Showing posts with label அறிக்கைகள். Show all posts
Showing posts with label அறிக்கைகள். Show all posts

Monday, June 3, 2019

பயிற்றுநரைப் பயிற்றுவிப்போம் 2019


மே 31 முதல் ஜூன் 2 2019 வரை நிகழ்ந்த பயிற்றுநர் பயிற்றுவிப்போம் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் திட்டமிட்டபடி நிகழ்ந்தது. அதில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக அபிராமி நாராயணன் மற்றும் நீச்சல்காரன் கலந்து கொண்டனர். அதில் விவாதிக்கப்பட்ட மற்றும் முக்கியத் தகவல்கள் இப்பதிவில் பகிரப்படுகின்றன.

எந்தத் தலைப்பாக இருந்தாலும் குறிப்பிடத்தக்கமை உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கமை ஒவ்வொரு சமூகத்திற்குச் சமூகம் மாறுவதால் அவற்றை அச்சமூகம் விவாதித்து முடிவிற்கு வரலாம். அதுவரை ஆங்கில வழிகாட்டலைப் பின்பற்றலாம்

விக்கி நிகழ்வுகள் இருவகையாகப் பிரிக்கலாம். ஆன்லைன் விக்கி நிகழ்வு என்பது இணையம்வழியாக மட்டும் கலந்து கொண்டு நடத்தப்படும் வேங்கைத் திட்டம், தொடர்தொகுப்பு போன்றவை. ஆப்லைன் விக்கி நிகழ்வு என்பது நேரடியாக சந்தித்து நடத்தப்படும் கூடல், பயிற்சிப்பட்டறை போன்றவையாகும். இவ்வாறு எந்த விக்கி நிகழ்வை நடத்தினாலும் அதன் வெற்றி கட்டுரை எண்ணிக்கையில் இல்லை, அதன் பின்னர் புதியவர்களால் உருவாகும் சமூக வளர்ச்சியே முக்கியம்.

எந்தக் கட்டுரைகளை எழுதலாம், பிரச்சாரமாக இல்லாமல் எப்படி எழுதுவது, நடுநிலைமையுடன் எழுதுதல், நம்பத்தகுந்த மேற்கோள்கள் எவை போன்று விவாதிக்கப்பட்டன. விக்கிப்பீடியா என்பது உண்மைகளையும் எண்ணிக்கைகளையும் மட்டுமே சொல்ல வேண்டும் அதற்கேற்ற கருத்துக்களைக்(interpretation) கொடுக்கக்கூடாது.

ஒரு பயிற்சிக்குச் செல்லும் முன்னர் பயிற்றுநர் என்பவர் விக்கியின் இடைமுகத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தால் மட்டும் போதாது அதன் கொள்கைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். பலரது அனுபவங்களை [https://meta.wikimedia.org/wiki/Learning_patterns இங்கே] காணலாம்.

கீழ்க்கண்ட கருவிகள் மூலம் தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கலாம்
http://recommend.wmflabs.org/
https://trends.google.com/trends/
https://stats.wikimedia.org/v2/#/all-projects

GLAM திட்டத்தின் மூலம் ஆவணங்களை மின்னிலக்கமாகவோ, பகிர்ந்துகொள்ளவோ உதவி கோரலாம்
CIS-A2K அமைப்பின் மூலம் இந்திய அளவில் நிகழும் விக்கி நிகழ்வுகளுக்கு ஆதரவைக் கோரலாம்

தொடர்பாடல்:
விக்கியின் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனிக்க ஆலமரத்தடியைக் கவனிப்பதன் மூலமோ [https://lists.wikimedia.org/mailman/listinfo மின்னஞ்சல்] சந்தாதாரராகப் பதிவுசெய்வதன் மூலமோ தொடர்ந்து விக்கி தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாம்பட்சமாக விக்கியின் சமூகத்தளக் குழுக்களில் இணைந்தும் கவனிக்கலாம்

பயனுள்ள கருவிகள்
http://wikipedia.ramselehof.de/wikiblame.php
https://xtools.wmflabs.org/about
https://petscan.wmflabs.org/

பயனுள்ள சிறப்புப்பக்கங்கள்
https://meta.wikimedia.org/wiki/Special:UrlShortener
https://en.wikipedia.org/wiki/Special:CreateAccount
https://ta.wikipedia.org/wiki/Special:SpecialPages


மேலும் அறிய
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2019
https://etherpad.wikimedia.org/p/ttt2019
https://commons.wikimedia.org/wiki/Category:TTT_2019

Monday, January 5, 2009

2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

நவம்பர் 2008 இல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவானது. ஒரு சில பயனர்களின் தொலைநோக்கில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது சில பத்து பயனர்களின் தொடர்ந்த பங்களிப்பால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 16,000 க்கும் மேலாக கூடியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 5400 க்கும் மேலாக கூடியுள்ளது. இணையத்தில் தமிழில் பல்துறைசார் தகவல்களைப் பகிரும் மிகப் பெரிய வலைத்தளம் தமிழ் விக்கிப்பீடியாவே. பயனர் வரவு தரவுகளின் படி நாள்தோறும் 52,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்வையிடுகின்றனர். [1]

இந்த ஆண்டு தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப விக்கிபீடியா என்றிருந்த பெயர் விக்கிப்பீடியா என்று மாற்றப்பட்டது. மிகப்பல படங்கள் வகைப்படுத்தப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்பில்லாத உரிமங்கள் கொண்ட படங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய 2008ஆம் ஆண்டு மாநாட்டின் பயிற்சிப் பட்டறையிலும் விழா மலரிலும் தமிழ் விக்கிப்பீடியா இடம்பெற்றது. டிசம்பர் 2008 இல் பெங்களூரில் நடந்த ஒரு விக்கிப்பீடியா மாநாட்டில் விக்கியூடக நிறுவனர் சிம்போ வேல்சு, தற்போதைய செயலாக்க தலைவர் சூ கார்டனர் ஆகியோரைச் பயனர் சுந்தர் சந்தித்து நன்றியைத் தெரிவித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளையும் விபரித்தார்.

2008 ஆம் ஆண்டில், முதற்பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, செய்திகள், இன்று, சிறப்புப் படம் ஆகிய பகுதிகளை அவ்வப்பொழுது புதுப்பித்து சிறப்பாக இற்றைப்படுத்தினோம். 2008 ஒலிம்பிக் போட்டிகள், தேர்தல்கள், ஈழப் போர், இந்தியா மீதான தாக்குதல்கள் ஆகியன ஆவணப்படுத்தபட்டன. அனைத்து நாடுகள் பற்றியும் ஒரு குறுங்கட்டுரையாது ஆக்கும் விக்கி திட்டம் நாடுகள் நிறைவேறியது. விக்கி திட்டம் தனிமங்கள் முன்னேறியுள்ளது ஆனால் இன்னும் நிறைவு பெறவில்லை. முக்கிய கட்டுரைகளாக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள் கவனமெடுத்து எழுதப்பட்டன. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வாழும் விலங்குகள் பற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதப்பட்டன. கருநாடக இசை பற்றிய பல கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

கடந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவை நோக்கி பிறமொழிச் சொற்கள், கிரந்தம், இறுகிய நடை பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதே எமது கொள்கை. முதலில் பயன்படுத்தப்பட்ட சொல்லை விட வேறு சிறந்த மாற்றுச் சொல்லை பின்னர் அறிந்தால் விக்கியில் நாம் எளிதாக தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். தமிழ்ச் சொற்கள் தெரியாவிட்டால் கட்டுரையில் ஆங்கில சொற்களையோ பிற மொழிச் சொற்களையோ பயன்படுத்தலாம். மற்ற பயனர்கள் தமிழ் சொற்கள் இட்டு மேம்படுத்துவர். எங்கெங்கு கிரந்தம் கையாள்வது நல்லது என்பது தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் இறுதியான ஒரு கொள்கை இன்னும் இல்லை. இயன்றவறை தமிழ் ஒலிப்புமுறையைப் பேணி சொற்களை எழுதுவதே முறை என்று கருதப்படுகின்றது. தகவல்களை ஆதாரபூர்வமாக பகிர்ந்து, படர்க்கையில் எழுதவதே விக்கி நடை. எவ்வளவு எளிமையாக பகிரமுடியுமோ அப்படி பகிர்வது நன்று. எனினும் கணிதம் போன்ற துறைகளில் துல்லியமான கட்டுரைகளைப் படிக்கும் பொழுது பயனர் ஓரளவாவது துறை சார் பின்புலம் கொண்டிருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தமிழில் கலைச்சொற்கள் பலகாலமாக ஆக்கப்பட்டன. அவற்றின் பெரும் தொகுதி தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தரவுதளத்தில் இருந்தது. இவற்றின் எழுத்துருக்கள் ஒருங்குறியில் இருக்கவில்லை. இவை பல வேறு பட்டியல்களாக இருந்தன. இப்படிப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் தானியங்கி மூலம் விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டமான தமிழ் விக்சனரியில் சேர்க்கப்பட்டன. தற்போது தமிழ் விக்சனரி சொற்தொகை அடிப்படையில் உலக மொழிகளில் ஏழாவது நிலையில் இருக்கிறது. இது தமிழ் விக்கியூடகத் திட்டத்துக்கு ஒரு முக்கியமான மைல்கல். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கத்துக்கு இந்த கலைச்சொற்கள் மிகவும் உதவியாக அமைந்துள்ளன.

தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிசெய்திகள், தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கிமேற்கோள் ஆகியவை தொடக்கக்கட்ட நிலையில் இருக்கும் மற்ற தமிழ் விக்கியூடகத் திட்டங்கள். இணையத்தில் தமிழில் விரிவான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இவை மிகவும் உதவக்கூடிய திட்டங்கள். இப்போது முன்னோடியாக சில செயற்பாடுகள் நடைபெற்றாலும், மேலும் பல பயனர்கள் இணைந்து செயற்பட்டாலே இத்திட்டங்கள் வளரும்.

2005 2006, 2008 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.

இந்த 2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2008 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2009 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்க்களைப் பாக்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

பாக்க:
http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

Friday, November 21, 2008

இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

இந்தியாவில் 22 மொழிகள் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள். இவை தவிர இந்தியாவில் 400 மேற்பட்ட மொழிகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு விக்கிப்பீடியாத் திட்டம் இன்னும் இல்லை. 18 இந்திய மொழிகளில்தான் விக்கிப்பீடியாக்கள் உண்டு. பெரிய இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் கூட சிறிய ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களை விட வளர்ச்சி குன்றியவை.

மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் ஓரளவு வளர்ச்சி பெற்ற விக்கிப்பீடியாக்கள் உண்டு.

மெதுவாக தொடங்கினாலும் திட்டமிட்டு தரம் கண்காணித்து வளர்ந்து வருவது மலையாளம். கட்டுரை எண்ணிக்கை 8,177 எனினும் அனேகமான கட்டுரைகள் ஆழமானவை.

தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் சிறந்தவற்றில் ஒன்று. 16,000 மேற்பட்ட கட்டுரைகளுடன் தரம் கண்காணித்து வளர்ந்து வருகிறது. பல்துறை கட்டுரைகளை ஆக்குவதில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழர் செறிந்து வாழும் இடங்களில் இருந்து பங்களிப்பு இன்னும் கூட பெரும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியும், இந்தியாவின் ஆட்சி மொழியுமான இந்திக்கு அதன் வளத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை. இதில் 23,319 கட்டுரைகள் உண்டு, ஆனால் அனேகமானவை ஆழமற்றவை. பல்துறைக் கவனமும் குறைவு.

கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் முதலாவதாக நிற்கும் தெலுங்கில் 41,766 கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மை ஒருவரி இருவரி பக்கங்களே. அவற்றை குறுங்கட்டுரைகள் என்றே கருதமுடியாது. அதனால் தரம் அடிப்படையில் தெலுங்கு பின் நிற்கிறது.

இந்திய மொழிகளில் தொடக்கத்தில் கன்னடம் முன்னுக்கு இருந்தது. இந்தியாவில் விக்கிப்பீடியா தொடர்பாக முதல் கூட்டத்தை கன்னட விக்கிப்பீடியர்களே கூட்டினர். இப்போது கன்னடம் நலிவடைந்து இருக்கிறது. 6,097 கட்டுரைகளே கன்னடத்தில் இருக்கின்றன. குறைந்த வேலைகளே அங்கு நடைபெறுகின்றன.

மேற்கு வங்காளம், வங்காள தேசம் ஆகிய இடங்களில் ஆட்சி மொழியாக இருப்பது வங்காள மொழி. 230 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதைப் பேசுகிறார்கள். தொடக்கத்தில் விக்கிப்பீடியா மாநாடு ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். இப்போது வளர்ச்சி சற்று மெதுவாகி இருக்கிறது. முதற்பக்க கட்டுரை நெடுங்காலமாக இன்றைப்படுதப்படவில்லை.

மாரத்தியில் 20,831 கட்டுரைகள் இருக்கின்றன. தெலுங்கு போல அனேகமானவை ஒருவரி இருவரி பக்கங்கள். ஆனால் இப்போது அங்கு சற்று கூடிய வேலைகள் நடைபெறுகின்றன.

குஜராத்தி மொழியில் 2596 கட்டுரைகள் மட்டுமே உண்டு. எந்த வித குறிப்பிடத்தக்க வேலைகளும் இப்போது காணப்படவில்லை.

சுமார் 100 மில்லியன் மக்களுக்கு மேல் பேசுகிற பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா தொடக்க கட்ட நிலையில் இருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை 405. இவற்றுள் பெரும்பான்மை ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டு மொழி பெயர்க்கப்படாதவை.

இப்படி பெரிய இந்திய மொழிகளே இந்த நிலை என்றால் சிறிய மொழிகள் இன்னும் குன்றிய நிலையில் உள்ளன. காஷ்மீரி, கொங்காணி, ஒரியா ஆகிய மொழிகளில் மிகக்குறைந்த வேலைகள் நடைபெறுகின்றன, மற்ற பல மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

சமஸ்கிருத மொழிக்கும் ஒரு விக்கிப்பீடியா இருக்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கப்படும், பல மொழியியல் ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் இந்த மொழியின் விக்கிப்பீடியாவும் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை.

ஒரு மொழியின் விக்கிப்பீடியாவை வைத்து அந்த மொழியின் நிலை பற்றி ஒன்றும் இறுதியாக கூடமுடியாது. ஆனால் விக்கிப்பீடியா ஒரு மொழி இணையத்தில் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு ஒர் அளவுகோல். எத்தனை பேரை இணையம் அவர்களது மொழியில் சென்றடைந்திருக்கிறது என்பதற்கு இது சான்று பகிர்கிறது.

தமிழ் மொழியில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் விக்சனரி (100 000 மேற்பட்ட சொற்களுடன்), விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கி மூலங்கள், விக்கி மேற்கோள்கள் ஆகிய சகோதரத் திட்டங்களும் உண்டு.

தமிழ் மொழியை மேலும் வளர்த்து, இந்திய மொழிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாற்ற உங்களின் பங்களிப்பு அவசியமானது.

மேலும் தகவல்கள்:
http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:இந்திய விக்கிகள்
http://ta.wikipedia.org/wiki/இந்திய மொழிகள்

தரவுகள்:
நவம்பர் 22, 2008 - http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias

Wednesday, March 5, 2008

2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

Thursday, May 10, 2007

தமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது

கட்டற்ற நூலகத் திட்டமான WikiSource தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. பார்க்க - http://ta.wikisource.org

நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள அல்லது காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ள பழங்கால மற்றும் தற்காலத் தமிழ் நூல்களை இங்கு சேகரித்து வைக்கலாம். ஏற்கனவே இயங்கி வரும் நூலகம் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நூல்களையும் இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் விக்கி நூல்கள் திட்டத்தில் ஏற்கனவே திருக்குறள் போன்ற நூல்கள் கிடைக்கின்றன. அவற்றையும் கூடிய விரைவில் இங்கு நகர்த்துவோம்.

நன்றி.

பி.கு - தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம். இந்தப் பெயர் பொருத்தமானது தான் என்று உறுதி செய்த பிறகு, இப்பெயரை அதிகாரப்படியாகப் பயன்படுத்த இருக்கிறோம். வேறு பெயர் பரிந்துரைகள் இருந்தாலும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

Friday, April 27, 2007

தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் !

தற்போது, தமிழ் விக்கிபீடியாவில் 10, 000+ கட்டுரைகள் உள்ளன.

2005 ஆகஸ்டில் 1, 000 கட்டுரைகள் என்ற முதல் இலக்கை அடைந்த பிறகு, குறுகிய காலத்தில் 10, 000 கட்டுரை இலக்கை எட்டிப் பிடித்திருப்பது தமிழ் விக்கிபீடியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ், தமிழ்நாடு, இலங்கை, இந்தியா, இலக்கியம், கட்டடக்கலை, தமிழ்த் திரைப்படங்கள், நூல்கள், விளையாட்டு முதலிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

அறிவியல், வரலாறு, புவியியல், உலக நடப்புகள், நடப்பு நிகழ்வுகள் முதலிய தலைப்புகளில் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் இருக்கிற கட்டுரைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

இவ்வேளையில், இன்னும் பலர் தமிழ் விக்கிபீடியாவில் பயனர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் இணைந்து இந்தக் கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறோம்.

நன்றி,

தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக,

ரவிசங்கர்.

Thursday, February 22, 2007

2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியா அறிக்கை

தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் கீழ் தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கி மேற்கோள்கள், தமிழ் விக்கி செய்திகள் ஆகிய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ் விக்கி மூலத்தை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றுள் முதலில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிபீடியாவும் தமிழ் விக்சனரியும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதுடன் தமிழ் இணையப் பயனர்களால் பெரிதும் அறியப்பட்டதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பிற தளங்களிலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களில் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் சீரிய வளர்ச்சி மிக்கதாகவும் உள்ளன. இத்தளங்கள் தமிழ் இணையத்தில் முதன்மையான தகவல் களங்களாக உள்ளன. தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தோன்றக்கூடிய இணைய அணுக்கப் பரவல், இத்திட்டங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உரமாக அமையும் என்பதால் இத்திட்டங்களின் வருங்கால முக்கியத்துவம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆங்கில இணையத்தளங்களை போலன்றி, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் உசாத்துணைக்கான முதன்மை களமாக இருப்பது குறிப்பிட்டதக்கது.




2 தமிழ் விக்கிபீடியா

தமிழ் விக்கிபீடியா 2003ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 7,075 கட்டுரைகள் உள்ளன; 1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்து புதிய கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன.


2.1 பயனர் விவரங்கள்

1395 பதிவு செய்த பயனர் கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கணக்குகளை நிர்வாகப் பொறுப்புள்ளவர்கள் கொண்டு உள்ளனர். நிரவலாக, நாளொன்றுக்கு 4 பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகின்றன. பயனர்கள் பெரும்பாலும் இந்திய, இலங்கை வேர்களை கொண்டவர்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் பங்களித்து வருகின்றனர்.


பங்களிக்கும் பயனர் அகவை பெரும்பாலும் 20-25 என்ற எல்லையில் அமைந்து இருக்கிறது. எனினும், முனைப்புடன் பங்காற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பயனர்களும் உள்ளனர். மாணவர்கள், மென்பொருள் வல்லுனர்கள் ஆகியோர் பங்களிக்கும் பயனர்களில் பெரும்பான்மையோர். எனினும், முனைப்போடு பங்காற்றுபவர்களில் சிறந்த தொழிற்பின்புலமும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர், கட்டிடக் கலை வல்லுனர் ஆகியோரும் உண்டு.


2.2 கட்டுரை எண்ணிக்கையும் தரமும்



  • 1000 கட்டுரைகள் - ஆகஸ்டு 14,2005.

  • 4000 கட்டுரைகள் - ஆகஸ்டு 22, 2006.

  • 7000 கட்டுரைகள் - பெப்ரவரி 18, 2007.


என்ற வளர்ச்சியை பார்க்கையில் கட்டுரைகள் எண்ணிக்கை கூடும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருவதை காணலாம். அதே வேளை, கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதை மட்டும் இலக்காக வைத்து உருவாக்கப்படும் பயனற்ற பக்கங்களை அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதனால், பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கையில் பின்தங்கியிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் தமிழ் விக்கிபீடியாவே தரம் மிகுந்து எண்ணிக்கையிலும் கூடுதலாக உள்ள இந்திய மொழி விக்கிபீடியாவாகும்.


விரிவான ஒப்பீடுகளை பார்க்க - Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)


2.2.1 ஜனவரி 2007 புள்ளிவிவரம்


கட்டுரை எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிக்கின்றது. தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிகமான கட்டுரைகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது தமிழ் விக்கிபீடியா கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்ல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரிவான புள்ளிவிவர ஒப்பீடுகளுக்குப் இங்கு பார்க்கவும்


2.3 பிற அளவுகோல்கள்



  • கட்டற்ற தன்மை, நடுநிலைமை, இணக்க முடிவு, மெய்யறிதன்மை ஆகியவற்றில் சமரசமின்மை.

  • கட்டுரை எண்ணிக்கை, தரம் தவிர தள செயற்பாட்டுக்கான கொள்கை-உதவி போன்ற அடிப்படைகளில், உள்ளடக்கத்தில் (பரப்பு-ஆழம்-தரம்), பயனர் நல்லுறவுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

  • தமிழ்ச் சூழலில் தமிழ் விக்கிபீடியா ஒரு மாற்று ஊடக அல்லது மூலமாக வளர்வதற்கான வாய்ப்பை கருதி தொலைநோக்கு மற்றும் பொறுப்புடன் செயல்படுகிறோம்.

  • எத்துறையிலும் ஐரோப்பிய மையப் பார்வைய தவிர்த்து, எளிய தமிழில் நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறோம். எழுத்து தமிழ் நடை அல்லது பொதுத் தமிழ் நடையை பின்பற்றல், தமிழர்களை பற்றிய தகவல்களை கவனம் தந்து சேர்த்தல் போன்றவற்றுக்கும் முன்னுரிமை தருகிறோம்.


2.3 தடைக்கற்கள்



  • தமிழ் பேசப்படும் நிலப்பகுதிகளில் பரவலான இணைய அணுக்கம் இல்லாமை.

  • தமிழ்க் கலைச்சொற்கள் ஒருங்கிணைப்பின்மை.

  • உலகளாவிய தமிழ் மொழி ஒலிப்பு-எழுத்து முறை வேறுபாடுகள்.

  • உசாத்துணைக்கான பிற இணைய வழி தமிழ் ஆதாரங்கள் இல்லாமை.

  • தமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வின்மை.


2.4 மறைமுகப் பங்களிப்புகள்


நேரடியாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதாதோரும் பிற வழிகளில் மறைமுகமாக தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிபீடியாவுக்கான இணைப்பை காணலாம். தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்த இணையக் கருவிகளின் உருவாக்கமும் தமிழ் விக்கிபீடியாவுக்கான மறைமுகப் பங்களிப்புகளே. தற்போது, தமிழ் விக்கிபீடியா குறித்த தொடர்பாடலுக்காக தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.


2.5 தற்போதைய முனைப்புகள்



  • இருக்கிற கட்டுரைகளில் தர மேம்பாடு.

  • படிம ஒழுங்குபடுத்துதல்.

  • தமிழ் விக்கிபீடியா குறித்த பொது விழிப்புணர்வு உருவாக்குதல்.


2.6 பலங்கள்



  • மற்ற இந்திய மொழிகளை போல் அல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியேயும் பேசப்படும் மொழி தமிழ். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழுடன் தொடர்ச்சியை விரும்பும் இவர்களுக்கு இணையதம் ஒரு முக்கிய தகவல் ஆதாரமாக இருப்பதால் விக்கிபீடியாவின் தேவை தமிழர்களுக்கு அதிகம்.

  • புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பதோடு தமிழார்வம் குன்றாமல் இருப்பதால் அனைத்துத் துறை கட்டுரைகளும் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்பு.

  • உலகெங்கும் பல நேர வலயங்களில் உள்ள தமிழர்கள் பங்களிப்பதால் 24 மணி நேரமும் தளம் இற்றைப்படுத்தப்படவும் கண்காணிக்கப்படுவதற்குமான வாய்ப்பு.




2.7 வருங்காலப் எதிர்ப்பார்ப்புகள், திட்டங்கள்



  • தமிழ் நிலப்பகுதிகளில் இணைய அணுக்கம் பரவலாகப் பரவலாக தமிழ் விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு, பயன்பாடு இரண்டும் கூடும்.

  • கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்குட்பட்டு அறிவு சார் துறைகளுக்கான தமிழர் விவாதக்களமாக தமிழ் விக்கிபீடியாவை உருவாக்குதல்.

  • தமிழ் நிலப்பகுதி பல்கலைக்கழகங்களுடன் பங்களிப்புகளுக்கான சாத்தியங்களை ஆராய்தல்.

  • முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை கட்டற்ற முறையில் தமிழ் விக்கிபீடியாவுடன் பகிர முன்வந்துள்ளார்கள்.




3. தமிழ் விக்சனரி


தமிழ் விக்சனரியில் தற்போது 5500+ சொற்களுக்கான பொருள் விளக்கங்கள் தமிழில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் - தமிழ் விளக்கச் சொற்கள். பயனர் கணக்குகள் எண்ணிக்கை 150+ ஆக உள்ளது. இவற்றில் 6 கணக்குகளை நிர்வாகிகள் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தமிழ் விக்கிபீடியா பயனர்களே அங்கும் பங்களித்தாலும் விக்சனரியில் மட்டும் பங்களிக்கும் பயனர்களும் உள்ளனர். இணையத்தில் இருக்கும் ஒரே தற்காலத் தமிழ் அகரமுதலியாக இருப்பது தமிழ் விக்சனரியின் சிறப்பு. பயனர் விவரங்கள், பக்க எண்ணிக்கை, தரக்கட்டுப்பாடு, தடைக்கற்கள், வருங்காலப் போக்குகள் ஆகியவை தமிழ் விக்கிபீடியாவை ஒத்தே இருக்கின்றன.


4. பிற திட்டங்கள்


தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி மேற்கோள், தமிழ் விக்கி செய்திகள் ஆகியவற்றின் இருப்பும் முக்கியத்துவமும் தற்போது குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் இருக்கும் பயனர்களே அங்கும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்திட்டங்கள் வளரவில்லை. இத்திட்டங்களில் தனி ஆர்வம் உடைய பயனர்கள் வருகையில் நிலைமை மாறும். எனினும், இத்திட்டங்களின் தேக்கம் ஆங்கில விக்கித் திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகளுடன் ஒப்பிடத் தக்கதே. இத்தளங்களை காட்டிலும் தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான தேவை மிகையாக உணரப்படுவதால் அதை அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் முக்கியத்துவம் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாக அமையும் என்று சொல்ல இயலும்.