Tuesday, October 27, 2009

ஊடகங்களில் விக்கிப்பீடியாவின் பயன்பாடு

பல ஆயிரம் செலவழித்து வாங்கப்படும் கலைக் களஞ்சியங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பொது நூலகங்களில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தும் அளவிற்கு மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற காரணம் கூறினாலும் எளிதில் பயன்படுத்த யாரும் அனுமதிப்பதில்லை என்பதும் காரணம்.

அப்படி பயன்படுத்தினாலும் கலைக்களஞ்சியக் கட்டுரையைத் தேடி எடுப்பதற்குள் ஏற்படும் அயர்ச்சி ஒரு புறம், கட்டுரையின் அளவு, தரவுகள், படங்கள், மேற்கொண்டு தேடுவதற்கான ஆதாரத் தகவல்கள் இல்லாமை, ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே தகவலைப் பெறுதல் சாத்தியமின்மை போன்றவை மறு புறம். ஒரு அச்சு வடிவ கலைக் களஞ்சியத்தின் நன்மை அல்லாத கூறுகள் இவை. ஆனால் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, தகவல்களை, கட்டுரைகளை ஒரு சிறிய தேடுதல் மூலம் பெற முடிகிறது. மேலும், அந்தத் தகவல்கள் பெற்ற வழி, மேற்கொண்டு தரவுகள் தேடும் வழி போன்றவையும் எடுத்துக் கூறப்படுகிறது. கணினியுடன் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. பிறகு உலகம் நம் கையில் வந்து விடுகிறது.

இவ்வளவு நாட்களாக தகவல்களைத் தேடி நுலகங்களில் அலைந்தது போய் இன்று நூலகம், கலைக் களஞ்சியம் ஆகியவை நம் மடி மீது தவழ்கிறது. ஊடகங்களில் தகவல் தேடும் செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஒரு பத்திரிகையாளராக எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன்.

தமிழ் ஊடகங்களைப் பொருத்தவரை முதன்மை இதழில் (main issue) செய்திகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாளிதழ்கள். அன்றாடச் செய்திகளை முடிந்தவரை அன்றைக்கே அளித்துவிட வேண்டும் என்று துரிதமாகச் செயல்பட வேண்டியுள்ளது. செய்திகள் பெறும் வழி செய்தியாளர்கள் மூலம் நடைபெறுகிறது. எனவே விக்கியின் பயன்பாடு இதில் குறைவு எனலாம்.

ஒரு கட்டுரை எழுதும் போது விக்கியின் பயன்பாடு மிக அதிகம் ஆகும். காட்டாக, சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மையில் காரீயம் கலந்திருப்பதால் அது குழந்தைகளுக்கு ஆபத்து அளிக்கும் என்று அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதை உற்பத்தி செய்தவர் (மேட்டல் நிறுவனம்) அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன் தனது 5000 ஊழியர்களுக்கும் ஊதியம், இதர நிலுவைகளை அளித்துவிட்டார் என்றொரு செய்தி. இதைக் கருத்திற் கொண்டு அந்நிறுவனம் யாது? அதன் உற்பத்தி என்ன? இரு நாடுகளிடையான பொருளியல் சண்டைக் காரணிகள் எவை என்ற தகவல்களை சேகரித்து நான் பணியாற்றும் தினமணி நாளேட்டில் 2007-ஆம் ஆண்டு "பொம்மலாட்டம்" என்ற தலைப்பில் தலையங்கப் பக்க கட்டுரை வரைந்தேன். அதற்கான தரவுகளை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே பெற்றேன்.

இலவச இணைப்புகளில், சான்றாக, தீபாவளி, பொங்கல் சிறப்பிதழ் ஆகியவற்றில் சமூக, பண்பாடு, பண்டிகை குறித்த கட்டுரைகளுக்குத் தேவைப்படும் தகவல்கள் விக்கியில் இருந்து பெறுகிறேன். அதிலும் சிற்சிலவே. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பில் தேடும் போது கட்டுரைக்குத் தேவையான கருத்துச் செறிவுகளுடன் தகவல்கள் கிடைப்பது கடினம். அதே நேரம் ஒரு நாளிதழுக்குத் தேவைப்படாத தகவல்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே அந்தச் சூழல் பொருத்து விக்கியைப் பயன்படுத்துகிறோம். (மற்றவர்கள் எப்படி என்று தெரியவில்லை.)

கூகிள் தேடுபொறியில் ஏராளமான தகவல்கள் கிடைத்தாலும் அதை தேடி எடுப்பது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவது போல. ஆனால் விக்கியில் இருந்தால் தொடுப்புகள் மூலமாக எளிதில் சென்றடைய முடிகிறது. இது என்னளவிலான அனுபவம்.

தமிழ் விக்கியைப் பொருத்தவரை அதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பயன்படுத்தப்படும் விகிதமும் குறைவே. சொல்லப்போனால் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே சொல்லலாம். கணினி அறிமுகமின்மை, பயன்பாட்டு வசதியின்மை போன்றவற்றையும் கூற வேண்டும்.

ஆங்கிலப் பத்திரிகை நண்பர்களிடம் கேட்டவரை அவர்கள் கூறியது:- விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறோம். செய்திகளைப் பொருத்தவரை பயன்பாடு குறைவே. கட்டுரைக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அதில் உள்ள தகவல்கள், தரவுகள் எந்த அளவு அதிகாரப் பூர்வமான ஆதாரம் கொண்டவை என்பதை உறுதி செய்ய முடிவதில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் அதிலேயே சில கட்டுரைகளில் ஆதாரம் தேவை என வெளியிடப்படுகிறது. ஆனால் விக்கியைப் பயன்படுத்தி பழைய தரவுகள் பெறுவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சான்றாக, ஒரு நாட்டின் முதல் அதிபர், பிரதமர், குடியரசுத் தலைவர், முதல் நோபல் பரிசு பெற்றவர், விளையாட்டு தொடர்பான போட்டிகள் குறித்த தரவுகள் போன்றவை ஒரு கட்டுரையின் இடையே தேவைப்பட்டால் விக்கியை கேட்பதாகக் கூறுகிறார்கள்.

வார இதழ்களில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அதைப் படிக்கும் போதே புரிகிறது. ஏனெனில் வார இதழ் உள்ளடக்கங்களைப் பொருத்தவரை விக்கியின் தேவை குறைவுதான். ஆனால் கலைக்கதிர் போன்ற அறிவியல் இதழ்கள், சுற்றுச்சூழல் இதழ்கள் ஆகியவற்றில் அதிக பயனளிக்கக் கூடும்.

4 comments:

மணியன் said...

ரகுநாதன்,ஊடகங்களில் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டினை அழகாக எடுத்துக்காட்டி யுள்ளீர்கள். நீங்கள் கூறுவது போல தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கையும் ஆழமும் அதிகரிக்க வேண்டும். நாளைய தலைமுறையை கருத்தில் கொண்டு 6000 பதிவுகள் வைத்திருக்கும் தமிழ் குமுகாயம் கூட்டாக பங்காற்றினால் நாம் அடைய வேண்டிய இலக்கினை எளிதாக எட்டலாம்.

RAGUNATHAN said...

நன்றி மணியன், நீங்கள் கூறுவது போல பதிவுலக குமுகாயத்தினர் தங்களது மொத்த செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியை விக்கியில் பயன்படுத்தினால் சிறந்த பங்களிப்புகளை வழங்கமுடியும். அனைத்து பதிவர்களும் நன்கு எழுதும் ஆற்றல் உள்ளவர்களே. அவர்கள் எல்லாம் எழுதினால் விக்கியின் வலு கூடும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஊடகத் துறையில் உள்ள உங்களிடம் இருந்து இதனை நேரடியாக அறிவதில் நிறைவு. நல்ல கட்டுரை.

பொது அறிவு, துறை சார் ஊடகங்களுக்கு விக்கி கூடுதலாகப் பயன்படும் என்று நினைக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் நாம் தேடிப் படிக்கும் தகவல்களே தமிழிலும் வரும் போது தமிழ் விக்கியின் பயன்பாடு கூடும்.

RAGUNATHAN said...

நன்றி ரவி. நீங்கள் சொல்வது சரிதான்.

Post a Comment