Tuesday, July 17, 2007

ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?

அஃது - aHdhu

அஃறிணை - aHRiNai

எஃகு - eHhu

போன்ற சொற்களை ஒலித்துப் பார்த்தால் ஃ என்று குறிக்கப்பெறும் ஆய்த எழுத்தின் ஒலிப்பு, H என்னும் ஆங்கில ஒலிப்புக்கு நெருங்கி தொண்டைக்கு அருகில் இருந்து எழுவதைக் காணலாம். இதுவே ஃ என்ற தமிழ் எழுத்தின் இயல்பொலி.

ஆனால், இந்த இயல்பொலிக்கு மாறாக

Felix - ஃபெலிக்ஸ்

Francis - ஃப்ரான்சிஸ்

Fan - ஃபேன்

என்று எழுதும்போது நம்மை அறியாமல் தமிழ் எழுத்து ஒன்றின் இயல்பொலியைச் சிதைத்து விடுகிறோம். H, Fம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய ஒலிகள் இல்லை. அதே போல் தமிழிலும் எந்த இரு எழுத்துக்களுக்கு இடையிலும் தெளிவான ஒலி வேறுபாடு உண்டு. காசா என்று எழுதி பாசா என்று உச்சரிப்பது எப்படிப் பிழையோ அதே போல், ஃப (iHpa) என்பதை Fa என்று உச்சரிப்பதும் பிழையாகும்.

எனினும், இந்த ஒலிச்சிதைவை உணராமல் எழுதும் வழக்கு வெகுமக்கள் ஊடகங்களிலும் அதைப் பின்பற்றி பெரும்பாலான தமிழர்களிடமும் காணப்படுகிறது.

இப்படி F என்ற ஒலிக்கு இணையாக ஃப் பயன்படுத்தும் வழக்கம் என்று, யாரால் தொடங்கப்பட்டது என்று தெளிவில்லை. எனினும் இந்தப் பயன்பாட்டிற்கான காரணத்தை ஊகித்து அறிய முடியும். F என்ற ஒலிக்கு இணையான தமிழ் எழுத்து இல்லை; அதே வேளை, அந்த ஒலியைத் தமிழில் எழுதிக் காட்டும் அவசியமும் இருக்கிறது. இந்த அடிப்படையில் ஃ என்று எழுத்துக்கு அடுத்து பகரம் வந்தால் F என்று ஒலிப்பது என்ற புரிதல், பரவலான பயன்பாடு வந்திருக்கிறது. அதாவது, பகரத்துக்கு முன் ஃ வந்தால் அது அதன் இயல்பொலியில் இருந்து திரிந்து Fa என்னும் ஒலிப்பைச் சுட்டும் குறியீடாக மட்டுமே விளங்கும். ஆக, இங்கு ஃ ஒரு எழுத்தாக இல்லாமல் குறியீடாகப் பயன்படுகிறது.

F ஒலிக்கு குறியீட்டின் தேவையை உணர்ந்த முன்னோர்கள் புதிய குறியீடை அறிமுகப்படுத்தாமல் தவறுதலாக ஏற்கனவே உள்ள அதிகம் பயன்படாத தமிழ் எழுத்தைக் குறியீடாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு என்னால் ஊகிக்கக்கூடிய ஒரே எளிய காரணம்:

அச்சு இயந்திரங்கள் மூலம் தமிழ் அச்சடிக்கப்பட்ட காலங்களில் புதிதாக ஒரு குறியீட்டுக்கான விசையைச் செலவு செய்து உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ள எழுத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பிழையான குறியீட்டை இடாமலும் ஆய்தத்தின் ஒலிப்பைச் சிதைக்காமலும், ஃபெலிக்ஸ் என்று எழுதுவதற்குப் பதில் பெலிக்ஸ் என்று எழுதும் வழக்கமும் இருக்கிறது. எனினும் F என்று ஒலிக்கு இணையாக பகரத்தைப் பயன்படுத்தும்போது box-fox-pox, boot-foot போன்ற வேறுபாடுகளைக் காட்ட இயல்வதில்லை. விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களில் உலகெங்கும் உள்ள பல அன்னிய மொழிச் சொற்கள், பெயர்களில் இந்த b-p-f வேறுபாட்டைக் காட்ட வேண்டி இருக்கையில் எல்லா இடங்களிலும் Fக்கு இணையாகப் பகரத்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த போதாமைகள் இருக்கின்றன.

இந்த இடத்தில், Fக்கும் பகரத்துக்கும் உள்ள ஒலிப்பு நெருக்கத்தையும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் செல்வகுமார் கேள்விக்குள்ளாக்குகிறார். அதாவது Foot ball, France போன்ற சொற்களில் உள்ள F ஒலியை உச்சரிக்கும்போது கீழ் உதடு உள்ளே மடங்கி வ என்ற ஒலிப்புக்கு நெருங்கியே வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள v என்ற எழுத்துக் குறி ஜெர்மன், டச்சு போன்ற மொழிகளில் F என்று ஒலிக்கப்பெறுவதும் கவனிக்கத்தக்கது. டச்சு மொழியில் voet ball என்றே Footballஐ எழுதுகின்றனர். Fa- ஃப என்ற ஒலிப்பெயர்ப்புக்கு எந்த மொழியியில் அடிப்படையும் இல்லாதபோது தலைமுறைகளுக்கும் நிலைக்கக்கூடிய விக்கிபீடியா போன்ற அறிவு சார் கூட்டு முயற்சிகளில் மொழியியல் ரீதியில் கூடுதல் கவனமும் துல்லியமும் தரவும் தமிழ் ஒலிகளைச் சிதைக்காமல் இருப்பதன் பொருட்டும் பொருத்தமான குறியீடுகளை அறிமுகப்படுத்துவதின் தேவையை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆக, Fஐ ஒலிப்பதற்கு ஆய்தத்தைத் தவிர்த்த ஒரு குறியீட்டையும் அதை அடுத்துப் பகரத்துக்குப் பதில் வகரம் பயன்படுத்தலாம் என்றும் பேராசிரியர் செல்வகுமார் பரிந்துரைக்கிறார்.

எடுத்துக்காட்டுக்கு,

Fan - `வேன் (Fan)

France - `வ்ரான்ஸ் (France)

என்று எழுதப்படும். இங்கு ஆய்தத்துக்குப் பதில் ` என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அடைப்புக்குறிகளுக்குள் Fan என்றும் எழுதிக் காட்டப்படுவதால் உச்சரிப்பு குறித்த குழப்பங்களும் வரா.

F ஒலி வரும் அன்னியச் சொற்கள், பெயர்களுக்கு மேற்கண்ட முறையில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதிக் காட்டினால், அது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று அறிய விரும்புகிறோம். குறுகிய காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய வாசிப்புப் பழக்க மாற்றங்களுக்கு எதிராகத் தொலை நோக்கில் தமிழ் எழுத்தான ஆய்தத்தின் ஒலிப்பு சிதையாமல் பாதுகாக்க வேண்டிய நம் கடமையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதனால் குழப்பங்கள் வருமா, தொலை நோக்கில் இதன் சாதக பாதங்கள் என்ன, இந்த மாற்றத்தின் தேவை உணரப்படுகிறதா, இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வீர்களா என்பதை தமிழ் விக்கிபீடியா பயனர்கள் என்ற முறையில் உங்கள் அனைவரையும் நோக்கிக் கலந்தாலோசிக்க விரும்புகிறோம்.

இது தொடர்பாக பதிவின் வலப்பக்கப் பட்டையில் உள்ள கருத்துக் கணிப்பிலும் உங்கள் எண்ணத்தைத் தெரிவியுங்கள். உங்கள் வாக்குகள், மறுமொழிகள் இந்த விசயத்தில் வாசகர்களின் கருத்தை அறியவும் தெளிவாக யோசித்து ஒரு முடிவை எடுப்பதற்கும் விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கு உதவும்.

Sunday, July 15, 2007

விக்கிபீடியா அறிமுக நிகழ்படம்

தமிழ் விக்கிபீடியா குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 41.4 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.