Thursday, May 10, 2007

தமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது

கட்டற்ற நூலகத் திட்டமான WikiSource தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. பார்க்க - http://ta.wikisource.org

நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள அல்லது காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ள பழங்கால மற்றும் தற்காலத் தமிழ் நூல்களை இங்கு சேகரித்து வைக்கலாம். ஏற்கனவே இயங்கி வரும் நூலகம் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நூல்களையும் இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் விக்கி நூல்கள் திட்டத்தில் ஏற்கனவே திருக்குறள் போன்ற நூல்கள் கிடைக்கின்றன. அவற்றையும் கூடிய விரைவில் இங்கு நகர்த்துவோம்.

நன்றி.

பி.கு - தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம். இந்தப் பெயர் பொருத்தமானது தான் என்று உறுதி செய்த பிறகு, இப்பெயரை அதிகாரப்படியாகப் பயன்படுத்த இருக்கிறோம். வேறு பெயர் பரிந்துரைகள் இருந்தாலும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மற்றுமொரு மைல்கல் இரவிசங்கர்,
வாழ்த்துக்கள்.

மதுரைத் திட்டத்தில் காணலாகும் நூல்களைக், குறிப்பாக ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த இலக்கியங்களை இங்கும் சேமித்து வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தனி மடலில் சொல்லுங்களேன்.

வெறுமனே வெட்டு/ஒட்டாக இல்லாமல், படங்கள் மற்றும் பொருளுரையும் சேர்த்தே செய்ய முடியுமா?
இல்லை source என்பதால், மூல நூல் மட்டும் தான் பதியலாமா?

எப்படியும் திருவாய்மொழி உரையினை மாதவிப் பந்தலில் துவங்க ஒரு எண்ணம் உள்ளது. அதனால் தான் உரையும் இதில் சேர்க்கலாமா என்று ஆவல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம்//

source=மூலம், மூலநூல் என்பது பொருத்தமாகவும், அனைவரும் அறிந்ததாகவும் தான் உள்ளது.

source=ஊற்று என்று சொன்னால் எப்படி இருக்கும் என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.

மு. மயூரன் said...

விக்கிமூலம் தாமதமாகவேனும் தொடங்கப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ரவி,

விக்கிமூலத்தில் எவற்றை இணைக்கலாம், எவற்றை இணைக்கக்கூடாது என்ற பருமட்டான வரைபடத்தை இங்கே பதிவொன்றின் மூலம் தந்தீர்களானால் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மயூரன் - wikisource கொள்கைகள், வழிகாட்டல்களை முழுமையாகப் படித்துப் பார்த்து விட்டு நீங்கள் கேட்ட மாதிரி ஒரு பட்டியல் தருகிறேன். பொதுவாக காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட அச்சில் வந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப்படுத்தத் தகுந்த ஒலி, ஒளிக் கோப்புகள், நூல்களை இங்கு சேர்த்து வைக்கலாம்.

ரவிசங்கர் - பாடல்களோடு சேர்த்து உரை, படங்களை தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் தரலாம்.

wikisource தளத்தில் மூலப் பாடலை மட்டும் தரலாம். அல்லது, இப்பாடல்களுக்கு அச்சில் உள்ள குறிப்பிடத்தக்க உரை ஏதும் காப்புரிமை யின்றி இருந்தால் அதையும் இடலாம். இப்படி இடப்படும் பக்கங்கள் மெய்ப்பார்க்கப்பட்டு பூட்டி வைக்கப்படும். இதனால், விசமமாகவோ பிழையாகவோ இப்பக்கங்களில் திருத்தம் செய்ய இயலாது. தேவைப்படும் திருத்தங்களை ஆதாரத்துடன் பேச்சுப் பக்கங்களில் எடுத்துரைத்தால் வேண்டிய திருத்தங்களை நிர்வாகிப் பயனர்கள் செய்வார்கள்.

Vassan said...

வணக்கம் ரவிசங்கர்.

" என்னடா இந்த ஆள் எப்ப பார்த்தாலும் முரணாகவே வினவுகிறான் என தவறாக நினைக்க வேண்டாம். நன்றி."

1.மதுரைத்திட்டம் நிரம்ப வருடங்களாக ஏற்கனவே இருந்து வரும் போது, தமிழ் விக்கிமூலம் என்பதால் என்ன கூடுதல் பயன்..? முடிந்த போது சொல்லுங்கள்.

2. மதுரைத்திட்டத்தில் காணப்படும் நூல்களை இங்கு சேமிக்க வைக்கலாம் என கருத்தளித்துள்ளார் கண்ணபிரான்.. இவ்வாறு செய்ய மதுரைத்திட்ட மடற்குழு வழி சென்று திட்டத்தலைவர் கல்யாணசுந்தரத்திடம் முன் அனுமதி பெற்று விட்டீர்களா..?

3. மதுரைத்திட்ட இலக்கிய மின் தொகுப்பு பணியில் ஈடுபட தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள் - பிழை திருத்தம் பார்க்க அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பணியில் சேர்ந்துழைத்து, துரிதமாக பணியை முடிக்க...

//எ.கா: நான் பல வருடங்களாக சீறப்புராணம் தொகுப்பு பணியை செய்து வருகிறேன். மொத்தமுள்ள கிட்டதட்ட 800 பக்கங்களில் 580 பக்கங்களை தட்டச்சு செய்து, பிழை பார்த்து வலையேற்றியாகிற்று. மீதம் 800-580 = 220 //

என்னுடைய கருத்தில் ( முழுதாக உதாசீனம் செய்ய உங்களுக்கு உரிமையுண்டு) தமிழ் விக்கிமூலம் என்பதாக புதிதாக ஒன்றை தொடங்காமல் மதுரைத்திட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்த் தொண்டு செய்யலாம் தமிழார்வலர்கள்.

விக்கிமூலம் ஆரம்பிப்பதற்கான காரணம் புது மாதிரி,ம.திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றால், எனது பின்னூட்டத்திற்கு பொருளில்லை.

vaasus அட் ஜீமெய்ல் . காம்

Vassan said...

வி.போ. கருத்து

ம.திட்டத்திலிருக்கும் செய்யுள்களின் முழு பொழிப்புரைகளை சேர்த்து வலையேற்றுவது அருமையான கருத்து. ம.தி லிருந்து மாறுபட்டும் இருக்கும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாசன் -

//" என்னடா இந்த ஆள் எப்ப பார்த்தாலும் முரணாகவே வினவுகிறான் என தவறாக நினைக்க வேண்டாம். நன்றி."//

நிச்சயம் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் அனைத்தும் முக்கியமானவை. புதிய பயனர்கள் எவருக்கும் எழுபவை.

1.

//மதுரைத்திட்டம் நிரம்ப வருடங்களாக ஏற்கனவே இருந்து வரும் போது, தமிழ் விக்கிமூலம் என்பதால் என்ன கூடுதல் பயன்..? முடிந்த போது சொல்லுங்கள்.//

Project Madurai is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics என்று மதுரைத் திட்டத் தளம் சொல்கிறது. ஆனால், wikisourceல் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் மட்டும் அல்லாமல் எத்துறை நூல்களையும், தற்கால நூல்களையும், அறிக்கைகள், கட்டுரைகள் உள்ளிட்ட எல்லா வகை எழுத்தாக்கங்கள், ஒலி, ஒளிக் கோப்புகளையும் சேர்த்து வைக்க முடியும். இந்த வகையில் wikisource ஒரு கட்டற்ற இணைய நூலகமாக இருக்கும்.

//The etext files distributed FREE under the auspices of Project Madurai" are for the personal usage of the individuals. Limited redistribution of these files to third parties is allowed, provided the header page linking to Project Madurai is kept intact. Any other redistribution of these files in electronic or other forms to third parties and in the Web are prohibited, without prior permission obtained from Project Madurai authorities. //

பயன்பாட்டு அளவில் எளிமையான GNU Public licenseன் கீழ் wikisourceஐப் பயன்படுத்தலாம், அதன் உள்ளடக்கத்தை வினியோகிக்கலாம். விற்பனை கூட செய்யலாம். இந்த சுதந்திரம் மதுரைத் திட்டத்தில் இல்லை.

உலகளவில் project gutenberg இருக்கும் அதே வேளையில் wikisourceக்கான தேவையும் இருக்கிறது. அது போல் மதுரைத் திட்டமும் தமிழ் wikisourceம் ஒன்றுக்கு ஒன்றுக்குத் துணையாக இருக்க முடியும்.

தங்கள் கேள்வியின் காரணத்தால், மதுரைத் திட்டத்துக்கும் wikisourceக்கும் உள்ள வேறுபாட்டை இங்கு விளக்க முற்பட்டேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றபடி, மதுரைத் திட்டத்தில் குறை காண்பதோ அதற்கு மாற்று தேடுவதோ எங்கள் நோக்கம் இல்லை. உலகளாவிய விக்கிமீடியா திட்டங்களின் ஒரு பகுதியாகத் தமிழ் wikisource எப்படி இருந்தாலும் தொடங்கப்பட்டிருக்கும்.

2. பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக தமிழ் wikisource பங்களிப்பாளர் ஒருவர் மூலம் மதுரைத் திட்டத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தப்படும் மதுரைத் திட்ட ஆக்கங்களுக்கு கண்டிப்பாக wikisource பக்கங்களில் இருந்து தொடுப்பும் citationம் தரப்படும்.

3. விக்கி பங்களிப்பாளர் எவருக்கும் மதுரைத் திட்டம் போன்ற ஒன்றில் பங்களிப்பதைக் காட்டிலும் விக்கி திட்டத்தில் பங்களிப்பது எளிதாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. wikisourceல் நீங்கள் பங்களிக்க விரும்பினால், விரும்பிய நூலில் விரும்பிய நேரத்தில் எவருடைய அனுமதியும் தேவையின்றி விரும்பிய அளவில் பங்களிக்கலாம். இந்த பங்களிப்புகள் உடனுக்குடன் மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும். நூல் முடியும் வரை மறைத்து வைக்கத் தேவை இல்லை. இந்த திறந்த நிலை மதுரைத் திட்டத்தில் இல்லை.

4. ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டு நூல் வடிவில் உள்ள காப்புரிமை விலக்கு உள்ள பொழிப்புரைகள் என்றால் நிச்சயம் wikisourceல் கிடைக்கச் செய்ய முயல்வோம். இல்லை, புதிதாக இனி தான் எழுதப்படும் உரைகள் என்றால் அவற்றை தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் கூட்டு முயற்சியாக எழுதலாம்.

மஞ்சூர் ராசா said...

இது ஒரு முக்கியமான தகவலாக இருப்பதால் முத்தமிழ் குழுமத்தில் மீள்பதிவு செய்கிறேன்.

நன்றி.
http://groups.google.com/group/muththamiz

Post a Comment