தமிழுக்கு வளம் கற்பனை இலக்கியம் மட்டுமா?
எழுதப்பட்டதெல்லாம் இலக்கியம் என்பது ஒரு வரையறை. ஆனால் தமிழில் இலக்கியம் என்பது செய்யுள் அல்லது கவிதை, சிறுகதை, புதினம், காப்பியம் ஆகிய வடிவங்களை மட்டுமே பெரிதும் குறிக்கிறது. இவையே படைப்பிலகியங்களாக போற்றப்படுகின்றன. தமிழில் கற்பனை இலக்கியங்களுக்கு தரப்பட்ட மதிப்பு தகவல் படைப்புகளுக்கு வழங்கபபடவில்லை. (திருக்குறள் தொல்காப்பியம் போன்ற சில விதிவிலக்குகள் உண்டு.) அதனால் அறிவியலும் தொழில்நுட்பத்திலும் தமிழர் மேம்பட்டு இருந்தாலும், இன்ப இலக்கியங்கள் அளவுக்கு தகவல் படைப்புகளை அவர்கள் எழுதவில்லை. இன்று அறிவியல் தமிழ் நலிவுற்று இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
தகவல் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டது தமிழ் மொழியின் இயல்பு அல்ல, அது ஒரு காலகட்ட தமிழ்ச் சமூகத்தின் இயல்பு. தமிழ்ச் சமூகத்திலும் இந்தியாவிலும் சோதிடர்கள் மதிக்கப்பட்டனர். அறிவைச் சிகிசை நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பல காலமாக ஆத்மா புகழப்பட்டு உடல் இழிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி மொழியில் பிரதிபலிக்கிறது.
இன்றும் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை, புதினம் எழுதவேண்டும். அந்த மரபை விட்டு சற்று விலகினால் இகழ்ச்சிதான் மிஞ்சும். சில விமர்சகர்கள் இந்த மரபை உடைத்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்கள் கட்டுரைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள். இருப்பினும் தமிழில் படைப்பாக்கம் என்றால் கற்பனை இலக்கியங்கள் மட்டுமே என்ற மனப்படிவம் இன்னும் இருக்கிறது.
சமய இலக்கியங்கள் தமிழில் முடியுமா என்று ஒரு போதும் சந்தேகம் எழுந்ததில்லை. அர்ச்சனை தமிழிலும் தேவையா என்பது வேறு ஒரு கேள்வி. அரசியல் பற்றி தமிழில் எழுத முடியுமா என்று சந்தேகம் இருந்தது. பத்திரிகைகளில் அரசியலும் போரியலும் விரிவாக எழுதப்பட்டது. சமூக அறிவியல் பற்றி தமிழில் எழுத முடியுமா என்று சந்தேகம் இருந்தது. பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, இருத்தலியல், மானிடவியல் என துல்லியமான சமூகவியல் தலைப்புகளில் சாதாரணமாய் சிற்றிதழ்களில் தமிழில் அலசப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பற்றி தமிழில் முடியுமா என்பது இன்றைய கேள்வி. முடியும். அதற்கான ஊடகம் இணையம். அதில் ஒரு களம் தமிழ் விக்கிப்பீடியா.
தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கு ஒரு சிறப்பு, பலம் என்பதில் எந்த கருத்துவேறுபாடும் கிடையாது. எமது புலவர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் தந்த தமிழ் இலக்கியங்கள் தமிழின் அசைக்க முடியா சொத்து. தகவல் படைப்புகள் பயன்பாட்டிலும் படைப்பாக்கத்திலும் அவற்றுக்கு எந்த விததிலும் குறைந்தவை அல்ல. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் தமிழர்கள் தமிழில் தகவல் படைப்புகளையும் தர வேண்டும்.
No comments:
Post a Comment