Saturday, October 31, 2009

தமிழ்மணத்துக்கு நன்றி

2009ஆம் ஆண்டு முழுவதுமே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு பரப்பும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தின் மூலம் இன்னும் பல புதியவர்களைச் சென்றடைந்திருக்கிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் இது வரை திட்ட வலைப்பதிவுகள், கூட்டு வலைப்பதிவுகள் இடம்பெற்றுள்ளனவா தெரியாது. இந்த வாய்ப்பை முன்வந்து நல்கிய தமிழ்மணம் நிருவாகத்தினருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மணம் ஒரு திரட்டியாக மட்டுமல்லாது, பல்வேறு தமிழ், தமிழர் நலன் சார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 2005 ஆண்டு முதலே தமிழ் விக்கித் திட்டங்களுக்குத் தமிழ்மணத்தில் தொடுப்புகள் தந்துள்ளார்கள். இரா. செல்வராசு போன்ற தமிழ்மண உறுப்பினர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களாகவும் உள்ளனர். நா. கணேசன் வாய்ப்பு கிடைக்கும் களங்களில் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துகிறார். தமிழ்மணம் ஆதரவு அளிக்கும் இணையப் பட்டறைகளில் முனைவர். மு. இளங்கோவன் அவர்கள் தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். சென்னை விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைக்கு, தமிழ்மணம் முகப்பில் அறிவிப்பு இட்டு விளம்பரப்படுத்தி உதவினார்கள்.

இது போல் பல வகைகளிலும் தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்கு நல்கியுள்ள ஆதரவுக்கும் தொடரும் பங்களிப்புகளுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 29, 2009

[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்

இணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.

ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக் கிடைக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், மற்றவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் சிறு சிறு சுவாரசியங்களை ஏற்படுத்தல், பலரோடும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளல், எமது இரசனைகளைத் திறமைகளை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான இடமாகச் சமூக வலையமைப்புத்தளங்கள் காணப்படுகின்றமை இவை மீதான தீராத ஆர்வத்துக்கு காரணமாகின்றன.

வலைப்பதிவுகளில், Facebook இல் எல்லாம் இந்த "சமூக வலையமைப்பு அனுபவ"மும் எம்மை ஈர்த்து வைத்திருக்கும் முதன்மைக்காரணி.

மனமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பயன்மிக்க "சமூக வலையமைப்பு அனுபவம்" விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது.

இதனை அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு அது புரியும்.


விக்கிபீடியாவின் செயற்பாடுகளின் அடிப்படையாக இழையோடும் சனநாயகத்தன்மையும், மற்றவரை மதிக்கும் பண்பும் இந்த விக்கிபீடியாச் சமூக வலையமைப்புக்கு மனமகிழ்ச்சிதரும் தன்மையை வழங்குகிறது.

விக்கிபீடியாவின் பயனர் பேச்சுப்பக்கங்களிலும் ஒவ்வொரு கட்டுரைகளின் உரையாடற்பக்கங்களிலும் ஆலமரத்தடியிலும் விக்கிபீடியர் சமூகம் உரையாடுகிறது.

வெறும் உரையாடல் அல்ல, கூடித்தொழில் செய்துகொண்டு செய்யும் ஆரோக்கியமான பணியொன்றைச்சார்ந்த உரையாடல் அது.

முதற் பயனர் பெயரை உருவாக்கி முதற்கட்டுரை போட்ட உடனே பலகாரத்தட்டுடன் உங்களை வரவேற்பதில் அந்த "சமூக வலையமைப்பு அனுபவம்" தொடங்குகிறது.

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்துக்குரிய பரப்பை கட்டாயம் இனம் காட்டும். அந்தப்பரப்பில் ஆர்வமுள்ள மற்றய விக்கிபீடியர்கள் உங்களுடன் தொடர்பாடத்தொடங்குவர். படிப்படியாக அது ஏனைய விக்கிபீடியர்களுடனான தொடர்பாடலாய் விரிந்து புதிய நண்பர்களும் பயன்மிக்க தொடர்புகளுமாய் வியாபகம் கொள்ளும்.

உங்கள் பயனர் பக்கம் உங்கள் ரசனைப்படி நீங்களே வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஓர் அருமையான profile page. அதன் உரையாடற்பக்கம் நீங்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கத்தூண்டும் மற்றவர்கள் உங்களோடு உரையாடும் "Wall".


அண்மைய மாற்றங்கள் பக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் உங்களைத்தன்பக்கம் ஈர்த்துப் பார்க்கத்தூண்டும் சுவாரசியமான Social News Feed.

பங்களிக்கப் பங்களிக்கத்தான் நீங்கள் அந்த அனுபவத்தின் ஆழத்தை நோக்கிச் செல்வீர்கள்.

ஏனைய சமூக வலையமைப்புத் தளங்களில் உங்கள் சொந்த விபரங்களை, ரசனைகளை காட்சிப்படுத்தி உரையாடுவீர்கள்; விக்கிபீடியாவில் உங்களால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஒன்றை முன்னிறுத்தி உரையாடுவீர்கள்.

இந்த விக்கிப்பீடியா இணையச்சமூக வலையமைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் இணையத்தில் உறுதியான பணிகளைச் செய்யும் ஆர்வத்துடன் வந்தவர்களாக இருப்பர்.

நண்பர்களுடனான அரட்டை, பொழுதுபோக்கினூடு நீங்கள் நின்று நிலைக்கக்கூடிய சமூகப்பணி ஒன்றையும் செய்துகொண்டு செல்வதே இங்கே இருக்கும் முதன்மை வேறுபாடு.

உங்கள் கட்டுரை மற்றவர்களால் திருத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதையும், மற்றவர்களுடைய கட்டுரைகளை நீங்கள் திருத்தி, மேலதிக தகவல்களைத் தேடிச்சேர்த்து அக்கட்டுரை வளர்ந்து செல்வதையும் பார்ப்பது இனிய அனுபவம். இதனை Facebook Farming இற்கு ஒப்பிடலாம்.

இணையத்தில் மட்டுமல்லாது இந்தச்ச்மூக வலையமைப்பு தரையிலும் விரியும் இயல்புள்ளது.

விக்கிபீடியா அறிமுகக்கூட்டங்களை, நிகழ்ச்சிகளைச் சிறியளவில் நடத்துவது.
விக்கிப் பட்டறைகளைச் சேர்ந்து நடத்துவது,

விக்கிபீடியர் சந்திப்புக்களைச் சிறு தேனீர் விருந்துடன் ஒழுங்கமைப்பது,
மற்றவர்களுக்கு விக்கிக்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை விளக்குவது என்று தரையிலும் மகிழ்ச்சியுடன், மதிப்புடன் சமூகத்தின் வலையமைப்பில் இணையும் வாய்ப்பினையும் விக்கிபீடியா வழங்குகிறது.

பல்வேறு சமூக வலையமைப்புத்தளங்களிலும் மற்றவர்களோடு கலந்து இன்புறுபவர்கள், மாறுபட்ட, வேறான அனுபத்தைத்தரக்கூடிய விக்கிபீடியா எனும் சமூக வலையமைப்பிலும் இணைந்து பாருங்கள்.

[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியாவின் வரலாறு


நுபீடியா என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியில் பணிபுரிந்த ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் துவக்கியதுதான் விக்கிப்பீடியா. வேல்ஸ் எவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை தீர்மானிக்க,சாங்கர் அந்த இலக்கினை அடைய விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தை வழிவகுத்தார். "நான் ஒரு பத்தி எழுதி ஒரு கட்டுரையை துவக்க,வல்லுனர்கள் அதனை விரிவாக்கி எனது பத்தியையும் சரியாக்குவர்" எனக் கூறினார் லாரி சாங்கர். இவ்விதமாக சனவரி 15,2001இல் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா பிறந்தது.அதன் நடுநாயகமான நடுநிலைநோக்கு கொள்கை மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள் நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளை யொட்டி உருவாக்கப்பட்டன.

துவங்கிய ஆண்டின் இறுதியிலேயே 18 மொழிகளில் 20,000 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. 2002இன் இறுதியில் 26 மொழிகள்,2003இன் இறுதியில் 46 மொழிகள்,2007ஆம் ஆண்டின் இறுதியில் 161 மொழிகள் என வேகமாக பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வளர்ந்தது. இணையாக வளர்ந்த நுபீடியாவின் வழங்கிகள் 2003ஆம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு, முழுவதுமாக விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டது.ஆங்கில விக்கிப்பீடியாவில் செப்டம்பர் 9,2007 அன்று 2 மில்லியன் கட்டுரைகளைக் கொண்டு உலகின் கூடுதலான கட்டுரைகளைக் கொண்ட கலைக்களஞ்சியமாக யங் கலைக்களஞ்சியம் 1407 ஆண்டு முதல் 600 ஆண்டுகளாகக் கொண்டிருந்த சாதனையை முறியடித்தது.

விளம்பரங்களும் வணிக நோக்கங்களும் விக்கிப்பீடியாவின் இலக்குகளை கட்டுப்படுத்தாது இருக்கும் வகையில் வேல்ஸ் 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியா.ஓர்க் என்ற தளத்திற்கு நகர்த்தி விளம்பரங்கள் எதுவும் இன்றி இயங்க வழிவகுத்தார். விக்கிப்பீடியாவின் கொள்கை தடைவிதிக்கும் முதல் ஆய்வுகளை தடங்கல்களாக கருதிய சிலர் விக்கி இன்ஃபோ தளத்தை துவங்கினர். இதே போன்று அறிஞர் மீளாய்வு, முதல் ஆய்வுகள் அனுமதி மற்றும் பிற வணிக காரணங்களுக்காக சிடிசென்டியம், ஸ்காலர்பீடியா, கன்சர்வபீடியா, கூகிளின் நால் (Knol) போன்றவை உருவாகின.

3 மில்லியன் கட்டுரைகளை ஆகத்து 2009இல் எட்டிய ஆங்கில விக்கிபீடியா 2007 ஆண்டுக்குப் பிறகு சற்றே தனது வேகத்தை இழந்துள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் இருந்த நிலையில் ஓர் பெயர் தெரிவிக்காத நபரால் செப்டம்பர் 30,2003ஆம் ஆண்டு துவங்கியது. நவம்பர் 2003இல் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் மயூரநாதன் தளத்தின் இடைமுகத்தை 95% தமிழாக்கினார்.நவம்பர் 12,2003இல் ஐக்கிய இராச்சியத்தில் வசித்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் முதல் தமிழ் கட்டுரையை உள்ளிட்டார்.மயூரநாதன் தொடர்ந்து பணியாற்றி 2760 கட்டுரைகள் வரை உள்ளிட்டுள்ளார்.2004ஆம் ஆண்டு முதல் சற்றே சூடு பிடிக்க துவங்கி மெதுவாக வளரத் தொடங்கியது. தற்போது 19690 கட்டுரைகள் கொண்டுள்ளது.இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் விக்கி அடைந்துள்ள வளர்ச்சியை இணைத்துள்ள வரைபடத்தில் காணலாம்.தமிழ் விக்கி குறித்த முழுமையான ஆய்வினுக்கு சுந்தரின் இந்தக் கட்டுரையைக் காணவும்.

[தமிழ் விக்கிப்பீடியா] தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூட பங்களிப்பு குறைவே. நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.

அவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து, நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்?

(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)

எஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர்? அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட்பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன.

அவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை? மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.

அவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?

அப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு?

... என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.

தொலைநோக்கின்மை

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும் பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.

அதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. "நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது" என்று எண்ணச் செய்கிறது.

நான்

"நான்" என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.

மாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம்.

தொல்லைத் தலைவர்

ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.

திட்டத்தின் தனித்துவம், தேவை

இணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.

திட்டத்தின் அளிப்புரிமை


திட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.

திட்டத்தின் வணிகப் பெறுமதி

திறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

தமிழர் பண்பு

தமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்றும் சிலர் கருதுகின்றனர். பார்க்க - தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.

**

எல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா?

எல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.

சிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.

சரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா?

அப்படியும் சொல்ல இயலாது :) கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.

பொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு!!).

இன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.

சரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி?

ஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.

இயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.

திட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.

அவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.

**

இக்கட்டுரை மீள்பதிப்பாக இடப்படுகிறது. முதற்பதிப்புக்கான மறுமொழிகளைப் பார்க்க:

தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

Wednesday, October 28, 2009

[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியா - கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து (திருத்திய மீள்பதிவு)

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கலைக்களஞ்சியத்தைத் திறந்த நிலையில் உருவாக்க முடியுமா?

திறந்த கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும்?

அது முற்றிலும் இலவசமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்த முடியும். எவரும் அதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரைகளை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந்தால் அத்தகவல்களை எவரும் அக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த விடயங்கள் தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை அந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதற்கும் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்துத் தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கேயுள்ள கட்டுரைகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமடித்து விற்க முடியும். எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாகச் செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிடவும் முடியும்.


இப்படி ஒரு கலைக்களஞ்சியம் சாத்தியமா?

சரி, இப்படி ஒரு கலைக்களஞ்சியம் கட்டாயம் இருக்கவேண்டுமா?

ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஏராளமான அறிஞர்களைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைப் பயன்படுத்தப்போகும் பயனர்களான நீங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அதனை அணுக அனுமதிக்கப்படுவீர்கள்.

ஒன்று நீங்கள் அதனை விலைகொடுத்தே வாங்க வேண்டும். அங்கே உள்ள கட்டுரைகளையோ அதன் பகுதிகளையோ எக்காரணம் கொண்டும் நீங்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியாது. காப்புரிமைச் சட்டங்களின் கீழ் நீங்கள் சிறைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட, தவறுதலாக செய்யப்பட்ட தகவற் தவறுகளை நீங்கள் உடனடியாக திருத்திவிட முடியாது. கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் தகவல்கள் ஒரு சிலருக்கு சார்பாக இருக்கிறது என்று உரிமையோடு வாதிட்டு கட்டுரைகளை திருத்திவிட முடியாது. உங்களுக்கு தெரிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை அதில் நீங்கள் உடனடியாக சுதந்திரமாகச் சேர்க்கமுடியாது.

எப்போதும் உங்கள் கைகள் கட்டப்பட்டே இருக்கும். காப்புரிமை எனும் சங்கிலி எப்போதும் உங்களைப் பிணைத்தே இருக்கும்.

இந்த கட்டுத்தளைகளை அறுத்து, புலமைச்சொத்துக்களைத் திறந்த நிலையில், கட்டற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும். பகிர்வதற்கான சுதந்திரம் வேண்டும், கூட்டுழைப்புக்கான வழிதிறக்கவேண்டும் என்று கோரும் ஒரு புதிய போக்கு இணைய வெளியில், மின்வெளியில் ஏற்பட்டிருக்கிறது.

"தனியுரிமை" என்பது அநீதி, பொதுமக்கள் உரிமையாக புலமைச்சொத்துக்கள் இருப்பதே மனித குலம் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று இந்த "கட்டறுப்பு" இயக்கம் உரத்துச்சொல்கிறது.

இணைய உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, மென்பொருட்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கலைப்பணிகள் அனைத்துமே "திறந்த" நிலையில் பொதுமக்கள் உரிமையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் மனித குலத்தின் சொத்துக்களாக, வியாபகத்துடன் இருக்கவேண்டுமே அல்லாமல், தனிமனிதர்களின் குறுகிய உரிமை கோரல்களுக்குள் அகப்பட்டுப்போய்விடக்கூடாது என்று இந்த எதிர்ப்பியக்கத்தை ஆதரிக்கும் அனைவரும் விரும்புகின்றனர்.

இந்தப் புதிய புரட்சிகரமான சிந்தனைப்போக்கு மென்பொருள் தொழிற்றுறையிலேயே முதலில் தோன்றியது. மக்கள் உடைமையாக, கூட்டுழைப்பாக மென்பொருட்கள் திறந்த நிலையில் உருவாக்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும் என்று ஆரம்பித்து இன்று எல்லா வகையான புலமைச்சொத்துக்களினதும் திறந்த நிலையை வலியுறுத்துகிறது. புலமைச்சொத்துக்களை குறுக்கி முடக்கும் "காப்புரிமை" ஒப்பந்தங்களைக் காட்டமாக எதிர்க்கிறது. காப்புரிமைக்கு மாற்றாக புலமைச்சொத்துக்களை உருவாக்கும் மனிதர்களது உழைப்பினையும் உரிமையையும் காத்து, அதனை பயன்படுத்தும் மனித குலத்தின் சுதந்திரத்தையும் காக்கும் "அளிப்புரிமை" யினை முன்வைக்கின்றது. சட்டரீதியான அளிப்புரிமை ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

புலமைச்சொத்துக்களின் திறந்த நிலையை, கூட்டுழைப்பினை, கட்டற்ற பகிர்தலை முன்னிறுத்தும் இயக்கம், அந்த இயக்கத்தின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட "திறந்த" புலமைச்சொத்து உருவாக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சாத்தியப்படுமா? அல்லது இதெல்லாம் வெறும் "அழகிய கனவுகள்" தானா?

இந்த நெற்றி சுருக்கும் சந்தேகங்களை எல்லாம் தமது வெற்றிகளால் சுட்டெரித்துக்கொண்டு அதி வேகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது "திறந்த மூல" இயக்கம். பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தையெல்லாம் அடித்து உடைத்தவாறு எல்லாத்துறைகளிலும் திறந்த முயற்சிகள் வெற்றிபெற்றுக்கொண்டு வருகின்றன.

இந்த மகத்தான வெற்றியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திறந்த கலைக்களஞ்சியமான "விக்கிபீடியா".

ஆங்கிலதில் மட்டுமல்லாது, உலகமொழிகளில் பெரும்பாலானவற்றில் இந்த கூட்டுழைப்பில் உருவாகும் கலைக்களஞ்சியம் வெற்றிகரமாக வளர்ந்துவருகிறது.

ஏறத்தாழ 19,600 கட்டுரைகளோடு தமிழ் விக்கிபீடியாவும் இணையத்தில் வளர்கிறது.

ஆங்கில விக்கிபீடியாவோ, இன்று உலகின் ஆகக்கூடிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமாக, நுணுக்கமாக செவ்வை பார்க்கப்பட்டு பார்த்துப்பார்த்து வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியங்களுக்குச் சமமான நிலையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

எவரும் வந்து எதையும் தொகுத்து, அழித்து மாற்றக்கூடிய நிலையில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமற்ற கலைக்களஞ்சியம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது?

இதற்கு ஒரு சாதாரண விக்கிபீடியா பயனரின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் பதில்களை பெற்றுக்கொள்ளலாம்.

எனது ஊரைப்பற்றிய சில தகவல்கள் தேவைப்படுவதால் நான் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை இணைய வெளியில் ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகுகிறேன். "திருக்கோணமலை" என்று தேடி திருக்கோணமலை தொடர்பான கட்டுரையை வந்தடைகிறேன். ஏற்கனவே பலர் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் அந்த கட்டுரையிலிருந்து எனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுகிறேன்.

அப்போதுதான் என் கவனத்தில் படுகிறது அகிலேசபிள்ளை, தி. த கனகசுந்தரம்பிள்ளை, தி. த. சரவணமுத்துப்பிள்ளை போன்றவர்கள் திருக்கோணமலையில் தான் பிறந்துவளர்ந்தவர்கள் என்ற தகவல் "திருக்கோணமலை இலக்கிய வரலாறு" என்ற தலைப்பின் கீழ் விடுபட்டுப்போயிருக்கிறது.

உடனடியாக அந்தக் கட்டுரையின் மேற்பகுதியிலிருக்கும் "தொகு" என்ற விசையினை அழுத்தி கட்டுரையில் தேவையான வரிகளைத் தட்டெழுதிச் சேர்த்துவிடுகிறேன். கீழே உள்ள "சேமிக்கவும்" என்ற விசையினை அழுத்தியவுடன் நான் புதிதாக சேர்த்த வரிகளுடன் கட்டுரை தற்போது காட்சியளிக்கிறது. இனி இந்தகட்டுரையைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தென்படும்.

இந்தத் தொகுப்பினைச் செய்வதற்கு எனக்கு எந்த பயனர் கணக்கும் தேவை இல்லை. எந்த விதமான சிறப்பு அனுமதியும் தேவையில்லை. எவர் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம்.

மறுநாள் நான் செய்த மாற்றங்கள் கட்டுரையில் இருக்கிறதா என்று பார்க்க ஆசையாயிருக்கவே திருக்கோணமலை கட்டுரையை மறுபடி பார்வையிடுகிறேன். அங்கே நான் செய்த மாற்றங்கள் அப்படியே இருக்கிறது. அத்தோடு தி. த. கனகசுந்தரம்பிள்ளைக்கு து.க என்று எழுத்துப்பிழை விட்டிருந்தேன். அந்த எழுதுப்பிழை சரியாக்கப்பட்டு து, தி ஆக மாற்றப்பட்டிருந்தது . இந்த திருத்தத்தை யார் சேர்த்தார்கள்? என்னைப்போல இந்த கட்டுரையைப் பார்வையிட வந்த மற்றவர்கள் தான்.

இந்த விடயம் எனக்கு நம்பிக்கையூட்டவே பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறேன். எனது பெயரில் புதிய பயனர் கணக்கை உருவாக்கியாகிவிட்டது. இனி எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி புகுபதிகை செய்துகொண்ட பின் நான் செய்யும் மாற்றங்கள் யாவும் என்பெயரில் மற்ற பயனர்களுக்கு அறிவிக்கப்படும்.

அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்குச் சென்று அண்மையில் யார்யார் என்ன கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறார்கள், திருத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று கவனித்தால், மேமன்கவி, டொமினிக் ஜீவா தொடர்பான கட்டுரை ஒன்றை அண்மையில் உருவாக்கியிருப்பது தெரிந்தது. அந்த தலைப்பைச் சொடுக்கி கட்டுரைக்கு போனால் அங்கே டொமினிக் ஜீவா தொடர்பான சிறிய கட்டுரை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே மல்லிகை என்ற சொல் சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதை சொடுக்கினால், மல்லிகை என்ற தலைப்பில் கட்டுரை எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த தலைப்பில் கட்டுரை உருவாக்க விரும்பினால் தட்டெழுதிச் சேமிக்கவும் என்பது போன்ற அறிவித்தல் வந்தது. சரி மல்லிகைக்கு கட்டுரை எல்லாம் எழுதப்போகிறோமே, மல்லிகை பற்றி இரண்டு வரி போட்டால் என்ன என்ற நினைவில் எனக்கு தெரிந்த அளவில் மல்லிகை பற்றிய இரண்டு வரிகளை அந்த தலைப்பில் சேர்த்துச் சேமித்துவிட்டு வருகிறேன்.

அடுத்த நாள் நான் புகுபதிகை செய்யும்போது எனது பேச்சுப்பக்கத்தில் மேமன் கவி எனக்கு நன்றி சொல்லி இருப்பதோடு, மற்றப் பயனர்கள் பலரும் மல்லிகை பற்றிய பெரிய கட்டுரை ஒன்றினையே வளர்த்தெடுத்துவிட்டிருக்கின்றனர். பல புதிய நட்புக்களும் இந்த கட்டுரை ஊடாகக் கிடைக்கிறது.

இவ்வாறு தான் விக்கிபீடியா இயங்குகிறது.

சாதாராண மனிதர்கள் பலர் கூடி ஒரு பெரும் தகவற் களஞ்சியத்தையே உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பான அறிவு இருக்கும். கூட்டுழைப்பாக, ஒரு பெரும் சமுதாயமாக இந்த தனி மனிதர்கள் இணையும்போது இந்த கூட்டு மதிநுட்பம் அதி சக்திவாய்ந்ததாக மாறுகிறது.

கூட்டுழைப்பும், சமுதாய செயற்பாடுகளும் தான் இந்த மனித இனத்தை முன்னோக்கி நகர்த்தும். குறுகிய இலாப நோக்கம் கொண்ட வட்டங்கள் அல்ல.

சரி திறந்ததோ என்னவோ, எவரோ ஒருவரின் கலைக்களஞ்சிய வலைத்தளத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்? இப்போது திறந்து வைத்துவிட்டு பின்னொரு நாளில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட மாட்டார்களா?

இது நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பின்வரும் காரணிகளால் அற்றுப்போகிறது.

ஒன்று, விக்கிபீடியா எந்த தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. "விக்கிமீடியா" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக்கமைவாக) நன்கொடைகளுக்கான வரிவிலக்குச் சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ உள்ளடக்கப்பட முடியாது.

அனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் காலத்துக்குகாலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இரண்டு, விக்கிபீடியா இயங்கும் மென்பொருளான மீடியாவிக்கி எனப்படும் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியின் (CMS) அனைத்து நிரல்களும் திறந்த மூலம். விக்கிபீடியாவைப்போலவே இந்த மென்பொருளின் நிரலாக்கமும் நிகழ்கிறது. மென்பொருள் திறந்திருப்பதால் மறைமுகமான எந்த செயற்பாட்டையும் இந்த மென்பொருள் செய்ய முடியாது.

மூன்று, விக்கிபீடியாவின் உள்ளடக்கம் Creative Commons (Atribution Share alike) உரிமம் மூலம் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது காப்புரிமை ஒப்பந்தங்கள் செய்யும் சுயநல கட்டுப்பாடுகளை களைந்து, புலமைச்சொத்து மீதான பொதுமக்களின் உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தமாகும். அதாவது அளிப்புரிமை.

சுருக்கமாக கூறுவதானால், திறந்த நிலை உள்ளடக்கங்களை எவரும் எதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், அந்த உள்ளடக்கங்களை மூடி வைக்க முடியாது. பகிரும் போது நீங்கள் எவருக்கெல்லாம் இதனைக்கொடுக்கிறீர்களோ அவர்களுக்கும் நீங்கள் இதே சுதந்திரத்தினை வழங்கியாகவேண்டும்.

இவ்வாறானதொரு சட்டப்பாதுகாப்பு இந்த உள்ளடக்கங்களுக்கு உண்டு. அதனால் பொதுமக்கள் உருவாக்கும் இந்த உள்ளடக்கங்கள் யாவும் பொதுமக்களுக்கு மட்டுமே சொந்தம். யாரும் உரிமைகோர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விக்கிமீடியா நிர்வாகக்குழுவினர் இந்தச் சட்ட விடயங்களைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன்காரணத்தினாலேதான் இந்த விக்கிபீடியாவினை நாம் ஒவ்வொருவரும் எமதாக உணரமுடிகிறது. எவருக்கோ வேலைசெய்கிறோம் என்ற எண்ணம் தோன்றுவதற்கு மாறாக, எல்லோரும் எனக்காக வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதனால் பொறுப்புணர்வும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கிறது


சரி, திறந்த நிலையில் இருக்கும் இந்த கட்டுரைகளில் தவறான விடயங்களை யாரும் புகுத்திவிட்டால்? கட்டுரைகளை விசமத்தனமாக அழித்துவிட்டால்? வன்செயல்புரிந்தால்?

இந்த சவால், தத்துவரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது.

சுற்றியிருக்கும் எல்லோருக்கும் சொந்தமான ஒரு திறந்த வீட்டில் களவுகள் நிகழமுடியாதல்லவா? இந்தத் தத்துவமே இங்கும் செயற்படுகிறது. எல்லா விக்கிபீடியா பயனர்களும் தமது சொந்த கலைக்களஞ்சியமான விக்கிபிடீயாவில் அக்கறையாய் இருக்கிறார்கள். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எவரும் இந்த பக்கத்தை பார்வை இடலாம். ஒவ்வொரு மாற்றங்களும் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான பயனர்களால் அவதானிக்கப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் நான் உருவாக்கிய கட்டுரைகளில் தீச்செயல்கள் நிகழ நான் அனுமதிக்கமாட்டேன். எந்த சிறு செயல் விக்கிபீடியாவில் நிகழ்ந்தாலும் அது அடுத்த கணமே அனைத்து பயனர்களின் பார்வைக்கும் வந்துவிடும். இது தான் திறந்த நிலையின் பாதுகாப்பு. உலகில் தீயவர்கள் மிகச்சிலரே. அவர்கள் மிக இலகுவாக மாட்டுப்பட்டுவிடுவார்கள். இவ்வாறான விக்கிபீடியா குற்றங்கள் புரியப்பட்டால் அவை உடனடியாக களையப்பட்டுவிடும்.

தொழிநுட்பரீதியாக இந்தச் சவால் பல வழிகளால் எதிர்கொள்ளப்படுகிறது. அழிக்கப்பட்ட கட்டுரை ஒன்றினை மீட்டெடுக்கும் வசதி. ஒவ்வொரு மாற்றங்களும் எந்த IP முகவரியிலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து குறித்த முகவரியை விக்கிபீடியா தொகுத்தலிலிருந்து தடை செய்யும் வசதி. கட்டுரைகளைத் தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி போன்றன உண்டு.
அத்தோடு ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவிற்கும் அதற்கென நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து அவரவர் இயலுகை, அக்கறை போன்றனவற்றின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இத்தகு பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர். விக்கிபீடியாவுக்கென்று ஒழுக்கக்கோவையும் உண்டு.

இந்த சமுதாய உழைப்பு மின்வெளியில் மட்டுமல்ல, மெய் உலக நடவடிக்கைகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி.

இந்தத் தத்துவ அடிப்படையில் விக்கிபீடியாவை ஒத்த பல சகோதர செயற்றிட்டங்களும் உள்ளன. திறந்த அகரமுதலியான விக்சனரி, திறந்த புத்தகங்கள் எழுதுவதற்கான விக்கிபுத்தகங்கள், திறந்த செய்திவழங்கலுக்கான விக்கிசெய்திகள் போன்ற அவற்றுள் சில

இந்தத் திறந்த கலைக்களஞ்சியத்தைத் தமிழர்கள் தங்கள் அறிவினைச் சேகரித்துவைக்கும் மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக கருதுவதில் என்ன தடை இருக்கமுடியும்?

தேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?

தமிழ் விக்கிபீடியா அதிவேகமாக வளர்கிறது. உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழர்களின் இணையமூலமான கூட்டுழைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தொட்டு வளர்கிறது. தன்னைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் இந்த கலைகளஞ்சியத்தில் ஆவணப்படுத்திக்கொள்ள இந்த இனம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்தம். ஒவ்வொருவரும் தமதாக உணரக்கூடிய உள்ளடக்கங்கள். எவரும் எந்த் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.

எல்லாத்துறையினரும் இந்த கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால்மட்டுமே பன்முகத்தன்மைகொண்ட சிறந்த அறிவுக்களஞ்சியமாக இது உருவாகும். நாம் சார்ந்த தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் விடுபட்டுப்போக அனுமதிக்கலாகாது. படங்களை, ஒலிவடிவங்களை, ஒளிப்படங்களைக் கூட அளிப்புரிமை அடிப்படையில் இங்கே சேமித்துவைக்கமுடியும்

ஒரு பெரும் விக்கிபீடியர் சமுதாயத்தை நாம் எங்கள் இடங்களில் உருவாக்கிக்கொள்வதன்மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். அருகிலிருக்கும் விக்கிபீடியா பற்றி தெரிந்த ஒருவரை அணுகி, அவரது உதவியோடு பயனர் கணக்கொன்றை ஆரம்பித்து தகவல்களைத் தொகுக்க ஆரம்பிக்கலாம். சிறு தேனீர் விருந்துகளுடன் விக்கிபீடியர்கள் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தொழிநுட்பரீதியாக இவற்றை செய்ய முடியாமலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவலாம்.

எம்மைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் பாதுகாப்பாக, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு இதுவே மிக ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வழி."From each according to her/his abilities, to each according to her/his needs" - Karl Marx

தமிழ்த் தாத்தா, தமிழ் விக்கி, தமிழ் பதிவர்

பல்வேறு தாக்குதல்களுக்கும், அழிப்பு வேலைகளுக்கும் இடையே தமிழ் தழைத்தோங்கி 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்று சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

இந்த நூற்றாண்டில் உலகெங்கும் பரவி வேரோடி வாழும் தமிழ்ச் சமூகம் தங்கள் தாய்மொழிக்குத் தன்னளவிலான தொண்டினைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. கணினியின் வரவுக்குப் பிறகு எல்லாம் ஆங்கில மயமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அதிலும் தங்களது மொழியின் வளத்தைக் கொண்டு செல்ல ஏராளமான தனி நபர்கள் தங்கள் நேரம், பொருள், உழைப்பு எனச் செலவிட்டு இன்று தமிழை இணையத்தில் ஏற்றி உலகெங்கும் விரவிக் கிடக்குமாறு செய்துவிட்டனர்.

மற்ற மொழிகளுக்கு அழிவு ஏற்படும் நேரத்தில் மட்டுமே தமிழுக்கும் அவ்வாறு நிகழ வாய்ப்புண்டு. இல்லையேல் இனி தமிழை அதன் வளத்தை அழிப்பது என்பது இயலாத செயலாகிவிடும். அந்த அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால இலக்கியச் செல்வங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள், தகவல்கள் போதுமானவையா என்று கேட்டால் யானைப் பசிக்கு சோளப் பொரி என்றுதான் கூற வேண்டும்.

மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்றவற்றில் இலக்கியச் செல்வங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை எவராலும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள தேர்ந்த கட்டுரைகள் தமிழிலும் கிடைக்க வேண்டுமானால் அதை நாம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அல்லது அதே போன்ற கட்டுரைகளை தமிழில் எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அது ஒருவரின் வலைத் தளத்திலோ, வலைப்பதிவிலோ மட்டும்தான் வைக்கப்படும். ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் ஒரு நூலகம் போல யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றிருந்தால் அதன் வீச்சு எவ்வாறிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு பொது அமைப்புதான் விக்கிப் பீடியா.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இன்று 30 லட்சம் கட்டுரைகள் உள்ளன. சில மொழிகளில் லட்சத்துக்கும் மேலான கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. உள்ளடக்கத்தில் தமிழில்தான் சிறந்த கட்டுரைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற மொழியினருடன் போட்டியிடுவதற்கு அல்ல. ஆனால், நாம் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன என்பதை உணர்த்துவதற்கு இது தேவையான ஒன்றுதான்.

விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், திருத்தலாம், தொகுக்கலாம். இதில் எழுதினால் நம் பெயர் வருமா என்பதே பெரும்பாலானோர் கேள்வி. பெயர் வராது. ஆனால் தொகுத்தல் வரலாற்றில் நாம் செய்யும் ஓரெழுத்துத் திருத்தம் கூட நம் பயனர் பெயரில் (user login) பதிவாகிவிடும். இது மீண்டும் அழிக்கப்பட முடியாதது. எனவே நம் முத்திரை அதிலிருக்கும்.

என்ன பயன் என்ற அடுத்த கேள்வி. சற்றே பின்னோக்கி எண்ணிப் பாருங்கள். எத்தனை முயற்சி செய்து, எவ்வளவு கடினமாக உழைத்து தனியொருவர் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ஓலைச் சுவடிகளை கேட்டுப் பெற்றார். எத்தனை பேர் அதை கொடுக்க மறுத்து போகிப் பண்டிகையில் தீயிலிட்டுக் கொளுத்தினர். அதையும் மீறி கிடைத்தவையே தமிழில் படித்து முடிக்க முடியாத அளவிற்கு குவிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் பிரதிபலன் பார்த்தா அவர் செயல்பட்டார். அவரை தமிழ்கூறும் நல்லுலகு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று அழைக்கிறது. இன்னும் அழைக்கும். இங்கு அவர் பின்புலம் பற்றி விவாதிக்காமல் அவர்தம் தமிழ்த் தொண்டு பற்றி மட்டும் சிந்திப்போம்.

எண்ணிப் பார்த்தால் அவருக்கு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டோ, மந்திரிப் பதவியோ, சொத்துகளோ இத் தமிழ்த் தொண்டால் கிடைத்துவிடவில்லை. ஆனால் அவரை இன்றும் நினைவு கூர்கிறோம்.

அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து நாம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் எளிதில் கிடைக்கும் கலைச் செல்வங்களை தமிழில் மொழி பெயர்த்தோ, அல்லது தமிழிலேயே கிடைக்கும் செல்வங்களை பொது இடமான விக்கியில் சேர்ப்பதன் மூலம் தமிழுக்கு நாமும் தொண்டாற்றியவர்கள் ஆவோம். வெறும் தமிழ் தமிழ் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயன் இல்லை.

தமிழ் விக்கிப்பீடியாவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சான்றாக, புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப் பீடியாவில் தகவல் பெற்று பாடக் குறிப்புகள் எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மேலும் அதிகமான மாணவர்கள், உயர் வகுப்பு, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் குவிந்துள்ளனவா என்றால், இப்போதைக்கு இல்லை. அதற்கான வளர்ச்சிப் பாதையில் விக்கிப்பீடியா சென்று கொண்டிருக்கிறது எனலாம்.

ஒரு சிறுகட்டுரையைக் கூட நம்மால் எழுத முடியும். நம் ஊர், உறவு முறைகள், சடங்குகள், பண்பாடு, மரம் , செடி, கொடி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப எழுதலாம். இது ஒரு இணையக் கலைக்களஞ்சியம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் எதைப் பற்றியும் எழுத முடியும்.

இன்றைக்கு 6 ஆயிரம் தமிழ் பதிவர்கள் உள்ளனர். இவர்களில் அன்றாடம் பதிவு எழுதுவோர் 10 சதம் என்று எடுத்துக் கொண்டாலும் 600 பேர் இருக்கிறார்கள். இதில் நேரமும், வாய்ப்பும், வசதியும் கொண்டவர்கள் 300 பேர் என்று கொண்டால், அவர்கள் நாளொன்றுக்கு ஒரு கட்டுரை எழுதினால் கூட போதும். இதற்கு அரை மணி நேரமே செலவாகும்.

தங்களுக்குப் பிடித்த எத்துறை என்றாலும் எழுதலாம். எத்தடையும் இல்லை. மேலும் தகவல் பெற தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவை அணுகலாம். விக்கிப்பீடியா ஆலமரத்தடியை அணுகலாம். ஆக, ஒரு நாளுக்கு 300 கட்டுரை எனில் ஒரு மாதத்துக்கு 9 ஆயிரம் கட்டுரை. ஓராண்டுக்கு 72 ஆயிரம் கட்டுரை. ஏதோ காமெடி போலத் தோன்றும். வெகு சிலரின் பங்களிப்பு மூலமே இது வரை 20 ஆயிரம் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தும் ஒரு இளைய தலைமுறையும் புதுக்கோட்டை அருகே அடையாளம் காணப்பட்டுவிட்டது. எனவே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பொருந்தும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார்.

எட்டுத் திக்கும் சென்றுவிட்டீர்கள்.... கலைச் செல்வங்கள் யாவையும் எப்போது கொணர்ந்து சேர்ப்பீர்கள்?

விக்கிமேனியா 2009


உலக விக்கிப்பீடியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி, விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளையும் வருங்காலத் திட்டங்களையும் அலசுகின்றனர். இதனை விக்கிமேனியா மாநாடு என்கின்றனர்.

2009 விக்கிமேனியா மாநாடு, அருச்சென்டினா நாட்டில் ஆகத்து 26-28, 2009 நாட்களின் நடைபெற்றது.

தமிழ் விக்கிப்பீடியா சார்பாக, தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் சுந்தர் கலந்து கொண்டு, தமிழ் விக்கிப்பீடியா - ஓர் ஆய்வு என்ற கட்டுரையை வாசித்தார்.

காண்க: சுந்தர் விக்கிமேனியாவில் கட்டுரை வாசிக்கும் நிகழ்படம்

விக்கிப்பீடியா அமைப்பு, வளர்ந்து வரும் நாட்டு மொழி விக்கிப்பீடியாக்கள், குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் வளர்ச்சி குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம், இம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி விக்கித் திட்டங்களின் வளர்ச்சி குறித்து சரியான புரிதலை முன் வைக்க முடிந்தது. இம்மாநாட்டுக்கு வந்திருந்த பிற மொழி விக்கிப்பீடியர்கள், விக்கி நுட்பியலாளர்களுடனான தொடர்புகள் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவும்.

Tuesday, October 27, 2009

பதிவர்கள் தமிழ்விக்கிப்பீடியாவுக்கு எப்படிப் பங்களிக்கலாம்?

தமிழில் வலைபதியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாளுக்குப் பத்து நிமிடங்கள் தமிழ் விக்கிக்குப் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கியில் பெருமளவு முன்னேறத்தை ஏற்படுத்தலாம். அத்தகைய சில யோசனைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.


நாளுக்கு ஏதேனும் ஒரு கட்டுரையைப் படித்து அவற்றில் எழுத்துப் பிழைகளைத் திருத்தலாம். கருத்துப் பிழைகளை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டலாம். பதிவர்களில் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஈழத்தின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.இவர்கள் தங்கள் ஊர், சுற்றியுள்ள பகுதிகள், அங்குள்ள குறிப்பிடத்தக்க இடங்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றி விக்கியில் சேர்க்கலாம் (புதிய கட்டுரைகள் எனில் 3-5 வரி என்பது கூட நல்ல தொடக்கம்). ஏற்கனவே கட்டுரை இருப்பின் ஓரிரு வரிகள் புதிதாகச் சேர்க்கலாம். தாங்கள் எழுதும் வலைப்பதிவுகளில் வரும் ஊர், பொருள் முதலானவற்றிற்கு விக்கி இணைப்புத் தரலாம். தாங்கள் இணையத்தில் படித்த நல்ல கட்டுரைகளை வெளி இணைப்பாக பொருத்தமான விக்கி கட்டுரைகளில் தரலாம்.


பல விக்கி கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் கட்டுரை தொடர்பான கருத்துகள், சொற்பயன்பாடு, எழுத்துப் பயன்பாடு முதலிய உரையாடல்கள் நடைபெறும். அவற்றைப் படித்து கருத்துக்களைப் பரிமாறலாம்.தாங்கள் தமிழில் இருக்க வேண்டும் என நினைக்கும் தங்களுக்குப் பிடித்த தலைப்புகள், மக்களுக்குப் பயன்படும் என நினைக்கும் தலைப்புகளைப் பட்டியல் இடலாம் (கட்டுரை எழுதவியலா விட்டால்). இதனால் மற்ற கட்டுரையாளர்கள் இக்கட்டுரைகளை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ் விக்கியின் பயன்பாடு மிகும். புகைப்படம் எடுப்பவர்கள் எனில் தங்கள் ஊர் சார்ந்த புகைப்படங்கள், தங்கள் ஊரில் உள்ள சிறப்பு இடங்கள், பொருட்களைப் பற்றிய படங்களையும் இணைக்கலாம். துறைசார் வல்லுனர்கள் விக்கித்திட்டங்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

கட்டுரையாக்கம் தவிர்த்த மற்ற பணிகள்.

தமிழ் விக்கிப்பீடியாவைக் காட்டிலும் செயல்பாடு குறைவான மற்ற விக்கித்தளங்கள் உள்ளன. இவற்றிலும் பதிவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். விக்கிமீடியாவின் மற்ற திட்டங்களில் பங்களித்தல்:
* விக்சனரி - விக்சனரியில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. புதிய சொற்களைச் சேர்த்தல், இருக்கும் சொற்களை தமது எழுத்துக்களில் பயன்படுத்தல், தம் கட்டுரைகளில் உள்ள சில அரிய சொற்களுக்கு விகசனரி இணைப்புக் கொடுத்தல் ஆகியன எளிதாக செய்யக்கூடியவை.

* விக்கி மேற்கோள்கள் - தங்களுக்குப் பிடித்த அறிஞர்களின் மேற்கோள்களைத் தமிழில் தரலாம்.


* விக்கி செய்திகள் - தற்போது தமிழ் விக்கியின் செயல்பாடு ஒரே ஒரு விக்கிப்பீடியா பயனரின் தொடர் உழைப்பினால் சீராக வளர்ந்து வருகிறது. வலைப்பதிவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை நம்பத்தகுத்த மூலங்களின் துணையோடு உருவாக்கலாம்.


* விக்கி நூல்கள் - இதில் தமிழ் விக்கிப்பீடியாவை விட எழுத்துநடைக்கு கூடிய சுதந்திரம் உண்டு.தாங்கள் விரும்பும் தலைப்புகளில், தாங்கள் தேர்ச்சி பெற்ற துறைகளில் புதிய நூல்களை ஆக்கலாம்.


* விக்கி மூலங்கள் - காப்புரிமையற்ற பிறரது ஆக்கங்கள் இங்கு இடம்பெறத் தக்கவை. எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்கள் இதில் சேர்க்கப் படலாம். காப்புரிமையற்ற தலைவர்களின் உரைகள்,கட்டுரைகளும் சேர்க்கலாம்.


இவற்றைத் தவிர வேறு யோசனைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். பயன் பெருகும்.

ஊடகங்களில் விக்கிப்பீடியாவின் பயன்பாடு

பல ஆயிரம் செலவழித்து வாங்கப்படும் கலைக் களஞ்சியங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பொது நூலகங்களில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தும் அளவிற்கு மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற காரணம் கூறினாலும் எளிதில் பயன்படுத்த யாரும் அனுமதிப்பதில்லை என்பதும் காரணம்.

அப்படி பயன்படுத்தினாலும் கலைக்களஞ்சியக் கட்டுரையைத் தேடி எடுப்பதற்குள் ஏற்படும் அயர்ச்சி ஒரு புறம், கட்டுரையின் அளவு, தரவுகள், படங்கள், மேற்கொண்டு தேடுவதற்கான ஆதாரத் தகவல்கள் இல்லாமை, ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே தகவலைப் பெறுதல் சாத்தியமின்மை போன்றவை மறு புறம். ஒரு அச்சு வடிவ கலைக் களஞ்சியத்தின் நன்மை அல்லாத கூறுகள் இவை. ஆனால் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, தகவல்களை, கட்டுரைகளை ஒரு சிறிய தேடுதல் மூலம் பெற முடிகிறது. மேலும், அந்தத் தகவல்கள் பெற்ற வழி, மேற்கொண்டு தரவுகள் தேடும் வழி போன்றவையும் எடுத்துக் கூறப்படுகிறது. கணினியுடன் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. பிறகு உலகம் நம் கையில் வந்து விடுகிறது.

இவ்வளவு நாட்களாக தகவல்களைத் தேடி நுலகங்களில் அலைந்தது போய் இன்று நூலகம், கலைக் களஞ்சியம் ஆகியவை நம் மடி மீது தவழ்கிறது. ஊடகங்களில் தகவல் தேடும் செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஒரு பத்திரிகையாளராக எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன்.

தமிழ் ஊடகங்களைப் பொருத்தவரை முதன்மை இதழில் (main issue) செய்திகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாளிதழ்கள். அன்றாடச் செய்திகளை முடிந்தவரை அன்றைக்கே அளித்துவிட வேண்டும் என்று துரிதமாகச் செயல்பட வேண்டியுள்ளது. செய்திகள் பெறும் வழி செய்தியாளர்கள் மூலம் நடைபெறுகிறது. எனவே விக்கியின் பயன்பாடு இதில் குறைவு எனலாம்.

ஒரு கட்டுரை எழுதும் போது விக்கியின் பயன்பாடு மிக அதிகம் ஆகும். காட்டாக, சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மையில் காரீயம் கலந்திருப்பதால் அது குழந்தைகளுக்கு ஆபத்து அளிக்கும் என்று அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதை உற்பத்தி செய்தவர் (மேட்டல் நிறுவனம்) அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன் தனது 5000 ஊழியர்களுக்கும் ஊதியம், இதர நிலுவைகளை அளித்துவிட்டார் என்றொரு செய்தி. இதைக் கருத்திற் கொண்டு அந்நிறுவனம் யாது? அதன் உற்பத்தி என்ன? இரு நாடுகளிடையான பொருளியல் சண்டைக் காரணிகள் எவை என்ற தகவல்களை சேகரித்து நான் பணியாற்றும் தினமணி நாளேட்டில் 2007-ஆம் ஆண்டு "பொம்மலாட்டம்" என்ற தலைப்பில் தலையங்கப் பக்க கட்டுரை வரைந்தேன். அதற்கான தரவுகளை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே பெற்றேன்.

இலவச இணைப்புகளில், சான்றாக, தீபாவளி, பொங்கல் சிறப்பிதழ் ஆகியவற்றில் சமூக, பண்பாடு, பண்டிகை குறித்த கட்டுரைகளுக்குத் தேவைப்படும் தகவல்கள் விக்கியில் இருந்து பெறுகிறேன். அதிலும் சிற்சிலவே. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பில் தேடும் போது கட்டுரைக்குத் தேவையான கருத்துச் செறிவுகளுடன் தகவல்கள் கிடைப்பது கடினம். அதே நேரம் ஒரு நாளிதழுக்குத் தேவைப்படாத தகவல்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே அந்தச் சூழல் பொருத்து விக்கியைப் பயன்படுத்துகிறோம். (மற்றவர்கள் எப்படி என்று தெரியவில்லை.)

கூகிள் தேடுபொறியில் ஏராளமான தகவல்கள் கிடைத்தாலும் அதை தேடி எடுப்பது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவது போல. ஆனால் விக்கியில் இருந்தால் தொடுப்புகள் மூலமாக எளிதில் சென்றடைய முடிகிறது. இது என்னளவிலான அனுபவம்.

தமிழ் விக்கியைப் பொருத்தவரை அதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பயன்படுத்தப்படும் விகிதமும் குறைவே. சொல்லப்போனால் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே சொல்லலாம். கணினி அறிமுகமின்மை, பயன்பாட்டு வசதியின்மை போன்றவற்றையும் கூற வேண்டும்.

ஆங்கிலப் பத்திரிகை நண்பர்களிடம் கேட்டவரை அவர்கள் கூறியது:- விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறோம். செய்திகளைப் பொருத்தவரை பயன்பாடு குறைவே. கட்டுரைக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அதில் உள்ள தகவல்கள், தரவுகள் எந்த அளவு அதிகாரப் பூர்வமான ஆதாரம் கொண்டவை என்பதை உறுதி செய்ய முடிவதில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் அதிலேயே சில கட்டுரைகளில் ஆதாரம் தேவை என வெளியிடப்படுகிறது. ஆனால் விக்கியைப் பயன்படுத்தி பழைய தரவுகள் பெறுவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சான்றாக, ஒரு நாட்டின் முதல் அதிபர், பிரதமர், குடியரசுத் தலைவர், முதல் நோபல் பரிசு பெற்றவர், விளையாட்டு தொடர்பான போட்டிகள் குறித்த தரவுகள் போன்றவை ஒரு கட்டுரையின் இடையே தேவைப்பட்டால் விக்கியை கேட்பதாகக் கூறுகிறார்கள்.

வார இதழ்களில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அதைப் படிக்கும் போதே புரிகிறது. ஏனெனில் வார இதழ் உள்ளடக்கங்களைப் பொருத்தவரை விக்கியின் தேவை குறைவுதான். ஆனால் கலைக்கதிர் போன்ற அறிவியல் இதழ்கள், சுற்றுச்சூழல் இதழ்கள் ஆகியவற்றில் அதிக பயனளிக்கக் கூடும்.

பதிவுகளுக்கும் த.வி கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுகள்

தமிழ் பதிவர்கள் இப்புவியின் பல பகுதிகளிலுருந்தும் பல்வேறு துறைகளில் பதிவுகள் இட்டுவருகையில் கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவர்களது பங்காற்றல் இருக்குமானால் அதன் செறிவும் வளர்ச்சியும் போற்றத் தக்கதாக இருக்கும். கணினியில் தமிழை படிக்கவும் எழுதவும் நன்கு அறிந்த தமிழ்பதிவர்கள் விக்கிப்பூடியா பங்காற்றலில் எதிர்கொள்ளும் சில வேற்றுமைகளை சக பதிவர் என்ற முறையில் இங்கு பட்டியலிட முயல்கிறேன்.

நடை:முதலாவதாக நாம் காணும் வேற்றுமை எழுதும் நடையிலாகும். பதிவுகளில் முன்னிற்பவருடன் உரையாடும் முன்னிலையில் எழுதலாம்; த.வியில் படர்க்கையில் பாடபுத்தக நடையில் எழுதப்பட வேண்டியுள்ளது. காட்டாக,"மயிலாப்பூரில் கபாலி கோவில் போயிருப்பீங்க,அங்க.." என்பதை த.வியில் "[[சென்னை]], [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] அமைந்திருக்கும் கபாலீசுவரர் கோவிலில்.." என்று எழுத வேண்டி யுள்ளது.

தவிர தேவையற்ற வருணனைகள்,மரியாதை மொழிகள் மற்றும் பட்டப்பெயர்கள் தவிர்க்கப் பட வேண்டும். "துள்ளி விளையாடும் கயல்கள் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் பூஞ்சோலைகளுக்கிடையே அமைந்த அழகிய சாரதா தேவி கோவில்" என்றில்லாமல் "[[கர்நாடகா ]] மாநிலத்தில் [[சிருங்கேரி]] யில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் சாரதாதேவி கோவில் அமைந்துள்ளது"என்று எழுதுதல் வேண்டும்.வேண்டுமானால் அழகான சூழலில் என்று சேர்க்கலாம். விக்கிப்பீடியாவின் நடை கையேட்டை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

உசாத்துணைகளும் சான்றுகளும்:விக்கிப்பீடியாவின் அடித்தளமே சரிபார்க்கக்கூடிய தரவுகளை பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளே. இக்கட்டுரைகள் பலரால் உருவாக்கப் படுவதால் தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளும் சார்புகளும் கட்டுரையில் இடம் பெறுவதைத் தவிர்க்க எந்தவொரு உண்மைக்கும் சான்று கொடுத்தல் இன்றியமையாயதது. இந்திய அரசு நிருவாக அமைப்புகளின் திறனில் முதலாவதாக (கடைசியில்) தமிழகம் திகழ்கிறது என்று எழுதினால் பதிவுகளில் சான்று கொடுப்பதில்லை.ஆனால் விக்கியில் <ரெஃப்> மீயுரை ஆணைகளுக்கிடையே இந்த நாளன்று வெளியிட்ட இந்திய உள்துறை அறிக்கை எண்.. என்ற சான்றினை அளிக்க வேண்டும்;அல்லது செய்தி வந்த நம்பத்தகுந்த பதிப்புகளின் விவரம் வேண்டும்.
உணர்ச்சி வயப்படும் பதிவர்கள் இந்த சான்று தேவை என்ற குறிப்பினால் பாதிக்கப்படுவதையும் பார்க்கலாம். வாக்கு கொடுத்தல் என்பது இந்திய கலாசாரத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதால் தங்கள் வாக்கிற்கு சான்று கோருதல் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுவோரும் உண்டு. ஆங்கில விக்கிப்பீடியர்களுக்கு சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்பதற்கும் சான்று இணைப்பது இயல்பாக உள்ளது.

வடிவமைப்பு:பதிவுகள் எண்ணவோட்டதின் ஒழுக்கோடு எழுதப்படுபவை.ஆயின்,விக்கி கட்டுரைகளில் முகவுரை (சுருக்கம்), ஆரம்ப காலத்திலிருந்து கால ஓட்டத்துடன் இயைந்த வளர்ச்சி,தாக்கங்கள்,சாதனைகள் என பல்வேறு பத்திகளாக பிரிக்கப்படுதல் முதன்மையான தேவையாகும். பல கட்டுரைகளில் தகவற்பெட்டி வார்ப்புரு ஒன்றில் சுருக்கமான தகவல்களை அளிக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் தொடர்புடைய இணைப்புகள்,மேலும் அறியக்கூடிய உசாத்துணைகள் இவற்றை வெளியிடுதல் கட்டுரையை வளப்படுத்தும்.இந்த விக்கிப்பீடியா பக்கம் உங்களுக்கு உதவும்.

உரிமை இல்லாமை:விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் குனூ தளையறு ஆவண உரிமத்தின் கீழ் அளிக்கப்படுவன. எளிய மொழியில் இக்கட்டுரைகளை யாரும் நகலெடுக்கவோ,மாற்றவோ இயலும். விக்கிப்பீடியாவின் எந்தப் பயனரும், பதியாத வருனருட்பட, கட்டுரைகளில் தவறுகளை திருத்தவோ, செம்மையுறச் செய்யவோ இயலும். இந்நதிலையில் பதிவுகளில் தமது ஆக்கங்களுக்கு முழு பொறுப்பேற்றிருந்த பதிவர்கள், அவ்வாறின்றி தங்கள் விக்கி ஆக்கங்கள் பலவாறு மாற்றமடையும்போது வருந்துவதும் உண்டு. பலரும் ஒருங்கிணைந்து ஆற்றும் பணியிது என்பதை எண்ணத்தில் கொள்ள மறந்தவர்கள் இவர்கள். அதே நேரம்,ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள உரையாடல் கீற்றில் (tab), மாற்றங்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பாலனவர்களின் கருத்து ஏற்கப்படுகிறது.

பின்னோட்டம் இல்லாமை:பதிவர்களின் முதன்மையான மற்றொரு மனத்தடங்கல் தாம் எழுதியவை குறித்த பின்னூட்டம் இல்லாமை. பதிவுலகில் தமது எழுத்தின் தாக்கத்தினைக் குறித்த மறுமொழிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிந்தவர்கள், விக்கியில் சிறப்பான ஒரு ஆக்கத்தை அளித்தும் அது குறித்த எந்த பின்வினையும் இன்றி உற்சாகம் இழக்கிறார்கள். சக விக்கிப்பீடியர் அவரது பயனர் பக்கத்தில் பாராட்டி உற்சாகப்படுத்தினாலும், படிப்பவர் எதிர்வினை யின்றி வெறுமையாக உணர்கிறார்கள். பயனை எதிர்நோக்காது தமிழன்னைக்கு செய்யும் வழிபாடாக கொள்ளுதல் வேண்டும்.

காப்புரிமையற்ற படிமங்களை இணைத்தல்:கட்டுரையை வளப்படுத்த படிமங்கள் அவசியம். பதிவுகளுக்கு இணையத்தில் கிடைக்கும் எந்த படிமத்தையும் இணைக்கிறோம். ஆனால் விக்கிப்பீடியா தளத்தில் இணைக்கப்படும் படிமங்கள் காப்புரிமை அற்றவையாக இருக்க வேண்டும். பொதுவாக நாமே எடுத்த,வரைந்த,ஆக்கிய படிமங்களுக்கு அளிப்புரிமை அளித்தல் எளிது. இணையத்தில் இருந்து எடுத்ததாயின் அதன் காப்புரிமை குறித்து அறிந்து,வேண்டுமாயின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று இணைத்திட வேண்டும். இதற்கான விதிமுறைகள் சற்றே கடினமாக உள்ளது.

விக்கி மென்பொருள் இயக்கம்:பெரும்பான்மையான தமிழ் பதிவர்களுக்கு இது ஒரு தடையாக இல்லாதபோதும் ஒருசிலருக்கு இதுவும் ஒரு தடையாக உள்ளது. இதனை போக்குவதற்கு பல விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

தமிழில் விக்கிப்பீடியா

உலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.

இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக சொல்வதென்றால் தமிழில் 19,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. விரைவில் 20,000 எண்ணிக்கையை தொடும்.

நாம் இணையத்தில் தேடும் பொழுது விக்கிப்பீடியாவில் அந்த தலைப்பு இருந்தால் தேடலில் நமக்கு அது சிக்கும். ஆங்கிலத்தில் ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளதால் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. தமிழில் தேடினால் குறைவாகவே கிடைக்கின்றன. காரணம் தமிழில், இணையத்தில் உள்ள உள்ளடக்கங்கள் மிகக்குறைவு. செய்தித்தாள்கள் தமிழிலில் இணையத்தில் கிடைப்பதாலும் வலைப்பதிவுகள் காரணமாகவும் தேடல்களில் சில சிக்குகின்றன.

தமிழின் இந்த நிலை போகவேண்டுமானால் இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் அதிகம் கிடைக்க வேண்டும். இது கைகூட துறை சார்ந்த தமிழ் இணையம் வளரவேண்டும். இது கைகூடுமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா அந்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.


தமிழ் விக்கிப்பீடியா என்பது தமிழில் உள்ள இணைய கலைக்களஞ்சியம் என்பது தெரியும். இதன் சிறப்பு எல்லோரும் பங்களிக்கலாம் என்பதே. இதில் உள்ள கட்டுரைகள் காப்புரிமை விலக்கம் பெற்றவை, எனவே எல்லோரும் இதை தடையின்றி பயன்படுத்தலாம். பலதரப்பட்ட கட்டுரைகளை, பல துறைசார் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் போது அவை தமிழில் தேடுபவருக்கு கிடைக்கும்.

அவினாசிலிங்க செட்டியார் தலைமையிலான தமிழ் வளர்ச்சிக் கழகம் பெரியசாமி தூரன் அவர்களை ஆசிரியராக கொண்டு 10 தொகுதிகள் உடைய கலைக்களஞ்சியமத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு தொகுதியும் 750 பக்கங்களை கொண்டிருந்தன. முதல் தொகுதி 1954ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் பல்கலைக்கழகம் அறிவியற் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டு உள்ளது. இந்த அரிய முயற்சி பெரும்பாலோருக்கு சரியாக சென்றடையவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இணைய இணைப்பு உடைய எல்லோராலும் தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியும், பங்களிக்க முடியும். இணைய தேடல்களில் தேடல் தொடர்பான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் தேடல் முடிவுகளில் இது முதலில் சிக்கும். தமிழ் கூறும் நல்லுலககுக்கு நம்மாலான தொண்டாக தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை எழுதுவோம்.

Monday, October 26, 2009

அறிவியல் தமிழின் தேக்க நிலை

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.

இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

வால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை.


இதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.


இதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன் விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:
கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை..


இந்த அறிஞர்களின் கூற்று அறிவியல் தமிழின் தேக்க நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

அறிவியல் தமிழ் பற்றிய கருத்தாடலில், முதலில் அறிவியல் தமிழ் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும். மொழியியல், சமூகவியல் நோக்கில் இத்துறைகளில் தமிழ் மொழி வளர்ச்சி அடையாவிடின் அது பயன் இழந்து வெகு விரைவில் இறந்து போகும்.

அறிவியல் தமிழ் முக்கியம் என்று தெரிகிறது. அது தேக்க நிலையில் இருப்பது தெரிகிறது. ஏன் இந்த நிலை?

"அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் தமிழில் குறைவே. காரணம் அவற்றை புழங்கும் சூழல் இங்கு இல்லை." என்று எழுத்தாள் ஜெயமோகன் தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா? என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அறிவியல், தொழில்நுட்ப சொற்கள் ஆங்கில மொழியோடு ஒப்பு நோக்குகையில் குறைவே. ஆனால் பல இலட்ச சொற்கள் உள்ளன. விக்சனரியில் தற்போது ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றை புழங்கும் சூழல் இல்லை என்பது மிகச் சரியே. இதற்கு சமூகவியல், மொழியியல் காரணங்கள் உள்ளன.

அண்மைக் காலம் வரை தமிழ்ச் சமூகம் படிப்பறிவு குறைந்த சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றும் தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். பொதுச் சமூகத்தில் அறிவியல் நோக்கிய ஈடுபாடு மிகக் குறைவானதே. எனவே அறிவியல் தமிழில் புழங்க வேண்டியதற்கான தேவை எளவில்லை. இச்சூழல் அறிவியல் துணுக்குகள் நூறு போன்று மிக மோலாட்டமான படைப்புகளுக்கு மட்டுமே வழிவகுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபான்மையினர் இத்துறைகளில் சிறப்பு பெற்றவர்கள். நடைமுறையில் தமிழ் மொழி மூலம் இத்துறைகளைக் கற்றவர்களும் உண்டு. எனினும் பெரும்பாலனவர்கள் இத்துறையைகளை ஆங்கிலத்திலேயே கற்றுப் பயன்படுத்துகிறவர்கள். இவர்களுக்குள் தமிழ் மொழி தகவல் பரிமாற்றம் சிறிய அளவிலேயே உண்டு.

மொழியியல் நோக்கில் அறிவியல் தமிழிழுக்கு பல தடைகள் உண்டு. பல இலட்சம் சொற்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை கருத்துச் சூழலில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுக்கள் அரிதாகவே இருக்கின்றன. அறிவியல் தமிழை நெறிப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எ.கா தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் இடையே உள்ள வேறுபாடுகள். அறிவியல் எழுத்து, நுட்ப எழுத்து பற்றிய அறியாமை.

நாம் செம்மொழித் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதை விட முக்கியத்துவம் அறிவியல் தமிழுக்கு தர வேண்டும். வளங்களை ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை பாதிப்பு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமே.

Sunday, October 25, 2009

வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள்

வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல்:

1. சந்தோஷ்குரு
2. ரவி
3. சிவக்குமார்
4. சந்திரவதனா
5. பாலச்சந்தர் முருகானந்தம்
6. குறும்பன்
7. மயூரன்
8. மயூரேசன்
9. கலை
10. மோகன்தாஸ்
11. செல்வராஜ்
12. தெரன்சு
13. புருனோ
14. kanags
15. சத்தியா
16. நற்கீரன்
17. மணியன்
18. ரகுநாதன்
19. பெ.நாயகி

சிலர் பதிவுகளில் ஒரு பெயரிலும் விக்கியில் ஒரு பெயரிலும் எழுதலாம். சிலர் வலைப்பதிவர்கள் தாம் என்று நாங்கள் அறியாமலே இருக்கலாம். நீங்களும் ஒரு வலைப்பதியும் விக்கிப்பீடியரா? தயவு செய்து, யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் தங்கள் விக்கி பயனர் பெயர், வலைப்பதிவு முகவரி விவரங்களை வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பக்கத்தில் நீங்களே சேர்த்து விடுங்கள்.

ஆர்வமுள்ள வலைப்பதிவர்கள், இந்தப் பட்டியலில் உள்ள தங்கள் வலைப்பதிவு நண்பர்களைத் தொடர்பு கொண்டு விக்கிப்பீடியா குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.

தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை:

* தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் வழிய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

* ஒரு நாளைக்கு ஒரு பாட வேளை நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. வீட்டுப் பாடம், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற தேவைகள் இருந்தால் பகல் உணவு வேளை, மாலை பள்ளி விட்ட பிறகும் கூடுதல் நேரம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

* கட்டுரைகள் 99% வீதம் புரிந்து கொள்ளத்தக்கதாகவே உள்ளன.

* மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பயன்படுத்திப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

* புதுக்கோட்டை மாவட்டம் (அதாவது உள்ளூர் தகவல்கள்), தமிழ்நாடு, இந்தியா குறித்த செய்திகள் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

* எடுத்துக்காட்டுப் பயன்பாடுகள்: "நாட்டுக்குழைத்த தலைவர்கள்" என்று போட்டி வைத்தால் மாணவர்களே காமராசர், நேரு என்று தேடி அக்கட்டுரைகளை அச்சிட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். "காவிரி தன் வரலாறு கூறுதல்" என்று தலைப்பு வைத்தால் காவிரி ஆற்றுக் கட்டுரைக்குள் புகுந்து குடகு, பூம்புகார் என்று ஒன்றுக்குள் ஒன்றாக தொடர் கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விக்கி வரவுக்கு முன் பாடநூல் அல்லது நூலக நூலில் உள்ள ஒரே மாதிரியான கட்டுரைகளையே எல்லாரும் படித்ததாகவும் தற்போது பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் படித்துப் படைப்பூக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இது வரை 20 வரிகள் எழுதிக் கொண்டிருந்தவர்கள் 60 வரிகள் உள்ள அளவுக்கு தகவல் சேர்த்து எழுதுகிறார்கள் (இது விரிவான கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையை உணர்த்துகிறது)

* தமிழ் விக்சனரியையும் பயன்படுத்துகிறார்கள்.

ஆக மொத்தம் விக்கி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இன்னும் மென்மேலும் விக்கியை வளர்த்து எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இது போன்று பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்படத் தொடங்கி உள்ளது மேலும் முனைந்து பங்களிக்க ஊக்கமாக இருக்கும். திரு. சோதிமணி அவர்களைப் போல் முன்மாதிரியாகத் திகழும் நல்லாசிரியர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பார்க்க: பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு குறித்த தமிழ் விக்கிப்பீடியா உரையாடல்.

இச்செய்தியை நேரில் கண்டு எழுதிய லக்கிலுக்குக்கும் பதிப்பித்த புதிய தலைமுறை இதழுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்

விக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு வழிகாட்டப்படுகிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கேள்விகள் பக்கங்களில் தமிழில் தட்டச்சுவது எப்படி என்றும் புதிய கட்டுரையாக்கம் குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை காணலாம்.

தமிழ் விக்கிப்பீடியா மீடியாவிக்கி என்ற மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது.உரையை வடிவமைப்பதற்கு உரிய ஆணைகள் வழமையான உலாவியில் பயன்படுத்தப்படும் மீயுரை குறிகள் போலன்றி சற்றே மாறுபடுகின்றன.காட்டாக, தடித்த எழுத்துகளுக்கு,மீயுரையில் &lt b &gt அச்சொற்றொடரின் &lt /b &gt இருபுறமும் பயன்படுத்தினால் இங்கு ''' என்னும் குறிகளுக்குள் அவை இடப்பட வேண்டும். இத்தகைய அடிப்படை ஆணைகளுக்கான உதவியை இங்கு பெறலாம்.தவிர இந்த நினைவுக் குறித்தாளும் உதவும்.இந்த மீடியாவிக்கி மென்பொருளைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ஆங்கிலத்திலுள்ள இந்த கட்டுரை உதவும்.

விக்கிப்பீடியா:உதவி பக்கத்தில் (முதற்பக்கத்தில் உள்ள இடது வழிகாட்டிபட்டையில் உள்ள உதவி இணைப்பு மூலம் நீங்கள் சென்றடையலாம்) பயனர்களுக்கு எழக்கூடிய பல ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடிய உதவிப்பக்கங்கள் மற்றும் பல்லூடக பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பொதுவாக தொழில்முறை கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும்போது ஆங்கிலச்சொற்களுக்கீடான தமிழ்சொற்களைத் தேடுவது இயல்பு. தமிழ் அகரமுதலி,கலைச்சொல் ஒத்தாசை மற்றும் கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு, கலைச்சொல் கையேடு என இவை உங்கள் தமிழாக்கத்திற்கு துணை புரியும்.தவிர,தமிழ் விக்கிப்பீடியா ஓர் கலைக்களஞ்சியமாதலால்,இங்கு பயிலும் நடை குறித்த கையேடுகள் பட்டியலை சமுதாய வலைவாசலில் காணலாம்.விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் நடுநிலைநோக்கோடு,தகுந்த சரிபார்க்கத் தக்க சான்றுகளுடன்,முழுமையும் காப்புரிமை அற்ற ஆக்கங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.இதற்கான வழிகாட்டல்களை இங்கு காணலாம்.இத்தகைய வழிகாட்டலைப் பின்பற்றிய கட்டுரையொன்றை ஆக்கிட விருப்பம்,ஆனால் எதைப்பற்றி எழுதுவது என்று சிந்திக்கிறீர்களா ? எவ்வாறு பங்களிக்கலாம் என இங்கு காண்க. இனி உங்கள் பங்களிப்பை துவங்க இந்த பயிற்சிப்பக்கங்கள் சரியான இடம்.

இவை எதிலும் உங்களுக்குரிய ஐயம் தீர்க்கப்படவில்லையாயின்,ஒத்தாசை பக்கம்,மற்றும் உசாத்துணை பக்கங்களில் தேடலாம்;மற்றும் வினா எழுப்பலாம்.ஆலமரத்தடி என பெயரிடப்பட்டுள்ள சமூக விவாதமேடையில் யோசனைகள் மற்றும் விளக்கங்களை விவாதிக்கலாம்.இவற்றையும் மீறி,தன்னார்வலர்களால் கட்டப்படும் இந்த கூட்டு முயற்சியில் நீங்கள் பங்மேற்றிட,ஒவ்வொரு விக்கிப்பீடியரும் உதவிட ஆர்வத்துடன் உள்ளனர்.

Saturday, October 17, 2009

விக்கித் திட்டம் உயிரியல்

தமிழ் விக்கிப்பீடியாவில் துறைசார் கட்டுரைகளை ஒருங்கிணைத்த முறையில் உருவாக்க விக்கித் திட்டங்கள் உதவுகின்றன. ஒரு துறையின் துணைத் துறைகள், கருத்துருக்கள், கலைச்சொற்கள் போன்றவற்றில் குவியப்படுத்தப்பட்ட கவனம் தந்து அந்தத் துறைக்கு தேவையான கட்டுரைகளையும், இதர உள்ளடக்கங்களையும் உருவாக்க இத்திட்டங்கள் உதவுகின்றன. ஒரு துறையில் கணிசமான தமிழ் விக்கிப்பீடியர்கள் சேரும் போது இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் அண்மையில் விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கப்பட்டது. கலை, மகிழ்நன், கார்த்திக், தகவல் உழவன் போன்ற துறைசார் வல்லுனர்களின் கூட்டு முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.


உயிரியலின் முக்கிய பிரிவுகளாக உயிரணுவியல், மூலக்கூற்று உயிரியல், மரபியல், படிவளர்ச்சி உயிரியல், உயிரின வகைப்பாடு, நுண்ணுயிரியல், தாவரவியல், விலங்கியல், சூழலியல், உடலியங்கியல், உடற்கூற்றியல், உடல் வளர்ச்சியியல், வேளாண்மை, மருத்துவம், உயிர்த் தொழில்நுட்பவியல் ஆகியவை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்துறையில் உள்ள தமிழ் உசாத்துணைகள் பட்டியல் இடப்பட்டு வருகின்றன. இத்துறையில் எழுதப்பட வேண்டிய கட்டுரைகளின் தலைப்புக்கள் பட்டியலிடப்பட்டு, முக்கியத்துவம் அடிப்படையில் தொகுக்கப்படுகின்றன.


துறைசார் வல்லுனர்கள் மட்டும் இன்றி யாரும் இத்திட்டத்தில் பல வழிகளில் பங்களிக்க முடியும். பல்லாயிரக்கணக்கில் இருக்கும் உயிரினங்கள், நோய்கள் போன்றவற்றைப் பற்றி எழுத முடியும். படங்கள் சேக்க முடியும். மெய்ப்பு பாத்து, சொல் திருத்தி, எளிமைப் படுத்தி உதவ முடியும்.

மேலும் விபரங்களுக்கு: விக்கித் திட்டம் உயிரியல்