லை (ஆழம்
என்னும் அளவீடு அவ்வளவு எணிதாக பொருள் கொள்ள முடியாது. அதனை செயற்கையாகவும் கூட்ட முடியும்). மலையாள விக்கியின் தரவுகளைப் பார்க்க: http://stats.wikimedia.org/EN/TablesWikipediaML.htm
தமிழ் விக்கியின் தரவுகளைப் பார்க்க:
http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm
நன்றி மணியன். தமிழ் மொழியில் கல்வி பெற முடியும் என்றால் அதை அரச ஆதரவாக கருத முடியும். விக்கிக்கு அவர்கள் உதவுகிறார்கள் என்று கூறு வரவில்லை.
தொகுப்புகள் ஒரு முக்கிய அறிகுறி. நாளாந்தம் மலையாள விக்கியில் அதிக தொகுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலையாள விக்கியில் ஒரு கட்டுரை தமிழை விட பல மடங்கு தொகுக்கப்படுகிறது. இவை அவர்கள் சிறப்பாக இணைந்து செயற்படுவதாயும், ஒரு பரந்த தீவர பங்களிப்பாளர் வட்டத்தைக் கொண்டிருப்பதையும் காட்டுகிறது. அவர்களின் மக்கள் தொகையோடு ஒப்புடுகையில் இந்த வேறுபாடு மேலும் தெளிவாகிறது.
நல்ல அலசல்கள்...
சிறப்பான பதிவு.. வாழ்த்துக்கள்..
Post a Comment