Monday, February 23, 2009

பங்களிக்க இருக்கும் தடைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு இணைய வசதி, தமிழ் எழுத்துரு, தமிழ் தட்டச்சு, விக்கி நுட்பம், எழுத்துத் திறன், தமிழ் விக்கி நடை, கலைச்சொற்கள், விக்கி கொள்கைகள் ஆகியவை தடையாக அறியப்படுகின்றன.

இணைப்பு வசதி பற்றி நாம் செய்யக்கூடியது ஏதும் இல்லை. இணைய மையங்களில் தமிழை படிக்க எழுத வசதி செய்வது பற்றியும் நாம் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. இவை தொடர்பாக உத்தமம் போன்ற அமைப்புகளே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ் தட்டச்சு, விக்கி நுட்பம் பற்றி எமது பயிற்சிப் பட்டறைகளில் நாம் விரிவாக பயிற்சி வழங்குகிறோம். இணையம் ஊடாக எம்மை தொடர்பு கொண்டால், நாம் இயன்றவரை உதவுவோம்.

தமிழில் எழுத்து திறன் என்பது தொடர் பயிற்சியின் மூலம் மேம்படுத்தவல்ல ஒரு திறன். தமிழ் விக்கிப்பீடியா அதற்கு ஒரு நல்ல களம். நீங்கள் எழுதிய கட்டுரையை பிறம் மேம்படுத்தும் போது, மாற்றங்களை அவதானித்து கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் விக்கி நடை இதழிய எழுத்து நடையே. படர்க்கையில், நல்ல தமிழில் எழுத வேண்டும். வரையறை முதல் வசனத்தில் அல்லது பந்தியில் தருவது மட்டுமே சற்று மாறுபட்ட வேண்டுகோள். வரையறைத் தருவதால், எழுதுபவர் தாம் என்ன சொல்ல வருகிறோம் எனபது பற்றி துல்லியமாக சிந்திக்க தூண்டப்படுகிறார். அதை விட ஒன்றைப் பற்றிய வரையறை கலைக்களஞ்சிய கட்டுரை வாசகரின் ஒர் அடிப்படை எதிர்பாப்பு ஆகும்.

தமிழ் கலைச்சொற்கள் தெரியவில்லை என்பது ஒரு தடையாக முன்வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது நியாமான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் இன்று 103 000 கலைச்சொற்கள் விக்சனரியில் உள்ளன. மேலும் கலைச்சொற் பரிந்துரைகளை அனுபவம் பெற்ற பயனர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அப்படியும் தெரியவிட்டால் ஆங்கில கலைச்சொற்களைப் கட்டுரையில் பயன்படுத்தலாம். பின்னர் சரியான கலைச்சொற்களை கட்டுரையாளரோ, பிற பயனர்களோ இணைக்கலாம்.

விக்கி கொள்கைகள் சற்று இறுக்கமாக இருக்கின்றது என்பது சிலரின் கருத்து. எமது கொள்கைகள் அனேகமானவை ஆங்கில விக்கியில் இருந்து பெறப்பட்டவையே. இவற்றில் முக்கியமானவை: நடுநிலைமை (Neutral Point of View), மெய்யறிதன்மை (Variability), இணக்க முடிவு, காப்புரிமையை மீறாதிருத்தல் ஆகியவையாம். இவை தவிர இயன்றவரை எளிய தமிழில் எழுதுதல் ஒரு கொள்கை ஆகும். இவை தமிழ் விக்கிப்பீடியாவின் தொலைநோக்குக்கு இணங்க முன்வைக்கப்பட்ட கொள்கைகள். இக்கொள்கைகளில் மாற்றம் தேவை என்றால் உங்கள் பரிந்துரைகளைக் கேக்க நாம் எப்போதும் தயாராக உள்ளோம்.

இத்தடைகளை மீறி பல பத்துப் பயனர்கள் பங்களிக்கின்றனர். உங்களையும் பங்களிக்க அழைக்கிறோம்.

17 000 கட்டுரைகளைத் தாண்டி

தற்போது தமிழ் விக்கிப்பீடியா 17 000 கட்டுரைகள் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் நடுப்பகுதியில் 16 000 கட்டுரைகளை எட்டியது. ஏறத்தாழ 3 மாதங்களில் பெரிதும் சிறுதுமான 1000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சராசரியாக மாதம் 333 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 12-14 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எமது தொடக்க ஆண்டுகளில் இருந்து இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். எனினும் நாம் இன்னும் நெடுந் தூரம் செல்ல வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுரை ஆக்கத்தை 20 ஆக உயர்த்துவது எமது நோக்கு.

இந்த ஆண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்த பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுக்கிறோம். சனவரி 18 இல் சென்னையிலும், சனவரி 31 பெங்களூரிலும் இப் பட்டறைகளை நடந்தன. பட்டறைகளை தொடர்ந்து நடத்த திட்டமிள்ளோம். இதன் மூலம் மேலும் பல பயனர்களை தமிழ் விக்கிப்பீடியா பெறும் என்று எதிர்பாக்கிறோம்.

Friday, February 6, 2009

இணையத்தில் இந்திய மொழிகள்

உலகில் ஆறில் ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்கின்றார். இந்தியா ஒரு பல்லின பல்மொழி நாடு. 22 மொழிகள் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளாகவும், இந்தி தேசிய மொழியாகவும் உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக செயற்படுகிறது.

மரபு வழி ஊடகங்களில் இந்திய மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள், இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை பெரும்பான்மையாக இந்திய மொழிகளிலேயே உள்ளன. இது இன்றும் இந்திய மொழிகள் பெரும்பான்மை இந்திய மக்களின் அன்றாட தேவைகளுக்கு அவசியம் என்பதை உணர்த்துகிறது. ஆனால் இணையத்தில் இந்த நிலை தலைமாறாக உள்ளது. இணையத்தில் இந்திய மொழிகள் தேக்க நிலையிலேயே உள்ளன.

சுமார் 162 000 000 வலைத்தளங்கள் தற்போது உள்ளன. இவற்றுள் ஆக 1250 மட்டுமே மொத்தமாக இந்திய மொழிகளில் உள்ளன என்று Internet and Mobile Association of India வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 1 000 000 000 மக்களைக் கொண்ட இந்தியாவில் 60 000 000 இணையப் பயனர்கள் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இது ஒரு தேங்கிய நிலைப்பாடே. மிகவும் மெதுவான வளர்ச்சிக்கு இணையம் இன்னும் பிற மொழியில் பெரிதும் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இணையத்தில் உள்ள இந்திய மொழி உள்ளடக்கத்தில் 19 % வீதம் தமிழில் உள்ளது. இந்திய மொழிகளுக்கிடையே ஒப்பீட்டளவில் இது சிறந்த நிலைதான். ஆனால் முன்னேற நிறைய இடம் உள்ளது. இது பற்றி மேலும் அடுத்த பதிவில் கூறப்படும்.