Thursday, May 10, 2007

தமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது

கட்டற்ற நூலகத் திட்டமான WikiSource தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. பார்க்க - http://ta.wikisource.org

நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள அல்லது காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ள பழங்கால மற்றும் தற்காலத் தமிழ் நூல்களை இங்கு சேகரித்து வைக்கலாம். ஏற்கனவே இயங்கி வரும் நூலகம் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நூல்களையும் இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் விக்கி நூல்கள் திட்டத்தில் ஏற்கனவே திருக்குறள் போன்ற நூல்கள் கிடைக்கின்றன. அவற்றையும் கூடிய விரைவில் இங்கு நகர்த்துவோம்.

நன்றி.

பி.கு - தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம். இந்தப் பெயர் பொருத்தமானது தான் என்று உறுதி செய்த பிறகு, இப்பெயரை அதிகாரப்படியாகப் பயன்படுத்த இருக்கிறோம். வேறு பெயர் பரிந்துரைகள் இருந்தாலும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

Saturday, May 5, 2007

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு முதற்பக்த்தில்

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு பற்றிய ஆங்கில கட்டுரை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu சென்று அதைப் படிக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு தனிக்கட்டுரையாக இன்னும் ஆக்கப்படவில்லை. எனினும் தமிழ்நாடு பற்றிய கட்டுரையை இங்கு http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு சென்று படிக்கலாம். ஆர்வம் இருந்தால் தமிழ்நாடு வரலாறு பற்றிய தமிழ்க் கட்டுரையை நீங்களே தொடங்கலாம்.

Wednesday, May 2, 2007

தமிழ் விக்கிபீடியா - பங்களிப்பாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

1. தமிழ் விக்கிபீடியாவில் யார் யார் எழுதலாம்?

யார் வேண்டுமானாலும் எழுதலாம். வயது, கல்வி, நாடு போன்ற தகுதிகள் ஏதும் தேவை இல்லை. ஓரளவாவது பிழை இல்லாமல் தமிழில் எழுதத் தெரிந்தவர் அனைவரையும் வரவேற்கிறோம்.

2. அடையாளம் காட்டாமல் எழுத இயலுமா?

தாராளமாக. ஏதேனும் ஒரு புனைப்பெயரில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் உண்மை விவரங்கள் எதையும் தரத் தேவையின்றி கட்டுரை எழுதலாம். ஒரு பயனர் கணக்குக்கு உரியவர் எந்த IP முகவரியில் இருந்து இயங்குகிறார் என்ற விவரம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. பிற பயனர்களுக்கும் தெரியாது. அதே வேளை, பயனர் கணக்கில் புகுபதியாமல் கட்டுரைகள் எழுதினால், உங்கள் IP முகவரி பதியப்பட்டு பொதுப் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை இங்கு கருத்தில் கொள்ளவும்.

3. என்னென்ன தலைப்பில் கட்டுரைகள் எழுதலாம்?

விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது என்று நீங்கள் நினைக்கும் எதைக் குறித்தும் எழுதலாம். மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் பிற பயனர்களுடன் உரையாடி முடிவு காணலாம். அறிவியல், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, சமயம், அரசியல், பொது அறிவு, புவியியல், பொறியியல், தமிழ், இலக்கியம், திரைப்படங்கள் என்று எண்ணற்ற தலைப்புகளில் உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் எழுதலாம்.

4. கட்டுரைகள் மட்டும் தான் எழுத வேண்டுமா?

அவசியம் இல்லை. ஏற்கனவே, இருக்கும் கட்டுரைகளைப் படித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்த கருத்து தெரிவிக்கலாம். அவற்றில் உள்ள தகவல், எழுத்து. கருத்துப் பிழைகளைத் திருத்தலாம். விக்கிபீடியா நிர்வாகம் மற்றும் ஒழுங்கமைப்பில் உதவலாம்.

5. ஒரு துறை குறித்து எழுத அதில் வல்லுனராக இருக்க வேண்டுமா?

நீங்கள் எழுதும் துறையில் நீங்கள் வல்லுனராக இருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஆர்வம், அக்கறை, அறிவு உள்ள துறைகளில் நீங்கள் எழுதலாம்.

6. ஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதலாமா?

தாராளமாக எழுதலாம். காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட எந்த ஆக்கத்தில் இருந்தும் மொழிபெயர்த்து தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

7. கட்டுரை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்?

நீங்கள் கட்டுரையைத் தொடங்கும் போது குறைந்தது மூன்று வரி அளவாவது இருந்தால் பரவாயில்லை. விக்கிபீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால், உங்கள் கட்டுரைத் தலைப்புகளில் ஆர்வமுடைய பிற பயனர்களும் இணைந்து கட்டுரையை மேம்படுத்துவர். நீங்களும் நேரம் கிடைக்கும்போது உங்கள் கட்டுரைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தலாம். விரிவுபடுத்தலாம்.

8. தமிழில் வெளியாகி உள்ள நூல்கள், தளங்களில் இருந்து அப்படியே எடுத்து எழுதலாமா?

ஒரு நூலையோ தமிழ்த் தளத்தையோ முழுமையாகப் படியெடுத்துத் தமிழ் விக்கிபீடியாவில் இடுவதை நாங்கள் வரவேற்பதில்லை. காப்புரிமை உள்ள ஆக்கங்களுக்கு மதிப்பளிக்க முற்படுகிறோம். பொருத்தமான இடங்களில் மேற்கோளாக ஓரிரு வரிகளைக் குறிப்பிடலாம். உசாத்துணையாக அந்நூல், தள விவரங்களைத் தரலாம். கட்டுரையில் வெளியிணைப்பாக அத்தளத்தை இணைக்கலாம்.

9. வலைப்பதிவில் உள்ள கட்டுரைகளை அப்படியே விக்கிபீடியாவில் இடலாமா?

வலைப்பதிவு எழுத்து நடை வேறு. கலைக்களஞ்சிய எழுத்து நடை வேறு. தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சில கட்டுரைகளை பார்வையிட்டாலே, கலைக்களஞ்சிய நடை என்றால் என்ன என்று புலப்படும். எனவே, வலைப்பதிவுக் கட்டுரைகளை அப்படியே இட இயலாது. தகுந்த மாற்றங்களைச் செய்த பிறகே இட இயலும். உங்களால், இயன்ற மாற்றங்களைச் செய்து நீங்கள் இட்டால் விக்கியாக்கத்தில் அனுபவமுள்ள பிற பயனர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

10. குறைந்தது எத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும்?

விக்கிபீடியா ஒரு தன்னார்வல முயற்சி. உங்களால் இயன்ற எண்ணிக்கையில் இயன்ற போது எழுதலாம். ஒரு கட்டாயமும் இல்லை. குறைந்தபட்ச எண்ணிக்கைத் தேவையும் இல்லை.

11. யார் விக்கிபீடியா கட்டுரைகளை அங்கீகரிக்கிறார்கள்?

நீங்கள் கட்டுரையை எழுதி இடும் முன் யாருடைய அனுமதியும் பெறத் தேவை இல்லை. நேரடியாக நீங்கள் கட்டுரைகளை இடலாம். நீங்கள் கட்டுரைகளில் செய்யும் மாற்றங்கள் உடனுக்குடன் பொதுப்பார்வைக்கு வரும். உங்கள் கட்டுரையில் பெரிய மாற்றங்களை விரும்பும் பயனர்கள் உங்களுடனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் உரையாடி மாற்றங்களைச் செயற்படுத்துவார்கள்.

12. என்னை அறியாமல் கட்டுரையில் பிழை விட்டால் என்ன செய்வது?

தமிழ் விக்கிபீடியா மாற்றங்களை 24 மணி நேரமும் உலகெங்கும் உள்ள தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், எளிதில் புலப்படும் பிழைகளை அவர்களே களைந்து விடுவார்கள். நீங்கள் விடும் பிழைகளுக்காக உங்களைக் குறை சொல்ல மாட்டார்கள். மாறாக, அப்பிழைகளைக் களைய இயன்ற அளவு உதவுவார்கள். அதனால், பிழை விட்டு விடுவோமோ என்ற தயக்கத்தின் காரணமாக பங்களிக்காமல் இருக்கத் தேவை இல்லை.

13. கட்டுரைகளில் எழுதியவர் பெயரை இடலாமா?

கட்டுரைப்பக்கங்களில் உங்கள் பெயரை இட இயலாது. எனினும், ஒவ்வொரு கட்டுரையிலும் யார், என்னென்ன மாற்றங்களை, எப்போது செய்தார்கள் என்பது அக்கட்டுரையோடு இணைந்து வரலாற்றுப் பக்கத்தில் அறியக் கிடைக்கும்.

14. கட்டுரைகளில் தூய தமிழில் தான் எழுத வேண்டுமா?

அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு தற்போதும் என்றும் புரியும் வகையில் இயன்ற அளவு நல்ல பொதுத் தமிழில் எழுதப் பரிந்துரைக்கிறோம். இயன்ற இடங்களில் வடமொழி, ஆங்கிலம், பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து விடுவது நல்லது. தகுந்த சொற்களுக்கான ஆலோசனைகளை பிற பயனர்கள் அளிப்பர்.

15. தமிழ் விக்கிபீடியா பங்களிப்பால் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், மன உளைச்சல் வர வாய்ப்புண்டா?

இல்லை. தமிழ் விக்கிபீடியா பயனர்கள் மிகுந்த கண்ணியத்துடனும் நன்னோக்கத்துடனும் நட்புணர்வுடனும் செயல்படுகிறார்கள். இங்கு கருத்துக்களை மட்டுமே கண்ணியமான முறையில் விமர்சிக்கிறோமே தவிர, கருத்தைச் சொன்னவர்களையோ அவர்களின் பின்புலத்தையோ விமர்சிப்பதில்லை. இதனால், ஓர் இணக்கமான சூழல் உறுதிப்படுத்தப்படுகிறது.

16. தமிழ் விக்கிபீடியா குறித்த சந்தேகங்களை எங்கு கேட்பது?

இந்த வலைப்பதிவில் கேட்கலாம். இல்லை, இந்தப் பக்கத்தில் கேட்கலாம்.