Friday, August 30, 2013

ஒரு பொது, திறந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலின் (Catalog) தேவை

தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தனித் தனித் தீவுகளாகத் தொகுக்கப்படுகின்றன.  தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை இணையத்தில் தமிழ் நூல்கள் பற்றிய மீதரவை (metadata) அல்லது நூற்பட்டியலைத் (catalog) தருகின்றன.  இந்த அமைப்புக்கள் வெவ்வேறு ஆயினும் இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன.  அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது.  இதை இந்த அமைப்புக்கள் தனித் தனியே செய்யாமல் இணைந்து செய்வது இன்று பல காரணங்களால் அவசியமாகிறது. 

பொதுவாக நூற்பட்டியலை வெளியிடுவது, ஆவணப்படுத்துவது அரசுகளின் ஒரு முக்கிய கடமை ஆகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, உருசியா, செருமனி போன்ற நாடுகள் பெரும் வளங்களை ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்கின்றன.  எடுத்துக்காட்டாக பல மேற்குநாடுகளில் இயங்கும் பதிப்பகர்கள் எல்லாம் காங்கிரசு நூலகத்துக்கு (Library of Congress) அல்லது தமது தேசிய ஆவணகங்களுக்கு நூல்களையும் நூல்களைப் பற்றிய தகவல்களையும் கட்டாயம் அனுப்ப வேண்டும்.  இத் தகவல்களை நூலகக் கூட்டமைப்புக்கள் தொகுத்துப் பகிர்கின்றன.  குறிப்பாக Online Computer Library Center, Inc (OCLC) கூட்டமைப்பே உலகின் அதிக உசாத்துணைகளை (Bibliography) கொண்ட இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு ஆகும். 

ஆனால் தமிழ்ச் சூழலில் அரசுகள் இந்தப் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இந்திய அளவில் ஆவணகவியலும் நூலகவியலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட திணைக்களங்கள் ஆகும்.  தமிழ்நாடு அரசும் இத் துறையைக் கவனிக்க வில்லை.  எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக தமிழ் நூற்பட்டியல்கள் வெளியிடப்படவில்லை.  இலங்கையில் பல கால கட்டங்களீல் அரசுகள் திட்டமிட்ட முறையில் தமிழ் தகவல் வளங்களை அழித்து வந்துள்ளது.  ஈழத்தில் உருவாக்கப்பட்ட பெளதீக ஆவணகங்களும் போரில் அழிந்துவிட்டன.  செல்வராஜாவின் நூல் தோட்டம் போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் விதிவிலக்காக தமிழ் நூற்பட்டியல் (catalog) இன்னும் தொகுக்கப்படவில்லை.  இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலின் தேவையை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.  இணையக் கட்டமைப்புக்கள் இதற்கான ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. 


நாம் தனித்தனியே தமிழ் நூற் தகவல்களைத் தொகுப்பதால் வளங்கள் வீணாகும்.  தகவல் முழுமை பெறாது. அவரவர் பயனர்கள் விரிவான சேவையைப் பெற முடியாது.  ஆனால் நாம் இணைந்து ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்துப் பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறலாம்.  எமது தேவைகள் வேறுபட்டால், நாம் அனைவரும் ஒரு பொது அடிப்படையிலாவது (டுப்பிளின் கருவகம் - Dublin Core) சேர்ந்து இயங்கி, பின்னர் மேலதிக தகவல்களை எமது தேவைகளுக்கு ஏற்ப இணைக்கலாம். 
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பல.  யார் தொகுப்பது,  அதற்கான கட்டமைப்பு என்ன.  என்ன சீர்தரத்தைப் பயன்படுத்துவது. எப்படிப் பகிர்வது.  மிக யாதார்த்தமான சிக்கல்களே.  ஆனால் உலக அரங்கில் பலர் திறனாக நிறைவேற்றிய தீர்வுகள் உண்டு.  நுட்பம் இதில் ஒரு சிக்கல் இல்லை.  எமக்கு இருக்கும் உண்மையான சிக்கல் பல தரப்பட்டவர்களை இணைத்து இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதுத்தான்.  இந்தப் பணியை ரேசா முத்தையா நூலகம், நூலகத் திட்டம், உத்தமம் முன்னின்று எடுக்க வேண்டும்.  தமிழ் விக்கிச் சமூகமும் இதில் ஒரு முக்கிய பங்கேற்கும்.



 

13 comments:

விருபா - Viruba said...

\\ .... தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை.... \\

இதில் பலரைக் குறிப்பிட்டுளீர்கள். வரிசைப்படுத்தல் உங்கள் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையிலா அல்லது எண்ணக்கரு அடிப்படையிலா அல்லது அகர வரிசையிலா அல்லது இணையத்தில் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு வரிசையிலா என்பதையும் ஏன் அவ்வாறு வரிசைப்படுத்தினீர்கள் என்பதையும் தகுந்த காரணத்துடன் அறியத் தருக......

\\ இந்தப் பணியை ரேசா முத்தையா நூலகம், நூலகத் திட்டம், உத்தமம் முன்னின்று எடுக்க வேண்டும். \\

நற்கீரன்,

இங்கு குறிப்பிடப்படும் மூன்று அமைப்புகளில் உத்தமம் இவ்வாறான வேலைகளுக்கு லாயக்கற்ற ஒரு பழைமைவாத அமைப்பு. அவ்வமைப்பு தமிழக் கணிமை மேம்பாடு குறித்தானது என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அங்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் எந்த நன்மையும் தமிழக்கணிமைக்குக் கிடைத்துள்ளது என்று சுட்டுவதற்கு இணைய இணைப்புகளைத் தர முடியாத நிலையே உள்ளது. அந்த அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகளையே ஆண்டு வரிசையில் அல்லது கட்டுரையாளர் வரிசையில் அல்லது நுட்ப வகைப்படுத்தல் வரிசையில் காட்டக்கூடியவாறு உத்தமத்தின் இணையமே இல்லை. உத்தமத்தின் இணையம் இன்னமும் முதல் தலைமுறை தன்மையுடனேயே உள்ளது. அது 2000 இற்குப் பின்னர் நுட்ப ரீதியில் வளராத ஒன்று. இந்நிலையில் உத்தமம் அமைப்பினை இவ்வாறான தரவுதள data mining நுட்ப வேலைகளுக்கு அழைப்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போன்றது.

நீண்ட கால தமிழ் இணையப் பயனரான நீங்கள், கூச்சல் மிக்க infitt கும்பல் பற்றி சரிவரப் புரியத் தவறிவிட்டீர்கள் என்றே எண்ணுகிறேன்.

ரோசா முத்தையா நூலகமும், நூலகத் திட்டமும் வெளியில் இருந்து பெறப்படும் நிதியில் - நிதிவழங்குபவர்களின் தேவைக்கான நிரலில் வழிகாட்டலில் இயங்குபவை. இதில் நூலகத் திட்டத்தின் மையக்கரு நூற்பட்டியல் அல்ல, அது ஆவணப்படுத்தலின் பக்கவிளைவாகவே நூற்பட்டியலாக்கத்தினை கொண்டுள்ளது, எனினும் அது பௌதீக எல்லைகுட்டபட்டதாகவே தன்னை முன்னிறுத்துகிறது. சரி பௌதீக எல்லையை விடுத்துப் தமிழ்ப் புத்தகப் பட்டியலாக்கம் என்றால் நூல்தேட்டம் என் செல்வராஜா அவர்களையும் கருத்தில் கொள்ளலாம், நீங்கள் ஏன் உங்கள் இப்பதிவின் மையக் கருவிற்கு மிவும் அண்மித்ததான நூல்தேட்டத்தினை இப்பட்டியலில் இணைக்கத் தவறவிட்டீர்கள் என்பது புரியவில்லை.

\\ இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலின் தேவையை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. \\

நற்கீரன்,

தமிழில், தமிழனால் உருவாக்கப்பட்ட இடங்களில் எண்ணக்கரு அடிப்படையில் சேர்ந்து இயங்க யாருமே வரமாட்டார்கள். ஆங்கில ஜிம்மிக்குத் தமிழ்த் தட்டச்சர்கள் பலர் தொண்டராக இருப்பதைப் பெருமையாகக் கருதுவார்கள், ஆனால் தமிழ்க் குப்பனுக்குத் தொண்டனாகமாட்டார்கள்.

\\ ...இணைய தமிழ் நூற்பட்டியல் தேவை.... \\ தேவை.... என்று நீங்கள் அரசு அதிகாரிகளிடம் அல்லது துணைவேந்தர்களிடம் எடுத்துக் கூறினால் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள், அதே நேரம் வெள்ளைத்தோல் அம்மணி ஒருவர் கூறினால் அவருக்கே அரசுப்பணத்தினைத் திட்டமிடல் ஆலோசகர் என்று அள்ளிகொடுப்பார்கள்.

இதுதான் இன்றைய களநிலைமை.

இந்நிலையில் நாம் எவ்வளவு தூரம் போவது ?

விருபா - Viruba said...

http://blog.selvaraj.us/archives/145

விருபா - Viruba said...

http://www.badriseshadri.in/2005/06/blog-post_28.html

விருபா - Viruba said...

http://bit.ly/16aOQIm

விருபா - Viruba said...

\\ தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தனித் தனித் தீவுகளாகத் தொகுக்கப்படுகின்றன. தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை இணையத்தில் தமிழ் நூல்கள் பற்றிய மீதரவை (metadata) அல்லது நூற்பட்டியலைத் (catalog) தருகின்றன. இந்த அமைப்புக்கள் வெவ்வேறு ஆயினும் இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன. அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது. \\

நற்கீரன்,

இதில் \\ இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன. அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது. \\ என்ற புரிதலானது விவாதிக்கப்பட்வேண்டிய ஒன்று. இந்த அமைப்புகள் எல்லாம் தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருதலை நேரடி முக்கிய நோக்காகக் கொண்டிருக்கவில்லை, பக்கவிளைவாக வாசகர்கள் தமாகவே நூலகப்பட்டியலை ஒத்த ஒரு அரைகுறைப் பட்டியலைக் கண்டுகொள்ளலாம் என்றே கூறலாம். எடுத்துக்காட்டாக மதுரைத்திட்டத்தின் நோக்கம் \\ இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். \\ என்பதே. http://www.projectmadurai.org/pmworks.html இதில் நூற்பட்டியலின் முக்கிய கூறுகளான நூல் வெளியீட்டாளரும், வெளியிடப்பட்ட ஆண்டும் காணப்படவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பட்டியலிடும் மதுரைத்திட்டத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் நூற்பட்டியலைத் தருகின்றன என்பது அரைகுறைப் புரிதலே. இவ்வாறே
கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம் போன்றவற்றில் - நூலகம் என்ற அடிப்படையில் அவர்கள் தங்களுடைய நூலகத்தில் குறித்த புத்தகங்கள் எங்கு எந்த எண்ணில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை Accession Number, Reel Number போன்ற தரவுகளுடன் தருதலும் காணப்படுகின்றன, இங்கு நூல் பற்றிய அறிமுகக்குறிப்பே இல்லை. தமிழம், நூலகத் திட்டம், படிப்பகம் போன்றவை ஆவணப்படுத்துதலையே தங்களின் முக்கிய நோக்காகக்கொண்டுள்ளன - இவற்றில் புத்தகங்கள் பற்றிய ஆவணப்படுத்தலில் பக்கவிளைவாக நூற்பட்டியல்களைக் காணலாம். இணையத் தமிழ் நூற்கடைகள் நூல் விற்பனைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்ற நிலையில் அங்கும் ஒரு அரைகுறை நூற்பட்டியல் உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.

உங்களுடைய \\ ஒரு பொது, திறந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலின் (Catalog) தேவை \\ என்ற எண்ணக்கருவானது உன்னதமானது. சிறந்த தவிக்கிப்பீடியரான நீங்கள் 2013 இன் இறுதியில் இதனை வெளிப்படுத்தும்போது இதே எண்ணக்கருவை இதற்கு முன்னர் அச்சில் / இணையத்தில் வெளிப்படுத்தியவர்கள் யாரெவர், அவ்வாறு எண்ணங்களை வெளிப்படுத்தியவர்கள் அதனை நடைமுறைப்படுத்தினார்களா ? அவ்வெண்ணக் கருக்களில் ஏதாவது குறைகள் உள்ளனவா ? அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது ? அதனை நடைமுறைப்படுத்தியவர்கள் யார் ? நடைமுறைப்படுத்தியதில் குறைகள் உண்டா ? குறைகளுக்கான கராணிகள் எவை ? புறக்காரணிகளா ? அகக் குறைபாடுகளா ? இவ்வறான திட்டத்தை தற்போது செய்துகொண்டிருப்பவர்கள் யாரெவர் ? அவர்களின் திட்டங்களில் உள்ள குறைகள் / நிறைகள் தொடர்பில் நீங்கள் அவர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டீர்களா ? நீங்கள் குறிப்பிடும் \\ நாம் அனைவரும் ஒரு பொது அடிப்படையிலாவது (டுப்பிளின் கருவகம் - Dublin Core) சேர்ந்து இயங்கி, \\ என்பதற்கமைய அவர்களுடன் இணைந்தியங்க வாய்ப்புகள் உண்டா ? அவ்வாறு இணைந்து இயங்குவதற்காக அவர்கள் என்னவிதமான திறப்புகளைச் செய்யவேண்டி வரும் ? நுட்ப ரீதியில் இதனை அவர்களால் சாத்தியப்படுத்தும் நுட்ப ஆளணி வளங்கள் அவர்களிடம் உள்ளனவா ? ஏற்கனவே இதனைச் செய்துகொண்டிருப்பவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் கூட்டுழைப்பில் ஈடுபட வாய்ப்புகளை உருவாக்கவில்லையா ? UseModWiki இல் இருந்து MediaWiki இற்கு மாறுதலைப் போன்ற கூடுதல் நுட்பவிரிப்புக்களுக்கு இடம் தரவில்லையா ?..... போன்ற இன்றபிற கேள்விகளுக்கூடாக தக்க தரவுகளுடன் நீங்கள் இவ்விடத்தினை அணுகியிருக்கவேண்டும்.

சக்கரத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கும் தட்டைத்தன்மையுடன் நீங்கள் எழுதியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து.

concept ஐப் புரிந்துகொண்டு எப்ப பதில் தரப்போறீர்கள் ?

விருபா - Viruba said...

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

நற்கீரன் said...

தாமதமான பதிலுக்குப் பொருத்தருள்க. உங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. இந்தப் பின்னூட்டத்தின் விளைவாக அது தொடர்பாக மேலும் சற்று சிந்தித்து ஒரு தொடக்கட்ட feasibility study ஒன்றை உங்களுடன் கூகிள் ஆவணமாகப் பகிர்ந்துள்ளேன். வேறு சிலருடனும் கருத்துக் கோரி உள்ளேன். இத் துறையில் நீங்கள் எழுதிய கட்டுரை (http://www.bookday.co.in/2011/04/blog-post_2990.html) தொடக்கத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட பல ஆங்கில தமிழ் நூற்படியல்கள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய குறுங்க் கட்டுரைகளை விக்கியில் தொடங்கி (http://ta.wikipedia.org/s/o8x) உள்ளேன்.

இது தொடர்பாக நெடுங்காலம் செயற்பட்டு வரும் உங்களின் கருத்துக்கள் எனக்கு மிக உதவியாக அமையும். குறிப்பாக இச் செயற்திட்ட முன்மொழிவின் சமூக, நுட்ப சாத்தியக் கூறுகள், நிறைவேற்ற எடுக்க வேண்டிய அணுகுமுறை தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பாக்கிறேன். நன்றி.

விருபா - Viruba said...

நற்கீரன்,

வெளிநாடு சென்றிருந்தபடியால் உங்கள் பின்னூட்டத்திற்கு உடன் பதில் தரமுடியவில்லை.

1. உங்கள் பதிவினை நான் பார்வையிட்டபின்னரே எனது பின்னூட்டங்களை இட்டிருந்தேன். எனது பின்னூட்டங்களில் சுட்டிய எந்தவொரு விடயத்தையும் நீங்கள் கருத்திற்கொள்ளாது, மாற்றங்களை உள்வாங்காமல் இப்பதிவில் உள்ளவற்றை உள்ளது உள்ளபடியேதான் கூகுள் ஆவணமாகப் பதிந்துள்ளீர்கள் - இதில் புதிதாக சிலதும் சேர்த்துள்ளீர்கள்.

ஆக, ஏற்கனவே என் பின்னூட்டங்களில் கூறப்பட்டவற்றை எடுத்துக்கொள்ளாத அல்லது உரையாடலுக்குட்படுத்தாத இடத்தில் எவ்வாறு நான் மேலும் என் கருத்துக்களைப் பதிவது ?

2. நீங்கள் தவிக்கியில் தொடங்கிய, \\ குறைந்தபட்சம் "அச்சில் உள்ள" என்பது தலைப்பில் வரவேண்டிய \\ கட்டுரையில் ( http://ta.wikipedia.org/s/o8x ) இதுவரையில் எந்தவொரு இணைய தமிழ்நூற்பட்டியலும் இல்லை. அதாவது அங்கும் உங்கள் இப்பதிவின் தலைப்பிற்கேற்ப, உங்கள் உயரிய சிந்தனைக்கேற்ப ஒரு இணைய நூற்பட்டியலும் இல்லையென்பது - வேண்டுமென்றே, இணைய நூற்பட்டியலாக்கம் என்பதைக் குறிக்கோளாகக்கொண்ட விருபா தவிர்க்கப்பட்டிருப்பது உங்களுடைய மறைநிரலினைக் வெளிப்படுத்துகிறது. நன்றிகள்.

3. நீங்கள் பகிர்ந்துகொண்ட கூகுள் ஆவணத்தினை வேறெந்த நபர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள், அவர்களுக்கும் நூற்பட்டியலுக்குமான கடந்தகால செயற்பாட்டுறவுநிலை என்னால் அறிய முடியவில்லை. பகிரப்பட்ட பிரகஸ்பதிகள் யாரென்றறியாமல் - அவர்களுக்கும் இத்தலைப்பிற்கும் இடையான அவசியம் தெரியாமலும் நான் எதைச் சொல்லிவிடமுடியும் ?

\\ concept ஐப் புரிந்துகொண்டு எப்ப பதில் தரப்போறீர்கள் ? \\

எனவே, உங்கள் பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கமைய உங்களுடைய நிலைப்பாட்டினைப் பதியுங்கள் என்று மீண்டும் ஒரு முறை கேட்பதைத்தவிர என்னிடம் வேறு தெரிவுகள் இல்லை.

நற்கீரன் said...

உங்களதோ, அல்லது பிறரதோ திட்டங்களையோ, வலைத்தளங்களையோ சிறப்பாக சேர்க்கவோ விலக்கவோ இல்லை. பொதுவான ஒர் கட்டுரையாகவே வரைந்தேன். எந்தவித அளவீடுகளை முன்வைத்தும் இத் தளத்தை முதலிலும் பிற தளங்களை பின்னுக்கும் இடவில்லை.

விக்கி கட்டுரையை யாரும் தொகுக்கலாம் என்பது நீங்கள் அறியாதது அல்ல. அதனை என்றும் பூரணமாகக் கருத முடியாது. நான் எதோ மறைநிரலிலை வைத்து உங்கள் வலைத்தளத்தை அந்தக் குறிப்பிட்ட கட்டுரையில் தவிர்த்து இருப்பதாக நீங்கள் கருதினால் என்வென்று சொல்வது. அதில் வேறு எந்த இணைய நூற் பட்டியலாவது சேர்க்கப்பட்டுள்ளதா? வெளி இணைப்புக்களில் முதல் இணைப்பாக உங்கள் கட்டுரை இருப்பதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். தற்போது இரண்டாவது இணைப்பாகவும் உங்கள் கட்டுரையே உள்ளது. இவ்வாறு அமைவதை நான் என்ன மறைநிரலை வைத்து செய்தாக நீங்கள் கருதுகிறீர்கள்.

விருபா திட்டம் தொடர்பாக எனக்கு பல தயக்கங்கள் உள்ளன.
1. அது திறந்த நிலையில் இல்லை. அதன் தரவுகள் பதிப்புரிமைக்கு உட்பட்டது. மென்பொருள் கட்டற்றது இல்லை. திறந்த நிலையில் இல்லாததால் கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் மென்பொருளை தொடர்ச்சியாக விருத்தி செய்வதற்கான வாய்ப்பு இல்லை.
2. அது தனிநபரால் நடத்தப்படுவது, கட்டுப்படுத்தப்படுவது. ஆகவே அதனை ஒரு குமுகத் திட்டமாக வளர்த்தெடுக்க வாய்ப்புக் குறைவு.
3. அதில் தகவல்கள் சேர்க்க கட்டணம் அறவிடப்படுகிறது.
4. அதில் உள்ள தகவல்கள் பகிரப்படுவதற்கான வழி செய்து தரப்படவில்லை.

ஆனால் இந்த முன்மொழிவு குறிப்பான திட்டங்களைப் பற்றிய குறை நிறைகளின் விரிவான ஆய்வு இல்லை. இந்த விடயங்கள் தொடர்பாக நான் உங்களுடன் மின்னஞ்சல் மூலம் உரையாடி உள்ளேன். நீங்கள் மேற்சுட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக மாற்றங்கள் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்று நம்பினேன். மேலும், நூற்பட்டியல் தொடர்பான உங்கள் அனுபவத்தை மதிக்கிறேன். அதனாலேயே இவ்வளவு விரிவாகப் பதில் தரவேண்டியதாயிற்று. நிற்க.

விருபா - Viruba said...

விருபா திட்டம் தொடர்பாக எனக்கு பல தயக்கங்கள் உள்ளன.

நற்கீரன்,

உங்களின் பல தயக்கங்கள் - திறந்த நிலை, கும்பலாக்கல் ஆகிய இரண்டு நிலைகளை மட்டும் கொண்டு வரையப்பட்டதாக உள்ளது.

1. அது திறந்த நிலையில் இல்லை. அதன் தரவுகள் பதிப்புரிமைக்கு உட்பட்டது. மென்பொருள் கட்டற்றது இல்லை. திறந்த நிலையில் இல்லாததால் கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் மென்பொருளை தொடர்ச்சியாக விருத்தி செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

எல்லா திட்டங்களும், மென்பொருட்களும் திறந்தநிலையில் இருக்கவேண்டும் என்பதாக எந்த நியதியும் இல்லை. பயனர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு பயன் தருகிறதா இல்லையா என்பதே முக்கியம். மென்பொருள் - திட்டத்தின் மையக்கொள்கையை காட்சிப்படுத்துதலில் இடர்கள் உள்ளதா இல்லையா?, இல்லை இன்னமும் மேம்படுத்தவேண்டியுள்ளதா ? போன்ற விடயங்களை ஒரு வாசகராக, இறுதிப் பயனராக எமக்குத் தெரிவிக்கும் போது வேண்டிய மாற்றங்களைச் செய்வதற்கு எம்மால் முடியும். விருபா வளர் தமிழ் செயலி, பொதுவெளியில் 2005 இல் தொடங்கும் போதுள்ள நிலையில் இருந்து பின்னர் பல தடவைகள் தனிநபர் உழைப்பிலேயே மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை இத்திட்டத்தில் தரவுகளைச் சேர்ப்பதற்கே / சரி பார்ப்பதற்கே உதவ எவரும் உளப்பூர்வமாக முன்வரவில்லை.

இதே திறந்த நிலை தொடர்பில் நீங்கள் பொறுப்பாளராக இருக்கும் தவிக்கிப்பீடியா திறந்த நிலையில்தானே உள்ளதென்பதாக கருதுகிறீர்கள், அதில் ஆங்கில விக்கிப்பீடியாவோ அல்லது வேறெந்த விக்கிப்பீடியாவிலோ இல்லாத ஏதாவதொரு நிரலாக்கம் உங்கள் தவிக்கிப்பீடியாவில் உள்ளதா ? இல்லையெனில், அதாவது தவிக்கிப்பீடியாவின் திறந்த நிலை என்பது ஆங்கில மூல விக்கிப்பீடியாவின் கூரையின் உச்சத்திற்குள் என்று கொள்ளலாமல்லவா. இங்கு நான் பேசிக்கொண்டிருப்பது நிரலாக்கம், விக்கிப்பீடியாவின் செயலியான மீடியாவிக்கியின் நுட்பக்கூறுகள் பற்றியே. தவிக்கிப்பீடியாவில் உள்ள பங்களிப்பாளர்களில் எத்தனைபேர் நுட்ப நிரலாக்கத் தொண்டர்கள் ? எத்தனைபேர் தட்டச்சர்கள் என்ற தரவுகள் அடங்கிய இணைப்பொன்று தருவீர்களெனில், உங்கள் திறந்த நிலையை என்னால் மேலும் அலச முடியும்.

// தமிழில், தமிழனால் உருவாக்கப்பட்ட இடங்களில் எண்ணக்கரு அடிப்படையில் சேர்ந்து இயங்க யாருமே வரமாட்டார்கள். ஆங்கில ஜிம்மிக்குத் தமிழ்த் தட்டச்சர்கள் பலர் தொண்டராக இருப்பதைப் பெருமையாகக் கருதுவார்கள், ஆனால் தமிழ்க் குப்பனுக்குத் தொண்டனாகமாட்டார்கள். // என்று நான் சந்தித்த அனுபவங்களினூடாக, முன்னர் கூறியதையே மீண்டும் கூறவேண்டியுள்ளது.

இதனை நான் உருவாக்கிய www.infitt.net என்ற தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகளை ஆவணப்படுத்திய இணையத்திலும் சந்தித்துள்ளேன். 9 இணைய மாநாடுகளும் தனித்தனிக் கருப்பொருளில் நடைபெற்ற காரணத்தினால் - பொதுநிலையில் அத்தனை மாநாட்டுக் கட்டுரைகளையும் குறிச்சொற்கள் மூலம் இணைப்பதற்கான வசதியினைப் பயன்படுத்தி எவருமே அவ்விணையத்தினை விருத்தி செய்யவில்லை.

இந்நிலையில் மென்பொருளை கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் விருத்தி செய்வதற்கான தேவை உங்களுக்கு எங்கனம் எழுந்தது ?
நீங்கள் விருபா தளத்தின் வாசகராக இதுவரையில் ஏதாவது இடர்களைச் சந்தித்துள்ளீர்களா ?
ஏதாவது முன்னேற்றகரமான மாற்றங்களைச் செய்யும்படி கேட்டுள்ளீர்களா ?
நீங்கள் ஏதாவது கருத்துக்கள் தெரிவித்து, அவை கவனத்தில் கொள்ளப்படவில்லையா ?

இக்கேள்விகளுக்கான உங்கள் பதிலினூடாக நான் தொடர விரும்புகிறேன்.


2. அது தனிநபரால் நடத்தப்படுவது, கட்டுப்படுத்தப்படுவது. ஆகவே அதனை ஒரு குமுகத் திட்டமாக வளர்த்தெடுக்க வாய்ப்புக் குறைவு.

தவிக்கிப்பீடியராக நீங்கள், உங்களைப்போல குமுகத் திட்டங்களைச் செய்வோரே அல்லது ஈடுபடுவோர்கள் மட்டுமே தொண்டு செய்கிறார்கள் என்பதான ஒரு நிலையில் இருக்கிறீர்கள். குமுகத் திட்டமாக இருந்தால் அதிகமாக வளர்த்தெடுக்கமுடியும் என்ற மனநிலையும் உங்களிடம் உண்டு. தவிக்கிப்பீடியாவை அதன் மூலச்செயலியான ஆங்கில மீடியா விக்கியைத்தாண்டி எந்தளவு வளர்த்துள்ளீர்கள் ?

விருபா - Viruba said...

3. அதில் தகவல்கள் சேர்க்க கட்டணம் அறவிடப்படுகிறது.

நாம் அறவிடும் கட்டணம் மிக மிகக் குறைந்த ஒன்று, தவிரவும் நாம் வெளியான அத்தனை புத்தகத்திற்கும் கட்டணம் கேட்கவில்லை. 2006 இல் நாம் வெளியிட்ட விருபா அறிமுகப் பிரசுரத்தில் 2001.12.31 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட புத்தகங்களை இலவசமாகவே இணைப்பதற்குக் தயாராகவிருந்தோம் என்பதை http://noolaham.net/project/17/1632/1632.pdf இல் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பார்க்கவும். இதையும் மீறி பல தமிழுணர்வு வியாபாரம் செய்யும் பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் புத்தகங்களை இலவசமாகவே இணைக்கவைத்துள்ளன.

இணையத்தில் எத்தனையோ கட்டணச் சேவைகள் உள்ளனவே. தவிரவும் நாம் நன்கொடைகள் கோரவில்லையே. விக்கிப்பீடியா பெறும் நன்கொடைகள் http://wikimediafoundation.org/wiki/Financial_reports பக்கத்தில் உள்ளன. நீங்கள் நன்கொடை பெற்றுச் செயற்படுகிறீர்கள் / நாம் நேரடியாக தொடர்புடையவர்களிடம் கட்டணம் வாங்குகிறோம். அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. இணையத்தில் இதுவரை கட்டணம் பெற்றுச்சேவை தரும் தளங்களை நீங்கள் பார்க்கவில்லையா ?

4. அதில் உள்ள தகவல்கள் பகிரப்படுவதற்கான வழி செய்து தரப்படவில்லை.
புரியவில்லை, விருபாவில் உள்ள தகவல்கள் பகிரப்படும் நிலையில்தான் உள்ளன. ஒருவேளை நீங்கள் ஒட்டுமொத்தமாக விருபாவின் தரவுகளை opml, xml நிலையில் பகிரப்படவேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அவ்வாறு தமிழில் பகிரப்படும் நிலையில் தமிழ் தளங்கள் உள்ளனவா ? பகிரப்படவேண்டிய தேவை எங்குள்ளது ? பட்டியலும், ஏன் அவ்வாறு ஒட்டுமொத்தமாகப் பகிரப்படவேண்டும் என்பதற்குரிய காரணங்களையும் தாருங்கள் - ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையெனில் - நான் தருகிறேன்.

நற்கீரன்,

இதுவரையில் உங்கள் இப்பதிவில் உள்ள சந்தேகங்கள் பலவற்றை நான் கேட்டுள்ளேன், நீங்கள் ஒரு சிலவற்றிற்குத்தான் பதில் தந்துள்ளீர்கள், மற்றவற்றிற்கும் உங்கள் நேர்மையான பதில் எதிர்பார்க்கிறேன்.

விருபா - Viruba said...

பத்தாண்டுகளைக் கடந்த தமிழ் விக்கிப்பீடியாவிலும் முறையான தமிழ் அகரவரிசைப்படுத்தல் இல்லை. திறந்த நிலையில் இருந்தால் கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் மென்பொருளை தொடர்ச்சியாக விருத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதெனப் பெருமை பேசும் தவிக்கியர்கள் இன்னமும் தமிழ் அகரவரிசைப்படுத்தலில் உள்ள குறைகளை நீக்கமுடியாதுள்ளார்கள். "ஜெயமோகன்", "ஸ்டாலின்" போன்ற சொற்களை செயமோகன், இசுடாலின் என்று எழுதும் தவிக்கியர்கள், அகரவரிசைப்படுத்தலில் "ஜ" வரிசையை தமிழ் "ஞ" வரிசைக்கு முன்னதாகவே வைத்துள்ளமை அவர்களது செயலியின் நிரலாக்கம் தமிழ்ச் சூழலிற்குத் தொலைவில் உள்ளதையும், தவிக்கியர்களின் நுட்பியல் இயலாமையை வௌிச்சம் போட்டுக் காட்டும் விடயமாகும்.

Diwakaran Sudalaimani said...

Amazing..😇
..Keep Up the Good work..😇😇

Post a Comment