Tuesday, November 25, 2008

அறிவியல் மொழிகள்

தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக வெளியிடப்படுன்றனவோ அம்மொழிசார் மக்களுக்கு இந்த அறிவு இலகுவில் கிட்டிவிடுகின்றது. எந்த மொழிகளில் அறிவியல் ஆய்வு ஏடுகள் ஓரளவாவது வெளிவருகின்றனவோ அவற்றை அறிவியல் மொழிகள் என்றும், எதில் கூடுதலாக வெளிவருகின்றனவோ அதை அறிவியலின் மொழி என்றும் கூறலாம். அறிவியல் மொழி என்ற தரம் எந்த ஒரு மொழியின் தனிப்பட்ட தன்மையிலும் இல்லை, அதன் பயன்பாட்டில்தான் தங்கியிருக்கின்றது.

வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.

ஆங்கிலத்தின் அறிவியல் மேலான்மை உறுதியானது. ஆனால் அது தொடர்ந்து தனிப்பெரும் அறிவியல் மொழியாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சீனம், யப்பானிஸ், உருசியன், பிரேஞ்சு, அரபு, ஸ்பானிஸ், இந்தி போன்ற மொழியினரின் அறிவியல் பங்களிப்பு கூடும் பொழுது அவர்கள் அவர்களது மொழியிலேயே கருத்து பரிமாற முயலலாம். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறையலாம். மேலும் பொறிமுறை மொழிபெயர்ப்பு விருத்தி பெறும் பொழுது மொழி இடைவெளிகள் குறையும்.

அறிவியல் மொழியாக தமிழ்


தமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. இதற்கு தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுரைகளை படைப்பது இதற்கு ஒப்பானது.

இன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை.

தாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை அடுக்கமைவு உண்டு. தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே.


இக்கட்டுரையை மேம்படுத்த இங்கே செல்லவும்.

அனைத்துலக மொழிகள்

அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்துலக மொழியாக இருக்கிறது. ஜோர்ஜ் வெபர் (George Weber) என்பவரின் ஆய்வுக் கட்டுரைக்கிணங்க[1] பின்வரும் மொழிகளின் அடுக்கமைவு அமைகின்றது.

1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. ஸ்பானிய மொழி
4. உருசிய மொழி
5. அரபு மொழி
6. சீன மொழி
7. ஜேர்மன் மொழி
8. ஜப்பானிய மொழி
9. டச்சு மொழி
10. இந்தி/உருது

எண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் [[வங்காள மொழி]]யை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம்.

தமிழின் நிலை


தமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன.

பொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.இந்தக் கட்டுரைய மேம்படுத்த இங்கே தமிழ் விக்கிப்பீடியாக்கு செல்லுங்கள்:

Saturday, November 22, 2008

பயனர் பங்களிப்பு - கட்டுரையை மேம்படுத்தல்

தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் தொடர் மேம்படுத்தலுக்கு உரியவை. கட்டுரையை விரிவாக்கல், மெய்ப்பார்த்தல், நடை மாற்றி எழுதல், தகவல் சரிபார்த்தல், மேற்கோள் சேர்த்தல், கருத்துக் கூறல், இணைப்புகள் சேர்த்தல், படங்கள், ஒலி நிகழ்ப்பட கோப்புகள் சேர்த்தல் என பல வழிகளில் மேம்படுத்தலாம்.

 • பல கட்டுரைகள் குறுங்கட்டுரைகளே எனவே மேலும் தகவல்களைச் சேர்த்து விரிவாக்கலாம்.
 • பல கட்டுரைகளில் தமிழ் எழுத்துகூட்டல் இலக்கண பிழைகள் உண்டு. அவற்றை நீங்கள் மெய்ப்பு பார்கலாம்.
 • பல பயனர்கள் தங்களது படைப்புகளை கலைக்களஞ்சிய நடைக்கு பொருந்தாத நடையில் இட்டுள்ளார்கள். அவற்றை கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றி எழுதலாம்.
 • பல தரப்பட்ட தகவல்கள் பிழையாக தட்டச்சு செய்யபப்ட்டிருக்கலாம், அல்லது இன்றைப்படுத்தாமல் இருக்கலாம் அவற்றை சரி செய்யலாம்.
 • தமிழ் விக்கிப்பீடியாவின் பல கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. ஆனால் அங்குள்ள மேற்கோள்கள் இங்கும் சேர்க்கபப்டவில்லை. அவற்றை சேர்கலாம். புதிய ஆதாரங்களை தேடிச் சேக்கலாம்.
 • பல தரப்பட்ட விடயங்களைப் பற்றி (எ.கா கலைச்சொற்கள்) விக்கி பயனர்களிடையே கருத்துப்பரிமாற்றம் நடைபெறுவதுண்டு. அங்கு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கட்டுரையை மேம்படத்த உதவலாம்.
 • முன்னர் சுட்டியபடி இடை, உள், வெளி இணைப்புகளை தந்து மேம்படுத்தலாம்.
 • படங்கள் சேர்த்தல், ஒலி நிகழ்ப்பட கோப்புக்களை சேர்த்தலும் நல்ல பணிகள்.

  தமிழ் விக்கிப்பீடியா பலநூறு பயனர்கள் சிறு பங்களிப்பு செய்வதனால் வளர்வது. எனவே உங்களுக்கு ஏற்ற நேரத்தில் உங்களுக்கு ஈடுபாடன முறையில் இணையம் மூலம் பங்களிக்க வாருங்கள்.

 • Friday, November 21, 2008

  இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

  இந்தியாவில் 22 மொழிகள் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள். இவை தவிர இந்தியாவில் 400 மேற்பட்ட மொழிகள் உண்டு. இவை எல்லாவற்றிலும் ஒரு விக்கிப்பீடியாத் திட்டம் இன்னும் இல்லை. 18 இந்திய மொழிகளில்தான் விக்கிப்பீடியாக்கள் உண்டு. பெரிய இந்திய மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் கூட சிறிய ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களை விட வளர்ச்சி குன்றியவை.

  மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் ஓரளவு வளர்ச்சி பெற்ற விக்கிப்பீடியாக்கள் உண்டு.

  மெதுவாக தொடங்கினாலும் திட்டமிட்டு தரம் கண்காணித்து வளர்ந்து வருவது மலையாளம். கட்டுரை எண்ணிக்கை 8,177 எனினும் அனேகமான கட்டுரைகள் ஆழமானவை.

  தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் சிறந்தவற்றில் ஒன்று. 16,000 மேற்பட்ட கட்டுரைகளுடன் தரம் கண்காணித்து வளர்ந்து வருகிறது. பல்துறை கட்டுரைகளை ஆக்குவதில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழர் செறிந்து வாழும் இடங்களில் இருந்து பங்களிப்பு இன்னும் கூட பெரும் வாய்ப்புள்ளது.

  இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியும், இந்தியாவின் ஆட்சி மொழியுமான இந்திக்கு அதன் வளத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை. இதில் 23,319 கட்டுரைகள் உண்டு, ஆனால் அனேகமானவை ஆழமற்றவை. பல்துறைக் கவனமும் குறைவு.

  கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் முதலாவதாக நிற்கும் தெலுங்கில் 41,766 கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பான்மை ஒருவரி இருவரி பக்கங்களே. அவற்றை குறுங்கட்டுரைகள் என்றே கருதமுடியாது. அதனால் தரம் அடிப்படையில் தெலுங்கு பின் நிற்கிறது.

  இந்திய மொழிகளில் தொடக்கத்தில் கன்னடம் முன்னுக்கு இருந்தது. இந்தியாவில் விக்கிப்பீடியா தொடர்பாக முதல் கூட்டத்தை கன்னட விக்கிப்பீடியர்களே கூட்டினர். இப்போது கன்னடம் நலிவடைந்து இருக்கிறது. 6,097 கட்டுரைகளே கன்னடத்தில் இருக்கின்றன. குறைந்த வேலைகளே அங்கு நடைபெறுகின்றன.

  மேற்கு வங்காளம், வங்காள தேசம் ஆகிய இடங்களில் ஆட்சி மொழியாக இருப்பது வங்காள மொழி. 230 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதைப் பேசுகிறார்கள். தொடக்கத்தில் விக்கிப்பீடியா மாநாடு ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். இப்போது வளர்ச்சி சற்று மெதுவாகி இருக்கிறது. முதற்பக்க கட்டுரை நெடுங்காலமாக இன்றைப்படுதப்படவில்லை.

  மாரத்தியில் 20,831 கட்டுரைகள் இருக்கின்றன. தெலுங்கு போல அனேகமானவை ஒருவரி இருவரி பக்கங்கள். ஆனால் இப்போது அங்கு சற்று கூடிய வேலைகள் நடைபெறுகின்றன.

  குஜராத்தி மொழியில் 2596 கட்டுரைகள் மட்டுமே உண்டு. எந்த வித குறிப்பிடத்தக்க வேலைகளும் இப்போது காணப்படவில்லை.

  சுமார் 100 மில்லியன் மக்களுக்கு மேல் பேசுகிற பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா தொடக்க கட்ட நிலையில் இருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை 405. இவற்றுள் பெரும்பான்மை ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டு மொழி பெயர்க்கப்படாதவை.

  இப்படி பெரிய இந்திய மொழிகளே இந்த நிலை என்றால் சிறிய மொழிகள் இன்னும் குன்றிய நிலையில் உள்ளன. காஷ்மீரி, கொங்காணி, ஒரியா ஆகிய மொழிகளில் மிகக்குறைந்த வேலைகள் நடைபெறுகின்றன, மற்ற பல மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.

  சமஸ்கிருத மொழிக்கும் ஒரு விக்கிப்பீடியா இருக்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கப்படும், பல மொழியியல் ஆர்வலர்களைக் கொண்டிருக்கும் இந்த மொழியின் விக்கிப்பீடியாவும் எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை.

  ஒரு மொழியின் விக்கிப்பீடியாவை வைத்து அந்த மொழியின் நிலை பற்றி ஒன்றும் இறுதியாக கூடமுடியாது. ஆனால் விக்கிப்பீடியா ஒரு மொழி இணையத்தில் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு ஒர் அளவுகோல். எத்தனை பேரை இணையம் அவர்களது மொழியில் சென்றடைந்திருக்கிறது என்பதற்கு இது சான்று பகிர்கிறது.

  தமிழ் மொழியில் தமிழ் விக்கிப்பீடியாவுடன் விக்சனரி (100 000 மேற்பட்ட சொற்களுடன்), விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்கி மூலங்கள், விக்கி மேற்கோள்கள் ஆகிய சகோதரத் திட்டங்களும் உண்டு.

  தமிழ் மொழியை மேலும் வளர்த்து, இந்திய மொழிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாற்ற உங்களின் பங்களிப்பு அவசியமானது.

  மேலும் தகவல்கள்:
  http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:இந்திய விக்கிகள்
  http://ta.wikipedia.org/wiki/இந்திய மொழிகள்

  தரவுகள்:
  நவம்பர் 22, 2008 - http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias

  Thursday, November 20, 2008

  தமிழுக்கு வளம் கற்பனை இலக்கியம் மட்டுமா?

  எழுதப்பட்டதெல்லாம் இலக்கியம் என்பது ஒரு வரையறை. ஆனால் தமிழில் இலக்கியம் என்பது செய்யுள் அல்லது கவிதை, சிறுகதை, புதினம், காப்பியம் ஆகிய வடிவங்களை மட்டுமே பெரிதும் குறிக்கிறது. இவையே படைப்பிலகியங்களாக போற்றப்படுகின்றன. தமிழில் கற்பனை இலக்கியங்களுக்கு தரப்பட்ட மதிப்பு தகவல் படைப்புகளுக்கு வழங்கபபடவில்லை. (திருக்குறள் தொல்காப்பியம் போன்ற சில விதிவிலக்குகள் உண்டு.) அதனால் அறிவியலும் தொழில்நுட்பத்திலும் தமிழர் மேம்பட்டு இருந்தாலும், இன்ப இலக்கியங்கள் அளவுக்கு தகவல் படைப்புகளை அவர்கள் எழுதவில்லை. இன்று அறிவியல் தமிழ் நலிவுற்று இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.


  தகவல் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டது தமிழ் மொழியின் இயல்பு அல்ல, அது ஒரு காலகட்ட தமிழ்ச் சமூகத்தின் இயல்பு. தமிழ்ச் சமூகத்திலும் இந்தியாவிலும் சோதிடர்கள் மதிக்கப்பட்டனர். அறிவைச் சிகிசை நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பல காலமாக ஆத்மா புகழப்பட்டு உடல் இழிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி மொழியில் பிரதிபலிக்கிறது.


  இன்றும் எழுத்தாளர் என்றால் கவிதை, சிறுகதை, புதினம் எழுதவேண்டும். அந்த மரபை விட்டு சற்று விலகினால் இகழ்ச்சிதான் மிஞ்சும். சில விமர்சகர்கள் இந்த மரபை உடைத்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்கள் கட்டுரைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள். இருப்பினும் தமிழில் படைப்பாக்கம் என்றால் கற்பனை இலக்கியங்கள் மட்டுமே என்ற மனப்படிவம் இன்னும் இருக்கிறது.


  சமய இலக்கியங்கள் தமிழில் முடியுமா என்று ஒரு போதும் சந்தேகம் எழுந்ததில்லை. அர்ச்சனை தமிழிலும் தேவையா என்பது வேறு ஒரு கேள்வி. அரசியல் பற்றி தமிழில் எழுத முடியுமா என்று சந்தேகம் இருந்தது. பத்திரிகைகளில் அரசியலும் போரியலும் விரிவாக எழுதப்பட்டது. சமூக அறிவியல் பற்றி தமிழில் எழுத முடியுமா என்று சந்தேகம் இருந்தது. பின்நவீனத்துவம், கட்டுடைப்பு, இருத்தலியல், மானிடவியல் என துல்லியமான சமூகவியல் தலைப்புகளில் சாதாரணமாய் சிற்றிதழ்களில் தமிழில் அலசப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பற்றி தமிழில் முடியுமா என்பது இன்றைய கேள்வி. முடியும். அதற்கான ஊடகம் இணையம். அதில் ஒரு களம் தமிழ் விக்கிப்பீடியா.


  தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கு ஒரு சிறப்பு, பலம் என்பதில் எந்த கருத்துவேறுபாடும் கிடையாது. எமது புலவர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும் தந்த தமிழ் இலக்கியங்கள் தமிழின் அசைக்க முடியா சொத்து. தகவல் படைப்புகள் பயன்பாட்டிலும் படைப்பாக்கத்திலும் அவற்றுக்கு எந்த விததிலும் குறைந்தவை அல்ல. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் தமிழர்கள் தமிழில் தகவல் படைப்புகளையும் தர வேண்டும்.

  பயனர் பங்களிப்பு - குறுங்கட்டுரையாக்கம்

  தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன.

  ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதிவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை மேம்படுத்தலாம். விக்கி இடை இனைப்பு என்பது தமிழ் விக்கி தலைப்புக்கும் பிற மொழி தலைப்புகளுக்கும் இடது பக்கத்தில் தரப்படும் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு ஊடாக பிற பயனர் ஆங்கில விக்கிகோ பிற மொழி விக்கிகளுக்கோ சென்று மேலும் தகவல்களைப் பெற்று கட்டுரையை விரிபுபடுத்தலாம்.

  விக்கி உள் இணைப்பு என்பது தமிழ் விக்கியிலேயே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்பு தருதல் ஆகும். இது சொல்ல வந்த தலைப்பில் இருந்து விலகாமல், ஆனால் பயனர்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படக்கூடிய தலைப்புகளுக்கு இணைப்பு தருவதாகும். இதுவே கலைச்சொற்களை இணைத்து தமிழில் அறிவியல் தொழில்நுட்ப கருத்துப்புலத்தை கட்டமைக்கு உதவுகின்றது.

  வெளி இணைப்புகள் இணையத்தில் தலைப்பு தொடர்பாக இருக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகள். சிறப்பாக தமிழ் கட்டுரைகளை தேடி இணைத்தால் பயனர்களுக்கு பயன் மிகும். தகுந்த ஒளிப்படம், விளக்கப்படம் ஆகியவற்றை இணைத்தால் கட்டுரைப் படிக்க ஆர்வத்தை தூண்டும். ஒலி, நிகழ்பட கோப்புக்களும் இருந்தால் இணைக்கலாம். விக்கி நுட்பங்கள் பரிச்சியமானவுடன் வார்ப்புருக்களைப் (Template) பயன்படுதி, தகவல்களை சுருக்கமாக தரலாம். பட்டியல், அட்டவணை முறைகளிலும் தகவல்களைப் பகிரலாம். இறுதியாக தகுந்த பகுப்புகளுக்குள் (வகைக்குள்) அந்த கட்டுரையை இடவேண்டும். விக்கி பக்கத்தில் எ.கா [[பகுப்பு:அறிவியல்]] என்று சேர்ப்பதன் மூலம் அந்த பகுப்புக்குள் இடலாம்.

  எல்லாவற்றாயும் நீங்களே செய்ய வேண்டும் என்றில்லை. மூன்று வசங்களை இட்டால் பிற பயனர்கள் வந்து மேம்படுத்துவர். அல்லது நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை மேம்படுத்தலாம். எனவே இங்கே எழுத்து திறமை எனபதிலும் பார்க்க ஆர்வமும், ஓரளவு விக்கி நுட்பமும் தான் வேண்டும். மாணவர், துறைசாரார், எழுத்தாளர்கள். வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்கள் என எல்லோரும் தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் ஆக்க முன்வரவேண்டும்.

  Wednesday, November 19, 2008

  16,000 கட்டுரைகள் எட்டியாயிற்று

  நவம்பர் 19,2008 ஆகிய இன்று 16,000 கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா எட்டியுள்ளது. நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகள் இருந்தன. ஓராண்டில் 4,000 கட்டுரைகள் ஆக்கியிருக்கின்றோம். பங்களித்த அனைவருக்கும், குறிப்பாக மயூரநாதன் அவர்களுக்கும் மற்றும் கனகு, நற்கீரன், வெர்க்லோரும், டேனியல் பாண்டியன், டெரன்சு, சிவக்குமார், சுந்தர், கார்த்திக், குறும்பன், சந்திரவதனா, உமாபதி, கலாநிதி, நரேந்திரன் ரவீந்தீரன், அருநாடன் (கணேஷ்), வாசு (VasuVR), ரவி, முத்து1809, மற்றும் யாவருக்கும் நன்றிகள். இதே விரைவில் கட்டுரைகளை ஆக்கினாலும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20,000 கட்டுரைகளை எட்டுவோம். இன்னும் பல பயனர்கள் வந்து பங்களித்து உதவினால் பெரிய வளர்ச்சி அடைய முடியும். டேனியல் பாண்டியன் போல் அருமையாக விரிவாக்கம் செய்யும் பயனர்கள் கிடைத்தால் தமிழ் விக்கிப்பீடியா பெருமைபடக்கூடிய ஆழம் உடையதாக இருக்கும்.

  [[பயனர்:செல்வா|செல்வா]] 02:31, 20 நவம்பர் 2008 (UTC)

  Saturday, November 8, 2008

  16000 கட்டுரைகளை நோக்கி, தமிழ் 67 வது நிலையில்

  தமிழ் விக்கிப்பீடியா 16000 கட்டுரைகளை விரைவில் எட்டிவிடும். ஆங்கிலத்தில் 2600000 கட்டுரைகளுக்கு மேலே உண்டு. அப்படி பாக்கையில் தமிழ் ஒரு துளிதான். ஆங்கிலம் தவிர்த்து மற்ற 22 மொழிகளில் 100 000 மேலே கட்டுரைகள் உண்டு. இவற்றுள் சீனம், ஜப்பானிஸ் தவிர்த்து மற்ற எல்லாம் ஐரோப்பிய மொழிகளே.

  இந்திய மொழிகளில் கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு, இந்தி, மாராத்தி 20000 கட்டுரைகளுக்கு மேலே கொண்ண்டுள்ளன. தரத்தில் மலையாளம், தமிழ் விக்கிகள் சிறப்பு.

  பேசும் மக்கள் தொகை அடிப்படையிலும், மொழியின் விருத்தி அடிப்படையிலும் தமிழ் முதல் 15மொழிகளில் ஒன்று எனலாம். 6000 மேற்பட்ட மொழிகள் வழங்கும் இன்றைய சூழலில் அது ஒரு நல்ல நிலையே. அப்படி இருந்தும் தமிழ் விக்கிப்பீடியா 67 நிலையில் இருப்பது கவனத்துக்குரியது. ஏன் என்று பார்த்தால் தமிழ் இணையம் இன்னும் விரிவாக தமிழ் சமூகத்திடம் செல்ல வில்லை என்பது ஒர் அடிப்படைக் காரணம். அது தவிர்த்து தமிழ் விக்கிப்பீடியா பற்றி தமிழ் இணையச் சமூகம் இன்னும் முற்றிலும் விளங்கிக் கொள்ளவில்லை. மற்றொரு காரணம் தமிழ் பற்று ஆர்வம் மிகுந்த பலர் "வாய் சொல்லில் வீரர்" ஆக மட்டும் இருப்பது.

  தமிழ் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் பெரும் குறை அறிவியல் தொழில்நுட்ப விடயங்களைப் பகிர்வது கடினம் எனபதாகும். இது வரைக்கும் தமிழ் அறிஞர் சில நூறாயிரம் சொற்களை ஆக்கி உள்ளார்கள். ஆனால் அந்த சொற்கள் கருத்து சூழலில் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. கருத்து தொடர்புள்ள சொற்களை மீயிணைப்பு மூலம் இணைத்து பல துறை சார் கருத்து விரிவாக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் எளிது. மேலும் தமிழ்நாட்டு கலைச்சொற்களுக்கும், இலங்கை கலைச்சொற்களுக்கு சில வேறுபாடுகள் உண்டு. இந்தக் குறையை தீர்க்க தமிழ் விக்கிப்பீடியா ஓர் அரிய களம்.

  இது முற்றிலும் ஒரு புலமைசார் களம் இல்லை. யாரும் இணையலாம். யாரும் அவருக்கு ஏற்ற நேரத்தில், ஈடுபாடு கொண்ட துறையில், இணையம் மூலம் பங்களிக்கலாம். அனைவருக்கும் நல்வரவு.

  Wednesday, September 10, 2008

  உங்களுக்கு விரும்பிய தலைப்புகள்

  தமிழ் விக்கிப்பீடியா என்றால் எதாவது கனமாகத் தான் எழுத வேண்டும் என்று சிலர் எண்ணக்கூடும். சில தகவல்களுக்கு நாம் கூடிய கவனம் எடுத்து தொகுக்க முனைவது உண்மை. அதற்காக தலைப்புகள் எல்லாம் கனமாக இருக்க வேண்டியதில்லை.

  உங்களுக்கு விருப்பமான நூல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உணவுகள், உடைகள், இடங்கள், சுற்றுலா ஈர்ப்புகள், நபர்கள், விளையாட்டுக்கள், புதிர்கள், கருத்துருக்கள் மற்று பல விடயங்கள் பற்றி நீங்கள் கட்டுரைகள் எழுதலாம்.

  உங்களுக்கு பழமொழிகள் தெரியுமா, விடுகதைகள் தெரியுமா, உவமைகள் தெரியுமா அவற்றையும் நீங்கள் பட்டியல்களில் சேர்க்கலாம்.

  உங்களுக்கு வேறு மொழி தெரியுமா. அந்த மொழியுடன் தமிழை ஒப்பிட்டு ஒரு அட்டவணை தயாரிக்கலாம்.

  நீங்கள் ஒரு வரைகலைக் கலைஞரா. கருத்துருக்களை விளக்கி வரைபடங்களை சேர்க்கலாம்.

  எனவே அன்பர்களே, தயங்காமல் வந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள்.

  இது ஒரு கூட்டாக்கம். இதில் குறைகள் இருந்தால் நீங்கள் நேரடியாக பங்களித்து சரியெல்லாம். நுட்ப, கலைச்சொல், எழுத்து உதவிகள் தேவை என்றால் நாம் இயன்றவரை உதவுவோம். அனைவருக்கும் நல்வரவு.

  Sunday, August 17, 2008

  தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகளை எட்டிவிட்டது

  செல்வா கருத்து
  இன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல் ஆக வேண்டும். மலையாள விக்கியில் ஏறத்தாழ 50 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகளாக அறிவித்து இருக்கின்றார்கள். நெடிய கட்டுரைகளாகவும் (80-100 கிலோபைட் போன்ற அளவில்) அவை இருக்கின்றன. உள்ளடக்கத்தின் சிறப்பை ஓரளவுக்கு உணரமுடிந்தாலும், எழுத்துநடையின் சிறப்பு என்னவாக உள்ளது என்பதை நான் அறியேன். பொதுவாக மலையாளமும், அண்மையில் இந்தியும் மிக நன்றாக முன்னேறி வருவதாக உணர்கிறேன். இதுகாறும் தமிழ் விக்கி அடைந்துள்ள முன்னேற்றம், தரம் பெருமை உடையதாக உள்ளது. பங்களித்த யாவரும் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். வரும் ஓராண்டில் குறைந்தது 7,000 புதிய கட்டுரைகளும் (முடிந்தால் 10,000மும்), பெருமை சேர்க்கும் ஒரு 100 அருமையான நடுநீள (30-50 கி'பைட்), அல்லது நெடிய (>50 கி 'பைட்) கட்டுரைகளும் நம் பங்களிப்பாளர்கள் ஆக்க முற்பட வேண்டும் என்பது என் அவா! பங்களிப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்!--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:02, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

  மயூரநாதன் கருத்து
  செல்வா சொல்வது சரிதான். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் ஆகப்போகின்றன. 15,000 கட்டுரைகளையும் எட்ட இருக்கிறோம். ஏறத்தாழ சராசரியாக ஓராண்டுக்கு 3,000 கட்டுரைகள். நவம்பர் 2007 தொடக்கம் இன்று வரையான சுமார் 10 மாதகாலத்தில் 3,000 கட்டுரைகள் எழுதியிருப்பது சராசரியிலும் கூடவாக இருப்பினும், ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி வீதத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது வேகம் போதாது என்பது உண்மைதான். செல்வா குறிப்பிட்டது போல், மலையாள விக்கி பல அம்சங்களிலும் சிறப்பாக முன்னேறி வருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய கட்டுரைகளை அவர்கள் எழுதி வருகிறார்கள். அந்த விக்கியின் "Depth" 117 ஆக இருக்க தமிழ் விக்கியின் "Depth" 20 மட்டுமே. இது அவர்களது பங்களிப்புச் செறிவைக் காட்டுகிறதா எனத் தெரியவில்லை. எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் விக்கியில் கட்டுரை ஆக்க வேகத்தைக் கூட்டவேண்டும். தானியங்கிக் கட்டுரை ஆக்க விடயத்தில் ஓரளவு கவனம் செலுத்தலாம். ஆனால், நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுத முயலவேண்டும். திட்டமிட்டுச் செயல்பட்டால் தற்போதுள்ள வளங்களுடனேயே கூடிய பயனைப் பெறலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியிலும் தற்போது நீளம் கூடிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எனது பங்குக்கு நானும் ஏற்கெனவே இருக்கும் சில கட்டுரைகளை விரிவு படுத்துவதுடன் புதிய சில பெரிய கட்டுரைகளை எழுதவும் எண்ணியுள்ளேன். கட்டுரையின் நீளம் கூடுதலாக இருப்பது மட்டுமன்றி அவை முழுமையானவையாகவும் இருக்கவேண்டும். அத்துடன், சான்றுகள் கொடுத்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 16:09, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

  நற்கீரன் கருத்து
  முக்கிய கருத்துருக்களும் (concepts) தலைப்புகளுக்கும் கவனம் தாருங்கள். [[கோயில்]] என்ற கட்டுரை முக்கியம். ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கும் கோயில்கள் பற்றி தீவர பங்களிப்பாளர்கள் எழுதுவது அவசியமில்லை (ஆர்வம் இருந்தால் நிச்சியம் எழுதலாம், ஆனால் தரம் எண்ணிக்கை என்ற நோக்கில் அப்படி எழுத தேவையில்லை). அதற்கு அவை பற்றி சிறப்பு ஈடுபாடுள்ள பயனர்கள் வந்து எழுதலாம். நிச்சியமாக தமிழில் எல்லா [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]] பற்றியும் கட்டுரைகள் எழுதப்பட கூடிய சாத்தியக் கூறு குறைவு. ஆனால் நாம் [[கணிதம்|கணிதத்]] துறையின் முக்கிய தலைப்புகள் அனைத்திலும் கட்டுரைகளை எழுத முடியும், எழுத வேண்டும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:46, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

  கோபி கருத்து
  15,000 கட்டுரைகளை எட்டும்போது நாம் அவற்றில் எத்தனை கலைக்களஞ்சியக் கட்டுரையாகக் கருதப்படக் கூடியன என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. கட்டுரை அளவு 2 கி'பைட் என்றாலும் 20 கி'பைட் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையாக இருப்பது முக்கியமென நினைக்கிறேன். முக்கிய கட்டுரைத் தலைப்புக்கள் அனைத்திற்கும் குறைந்தது 2 கி'பைட் அளவிலேனும் கட்டுரைகள் வேண்டும். அவற்றில் பல தொடங்கப்படாமலேயே உள்ளன. (பொருத்தமான இணைய இணைப்பின்மையால் பங்களிக்க முடியாதுள்ளேன். இனிவரும் காலங்களில் அவ்வப்போதேனும் பங்களிக்க முயல்கிறேன்.) நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 16:59, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

  உமாபதி கருத்து
  திருகோணமலையில் தங்கியிருக்கும் இடத்தில் ஒழுங்கான இணைப்பு இல்லை. [[டயல்-அப் இணைப்பு|டயல்-அப் இணைப்பில்]] தான் பங்களித்து வருகின்றேன். மோசமான ஆமைவேக இணைப்பால் பெரும்பாலும் இரவு காத்திருந்தே பங்களிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றேன். திருகோணமலையில் அகலப்பட்டை இணைப்பை வழங்க ஆரம்பித்து விட்டனர். தற்போது அலுவலகங்களுக்கு மாத்திரமே வழங்கிவருகின்றனர். தொடர்ந்து வீடுகளுக்கு வழங்குவார்கள் என திடமாக நம்புகின்றேன். இணைப்பு ஒழுங்காகியுடன் நிச்சமாயாக என்பங்களிப்பை அதிகரிக்க முயல்கின்றேன். --[[User:உமாபதி|உமாபதி]] \[[User talk:உமாபதி|பேச்சு]] 17:05, 16 ஆகஸ்ட் 2008 (UTC)


  www.ta.wikipedia.org

  Tuesday, July 29, 2008

  தமிழ் விக்கிப்பீடியா - தமிழின் அறிவியல் தொழில்நுட்ப களம்

  எத்தனையோ சமய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ் சமய மொழியாக இருக்க முடியுமா என்பதை சிலர் கேள்விக்குட்படுத்தினர். தமிழில் அர்ச்சனையா என்றும் சிலர் முரண்பட்டனர்.

  தமிழரின் தாயகங்களிலேயே தமிழ் அரச மொழியாக வழங்குவதற்கு பல தடைகள் இருந்தன. இந்தி, சிங்களம் என மொழித் திணிப்பு முயற்சிகளும் இடம்பெற்றன. இதை மீறியும் தமிழ் இந்தியா (தமிழ்நாடு), இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாகியது.

  தமிழில் சமூகவியல், மெய்யியல் கதையாடல்கள் சாத்தியமா எனப் பலர் கேள்வி எழுப்பினர். சிற்றிதழ்களின் எழுச்சி இது நிச்சயம் முடியும் என்றே நிரூபித்திருக்கின்றன.

  அதேபோல் தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் முடியுமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இது தேவையா என்றும் கேட்கப்படுகிறது. தமிழில் மருத்துவம், கணிதம், மொழியியல் என பல அறிவியல் துறைகளில் மரபு வழி அறிவு இருக்கிறது என்பதை இவர்கள் ஏனோ இலகுவில் மறந்துவிடுகிறார்கள். அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்கில மொழியுடன் இணைத்துப் பார்ப்பது குறுகிய பார்வை. சீன, உருசிய, ஜப்பானிய, அரபு மற்றும் பல மொழிகளிலும் அறிவு இருக்கின்றது என்பதை எளிதில் மறைத்துவிடுகிறது. தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் முடியும், அது அவசியமும் கூட. அதற்கு தமிழ் விக்கிப்பீடியா(http://ta.wikipedia.org/) ஒரு நல்ல களம்.

  தமிழ் கலைச்சொற்கள் பல காலமாக உருவாக்கப்பட்டு வந்தன. இத்தகைய 100 000 கலைச்சொற்கள் தமிழ் விக்சனரியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தகுந்தவாறு கருத்துப் புலத்தில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை என்பதுவே ஒரு பெரும் குறையாக இருந்தது. கருத்துப் புலத்தில் அல்லது சூழலில் சொற்கள் பயன்படும்பொழுது தான் அவற்றின் குறை நிறைகள் தெரியும். இதற்கு தமிழ் விக்கிப்பீடியா ஒரு சிறந்த களம்.

  தமிழ் கலைச்சொற்களில் இலங்கை வழக்கம், தமிழக வழக்கம் இன்னும் பிற வழக்கங்கள் என்று சீர்தரம் இன்றி இருந்தன. இதுவரை இவற்றை சீர்தரம் செய்ய ஒரு நல்ல களம் இருக்க வில்லை. குறைந்த பட்சம் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது.

  இலக்கியம் இலக்கியம் இலக்கியம் என்று தமிழ் அறிஞர்கள் இலக்கியத்துக்கு தந்த அக்கறையை சற்று நுட்ப எழுத்துக்கும் தரத் தொடங்கி உள்ளார்கள். ஆங்கிலத்தில் Technical Writing, Science Writing என்று சிறப்பு கவனம் பெற்ற துறைகள் தமிழில் இப்போதே அரும்பத் தொடங்கி உள்ளன. உணர்ச்சி வயப்பட்டு இல்லாமல் தகவல் செறிவுடன் தர்க்க சீர்மையுடன் நுட்ப எழுத்து தமிழிலும் முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் இப்பொழுது உண்டு.

  அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அறிமுகம் அல்லது துணுக்க கோவை என்றே ஒரு காலத்தில் தமிழில் வழக்கம் இருந்தது. அகல உழுவது மட்டுமல்ல ஆழ உழுவதும் தேவை. ஆழமான துல்லியமான கட்டுரைகளை ஆக்கிப் பகிர்வதற்கும், அறிமுகக் கட்டுரைகளைப் பகிர்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல களம்.

  தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் முடியும் என்று தெரிகின்றது. தமிழில் அறிவியல் தொழில்நுட்பம் தேவையா? இதற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழருக்கு தேவை என்றால், அது தமிழிலும் தேவை. தமிழின் மரபுவழி அறிவைப் பேணி, பயன்படுத்தி, இன்று பல்மொழிச் சூழலில் ஆக்கப்படும் அறிவியல் தொழில்நுட்ப அறிவை உள்வாங்கி வளர இது தேவை. எனவே பயனர்களே உங்களின் சிறு பங்களிப்பையும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு செய்ய முன்வருவீர்.

  Sunday, July 27, 2008

  முதற்பக்க கட்டுரைகள் - ஜூலை 27

  முதற்பக்கம்
  கலைமான்
  மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்
  மலையாள எழுத்துமுறை

  Monday, July 21, 2008

  விக்கிமேனியா 2008, எகிப்து

  2008 விக்கிமேனியா அலெக்ஸ்சான்டிரியா எகிப்தில் (http://wikimania2008.wikimedia.org/wiki/Main_Page) நடைபெறுகிறது. உலகமெங்கும் இருந்து விக்கி ஆர்வலர்கள் பங்கு கொள்கிறார்கள். மேற்கில் விக்கி பலதில் ஒரு திட்டமாக இருக்கலாம், ஆனால் கிழக்கில் அது ஒரு புரட்சி என்று பயனர் ஒருவர் பேசுகையில் குறிப்பிட்டார்.

  சுட்டிகள்:
  * A Wikipedian Challenge: Convincing Arabic Speakers to Write in Arabic
  * In Egypt, a Thirst for Technology and Progress
  * In Egypt, Wikipedia is more than hobby
  * எகிப்து

  Sunday, July 20, 2008

  முதற்பக்க கட்டுரைகள் - ஜூலை 20

  முதற்பக்கம்
  கோயில்
  இயற்கை எரிவளி
  வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்

  Saturday, July 19, 2008

  தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகள் நோக்கி

  2003 இறுதியில் தொடங்கப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா இப்பொழுது 15000 கட்டுரைகள் நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு நல்ல வளர்ச்சி. இருப்பினும் 70 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேசும் மொழிக்கு இது போதாது. மேலும் பல பயனர்கள் நேரடியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிக்க முன்வரவேண்டும். என்ன தயக்கம், ஏன் தயக்கம் என்று தற்போது தீவரமாக பங்களிக்கும் பயனர்களுக்கு புரியவில்லை. குறுங்கட்டுரைகளே மிக்க பயன் தர வல்லவை. உலக நாடுகளில் இருந்து ஒருமித்து பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல களம். தமிழ் விக்கிப்பீடியா சமூகம் இயன்றவரை உதவுவோம். எனவே பயனர்களே நேரடியாக பங்களிக்க முன்வாருங்கள். ஒரு சிறு கட்டுரை, ஒரு சிறு திருத்த, ஒரு படம், ஒரு வார்ப்புரு, ஒரு கருத்து. உங்களால் நிச்சியம் முடியும்.

  தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு

  Saturday, June 7, 2008

  விக்கிபீடியா இல்லை விக்கிப்பீடியா

  Wikipedia என்பதை விக்கிபீடியா என்றே இதுவரை தமிழில் எழுதி வந்தோம். தமிழ் ஒலிப்பு இலக்கணப்படி இதை Wikibedia என்றே உச்சரிக்க இயலும் என்பதால், இனி விக்கிப்பீடியா என்று எழுதுவது என முறைப்படி முடிவெடுத்திருக்கிறோம். இனி விக்கிப்பீடியா என்றே எழுதுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

  Tuesday, April 15, 2008

  விக்கித் திட்டம் நாடுகள்

  நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு கலைக்களஞ்சியதுக்கு அடிப்படையானவை. இடம் பற்றிய தகவல் பல கட்டுரைகளில் பயன்படுகிறது. அதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் (த.வி) நாடுகள் தொடர்பான ஒரு விக்கி திட்டம் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கிறது.

  நாடுகள் பற்றிய கட்டுரைகள் வெறும் மொழிப் பெயர்ப்புக்கள் மட்டுமல்ல. எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கிருந்தெல்லாம் தமிழர் கண்னோட்டத்தோடு கட்டுரைகள் ஆக்குவதை நாம் வரவேற்கிறோம். திட்டத்தின் முதற்கட்ட நோக்கங்கள் பின்வருமாறு:


  • எல்லா நாடுகளுக்கும் அறிமுக கட்டுரைகளை ஆக்குதல்.
  • நாடுகள் தகவல் சட்டத்தை ஒருங்கிணைத்தல்.
  • எல்லா நாட்டு கட்டுரைகளின் அமைப்புகளை ஒருமுகப்படுத்தல்
  • ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் உள்ளவற்றை சீராக தமிழாக்கம் செய்தல்.

  தற்போது 87% மேலான முதற்கட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகுதியையும் விரைந்து நிறைவேற்ற அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.

  த.வி இணைப்பு:
  http://ta.wikipedia.org/wiki/Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்

  Friday, April 11, 2008

  விக்கி திட்டங்களுக்குப் புகைப்படக் கொடை அளியுங்கள்

  விக்கிமீடியா திட்டங்களுக்கு உங்கள் புகைப்படக் கொடையை வரவேற்கிறோம்.

  விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால், கட்டுரை மட்டும் தான் எழுத வேண்டும் என்றில்லை. இன்னும் பல வகைகளிலும் பங்களிக்கலாம்.


  விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதால் இதில் இடம்பெறும் படங்களும் காப்புரிமை விலக்கு பெற்றிருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால், தமிழ்ச்சூழலுக்குத் தேவையான இத்தகைய படங்கள் வலையில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எனவே, நீங்கள் எடுத்த புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றில் ஒரு கலைக்களஞ்சியத்துக்குப் பயன்படக்கூடும் என்று நீங்கள் நினைப்பவற்றை முறையான உரிம விளக்கத்துடன் http://commons.wikimedia.org தளத்தில் பதிவேற்றினால் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிநூல்கள் முதலிய எல்லா திட்டங்களிலும் எல்லா உலக மொழிப் பதிப்புகளிலும் பயன்படுத்த இயலும்.

  என்னென்ன மாதிரி படங்களை பதிவேற்றலாம்?

  மாட்டுவண்டி, கோழி, கோயில் தூண், பஞ்சு மிட்டாய் விற்பவர், திருமணக் காட்சிகள், திருவிழா காட்சிகள், மேடைப்பேச்சுகள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் உங்கள் கண்ணில் படக்கூடிய எந்தக் காட்சியானாலும் ஒலி, ஒளி வடிவில் தயக்கமின்றி பதிவேற்றுங்கள். இவற்றைத் தகுந்த இடங்களில் எங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

  உங்கள் படங்களை இன்றே பதிவேற்றிட Commons செல்லுங்கள்.

  Tuesday, April 8, 2008

  விக்கித் திட்டம் பொறியியல்

  விக்கித் திட்டம் பொறியியல்

  விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கிப்பீடியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.

  பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும் தமிழில் இக்கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம்.

  இந்தப் பணியின் முதற்கட்டமாக பினவரும் வேலைத்திட்டம் உள்ளது:


  • இதுவரையில் எழுதப்பட்டிருக்கும் பொறியியல் கட்டுரைகளை கணக்கெடுத்தல், பகுத்தல்.
  • தேவையான அடிப்படை அலகுகள் பற்றிய கட்டுரைகளை அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
  • முதன்மை பொறியியல் துறைகளையும் அவற்றில் முக்கிய கட்டுரைகளையும் அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
  • தேவையான கலைச்சொற்களை கண்டறிதல், பட்டியலிடுதல்.
  • தேவைப்படும் தகவற் சட்டங்களை அடையாளங்காண்டு பட்டியலிடுதல்.


  மேலதிக தகவல்களுக்கு திட்ட பக்கம் சென்று பாக்கவும்.

  ஆர்வமுள்ள அனைவரையும் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.

  தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ், தமிழர்

  தமிழ் விக்கிப்பீடியாவில் எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள். அதற்கமைய பல்வேறு துறை சார் தகவல்களை சேர்த்து வருகிறோம். தமிழ் தமிழர் பற்றிய தகவல்களும் அவற்றுள் அடங்கும். அனேகமான கட்டுரைகள் ஒரு தொடக்க நிலையிலேயே உள்ளன. அக்கட்டுரைகளை மேம்படுத்த உங்கள் அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. உங்களின் கருத்துக்களை இங்கேயும் தெரிவிக்கலாம்.


  தமிழர் பற்றிய பகுப்பு:
  http://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழர்
  தமிழர் பற்றிய கட்டுரை:
  http://ta.wikipedia.org/wiki/தமிழர்


  தமிழர்
  திராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேஷியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

  Tuesday, March 18, 2008

  தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்

  தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்

  Wednesday, March 5, 2008

  2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

  2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

  Tuesday, February 26, 2008

  பயனுள்ள தரவுத் தளங்கள் குறித்த தகவல்கள் தேவை

  விக்கிப்பீடியாவில் தானியக்கமாகத் தரவுத்தளங்களைக் கொண்டு கட்டுரைகளை ஆக்குவதுண்டு. எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் போரூர் கட்டுரையைப் பாருங்கள். இது இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை தந்த தரவுத்தளத்தின் அடிப்படையில் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கட்டுரை. இது போல் பல நூறு கட்டுரைகள் ஆக்கப்பட்டுள்ளன.

  இது போன்று கலைக்களஞ்சியத்துக்குப் பயன்படக்கூடிய தகவல்கள் ஏதும் தரவுத் தள வடிவில் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது, உங்களிடம் பயனுள்ள தகவல்களின் தொகுப்பு இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். அவற்றை, தரவுத்தளத்தில் இட்டு எப்படி விக்கிப்பீடியாவுக்குப் பயன்படுத்துவது என்று சிந்திக்கலாம்.

  எடுத்துக்காட்டுக்கு, மொழிகள், இனங்கள், நோய்கள், நாணயங்கள், ஆறுகள், காடுகள், திரைப்படங்கள், உயிரினங்கள் போன்றவற்றின் தகவல்களை இப்படித் தரவுத்தள வடிவில் பெறுவது பொருத்தமாக இருக்கும். இதனால், மனித உழைப்பைச் செலுத்தி ஒவ்வொன்று குறித்தும் கைப்பட தனித்தனியே கட்டுரை எழுதுவதைத் தவிர்க்கலாம்.

  நன்றி.

  Thursday, January 31, 2008

  Indywiki - விக்கிபீடியாவில் படம் பார்க்க உதவும் உலாவி!

  Indywiki - விக்கிப்பீடியாவில் படம் பார்க்கவும், எளிதாக உலாவவும் ஒரு உலாவி.