[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியா - கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து (திருத்திய மீள்பதிவு)
கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு கலைக்களஞ்சியத்தைத் திறந்த நிலையில் உருவாக்க முடியுமா?
திறந்த கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும்?
அது முற்றிலும் இலவசமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்த முடியும். எவரும் அதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரைகளை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந்தால் அத்தகவல்களை எவரும் அக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த விடயங்கள் தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை அந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதற்கும் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்துத் தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கேயுள்ள கட்டுரைகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமடித்து விற்க முடியும். எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாகச் செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிடவும் முடியும்.
இப்படி ஒரு கலைக்களஞ்சியம் சாத்தியமா?
சரி, இப்படி ஒரு கலைக்களஞ்சியம் கட்டாயம் இருக்கவேண்டுமா?
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஏராளமான அறிஞர்களைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைப் பயன்படுத்தப்போகும் பயனர்களான நீங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அதனை அணுக அனுமதிக்கப்படுவீர்கள்.
ஒன்று நீங்கள் அதனை விலைகொடுத்தே வாங்க வேண்டும். அங்கே உள்ள கட்டுரைகளையோ அதன் பகுதிகளையோ எக்காரணம் கொண்டும் நீங்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியாது. காப்புரிமைச் சட்டங்களின் கீழ் நீங்கள் சிறைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட, தவறுதலாக செய்யப்பட்ட தகவற் தவறுகளை நீங்கள் உடனடியாக திருத்திவிட முடியாது. கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் தகவல்கள் ஒரு சிலருக்கு சார்பாக இருக்கிறது என்று உரிமையோடு வாதிட்டு கட்டுரைகளை திருத்திவிட முடியாது. உங்களுக்கு தெரிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை அதில் நீங்கள் உடனடியாக சுதந்திரமாகச் சேர்க்கமுடியாது.
எப்போதும் உங்கள் கைகள் கட்டப்பட்டே இருக்கும். காப்புரிமை எனும் சங்கிலி எப்போதும் உங்களைப் பிணைத்தே இருக்கும்.
இந்த கட்டுத்தளைகளை அறுத்து, புலமைச்சொத்துக்களைத் திறந்த நிலையில், கட்டற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும். பகிர்வதற்கான சுதந்திரம் வேண்டும், கூட்டுழைப்புக்கான வழிதிறக்கவேண்டும் என்று கோரும் ஒரு புதிய போக்கு இணைய வெளியில், மின்வெளியில் ஏற்பட்டிருக்கிறது.
"தனியுரிமை" என்பது அநீதி, பொதுமக்கள் உரிமையாக புலமைச்சொத்துக்கள் இருப்பதே மனித குலம் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று இந்த "கட்டறுப்பு" இயக்கம் உரத்துச்சொல்கிறது.
இணைய உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, மென்பொருட்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கலைப்பணிகள் அனைத்துமே "திறந்த" நிலையில் பொதுமக்கள் உரிமையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் மனித குலத்தின் சொத்துக்களாக, வியாபகத்துடன் இருக்கவேண்டுமே அல்லாமல், தனிமனிதர்களின் குறுகிய உரிமை கோரல்களுக்குள் அகப்பட்டுப்போய்விடக்கூடாது என்று இந்த எதிர்ப்பியக்கத்தை ஆதரிக்கும் அனைவரும் விரும்புகின்றனர்.
இந்தப் புதிய புரட்சிகரமான சிந்தனைப்போக்கு மென்பொருள் தொழிற்றுறையிலேயே முதலில் தோன்றியது. மக்கள் உடைமையாக, கூட்டுழைப்பாக மென்பொருட்கள் திறந்த நிலையில் உருவாக்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும் என்று ஆரம்பித்து இன்று எல்லா வகையான புலமைச்சொத்துக்களினதும் திறந்த நிலையை வலியுறுத்துகிறது. புலமைச்சொத்துக்களை குறுக்கி முடக்கும் "காப்புரிமை" ஒப்பந்தங்களைக் காட்டமாக எதிர்க்கிறது. காப்புரிமைக்கு மாற்றாக புலமைச்சொத்துக்களை உருவாக்கும் மனிதர்களது உழைப்பினையும் உரிமையையும் காத்து, அதனை பயன்படுத்தும் மனித குலத்தின் சுதந்திரத்தையும் காக்கும் "அளிப்புரிமை" யினை முன்வைக்கின்றது. சட்டரீதியான அளிப்புரிமை ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
புலமைச்சொத்துக்களின் திறந்த நிலையை, கூட்டுழைப்பினை, கட்டற்ற பகிர்தலை முன்னிறுத்தும் இயக்கம், அந்த இயக்கத்தின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட "திறந்த" புலமைச்சொத்து உருவாக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சாத்தியப்படுமா? அல்லது இதெல்லாம் வெறும் "அழகிய கனவுகள்" தானா?
இந்த நெற்றி சுருக்கும் சந்தேகங்களை எல்லாம் தமது வெற்றிகளால் சுட்டெரித்துக்கொண்டு அதி வேகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது "திறந்த மூல" இயக்கம். பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தையெல்லாம் அடித்து உடைத்தவாறு எல்லாத்துறைகளிலும் திறந்த முயற்சிகள் வெற்றிபெற்றுக்கொண்டு வருகின்றன.
இந்த மகத்தான வெற்றியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திறந்த கலைக்களஞ்சியமான "விக்கிபீடியா".
ஆங்கிலதில் மட்டுமல்லாது, உலகமொழிகளில் பெரும்பாலானவற்றில் இந்த கூட்டுழைப்பில் உருவாகும் கலைக்களஞ்சியம் வெற்றிகரமாக வளர்ந்துவருகிறது.
ஏறத்தாழ 19,600 கட்டுரைகளோடு தமிழ் விக்கிபீடியாவும் இணையத்தில் வளர்கிறது.
ஆங்கில விக்கிபீடியாவோ, இன்று உலகின் ஆகக்கூடிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமாக, நுணுக்கமாக செவ்வை பார்க்கப்பட்டு பார்த்துப்பார்த்து வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியங்களுக்குச் சமமான நிலையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
எவரும் வந்து எதையும் தொகுத்து, அழித்து மாற்றக்கூடிய நிலையில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமற்ற கலைக்களஞ்சியம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது?
இதற்கு ஒரு சாதாரண விக்கிபீடியா பயனரின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் பதில்களை பெற்றுக்கொள்ளலாம்.
எனது ஊரைப்பற்றிய சில தகவல்கள் தேவைப்படுவதால் நான் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை இணைய வெளியில் ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகுகிறேன். "திருக்கோணமலை" என்று தேடி திருக்கோணமலை தொடர்பான கட்டுரையை வந்தடைகிறேன். ஏற்கனவே பலர் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் அந்த கட்டுரையிலிருந்து எனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுகிறேன்.
அப்போதுதான் என் கவனத்தில் படுகிறது அகிலேசபிள்ளை, தி. த கனகசுந்தரம்பிள்ளை, தி. த. சரவணமுத்துப்பிள்ளை போன்றவர்கள் திருக்கோணமலையில் தான் பிறந்துவளர்ந்தவர்கள் என்ற தகவல் "திருக்கோணமலை இலக்கிய வரலாறு" என்ற தலைப்பின் கீழ் விடுபட்டுப்போயிருக்கிறது.
உடனடியாக அந்தக் கட்டுரையின் மேற்பகுதியிலிருக்கும் "தொகு" என்ற விசையினை அழுத்தி கட்டுரையில் தேவையான வரிகளைத் தட்டெழுதிச் சேர்த்துவிடுகிறேன். கீழே உள்ள "சேமிக்கவும்" என்ற விசையினை அழுத்தியவுடன் நான் புதிதாக சேர்த்த வரிகளுடன் கட்டுரை தற்போது காட்சியளிக்கிறது. இனி இந்தகட்டுரையைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தென்படும்.
இந்தத் தொகுப்பினைச் செய்வதற்கு எனக்கு எந்த பயனர் கணக்கும் தேவை இல்லை. எந்த விதமான சிறப்பு அனுமதியும் தேவையில்லை. எவர் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம்.
மறுநாள் நான் செய்த மாற்றங்கள் கட்டுரையில் இருக்கிறதா என்று பார்க்க ஆசையாயிருக்கவே திருக்கோணமலை கட்டுரையை மறுபடி பார்வையிடுகிறேன். அங்கே நான் செய்த மாற்றங்கள் அப்படியே இருக்கிறது. அத்தோடு தி. த. கனகசுந்தரம்பிள்ளைக்கு து.க என்று எழுத்துப்பிழை விட்டிருந்தேன். அந்த எழுதுப்பிழை சரியாக்கப்பட்டு து, தி ஆக மாற்றப்பட்டிருந்தது . இந்த திருத்தத்தை யார் சேர்த்தார்கள்? என்னைப்போல இந்த கட்டுரையைப் பார்வையிட வந்த மற்றவர்கள் தான்.
இந்த விடயம் எனக்கு நம்பிக்கையூட்டவே பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறேன். எனது பெயரில் புதிய பயனர் கணக்கை உருவாக்கியாகிவிட்டது. இனி எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி புகுபதிகை செய்துகொண்ட பின் நான் செய்யும் மாற்றங்கள் யாவும் என்பெயரில் மற்ற பயனர்களுக்கு அறிவிக்கப்படும்.
அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்குச் சென்று அண்மையில் யார்யார் என்ன கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறார்கள், திருத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று கவனித்தால், மேமன்கவி, டொமினிக் ஜீவா தொடர்பான கட்டுரை ஒன்றை அண்மையில் உருவாக்கியிருப்பது தெரிந்தது. அந்த தலைப்பைச் சொடுக்கி கட்டுரைக்கு போனால் அங்கே டொமினிக் ஜீவா தொடர்பான சிறிய கட்டுரை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே மல்லிகை என்ற சொல் சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதை சொடுக்கினால், மல்லிகை என்ற தலைப்பில் கட்டுரை எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த தலைப்பில் கட்டுரை உருவாக்க விரும்பினால் தட்டெழுதிச் சேமிக்கவும் என்பது போன்ற அறிவித்தல் வந்தது. சரி மல்லிகைக்கு கட்டுரை எல்லாம் எழுதப்போகிறோமே, மல்லிகை பற்றி இரண்டு வரி போட்டால் என்ன என்ற நினைவில் எனக்கு தெரிந்த அளவில் மல்லிகை பற்றிய இரண்டு வரிகளை அந்த தலைப்பில் சேர்த்துச் சேமித்துவிட்டு வருகிறேன்.
அடுத்த நாள் நான் புகுபதிகை செய்யும்போது எனது பேச்சுப்பக்கத்தில் மேமன் கவி எனக்கு நன்றி சொல்லி இருப்பதோடு, மற்றப் பயனர்கள் பலரும் மல்லிகை பற்றிய பெரிய கட்டுரை ஒன்றினையே வளர்த்தெடுத்துவிட்டிருக்கின்றனர். பல புதிய நட்புக்களும் இந்த கட்டுரை ஊடாகக் கிடைக்கிறது.
இவ்வாறு தான் விக்கிபீடியா இயங்குகிறது.
சாதாராண மனிதர்கள் பலர் கூடி ஒரு பெரும் தகவற் களஞ்சியத்தையே உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பான அறிவு இருக்கும். கூட்டுழைப்பாக, ஒரு பெரும் சமுதாயமாக இந்த தனி மனிதர்கள் இணையும்போது இந்த கூட்டு மதிநுட்பம் அதி சக்திவாய்ந்ததாக மாறுகிறது.
கூட்டுழைப்பும், சமுதாய செயற்பாடுகளும் தான் இந்த மனித இனத்தை முன்னோக்கி நகர்த்தும். குறுகிய இலாப நோக்கம் கொண்ட வட்டங்கள் அல்ல.
சரி திறந்ததோ என்னவோ, எவரோ ஒருவரின் கலைக்களஞ்சிய வலைத்தளத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்? இப்போது திறந்து வைத்துவிட்டு பின்னொரு நாளில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட மாட்டார்களா?
இது நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பின்வரும் காரணிகளால் அற்றுப்போகிறது.
ஒன்று, விக்கிபீடியா எந்த தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. "விக்கிமீடியா" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக்கமைவாக) நன்கொடைகளுக்கான வரிவிலக்குச் சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ உள்ளடக்கப்பட முடியாது.
அனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் காலத்துக்குகாலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இரண்டு, விக்கிபீடியா இயங்கும் மென்பொருளான மீடியாவிக்கி எனப்படும் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியின் (CMS) அனைத்து நிரல்களும் திறந்த மூலம். விக்கிபீடியாவைப்போலவே இந்த மென்பொருளின் நிரலாக்கமும் நிகழ்கிறது. மென்பொருள் திறந்திருப்பதால் மறைமுகமான எந்த செயற்பாட்டையும் இந்த மென்பொருள் செய்ய முடியாது.
மூன்று, விக்கிபீடியாவின் உள்ளடக்கம் Creative Commons (Atribution Share alike) உரிமம் மூலம் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது காப்புரிமை ஒப்பந்தங்கள் செய்யும் சுயநல கட்டுப்பாடுகளை களைந்து, புலமைச்சொத்து மீதான பொதுமக்களின் உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தமாகும். அதாவது அளிப்புரிமை.
சுருக்கமாக கூறுவதானால், திறந்த நிலை உள்ளடக்கங்களை எவரும் எதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், அந்த உள்ளடக்கங்களை மூடி வைக்க முடியாது. பகிரும் போது நீங்கள் எவருக்கெல்லாம் இதனைக்கொடுக்கிறீர்களோ அவர்களுக்கும் நீங்கள் இதே சுதந்திரத்தினை வழங்கியாகவேண்டும்.
இவ்வாறானதொரு சட்டப்பாதுகாப்பு இந்த உள்ளடக்கங்களுக்கு உண்டு. அதனால் பொதுமக்கள் உருவாக்கும் இந்த உள்ளடக்கங்கள் யாவும் பொதுமக்களுக்கு மட்டுமே சொந்தம். யாரும் உரிமைகோர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விக்கிமீடியா நிர்வாகக்குழுவினர் இந்தச் சட்ட விடயங்களைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்காரணத்தினாலேதான் இந்த விக்கிபீடியாவினை நாம் ஒவ்வொருவரும் எமதாக உணரமுடிகிறது. எவருக்கோ வேலைசெய்கிறோம் என்ற எண்ணம் தோன்றுவதற்கு மாறாக, எல்லோரும் எனக்காக வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதனால் பொறுப்புணர்வும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கிறது
சரி, திறந்த நிலையில் இருக்கும் இந்த கட்டுரைகளில் தவறான விடயங்களை யாரும் புகுத்திவிட்டால்? கட்டுரைகளை விசமத்தனமாக அழித்துவிட்டால்? வன்செயல்புரிந்தால்?
இந்த சவால், தத்துவரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது.
சுற்றியிருக்கும் எல்லோருக்கும் சொந்தமான ஒரு திறந்த வீட்டில் களவுகள் நிகழமுடியாதல்லவா? இந்தத் தத்துவமே இங்கும் செயற்படுகிறது. எல்லா விக்கிபீடியா பயனர்களும் தமது சொந்த கலைக்களஞ்சியமான விக்கிபிடீயாவில் அக்கறையாய் இருக்கிறார்கள். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எவரும் இந்த பக்கத்தை பார்வை இடலாம். ஒவ்வொரு மாற்றங்களும் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான பயனர்களால் அவதானிக்கப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் நான் உருவாக்கிய கட்டுரைகளில் தீச்செயல்கள் நிகழ நான் அனுமதிக்கமாட்டேன். எந்த சிறு செயல் விக்கிபீடியாவில் நிகழ்ந்தாலும் அது அடுத்த கணமே அனைத்து பயனர்களின் பார்வைக்கும் வந்துவிடும். இது தான் திறந்த நிலையின் பாதுகாப்பு. உலகில் தீயவர்கள் மிகச்சிலரே. அவர்கள் மிக இலகுவாக மாட்டுப்பட்டுவிடுவார்கள். இவ்வாறான விக்கிபீடியா குற்றங்கள் புரியப்பட்டால் அவை உடனடியாக களையப்பட்டுவிடும்.
தொழிநுட்பரீதியாக இந்தச் சவால் பல வழிகளால் எதிர்கொள்ளப்படுகிறது. அழிக்கப்பட்ட கட்டுரை ஒன்றினை மீட்டெடுக்கும் வசதி. ஒவ்வொரு மாற்றங்களும் எந்த IP முகவரியிலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து குறித்த முகவரியை விக்கிபீடியா தொகுத்தலிலிருந்து தடை செய்யும் வசதி. கட்டுரைகளைத் தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி போன்றன உண்டு.
அத்தோடு ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவிற்கும் அதற்கென நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து அவரவர் இயலுகை, அக்கறை போன்றனவற்றின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இத்தகு பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர். விக்கிபீடியாவுக்கென்று ஒழுக்கக்கோவையும் உண்டு.
இந்த சமுதாய உழைப்பு மின்வெளியில் மட்டுமல்ல, மெய் உலக நடவடிக்கைகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி.
இந்தத் தத்துவ அடிப்படையில் விக்கிபீடியாவை ஒத்த பல சகோதர செயற்றிட்டங்களும் உள்ளன. திறந்த அகரமுதலியான விக்சனரி, திறந்த புத்தகங்கள் எழுதுவதற்கான விக்கிபுத்தகங்கள், திறந்த செய்திவழங்கலுக்கான விக்கிசெய்திகள் போன்ற அவற்றுள் சில
இந்தத் திறந்த கலைக்களஞ்சியத்தைத் தமிழர்கள் தங்கள் அறிவினைச் சேகரித்துவைக்கும் மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக கருதுவதில் என்ன தடை இருக்கமுடியும்?
தேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?
தமிழ் விக்கிபீடியா அதிவேகமாக வளர்கிறது. உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழர்களின் இணையமூலமான கூட்டுழைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தொட்டு வளர்கிறது. தன்னைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் இந்த கலைகளஞ்சியத்தில் ஆவணப்படுத்திக்கொள்ள இந்த இனம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்தம். ஒவ்வொருவரும் தமதாக உணரக்கூடிய உள்ளடக்கங்கள். எவரும் எந்த் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.
எல்லாத்துறையினரும் இந்த கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால்மட்டுமே பன்முகத்தன்மைகொண்ட சிறந்த அறிவுக்களஞ்சியமாக இது உருவாகும். நாம் சார்ந்த தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் விடுபட்டுப்போக அனுமதிக்கலாகாது. படங்களை, ஒலிவடிவங்களை, ஒளிப்படங்களைக் கூட அளிப்புரிமை அடிப்படையில் இங்கே சேமித்துவைக்கமுடியும்
ஒரு பெரும் விக்கிபீடியர் சமுதாயத்தை நாம் எங்கள் இடங்களில் உருவாக்கிக்கொள்வதன்மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். அருகிலிருக்கும் விக்கிபீடியா பற்றி தெரிந்த ஒருவரை அணுகி, அவரது உதவியோடு பயனர் கணக்கொன்றை ஆரம்பித்து தகவல்களைத் தொகுக்க ஆரம்பிக்கலாம். சிறு தேனீர் விருந்துகளுடன் விக்கிபீடியர்கள் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தொழிநுட்பரீதியாக இவற்றை செய்ய முடியாமலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவலாம்.
எம்மைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் பாதுகாப்பாக, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு இதுவே மிக ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வழி.
"From each according to her/his abilities, to each according to her/his needs" - Karl Marx
2 comments:
வீக்கிபீடியாவின் தேவையையும், ஐயங்களுக்கான பதில்களையும் எளிமையாக விளக்கி எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. நன்றி
வினவு
மிக எளிமையாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்ட பதிவு.
//தேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?//
யாழ் நூலக எரிப்பின் பின்னணியில் உங்கள் ஆதங்கம் புரிகிறது.
"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற கண்ணதாசன் வரிகள் பணச்சொத்தில் மட்டுமல்ல,புலமைச்சொத்திலும் என்பதனையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
Post a Comment