Tuesday, October 27, 2009

தமிழில் விக்கிப்பீடியா

உலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.

இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக சொல்வதென்றால் தமிழில் 19,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. விரைவில் 20,000 எண்ணிக்கையை தொடும்.

நாம் இணையத்தில் தேடும் பொழுது விக்கிப்பீடியாவில் அந்த தலைப்பு இருந்தால் தேடலில் நமக்கு அது சிக்கும். ஆங்கிலத்தில் ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளதால் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. தமிழில் தேடினால் குறைவாகவே கிடைக்கின்றன. காரணம் தமிழில், இணையத்தில் உள்ள உள்ளடக்கங்கள் மிகக்குறைவு. செய்தித்தாள்கள் தமிழிலில் இணையத்தில் கிடைப்பதாலும் வலைப்பதிவுகள் காரணமாகவும் தேடல்களில் சில சிக்குகின்றன.

தமிழின் இந்த நிலை போகவேண்டுமானால் இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் அதிகம் கிடைக்க வேண்டும். இது கைகூட துறை சார்ந்த தமிழ் இணையம் வளரவேண்டும். இது கைகூடுமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா அந்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


தமிழ் விக்கிப்பீடியா என்பது தமிழில் உள்ள இணைய கலைக்களஞ்சியம் என்பது தெரியும். இதன் சிறப்பு எல்லோரும் பங்களிக்கலாம் என்பதே. இதில் உள்ள கட்டுரைகள் காப்புரிமை விலக்கம் பெற்றவை, எனவே எல்லோரும் இதை தடையின்றி பயன்படுத்தலாம். பலதரப்பட்ட கட்டுரைகளை, பல துறைசார் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் போது அவை தமிழில் தேடுபவருக்கு கிடைக்கும்.

அவினாசிலிங்க செட்டியார் தலைமையிலான தமிழ் வளர்ச்சிக் கழகம் பெரியசாமி தூரன் அவர்களை ஆசிரியராக கொண்டு 10 தொகுதிகள் உடைய கலைக்களஞ்சியமத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு தொகுதியும் 750 பக்கங்களை கொண்டிருந்தன. முதல் தொகுதி 1954ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் பல்கலைக்கழகம் அறிவியற் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டு உள்ளது. இந்த அரிய முயற்சி பெரும்பாலோருக்கு சரியாக சென்றடையவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இணைய இணைப்பு உடைய எல்லோராலும் தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியும், பங்களிக்க முடியும். இணைய தேடல்களில் தேடல் தொடர்பான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் தேடல் முடிவுகளில் இது முதலில் சிக்கும். தமிழ் கூறும் நல்லுலககுக்கு நம்மாலான தொண்டாக தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை எழுதுவோம்.

4 comments:

பழமைபேசி said...

//விக்கிப்பீடியாவில் இருந்தால் தேடல் முடிவுகளில் இது முதலில் சிக்கும்//

கட்டுரையாளராக, இடுகையாளராக அகப்பட்ட உங்களுக்கு எமது வாழ்த்துகள்!

Jerry Eshananda said...

வாழ்த்துகள்,தொடர்கிறோம்.

குறும்பன் said...

நன்றி பழமைபேசி. நீங்கள் தமிழ் விக்கியில் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என இத்தருணத்தில் வேண்டுகிறேன். உடுமலைபேட்டை, திருமூர்த்தி அணை, அருவி, கொடிவேரி அணை பற்றி உங்களை எழுத சொல்லலாம் என்று பல மாதங்களுக்கு முன் நினைத்தேன். வழக்கம் போல கேட்க தாமதமாயிடுச்சு இஃகிஃகி. உடுமலைபேட்டை, திருமூர்த்தி அணை & அருவி, கொடிவேரி அணையின் படங்கள் இருந்தால் விக்கியில் பதிவேற்றவும். என் தேடலுக்கு அவை சிக்கவில்லை. உங்களிடம் இருக்க வாய்ப்பு இருப்பதால் இந்த வேண்டுகோள்.

குறும்பன் said...

ஈசானந்தா வாழ்த்துக்கும், தொடர்வதற்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தாங்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment