Friday, November 21, 2008

இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

இந்தியாவில் 22 மொழிகள் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள். இவை தவிர இந்தியாவில் 400 மேற்பட்ட மொழிகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு விக்கிப்பீடியாத் திட்டம் இன்னும் இல்லை. 18 இந்திய மொழிகளில்தான் விக்கிப்பீடியாக்கள் உண்டு. பெரிய இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் கூட சிறிய ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களை விட வளர்ச்சி குன்றியவை.

மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் ஓரளவு வளர்ச்சி பெற்ற விக்கிப்பீடியாக்கள் உண்டு.

மெதுவாக தொடங்கினாலும் திட்டமிட்டு தரம் கண்காணித்து வளர்ந்து வருவது மலையாளம். கட்டுரை எண்ணிக்கை 8,177 எனினும் அனேகமான கட்டுரைகள் ஆழமானவை.

தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் சிறந்தவற்றில் ஒன்று. 16,000 மேற்பட்ட கட்டுரைகளுடன் தரம் கண்காணித்து வளர்ந்து வருகிறது. பல்துறை கட்டுரைகளை ஆக்குவதில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழர் செறிந்து வாழும் இடங்களில் இருந்து பங்களிப்பு இன்னும் கூட பெரும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியும், இந்தியாவின் ஆட்சி மொழியுமான இந்திக்கு அதன் வளத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை. இதில் 23,319 கட்டுரைகள் உண்டு, ஆனால் அனேகமானவை ஆழமற்றவை. பல்துறைக் கவனமும் குறைவு.

கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் முதலாவதாக நிற்கும் தெலுங்கில் 41,766 கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மை ஒருவரி இருவரி பக்கங்களே. அவற்றை குறுங்கட்டுரைகள் என்றே கருதமுடியாது. அதனால் தரம் அடிப்படையில் தெலுங்கு பின் நிற்கிறது.

இந்திய மொழிகளில் தொடக்கத்தில் கன்னடம் முன்னுக்கு இருந்தது. இந்தியாவில் விக்கிப்பீடியா தொடர்பாக முதல் கூட்டத்தை கன்னட விக்கிப்பீடியர்களே கூட்டினர். இப்போது கன்னடம் நலிவடைந்து இருக்கிறது. 6,097 கட்டுரைகளே கன்னடத்தில் இருக்கின்றன. குறைந்த வேலைகளே அங்கு நடைபெறுகின்றன.

மேற்கு வங்காளம், வங்காள தேசம் ஆகிய இடங்களில் ஆட்சி மொழியாக இருப்பது வங்காள மொழி. 230 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதைப் பேசுகிறார்கள். தொடக்கத்தில் விக்கிப்பீடியா மாநாடு ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். இப்போது வளர்ச்சி சற்று மெதுவாகி இருக்கிறது. முதற்பக்க கட்டுரை நெடுங்காலமாக இன்றைப்படுதப்படவில்லை.

மாரத்தியில் 20,831 கட்டுரைகள் இருக்கின்றன. தெலுங்கு போல அனேகமானவை ஒருவரி இருவரி பக்கங்கள். ஆனால் இப்போது அங்கு சற்று கூடிய வேலைகள் நடைபெறுகின்றன.

குஜராத்தி மொழியில் 2596 கட்டுரைகள் மட்டுமே உண்டு. எந்த வித குறிப்பிடத்தக்க வேலைகளும் இப்போது காணப்படவில்லை.

சுமார் 100 மில்லியன் மக்களுக்கு மேல் பேசுகிற பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா தொடக்க கட்ட நிலையில் இருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை 405. இவற்றுள் பெரும்பான்மை ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டு மொழி பெயர்க்கப்படாதவை.

இப்படி பெரிய இந்திய மொழிகளே இந்த நிலை என்றால் சிறிய மொழிகள் இன்னும் குன்றிய நிலையில் உள்ளன. காஷ்மீரி, கொங்காணி, ஒரியா ஆகிய மொழிகளில் மிகக்குறைந்த வேலைகள் நடைபெறுகின்றன, மற்ற பல மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

சமஸ்கிருத மொழிக்கும் ஒரு விக்கிப்பீடியா இருக்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கப்படும், பல மொழியியல் ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் இந்த மொழியின் விக்கிப்பீடியாவும் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை.

ஒரு மொழியின் விக்கிப்பீடியாவை வைத்து அந்த மொழியின் நிலை பற்றி ஒன்றும் இறுதியாக கூடமுடியாது. ஆனால் விக்கிப்பீடியா ஒரு மொழி இணையத்தில் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு ஒர் அளவுகோல். எத்தனை பேரை இணையம் அவர்களது மொழியில் சென்றடைந்திருக்கிறது என்பதற்கு இது சான்று பகிர்கிறது.

தமிழ் மொழியில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் விக்சனரி (100 000 மேற்பட்ட சொற்களுடன்), விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கி மூலங்கள், விக்கி மேற்கோள்கள் ஆகிய சகோதரத் திட்டங்களும் உண்டு.

தமிழ் மொழியை மேலும் வளர்த்து, இந்திய மொழிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாற்ற உங்களின் பங்களிப்பு அவசியமானது.

மேலும் தகவல்கள்:
http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:இந்திய விக்கிகள்
http://ta.wikipedia.org/wiki/இந்திய மொழிகள்

தரவுகள்:
நவம்பர் 22, 2008 - http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias

2 comments:

Anonymous said...

You missed this one !! Its depth is much better than telugu and hindi

http://en.wikipedia.org/wiki/Bishnupriya_Manipuri_language

நற்கீரன் said...

Thank you for the note. For a languague with 450000 speakers, the wikipedia looks good with 23,403 articles.

Post a Comment