Showing posts with label தமிழ் நூல். Show all posts
Showing posts with label தமிழ் நூல். Show all posts

Sunday, November 10, 2013

இத் தலைமுறையின் கடமை: பிரஞ்சுத் தமிழ்ப் படைப்புகள்

ஈழப் போராலும், பொருளாதார நலிவாலும் மேற்குநாடுகளுக்கு பெருந்தொகைத் தமிழர்கள் ஈழத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் குடியேறியுள்ளார்கள்.  சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குநாட்டினர் எம்மிடம் வந்து, எமது மொழியைக் கற்று, எம்மை ஆய்ந்து போன்ற ஒரு வாய்ப்பை நாம் இப்பொழுது பெற்று இருக்கிறோம்.  ஒரு நாட்டின் புவியியல், வரலாறு, அரசியல் சட்ட முறைமைகள், வாழ்வியல், பண்பாடு, இனங்கள், மொழிகள், இலக்கியம், கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு தகவல்களை நேரடியாக வாழ்ந்து, ஆய்ந்து, அவதானித்து, தொகுத்து தமிழில் பதிவுசெய்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பை நாம் பெற்று இருக்கிறோம். 

இந்த வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது, குறுகிய கால எல்லையைக் கொண்டது.  பல காரணங்களால் புகலிடத் தலைமுறைப் பிள்ளைகள் தமிழ் மொழியை இழந்து வருகிறார்கள்.  பேச்சு மொழியாகக் கூடத் தமிழ் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரிடம் அருகி வருகிறது.  அதனால் தமிழில் வாசிக்க, எழுத, நுணுக்கமாக ஆயும் திறமையை முதலாம் தலைமுறையினர் மட்டுமே பெரும்பாலும் கொண்டு இருக்கிறார்கள்.  இதனாலேயே இந்த அறிவுச் செல்வங்களை தமிழுக்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு, கடமை இவர்களிடம் இருக்கிறது.  "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.  இறவாத புகழு டையபுது நூல்கள் தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" என்ற பாரதியின் வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பை இத் தலைமுறை மட்டுமே கொண்டுள்ளது. 

புலம்பெயர் இலக்கியம் என்பதற்கு அப்பால் மொழிபெயர்ப்பில், திறனாய்வில், கலைச்சொல்லாக்கத்தில், அறிவியல் தமிழில் இத் தலைமுறையினரிடம் நாம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறோம்.  அந்த வகையில் பிரான்சில் வெளிவந்த ஆக்கங்கள் சில சிறப்பான எடுத்துக்காட்டுக்களாக இருக்கின்றன.  சதாசிவம் சச்சிதானாந்தம் எழுதிய "பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு" என்ற நூல்  பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து தரும் ஒரு சிறு கலைக்களஞ்சியம் ஆகும்.  இந்த நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு யேர்மனி, நோர்வே, டென்மார்க், பின்லாந்து என ஒவ்வொரு நாடுசார் செய்திகளையும் நாம் தொகுக்க முடியும்.  க. வாசுதேவன் எழுதி இந்த ஆண்டு வெளிவந்த "பிரஞ்சுப் புரட்சி" என்ற நூல் இன்னுமொரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.  இன்றைய அரசியல் சட்ட முறைமைகள் வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிய படைப்பு அங்கு சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்ற ஒருவரின் விபரிப்பில் கிடைக்கிறது.  க. வாசுதேவனின் "19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்" என்ற மொழிபெயர்ப்பு நூல் பிரஞ்சு இலக்கியத்தின், பண்பாட்டின், சிந்தனையின் வேறு ஒரு பக்கத்தைப் பகிர்கிறது.  பல தமிழ்-பிரஞ்சு-தமிழ் அகராதிகள் வெளிவந்துள்ளன.  நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, கலாமோகன் போன்ற பல எழுத்தாளர்கள் பிரான்சில் இருந்து தமிழுக்கு பல படைப்புக்களை வழங்கி உள்ளார்கள்.

பிரஞ்சுப் பாண்டிச்சேரி, குட்டி யாழ்ப்பாணம் என்று அறியப்படும் லா சப்பல், தமிழ் வம்சாவழியினர் பெரிது வாழும் பிரஞ்சுக் குடியேற்றவாத நாடுகளான மொரிசியசு, ரியூனியன் என்று தமிழர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமான தொடர்பு நீண்டது, பரந்தது, அடக்குமுறைகள் நிறைந்தது.  உலக நாகரிக, பண்பாட்டு, சிந்தனை வளர்ச்சியின் உயரிய ஓர் வடிவமாகக் கொள்ளப்படும் பிரான்சிடம் இருந்து நாம் இத் தொடர்பு ஊடாகக் பெற்றுக் கொள்ளக் கூடிய உச்ச மதிப்பான ஒன்றாக அவர்களது அறிவே அமையும்.  அந்த அறிவை நேரடியாக, நுணுக்கமாக, எமது மொழியில் எமது பார்வையில் தொகுத்து தரும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் மட்டுமே கொண்டுள்ளார்கள்.  மேலே சுட்டப்பட்ட படைப்புக்கள் போதாது.  இது மாதிரி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புக்கள் எமக்கு வேண்டும்.  நூறாயிரம் வரையில் தமிழர்கள் வாழும் பிரான்சில் இருந்து ஒரு தமிழ் விக்கி பங்களிப்பாளர் கூட அமையாதது ஒரு பெரும் குறையே.  வருவீர், உங்கள் அறிவைப் பகிர்வீர்.

Friday, August 30, 2013

ஒரு பொது, திறந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலின் (Catalog) தேவை

தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தனித் தனித் தீவுகளாகத் தொகுக்கப்படுகின்றன.  தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை இணையத்தில் தமிழ் நூல்கள் பற்றிய மீதரவை (metadata) அல்லது நூற்பட்டியலைத் (catalog) தருகின்றன.  இந்த அமைப்புக்கள் வெவ்வேறு ஆயினும் இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன.  அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது.  இதை இந்த அமைப்புக்கள் தனித் தனியே செய்யாமல் இணைந்து செய்வது இன்று பல காரணங்களால் அவசியமாகிறது. 

பொதுவாக நூற்பட்டியலை வெளியிடுவது, ஆவணப்படுத்துவது அரசுகளின் ஒரு முக்கிய கடமை ஆகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, உருசியா, செருமனி போன்ற நாடுகள் பெரும் வளங்களை ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்கின்றன.  எடுத்துக்காட்டாக பல மேற்குநாடுகளில் இயங்கும் பதிப்பகர்கள் எல்லாம் காங்கிரசு நூலகத்துக்கு (Library of Congress) அல்லது தமது தேசிய ஆவணகங்களுக்கு நூல்களையும் நூல்களைப் பற்றிய தகவல்களையும் கட்டாயம் அனுப்ப வேண்டும்.  இத் தகவல்களை நூலகக் கூட்டமைப்புக்கள் தொகுத்துப் பகிர்கின்றன.  குறிப்பாக Online Computer Library Center, Inc (OCLC) கூட்டமைப்பே உலகின் அதிக உசாத்துணைகளை (Bibliography) கொண்ட இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு ஆகும். 

ஆனால் தமிழ்ச் சூழலில் அரசுகள் இந்தப் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இந்திய அளவில் ஆவணகவியலும் நூலகவியலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட திணைக்களங்கள் ஆகும்.  தமிழ்நாடு அரசும் இத் துறையைக் கவனிக்க வில்லை.  எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக தமிழ் நூற்பட்டியல்கள் வெளியிடப்படவில்லை.  இலங்கையில் பல கால கட்டங்களீல் அரசுகள் திட்டமிட்ட முறையில் தமிழ் தகவல் வளங்களை அழித்து வந்துள்ளது.  ஈழத்தில் உருவாக்கப்பட்ட பெளதீக ஆவணகங்களும் போரில் அழிந்துவிட்டன.  செல்வராஜாவின் நூல் தோட்டம் போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் விதிவிலக்காக தமிழ் நூற்பட்டியல் (catalog) இன்னும் தொகுக்கப்படவில்லை.  இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலின் தேவையை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.  இணையக் கட்டமைப்புக்கள் இதற்கான ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. 


நாம் தனித்தனியே தமிழ் நூற் தகவல்களைத் தொகுப்பதால் வளங்கள் வீணாகும்.  தகவல் முழுமை பெறாது. அவரவர் பயனர்கள் விரிவான சேவையைப் பெற முடியாது.  ஆனால் நாம் இணைந்து ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்துப் பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறலாம்.  எமது தேவைகள் வேறுபட்டால், நாம் அனைவரும் ஒரு பொது அடிப்படையிலாவது (டுப்பிளின் கருவகம் - Dublin Core) சேர்ந்து இயங்கி, பின்னர் மேலதிக தகவல்களை எமது தேவைகளுக்கு ஏற்ப இணைக்கலாம். 
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பல.  யார் தொகுப்பது,  அதற்கான கட்டமைப்பு என்ன.  என்ன சீர்தரத்தைப் பயன்படுத்துவது. எப்படிப் பகிர்வது.  மிக யாதார்த்தமான சிக்கல்களே.  ஆனால் உலக அரங்கில் பலர் திறனாக நிறைவேற்றிய தீர்வுகள் உண்டு.  நுட்பம் இதில் ஒரு சிக்கல் இல்லை.  எமக்கு இருக்கும் உண்மையான சிக்கல் பல தரப்பட்டவர்களை இணைத்து இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதுத்தான்.  இந்தப் பணியை ரேசா முத்தையா நூலகம், நூலகத் திட்டம், உத்தமம் முன்னின்று எடுக்க வேண்டும்.  தமிழ் விக்கிச் சமூகமும் இதில் ஒரு முக்கிய பங்கேற்கும்.