Tuesday, April 15, 2008

விக்கித் திட்டம் நாடுகள்

நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு கலைக்களஞ்சியதுக்கு அடிப்படையானவை. இடம் பற்றிய தகவல் பல கட்டுரைகளில் பயன்படுகிறது. அதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் (த.வி) நாடுகள் தொடர்பான ஒரு விக்கி திட்டம் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கிறது.

நாடுகள் பற்றிய கட்டுரைகள் வெறும் மொழிப் பெயர்ப்புக்கள் மட்டுமல்ல. எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கிருந்தெல்லாம் தமிழர் கண்னோட்டத்தோடு கட்டுரைகள் ஆக்குவதை நாம் வரவேற்கிறோம். திட்டத்தின் முதற்கட்ட நோக்கங்கள் பின்வருமாறு:


  • எல்லா நாடுகளுக்கும் அறிமுக கட்டுரைகளை ஆக்குதல்.
  • நாடுகள் தகவல் சட்டத்தை ஒருங்கிணைத்தல்.
  • எல்லா நாட்டு கட்டுரைகளின் அமைப்புகளை ஒருமுகப்படுத்தல்
  • ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் உள்ளவற்றை சீராக தமிழாக்கம் செய்தல்.

தற்போது 87% மேலான முதற்கட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகுதியையும் விரைந்து நிறைவேற்ற அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.

த.வி இணைப்பு:
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்

Friday, April 11, 2008

விக்கி திட்டங்களுக்குப் புகைப்படக் கொடை அளியுங்கள்

விக்கிமீடியா திட்டங்களுக்கு உங்கள் புகைப்படக் கொடையை வரவேற்கிறோம்.

விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால், கட்டுரை மட்டும் தான் எழுத வேண்டும் என்றில்லை. இன்னும் பல வகைகளிலும் பங்களிக்கலாம்.


விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதால் இதில் இடம்பெறும் படங்களும் காப்புரிமை விலக்கு பெற்றிருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால், தமிழ்ச்சூழலுக்குத் தேவையான இத்தகைய படங்கள் வலையில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எனவே, நீங்கள் எடுத்த புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றில் ஒரு கலைக்களஞ்சியத்துக்குப் பயன்படக்கூடும் என்று நீங்கள் நினைப்பவற்றை முறையான உரிம விளக்கத்துடன் http://commons.wikimedia.org தளத்தில் பதிவேற்றினால் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிநூல்கள் முதலிய எல்லா திட்டங்களிலும் எல்லா உலக மொழிப் பதிப்புகளிலும் பயன்படுத்த இயலும்.

என்னென்ன மாதிரி படங்களை பதிவேற்றலாம்?

மாட்டுவண்டி, கோழி, கோயில் தூண், பஞ்சு மிட்டாய் விற்பவர், திருமணக் காட்சிகள், திருவிழா காட்சிகள், மேடைப்பேச்சுகள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் உங்கள் கண்ணில் படக்கூடிய எந்தக் காட்சியானாலும் ஒலி, ஒளி வடிவில் தயக்கமின்றி பதிவேற்றுங்கள். இவற்றைத் தகுந்த இடங்களில் எங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

உங்கள் படங்களை இன்றே பதிவேற்றிட Commons செல்லுங்கள்.

Tuesday, April 8, 2008

விக்கித் திட்டம் பொறியியல்

விக்கித் திட்டம் பொறியியல்

விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கிப்பீடியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.

பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும் தமிழில் இக்கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம்.

இந்தப் பணியின் முதற்கட்டமாக பினவரும் வேலைத்திட்டம் உள்ளது:


  • இதுவரையில் எழுதப்பட்டிருக்கும் பொறியியல் கட்டுரைகளை கணக்கெடுத்தல், பகுத்தல்.
  • தேவையான அடிப்படை அலகுகள் பற்றிய கட்டுரைகளை அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
  • முதன்மை பொறியியல் துறைகளையும் அவற்றில் முக்கிய கட்டுரைகளையும் அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
  • தேவையான கலைச்சொற்களை கண்டறிதல், பட்டியலிடுதல்.
  • தேவைப்படும் தகவற் சட்டங்களை அடையாளங்காண்டு பட்டியலிடுதல்.


மேலதிக தகவல்களுக்கு திட்ட பக்கம் சென்று பாக்கவும்.

ஆர்வமுள்ள அனைவரையும் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.





தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ், தமிழர்

தமிழ் விக்கிப்பீடியாவில் எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள். அதற்கமைய பல்வேறு துறை சார் தகவல்களை சேர்த்து வருகிறோம். தமிழ் தமிழர் பற்றிய தகவல்களும் அவற்றுள் அடங்கும். அனேகமான கட்டுரைகள் ஒரு தொடக்க நிலையிலேயே உள்ளன. அக்கட்டுரைகளை மேம்படுத்த உங்கள் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களை இங்கேயும் தெரிவிக்கலாம்.


தமிழர் பற்றிய பகுப்பு:
http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழர்
தமிழர் பற்றிய கட்டுரை:
http://ta.wikipedia.org/wiki/தமிழர்


தமிழர்
திராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேஷியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.