Thursday, December 8, 2011

பிரித்தானியப் பாரம்பரியத் தொழிற்கலைகள்

பாரம்பரியத் தொழிகலை இழப்பு என்பது தமிழர்களுக்கு மட்டும் உரிய ஒரு சிக்கல் அல்ல. பிரித்தானியாவிலும் கூட இது ஒரு சிக்கல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தொழிற் புரட்சிக்கு அங்கு விருத்தி பெற்ற பாரம்பரியத் தொழிற்கலைகள் ஒரு முக்கிய மூலவேராக இருந்தன. இந்த தொழிற்கலைகளைப் பாதுகாக்கும் வண்ணம் பாரம்பரியத் கைத்தொழில்கள் அமைப்பு (http://www.heritagecrafts.org.uk) மற்றும் பிற நூற்றுக்கணக்கான அமைப்புக்களும் (http://www.heritagecrafts.org.uk/index.php/about/friends-and-affiliated-groups, http://www.worldskillslondon2011.com/) தனிநபர்களும் (http://traditionalcraftsblog.blogspot.com, http://greenwood-carving.blogspot.com, http://nicolawood-design.blogspot.com/p/projects.html) பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரித்தானிய அமைச்சர் யோன் கெயின்சு இந்தப் பாரம்பரிக் கலைகளை ஆய்வு (http://www.ccskills.org.uk/LinkClick.aspx?fileticket=6cMoZSIdVOA=&tabid=81) செய்வதற்காக ஒரு பெரும் தொகை பணத்தை ஒதுக்கி உள்ளார். இந்தப் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிப்பதன் மூலம் நவீன பொருளாரத்தின் ஒரு முக்கிய கூறாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை அவரின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

வில்வித்தை, எழுத்துக்கலை போன்றவை நவீன பொருளாதாரத்துக்கு பயன்படாமல் கூடப் போகலாம். ஆனால் அவற்றில் ஒரு இயல்பான நிறைவு கிடைக்கிறது. இசைக் கருவியைப் வாசிப்பது போன்று இந்தக் கலைகளைப் பயில்வதிலும் செய்வதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. இதற்காகவாவது இக் கலைகளைப் பாதுகாப்பது முக்கியம் ஆகிறது.

தமிழ்ச் சூழலைப் பொருத்த வரையில் அரசுகள் இந்த மாதிரி தொலைநோக்கான செயற்பாடுகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது தேவைகளை உணரக் கூடிய, தொலைநோக்கான அரசுகளை அமைக்க நாம் தவறிவிட்டோம். எனவே இந்த மாதிரி முன்னெடுப்புக்களை தனிநபர்களும், தன்னார்வலர் அமைப்புக்களுமே முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எழுதப்படாத அறிவு

கருவியில், ஓவியத்தில், சிலையில், கட்டிடத்தில், கைவேலைப்பொருளில், நிகழ்த்தலில், செயலாக்கங்களில், நுணுக்கங்களில் நிறைந்துகிடைக்கிறது எமது அறிவு. ஓர் எண்ணத்தை வெளிப்படுத்த, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல எழுத்து என்பது ஒரு வழிமுறை மட்டுமே. இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

உளவியலின் பல் அறிவுகள் கோட்பாட்டின் படி எழுத்தறிவை அல்லது மொழியறிவை விட வேறு பல அறிவுகள் உள்ளன. உடல்சார் அறிவு, இசை அறிவு, அக அறிவு, காட்சி அல்லது இடம்சார் அறிவு (spatial intelligence), மனிதத் தொடர்பாடல் அறிவு, இயற்கை அறிவு இருத்தலியல் அறிவு என்று பல்வேறு அறிவுகள் மனிதருக்கு உள்ளன. வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அறிவுகளில் கூடிய ஆற்றல்களையும் பிறவற்றில் குறைந்த ஆற்றல்களையும் பெற்று இருப்பர். இந்த அறிவுகள் எல்லாவற்றையும் நாம் எழுத்து மூலம் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

ஆடல்காரருக்கு, நடிகருக்கு, அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு, விளையாட்டு வீரருக்கு உடல் அறிவு முக்கியம் பெறுகிறது. நாம் எவ்வளவுதான் ஓர் ஆடலை எழுத்தில் விபரித்தாலும் அந்த ஆடலை காண்பதற்கு இணையாகாது.

ஓவியருக்கு, வடிவமைப்பாளருக்கு, கட்டிடக்கலைஞருக்கு இடம்சார் அல்லது காட்சியறிவு முக்கியம் பெறுகிறது. ஆயிரம் சொற்களுக்கு ஒரு படம் இணையானது என்பது ஒரு பழமொழி. வட்டத்தை வரையறை செய்து விளக்குவதிலும் பார்க்க படத்தைக் கீறி, இது வட்டம் என்று கூறுவது மிக எளிதானது. ஒருவரின் சிந்தனைத் திறனை விரித்து புது இயல்புகளை கற்பனை செய்ய அல்லது வடிவமைக்க இந்த அறிவு பயன்படுகிறது. இவ்வாறே பல்வேறு அறிவுகள் பல்வேறு வழிகளில் முக்கியம் பெறுகின்றன.

தமிழிலே நுட்பங்கள் பற்றி விரிவான தகவல்கள் எதுவும் எழுதப்படவில்லையெனினும் நாம் அவர்கள் விட்டுச் சென்ற தொல்பொருட்களில் இருந்தும், இன்றும் எம்மிடம் தலைமுறை தலைமுறையாக வழங்கும் கலைகளில் இருந்தும் அவற்றைப் பற்றி ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கலைகள் அழியவிடுவது என்பது எமது பல் அறிவுகளை அழியவிடுவது என்பதாகும். இதில் இருந்து நாம் மீளலாம், எமது அறிவுகளை மீட்டெக்கலாம், மீளுருவாக்கலாம், பேணலாம், புத்தாக்கம் செய்யலாம்.

எழுத்தைத் தாண்டி படங்களாக, ஒலிக் கோப்புக்களாக, நிகழ்படங்களாக, பல்லூடகப் பதிவுகளாக, பொருட்களாக, நிகழ்கலைகளாக நாம் இவற்றை ஆவணப்படுத்தல் காலத்தின் தேவை ஆகும். அதன் ஒரு சிறு முயற்சியான தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் உங்கள் பங்களிப்பை நல்கிடுவீர்.

Saturday, November 26, 2011

எமது தொழிற்கலைகளை பேணுதல், ஆவணப்படுத்தல், புத்தாக்கல்

எமது வாழ்வாதாரமாக விளங்கும் எமது தொழிற்கலைகளை நாம் தகுந்த மதிப்புத் தந்துப் பேணவில்லை, அவற்றில் புத்தாக்கம் செய்யவில்லை. மாற்றாக தொழில்களில் ஏற்றம் இறக்கம் காட்டி திறமைகளை சிறுமைப்படுத்தினோம். தொகை தொகையாக இலக்கியம் படைத்த தமிழ்ச் சமூகம், ஒரு சில தொழிற்கலை ஆவணங்களைத் தானும் உருவாக்க வில்லை. இப்போ, அந்தக் கலைகள் எல்லாம் காலவதியாகி விட்டன. அவற்றால் ஒரு பயனும் இல்லை. எனவே அவை அழிவதே இயல்பு என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

அந்தக் கலைகள் எல்லாம் காலவதியாகி விட்டன என்பது ஒரு பெரும் பொய். இன்றும் இன்னும் பல மில்லியன் தமிழர்கள் கலப்பையால் உழுத அல்லது கையால் நாத்து நடப்பட்ட அரிசியையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் கரைவலையால் இழுக்கப்பட்ட மீன்களையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் உள்ளூரில் மரவேலைக்கலை உயிர்ப்புடன் இருக்கிறது. உலோகக் கலை, நெசவுக்கலை, கட்டிடக்கலை, பல்வேறு கைத்தொழில்கள் என்று பல தொழிற்கலைகள் இன்றும் இன்னும் எமக்கு வாழ்வாதரமாக இருக்கின்றன. இவை வாழ்வாதரம் மட்டும் அல்ல எமது அடையாளமும் கூட. ஆனால் நாம் இவற்றைப் பேணுவது பற்றியோ, ஆவணப்படுத்துவது பற்றியோ சற்றும் அக்கறை அற்றவர்களாகவே இருக்கிறோம்.

நாம் ஏன் இவற்றை மதிப்பதில்லை. யேர்மனியர்களைப் போல், யப்பானிர்களைப் போல் நாம் ஏன் தொழிற்கலைகளை, தொழிற் கலைஞர்களை மதிப்பதில்லை. சாதியம் எம்மீது நடத்திய அட்டூளியத்தின் பாதிப்பா. அல்லது உலகமயமாதலால் நாம் எல்லோரும் முதலாளிகள் ஆகிவிடலாம் என்ற மாயையாலா. அலுவலக வேலை உயர்ந்தது, கைத்திறன் வேலை தாழ்தந்து என்ற எமது போலிச் சமூகச் சட்டகமா. இந்த மனநிலையின் அபத்தத்தை புகலிட நாடுகளில் இன்னும் விகாரமாகப் பார்க்கலாம். அங்கு சராசரி அலுவலக ஊழியரை விட சாராசரி தொற்கலைஞர், ஒர் இயந்திரவியலாளர், ஒரு கட்டுமானக் கலைஞர், ஒரு மரவேலைக்காரர் அதிக ஊழியம் பெறுகிறார். ஆனால் எமது சமூகத்தில் இந்தத் தொழிகளுக்கு மதிப்பு இல்லை.

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் நிலப்பரப்புக்களில் பெரும்பகுதி கடற்கரையை அண்டியவை. அதனால் இயல்பாக மீன்பிடிப்பு மற்றும் கடற்தொழில்களில் தமிழர்கள் அதிகம் ஈடுபட்டுவந்துள்ளார்கள். கடல் பற்றிய அறிவு, அதில் உள்ள உயிரினங்கள் பற்றிய அறிவு, அவற்றைப் பிடிப்பதற்கான பல்வேறு பொறிகள், வலைகள், தூண்டில்கள், கலவைகள் போன்ற கருவிகளின் தொழில்நுட்ப அறிவு எம்மிடம் உண்டு. கட்டுமரத்தில் இருந்து பல்லாயிர படைவீரர்களை பல மைல்கள் ஏற்றி இறக்கிய பெரும் கப்பல்கள் கட்டிய கப்பற்கலை என்று எமது அறிவு பரந்து இருந்தது. அண்மை வரை கப்பல் கட்டுவதில் நாம் பல புத்தாக்கங்களை செய்திருந்தோம். ஆனால் இவற்றை நாம் இன்னும் விரிவாக ஆவணப்படுத்தவில்லை, பேணவில்லை.

பல போதாமைகள் இருந்தாலும் ஒரு சில முயற்சிகளை இங்கு அடையாளப்படுத்துவது நன்று. தமிழ்நாட்டிலேயே பல்கலைக்கழகளுக்கான சிறந்த வலைத்தளங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் இணையத் தளமும் (http://agritech.tnau.ac.in/ta/) ஒன்று. இங்கு வேளாண்மை, மீன்பிடிப்பு, கால்நடை, வனவியல் போன்ற பல துறைகளில் விரிவான கட்டுரைகளும் தகவல்களும் தமிழில் கிடைக்கிறன. கடந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி நடத்திய போது பல மாணவர்கள் பிரதி செய்து அனுப்பி இருந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை இந்த வலைத்தளத்தில் இருந்துதான் வந்திருந்தன. (வேளாண் தளம் பற்றி ஒரு தனிக் கட்டுரை எழுதவேண்டும்.) இதே போல ஒரு பொறியல் பல்கலைக்கழகம், ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் செய்தால் அதனால் கிடைக்கும் பலன்களை எண்ணிப் பாருங்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் நாம் இயன்றவரை இவ்வாறான தகவல்களைத் தொகுக்த்து வருகிறோம். நூலகத் திட்டத்திலும் இந்தவகை அறிவை ஆவணப்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார்கள்.

இதில் நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு உள்ளூர் கருவியைப் பற்றி, தொழில் நுட்பத்தைப் பற்றி, தொழிலைப் பற்றி, தொறிற் கலைஞரைப் பற்றி, அது சார்ந்த பரந்த அறிவைப் பற்றி ஒரு படம், நிகழ்படம், ஒலிப் பதிவு அல்லது கட்டுரை என்று வழங்குங்கள். இவ்வாறு நாம் கூட்டாக இவற்றைப் பேணுவோம், வளர்த்தெடுப்போம்.

Monday, November 14, 2011

தமிழ் விக்கி ஊடகப்போட்டி!இந்த போட்டி பற்றிய விபரங்களை அறிய இங்கே செல்லுங்கள்.

Friday, October 14, 2011

தமிழ் விக்கிப்பீடியா 39 000 கட்டுரைகளைத் தாண்டியது

கடந்த ஆறு மாதங்களில் 9 000 புதிய குறு, நெடுங் கட்டுரைகள் உருவாக்கப்பட்டு, தற்போது தமிழ் விக்கிப்பீடியா 39 000 கட்டுரைகளைத் தாண்டி உள்ளது. கட்டுரைகளின் எண்ணிக்கையில் இந்திய விக்கிகளில் 3 ம் இடத்தில் இந்தி, தெலுங்குக்கு அடுத்தபடியாக தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. உலக அளவில் நாம் இப்போது 61 நிலையில் உள்ளோம். பெரும்பாலான கட்டுரைகள் தானியங்கிகள் இல்லாமல் பயனர்களால் நேரடியாக உருவாக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக இலங்கையில் இருந்து புன்னியாமீன், சிங்கப்பூரில் இருந்து கார்த்திக், ஃகொங்கொங்கில் இருந்து அருண், இந்தியாவில் இருந்து சங்கைப் பொதுவன், மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன், மற்றும் பல புதுப் பயனர்களின் பங்களிப்பு முதன்மையானது. இந்தக் குறுகிய கால கட்டத்தில் இந்தளவு கட்டுரைகளை எழுதியது தமிழ் விக்கியில் இதுவே முதல் முறை ஆகும்.

இந்தக் கால கட்டத்தில் தமிழ் இதழ்கள், துடுப்பாட்ட விளையாட்டு வீரர்கள், சிங்கப்பூர் மற்றும் ஃகொங்கொங் நகரங்களின் தொடரு நிலையங்கள், சங்க இலக்கியங்கள், மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், மருத்துவம், இரண்டாம் உலகப் போர் என பல வகைத் தலைப்புக்களில் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தலைப்புக்கள் பல தரப்பட்ட தகவல்கள் தமிழில் பகிரப்பட தமிழ் விக்கிப்பீடியா உகந்த களம் என்பதை உணர்ந்துகின்றன.

இந்தியாவில் வெறும் 10% மக்கள் கூட இன்னும் இணையத்தைப் பெறவில்லை. இலங்கையிலும் மலேசியாவிலும் இதைவிடச் சற்று மேம்பட்ட நிலை இருக்கலாம், ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் இன்னும் இணையத்துக்கு வரவில்லை. அவர்கள் வரும் போது, அவர்களுக்குப் போதுமான பயன் உள்ள உள்ளடக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை, பொறுப்பை இன்றைய தமிழ் இணையப் பயனர்கள் பெற்று உள்ளார்கள். ஆகவே வலைப்பதிவுகளில் மட்டும் அல்லாமல் கூட்டாக விக்கியூடகங்களிலும் உங்கள் படைப்பை வழங்குங்கள். தமிழ் விக்கிகளின் வளர்ச்சி வேகத்தை இன்னும் பல மடங்கு அதிகரியுங்கள். எண்ணிக்கையில் மட்டும் அல்ல கருத்து ஆழமான ஆக்கங்களையும் தாருங்கள். பங்களிப்பதில் ஏதும் நுட்பச் சிக்கலா, இன்றே எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Wednesday, October 12, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் மலேசியத் தமிழர் தகவல்கள்

மலேசியாவில் தமிழர்கள் பெருந்தொகையில் (~1.5 மில்லியன்) வாழ்கிறார்கள் என்று பலர் அறிந்து இருப்பினும் அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை, அவர்கள் தமது மொழியை பண்பாட்டை உரிமைகளைப் பேண எடுக்கும் முயற்சிகள், அவர்களின் படைப்புகள் போன்ற தகவல்களைப் பிற நாட்டுத் தமிழர்கள் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்புக்கள் அண்மை வரை இலகுவாக இருந்ததில்லை. ஆனால் இணையம் ஊடாக, வலைப்பதிவுகள் ஊடாக, தமிழ் விக்கியூடகங்கள் ஊடாக நாம் மலேசியத் தமிழர்கள் பற்றி அறியும் வாய்ப்புக்கள் பெருகி உள்ளன.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தமிழ்ப் பள்ளிகள், மலேசியத் தமிழ்த் தலைவர்கள், மலேசியத் தமிழ்ப் பெண்கள், தமிழர்கள் வசிக்கும் இடங்கள் பற்றி தகவல் ஆழம் மிக்க கட்டுரைகளை தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். நிறையப் படங்களைச் சேர்ப்பது எம்மை மலேசியாவிற்கு அழைத்துச் சொல்வது போல் உள்ளது. வேறு சில பயனர்களும் மலேசியத் தமிழ் மொழி, மலேசிய ஊடகங்கள் பற்றி தகவல் கட்டுரைகளைப் எழுது வருகிறார்கள். மலேசியாவில் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ் வழிக் கல்வியைப் பெறுவதையும், மிகுந்த சவால்களை எதிர்நோக்கியும் இவர்கள் அதைத் தொடர்வதையும் இக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்ப் பள்ளிகளும், தமிழ் வழிக் கல்வியும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மதிப்பிழந்து வரும் இத் தருவாயில் மலேசியாவிலும், இலங்கையில் தமிழ் வழிக் கல்வி இன்னும் தொடர்வது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் விக்கியின், அறிவியல் தமிழின் தேவை இவர்களுக்கு உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் மலேசியாவில் நடந்த கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு, உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு போன்ற மாநாடுகள் பற்றிய குறிப்புக்களும் விக்கியில் உள்ளன. இவை மலேசியத் தமிழர்கள் தமிழ்க் கல்வியை, இலக்கியத்தை, வாழ்வியலை எந்தளவு வீச்சுடன் பேண, வளர்க்க முயல்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

மலேசியத் தமிழர் வாழ்வியலின் ஒரு தனித்துவமான பகுதி அவர்களின் கலைகள் ஆகும். சொல்லிசை (தமிழ் ராப்), உறுமி இசை ஆகியவை மலேசியாவில் வளர்ச்சி பெற்று உள்ளன. அவர்கள் தங்களுக்கென ஊடகங்களை, திரைப்படங்களை வளர்த்தெடுத்து உள்ளார்கள். இவை பற்றியும் தமிழ் விக்கியில் தகவல்கள் பெறலாம்.

அண்மையில் மலேசியாவில் தமிழ் விக்கி அறிமுகக் கூட்டங்கள் இரண்டு நடத்தப்பட்டுள்ளன. மேலும் பல மலேசியத் தமிழர்கள் இணைந்து தகவல் பகிர்வைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Wednesday, August 24, 2011

தமிழ் ஆய்வுக் களங்களுக்கு தமிழ் விக்கியூடகப் பயன்பாடு

தமிழ்மொழிக் கல்விமுறையில், பாடத்திட்டங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்மொழி கற்கப்படும் மாறுபடும் சூழல்கள், தொழில்நுட்பம், மொழித் தேவைகள், கல்வியாளர்களின் தேடல்கள் எனப் பல காரணங்கள் இந்த மாற்றத்தின் உந்தல்களாக அமைந்துள்ளன. நோர்வேயில் நடைபெற்ற தமிழ் - தாய்மொழி மாநாடு, மலேசியாவில் நடைபெற்ற பன்மொழித் தமிழ் மொழியியல் மாநாடு மற்றும் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் பன்னாட்டு மாநாடு, தற்போது அமெரிக்காவில் ஒழுங்குசெய்யப்படும் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் இந்த புதிய மாற்றங்களை சுட்டுவதாக அமைதுள்ளன.

தமிழ்மொழிக் கல்வியில் முக்கியமாக இடம்பெற்றுவரும் ஒரு மாற்றம் தமிழ்மொழி தொடர்புடைய பல்வேறு துறைகளை தமிழ்மொழிக் கல்வியின் முக்கிய உறுப்புக்களாக இடம்பெறச் செய்வதாகும். இவற்றின் ஊடாகத் தமிழ் கற்பதும், தமிழ் ஊடாக பிற துறைகளைக் கற்பதும் நலம் மிக்க ஒரு பரிமாற்றம் ஆகும். முதற்கட்டமாக இலக்கியம், இலக்கணம் என்று இருந்த மரபு உடைக்கப்பட்டு ஊடகவியல், நாட்டுப்புறவியல், திறனாய்வு, மொழியியல், மொழிபெயர்ப்பு, வரலாற்றியல் போன்ற துறைகள் உள்ளுக்குள் வந்தன. இன்று தமிழாய்வில் இடம்பெறும் ஆய்வுகளின் பெரும்பகுதி இத் துறைகளைச் சார்ந்தனவே. அடுத்தகட்டமாக
தமிழ்க் கணிமை (தட்டச்சில் இருந்து இயற்கைமொழி செயலாக்கம் வரை), அறிவியல் தமிழ், எண்ணிம ஆவணவியல், சமூக அறிவியல் போன்ற துறைகள் தமிழ்மொழிக் கல்வியின் அங்கமாகி வருகின்றன. தமிழ்மொழிக் கல்வியின் அனைத்து களங்களுக்கும் தமிழ் விக்கியூடகங்களை நல்ல உசாத்துணைகளாக வளர்த்தெடுக்க முடியும்.

தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், இசைத்தட்டுக்கள் பற்றிய ஒரு தரவுத்தளமாக, தமிழரின் ஆடற்கலைகள், நாடகங்கள், இசை வடிவங்கள், இசைக் கருவிகள், வாழ்வியல் கூறுகள், மெய்யியல், பண்பாடு, அறிவியல், அரசியல், வரலாறு ஆகியவற்றின் தகவல் கோப்பாக தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க முடியும். தமிழ் மக்களின் பரம்பல், அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வாழும் முறை, அங்கு அவர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள், அவர்கள் நடத்தும் அமைப்புகள், ஊடகங்கள் பற்றிய தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுக்க முடியும். இவற்றை விட, தமிழ் விக்கிப்பீடியா அறிவியல் தமிழின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, அதற்குரிய களமாக செயற்படமுடியும். இலங்கை-தமிழக கலைச்சொற் வேறுபாடுகளை இணைக்கும் இடமாக, தமிழ்மொழி ஊடாக கல்வி பயிரும் மாணவர்களின் மூலமாக இதனை நாம் வளர்க்க முடியும்.

விக்கி செய்திகளில் ஒவ்வொரு நாட்டில் நடைபெற்றும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக தமிழர்களுக்கு பாதிப்புடைய செய்திகளை நாம் உடனுக்குடன் தொகுத்துப் பகிர முடியும். விக்சனரியை ஒரு தமிழ்-பன்மொழி பன்மொழி-தமிழ் மின்னகராதியாக வளர்க்க முடியும். தமிழ் இலக்கியங்களை, எழுத்து மூலங்களை விக்கி மூலத்தில் சேர்க்கலாம். எமக்குத் தேவையான நூல்களை விக்கி நூல்களில் ஆக்கலாம். இவ்வாறு விக்கியூடகத் திட்டங்கள் பலவும் பலவகைகளில் தமிழ்மொழி மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் பயன்படும்.

தமிழின் பழைய, புதிய ஆய்வுகள் களங்கள் தொடர்பான ஒரு விரிந்த தகவல் தொகுப்பை நாம் விக்கியூடகங்களில் செய்யமுடியும். தமிழுக்கு சமயங்களின் பங்களிப்பு, தமிழின் பதிப்புத்துறை வரலாறு, தமிழ் சிற்றிதழ்களின் பாதிப்பு, வாழ்கை வரலாறுகள், தமிழர் கட்டிடக்கலை, நாட்டுப்புறைக் கதைகளின் பொதுக் கூறுகள், தமிழ்க் கணிம், தமிழர் வானியல், 19 ம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் எனப் பல வகைத் தலைப்புகளுக்கு இன்றே தமிழ் விக்கியூடகங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. இன்றைய ஆய்வாளர்கள் அவற்றை மேலும் விரிவாக்கி, அடுத்த தலைமுறையினரை புத்தாக்கங்கள் நிகழ்த்திட உதவிடனும்.

Saturday, August 20, 2011

தமிழில் திறந்த தரவுகள் ஏன், எப்படி

இணையம் மிக வேகமாக மாறி வருகிறது. இணையம் உலகளாவிய வலையாகவும், பின்னர் வலை 2.0 ஆகவும், இப்போது பொருளுணர் வலையாக (semantic web) உருவாகி வருகிறது. பிற ஊடகங்கள், அல்லது துறைகள் போல் அல்லாமல் தமிழ் இணையத்தில் அதன் மைய வேகத்துக்கு ஈடுகொடுத்து முன்னேறி வந்துருக்கிறது. அந்த வகையில் இந்தப் பொருளுணர் வலைக்கு எப்படித் தமிழ் வளர்ச்சி பெறவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அந்த நோக்கத்துடன், மிக மேலோட்டமான அலசலாக இந்தப் பதிவு அமையும்.

உலகளாவிய வலையின் முதல் கட்டத்தில் நாம் வ்லைப்பக்கங்கள் சென்று செய்திகளைப் படித்தோம். மின்னஞ்சல்களை பயன்படுத்தத் தொடங்கினோம். தமிழ் படிக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கல், நிறுவுதல் என்று சிக்கல்கள் இருந்தன. அந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் ஒருங்குறி ஓரளவு தீர்வாக அமைந்தது. வலை 2.0 இற்கு தமிழ் வேகமாகவே வந்தது. வலைப்பதிவுகள், விக்கி, டிவிட்டர், முகநூல் என எல்லா வலை 2.0 தொழில்நுட்பங்களும் தமிழில் பயன்படுத்த முடியும். நகர்பேசித் தொழில்நுட்பங்களில் சில தடைகள் இருந்தாலும், தமிழில் சமாளித்துக் கொள்ளலாம். இதுவெல்லாம், ஒட்டு மொத்தமாக தமிழ் ஆர்வலர்களால் சாத்தியமானவையே. (இன்றுவரைக்கு தமிழக அரசால் இவற்றுக்கு துளிப் பங்களிப்பும் கிடையாது. தமது கட்சி வலைத்தளங்களில் இருந்து, பல்கலைக்கழகங்கள், அரச திணைக்களங்கள் என எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வலைத்தளங்களை வைத்திருகின்றன என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டையும், செயற்திறனையும் சுட்டிநிற்கின்றன. கனடாவில் பிரெஞ்சு மாநிலத்தில் (கியூபெக்) போல், எல்லாக் கணினிகளிலும் (வணிக நிறுவனங்கள் உட்பட) பிரெஞ்சு நிறுவப்படவேண்டும் என்ற கொள்கையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது.)

பொருளுனர் வலை (semantic web) இணையத்தில் அல்லது உலகளாவிய வலையின் அடுத்த கட்டமாக கூறப்படுகிறது. அடிப்படையில் பொருளுணர் வலை என்றால், வலையில் கிடைக்கும் தரவுகள் அல்லது தகவல்களை கணினிகள் பொருள் புரிந்துகொள்ளத்தக்கவாறு ஒழுங்குபடுத்தும் நுட்பம் ஆகும். தற்போது ஒரு வலைப்பக்கத்தில் உள்ள தரவுகள் அல்லது தகவல்கள் எந்த வகையான சீர்தரப்பட்ட கட்டமைப்புக்குள் இருப்பதில்லை. இதனால் இந்த தரவுகள் மீது கணித்தல் செய்வது சிரமானது. இந்தத் தகவல்கள் முறையான ஒரு கட்டமைப்புக்குள் வந்தால், பல்வேறு வகையான தேவைகளுக்கு, கணித்தலுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும். அத்தகைய முறைமைகளையே பொருளுணர் வலை சுட்டுகிறது. உலகளாவிய வலையின் முதல் இரு கட்டங்கள் தகவலால் முதன்மை பெற்றது என்றால், அதன் அடுத்த கட்டம் தரவுகளால், அவற்றின் மீதான கணித்தலால் முதன்மை பெறும்.

சரி அவைதான் என்ன தரவுகள், அவை ஏன் முக்கியம். ஒரு நகரத்தின் பல்வேறு கூறுகள் அல்லது தொழில்பாடுகள் பற்றிய தரவுகளை எடுத்துக் கொள்வோம். நகரத்தின் நிலவரைபடம். போக்குவரத்துச் சாலைகள். பொதுப் போக்குவரத்து வசதிகள். நகரத்தில் வாழும் மக்கள்வகைப்பாடு. மிகவும் ஏழையான மக்கள் எங்கு வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் இடங்களில் உள்ள பாடசாலைகளின் தரம் என்ன? அரச திட்டங்கள் எங்கு, யாரால், எப்போது, எப்படி நிறைவேற்றப்படுகின்றன. எங்கு குற்றங்கள் அதிகம் நடைபெற்றுகின்றன. எங்கு ஊழல் அதிகமாக இருக்கிறது. இப்படிப் பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்குமாயின் அவர்களின் முடிவொடுக்கும் ஆற்றலை, அல்லது அவர்கள் முடிவுகளின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்தத் தரவுகள் பொதுவில், திறந்த முறையில் தற்போது கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. அந்த நாட்டு அரசுகளின் கொள்கையாக இது நடக்கிறது. எ.கா toronto.ca/open, toronto.ca/wellbeing/. நகரங்கள் மட்டும் அல்ல, ஊர்களுக்கு இதே தேவை இருக்கிறது.

மாணவர்களுக்கு தரவுகளும், கணிக்கும் கருவிகளும் முக்கியம் ஆகும். எ.கா www.wolframalpha.com என்ற தேடல் அல்லது கணித்தல் கருவி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறமை கொண்டது. www.gapminder.org, google.com/publicdata, linkeddata.org எனப் பலரும் தரவுகளை ஆழத் தோண்டத் தொடங்கி இருக்கிறார்கள். தரவுகளைக் கணித்தலும் காட்சிப்படுத்தலும் நாமும், நமது கணினிகளும் தொழிற்படும் முறையை புரட்சிகரமாக மாற்றிவருகின்றன.

நாம் தரவுகள் என்ற அடுத்த கட்டத்தை நோக்கும் முன், தற்போது இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் என்பது இன்னும் பல போதாமைகளைக் கொண்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம், விக்கியூடகத் திட்டங்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்று சில நல்ல திட்டங்கள் இருந்தாலும் இவை சிறு துளியே. தமிழின் அறிவியல், வாழ்வியல், மருத்துவ மற்றும் பிற கலைக்களஞ்சியங்கள் இணையத்துக்கு வரவேண்டும். நாட்டுடமை நூல்கள் இணையத்துக்கு வர வேண்டும். எமது கலைகள், தொழில்கள், வாய்மொழி அறிவு பல்லூடக முறையில் ஆவணப்படுத்தப் பட வேண்டும். இவற்றை நாம் விரைந்து செய்தல் மூலமே மிக வேகமாக உருவாகி வரும் அறிவுச் சமூகத்தில் பங்கு கொள்ள முடியும்.

தரவு என்பது எண்தானே, அதில் எப்படி தமிழ் வர முடியும் என்று எண்ணக் கூடும். ஆனால் நாடுகள் பெயர்கள், அளவீடுகள் பெயர்கள் போன்றவை தமிழில் அமைவதில்லை. அவற்றைத் தமிழ்ப் படுத்த வேண்டும். (கூகிள் தனது மொழிபெயர்ப்புக் கருவியில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்த தரவுகளின் ஒரு பகுதி இந்த வகையானவை.) இது ஒரு வகை தன்மொழியாக்கமே. அடுத்தது தரவுகளைக் கையாளும் முக்கிய கருவிகளில் தமிழ் இடைமுகங்களை உருவாக்க வேண்டும். இது தமிழில் தரவுகளை உருவாக்க ஒரு வழி.

அடுத்தது தமிழ், தமிழர் பற்றிய தரவுகளை நாமே உருவாக்க அல்லது தொகுக்க வேண்டி இருக்கிறது. தரவுகள் பற்றி தமிழ் ஆர்வ அமைப்புகள் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் நூல்கள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ் இதழ்கள், தமிழ்க் கலைகள், தமிழ் மக்கள்வகைப்பாடு, ஊடகங்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தரவுகளை எந்த முறைமையின் கீழ் சேர்க்கப் போகிறோம். எப்படிப் கூட்டாக உருவாக்கிப் பகிரப் போகிறோம் என்பது எமக்கு முன் உள்ள ஒரு முக்கிய பணி ஆகும்.

ஈழம், தமிழகம், மலேசியா எங்கும் ஆங்கிலம் திறமையாகத் தெரிந்த அந்த 20-40% விட்டுவிடுவோம். மற்றவர்களுக்காக, எமது தற்சார்பு மிக்க அறிவுக்காக, எமது சமூக உரையாடல்களுக்காக தமிழில் தரவுகளை உருவாக்குவது எமது பணியாகிறது.

Monday, May 2, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைச் சூறாவளி


கடந்த இரு மாதங்களாக தமிழ் விக்கிப்பீடியா இதுவரை சந்தித்திராத ஓர் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பலகாலமாக 68ஆம் இடத்திலே இருந்த தமிழ் விக்கிப்பீடியா 64 வரை முன்னேறக்கூடிய நிலையை அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான உந்துசக்தியாகவும் தொடர் உழைப்பாளராகவும் இருப்பவர் தன்னந்தனியே 3000 கட்டுரைகளை மூன்றே மாதங்களில் ஆக்கிய இலங்கைச் சூறாவளி விக்கிப்பீடியர் புன்னியாமீன் ஆவார்.

பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். நவம்பர் 14, 2010 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகின்றார். கல்வித்துறையில் பல பொறுப்புகளுக்குப் பிறகு, தற்போது வெளியீட்டு நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இதழியலில் ஆர்வம் மிக்க இவர் ஓர் எழுத்தாளரும், தன்விருப்ப ஊடகவியலாளரும் ஆவார். இதுவரை 173 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புகள் சகல துறைகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் அறிமுகம், இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், சர்வதேச நினைவு தினங்கள், பொதுஅறிவு, அரசறிவியல், வரலாறு, மரபுகள், பாரம்பரியங்கள், நடப்பு விடயங்கள் தொடர்பாக 450க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவர் எழுதிய கட்டுரை இலங்கையின் முக்கிய பத்திரிகைகளுள் ஒன்றான ஞாயிறு தினக்குரல் உட்படப் பல வலைத்தளங்களில் இடம்பெற்றது. மேலும் சுவிசு அரசு வானொலியான 'கனல்கா" வில் விக்கிப்பீடியா பற்றி இவரது ஒருமணிநேர நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 200 கட்டுரைகள் எழுதும் சாதனை நிகழ்த்த திட்டமிட்டார். தனது அலுவலக உதவியாளர்கள், மனைவி மற்றும் மக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் எண்ணியதற்கு மேலாக ஒரே நாளில் 300 கட்டுரைகள் இட்டு சாதனை படைத்தார். சமூகமாக இயங்கும் விக்கிப்பீடியாவின் நெறிகளுக்குட்பட்டு இவர் நிகழ்த்தியுள்ள இந்த வேள்வி மற்ற தமிழர்களுக்கு ஓர் தூண்டுகோலாக இருந்து தமிழ் விக்கிப்பீடியா விரைவில் 50000 கட்டுரைகளை எட்ட வழிசெய்யும்.

Friday, April 15, 2011

30 000 கட்டுரைகளைத் தாண்டி

கடந்த ஏப்ரல் 8, 2011 அன்று தமிழ் விக்கிப்பீடியா 30, 000 கட்டுரைகளைத் தாண்டியது. இது எமக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். சனவரியில் இருந்து சுமார் 3000 கட்டுரைகள் மூன்று மாதங்களில் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலானவை குறுங்கட்டுரைகளே. எனினும் குறுங்கட்டுரைகளே பல அரிய தகவல்களைக் கொண்டிருப்பதோடு, விரிவான கட்டுரைகளுக்குத் நல்ல தொடக்கமாக அமைகின்றன. பல்துறைகள் சார்ந்தும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டு இருப்பது நலமானது.

நீங்களும் ஒரு சில கட்டுரைகளைச் சேர்த்தால் இன்னும் வேகமாக நாம் வளரலாம். வாருங்கள், வந்து எமது பயணத்தில் இணையுங்கள்.

Tuesday, March 8, 2011

தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்கள் பங்களிப்பு

தொடர்ச்சியான போராட்டங்களின் பின்பு பெண்கள் வாக்கு, சொத்து, கல்வி, வேலைவாய்ப்பு என உரிமைகளைப் பெற்றார்கள். மேற்குநாடுகளிலும், சீனா, இந்தியா மற்றும் பிற பல நாடுகளிலும் பெண்கள் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறார்கள். இன்று மருத்துவம், சட்டம், கல்வி, ஊடகத்துறை போன்ற துறைகளில் ஆண்டுகளுக்கு நிகராக அல்லது ஆண்களை விட சிறப்பான பங்களிப்பை பெண்களே செய்து வருகிறார்கள். தமிழ்ச் சூழலிலும் பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பெண்களின் தலைமைத்துவம் தொடர்பாக பல புரட்சிகர மாற்றங்கள் நடைபெற்று உள்ளன. எனினும் இன்னும் பல துறைகளில் பெண்களில் பங்களிப்பும் தலைமைத்துவமும் முன்னேற வேண்டி உள்ளது.

தமிழ்ச் சூழலில் தமிழ் பெண்களின் பங்களிப்பு பொதுவாழ்வில் மிக அரிதாகவே உள்ளது. எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சமூக செயற்பாட்டாளர்களாக, சமூகத் தலைவர்களாக என ஒப்பீட்டளவில் பெண்களின் விழுக்காடு மிகச் சிறிதே. குடும்பச் சுமை, சமூக எதிர்பார்ப்புகள் வாய்ப்புகள், சூழல், தெரிவு என பல காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 50 வரையானோர் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்கள் எனலாம். தற்போது இவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். இந்த இருவரின் பங்களிப்பு அளப்பரியது. இதுவரை நான்கு பெண்கள் வரையிலேயே குறிப்பிடத்தக்க பங்களிப்ப்சைச் செய்துள்ளார்கள். இவர்களில் மூவர் ஈழத் தமிழர். இருவர் புகலிட நாட்டவர். பெண்களின் விழுக்காடு மொத்த பயன்ர்களில் ஒரு வீதத்தையும் தாண்டாது. இது ஆங்கில மற்றும் பிற விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் மிக மோசம் ஆகும். ஆங்கில விக்கிப்பீடியாவில் 15 % வரையில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று விக்கி ஒரு தொழில்நுட்பச் சூழலில் தோன்றிய திட்டம். அந்தத் துறையை ஆண்களே ஆக்கிரமிப்பதால், அதன் பிரதிபலிப்பாக இதைச் சொல்லாம். இந்திய, தமிழ்ச் சூழலில் பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கும் பொதுத் தோரணத்தின் ஒர் எடுத்துக் காட்டாகவும் இதைக் கொள்ளலாம். விக்கி சமூக அல்லது நுட்பக் கட்டமைப்பில் இருக்கும் தடைகள் காரணமாக இருக்கலாம். காரணங்கள் எவையாகினும் நாம் இவற்றை மீறி பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதும், வரவேற்பதும் முக்கியமாகும்.

அனைவருக்கும் அனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துக்கள்.

Saturday, February 26, 2011

பன்மொழி ஆற்றலின் பயன்கள்

தமிழ்நாட்டிலும், புகலிட நாடுகளிலும் வீட்டிலோ, வேலையிலோ, உறவினர்களோடோ, நண்பர்களோடோ, இதர தமிழர்களோடோ தமிழர்கள் தமிழ் பேசுவது அருகி வருகிறது. தமிழில் கல்வி, தாய்மொழிக் கல்வி போய், தற்போது தமிழ் கல்வியே வேண்டாம் என்று தமிழ்நாட்டில் பலர் வேண்டி நிற்கின்றனர். தமிழ் கல்வி ஒன்றுக்கும் உதாவாதது. தமிழ் கல்வி மாணவர்களுக்கு சுமை சேர்க்கும் என்பது பலரின் வாதம். ஆங்கிலமே கல்வியில், வணிகத்தில், உலகமயமாதலில் ஆதிக்கம் செலுத்துவதால் அது மட்டுமே கற்பது, அதிலேயே அறிவுப் புலத்தை உருவாக்குவது போதுமானது என்பது தற்போது வேகமாக தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்படும் கற்பிதம் ஆகும். இது தொலைநோக்கற்ற, குறுகிய, கேடு தரக்கூடிய பார்வை ஆகும்.

முதலில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தாய்மொழி அல்லது பன்மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் கற்பதே அவர்களின் வருங்காலத்துக்கு நல்லது என்ற கருத்து தவறானது. பல சீரிய ஆய்வுகள் குழந்தைகள் இரு மொழிகளைக் கற்பதால் அவர்களின் பல்வேறு ஆற்றல்கள் விருத்தி பெறுவதை எடுத்துக் காட்டி உள்ளன. ஒப்பீட்டளவில் இரு மொழிகளைக் கற்கும் குழந்தைகளின் கவனிப்பு ஆற்றல் மற்றக் குழந்தைகளை விட மேன்மையாக இருக்கிறது. அவர்களின் சிந்திக்கும் ஆற்றலுக்கும் உதவி செய்கிறது. சிந்தனைகளை மொழியில் இருந்து பிரித்து, நுண்புலமாக சிந்திக்க பன்மொழி ஆற்றல் உதவுகிறது. வெவ்வேறு பண்பாட்டு மொழிச் சூழலில் பல விடயங்களைப் பொருத்தி ஆராய பன்மொழி ஆற்றல் உதவுகிறது. இவருக்கு தமிழ் விளங்கும் ஆனா கதைக்க மாட்டார், அல்லது வாசிக்க மாட்டார் போன்ற மொழி ஆற்றலை இங்கு குறிப்பிடவில்லை.

ஒருவருக்கு அவரின் அடையாளம் என்பது முக முக்கியமானது. தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களின் அடையாளம் அவர்களின் மொழியோடு பின்னிப் பிணைந்தது. எமது வரலாறு, இலக்கியம், அறிவு எமது மொழியிலேயே பொதிந்து கிடக்கிறது. இந்த அடையாளத்தை ஒருவருக்குத் தருவதில் தமிழ் மொழி அவசிமாகிறது. இரண்டாம் மொழி சிங்களமாக, மலாயாக, ஆங்கிலமாக, இந்தியாக இருக்கலாம், ஆனால் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரியாமல் தமிழர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தமிழ், தமிழர் என்று உண்மையாக உழைக்கும் பலர் கூட இந்த அடிப்படையை உணராமல் தமது பிள்ளைகளை அன்னியர் ஆக்குகிறார்கள்.

இன்று ஆங்கிலம் கற்பவர்கள் வணிகத்திற்காகவே பெரும்பாலும் கற்கிறார்கள். ஆனால் பொருளாதார உலகம் வேகமாக மாறி வருகிறது. சீனா, மத்திய கிழக்கு நாடுகள், யப்பான், உருசியா, செருமனி, பிரேசில், எசுபானிய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா என வெவ்வேறு மொழிகளின் உலகங்களின் விரிந்து வருகின்றன. எனவே ஆங்கிலத்தைத் தாண்டி சீனம், அரபு, யப்பானிசு, உருசியன், யேர்மன், போர்த்துக்கீசு, எசுபானிசு, இந்தி என பல மொழிகளைக் கற்பதும் தேவையாகிறது. எனவே ஆங்கிலம் மட்டும் என்பது போதுமானது அல்ல.

தமிழ்த் திரைத்துறை, இசைத்துறை, பதிப்புத்துறை, கல்வித்துறை என தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழியை இணைப்பு மொழியாகப் பேணி பல துறைகளில் நாடு கடந்த பொருளாதார வாய்ப்புக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஆங்கில உலகின் உற்பத்திகளை நுகர்ந்தால் தோற்கப் போவது எமது உற்பத்திகளே, எமது பொருளாதாரமே. இன்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மேற்குநாடுகள் என வலம் வரும் தமிழ்ப் படைப்பாளிகள் ஆங்கிலம் மட்டும் என்ற உலகில் என்ன முக்கியத்துவம் பெறுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்ப் படங்களோ, நாடகங்களோ, புதினங்களோ மொழிபெயர்க்கப்படுவது கூடுதலாக மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலேயே. இது இயல்பாக இருக்கும் ஒரு பண்பாட்டுப் பொருளாதார வெளிப்பாடு ஆகும். இதை நாம் ஒருமொழிச் சூழலில் இழந்து விடுவோம்.

கனடாவில் அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் பன்மொழிப் புலமை உள்ளவர்களுக்கு மறதிநோய் வருவது 4-6 ஆண்டுகள் பின்போடலாம் என்று கூறுகின்றன. மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்த அறிதிறனோடு இயங்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். உங்களின் அறிதிறனை (cognition) சேமித்து வைக்க பன்மொழி அற்றல் உதவுவாதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முடிவாக, பன்மொழி ஆற்றல் ஒருவருக்கு மேன்மையாக சிந்திக்க, கவனிக்க, பல கோணங்களில் விடயங்களை ஆய உதவி செய்கிறது. ஒருவரின் மூளையை, அறிதிறனை கூடிய காலம் பேண உதவுகிறது. உங்களின் அடையாளத்தை, பண்பாட்டை அறிய, அதனால் பலம் பெற உதவுகிறது. மற்றவகளின் பண்பாட்டை, விழுமியங்களை அறிய உதவுகிறது. வேலைத்தளத்தில் உங்கள் ஆற்றல் பட்டியலை விரிவாக்கிக் காட்ட உதவுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாடுப் பொருளாதாரத்தை தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கு மேலாக வெவ்வேறு மொழிகளில் இலக்கியத்தை, பாட்டுக்களை, கவிதைகளை இரசிக்க உதவுகிறது. தாய்ப் பால் போல தாய்மொழிக் கல்வியும், சத்துணவு போல பன்மொழி அறிவும் எமக்கு இன்றியமையாதவை.


இணைப்புகள்:
Why Speaking More than One Language May Delay Alzheimer's

The Benefits of Multilingualism

English has colonised our languages

Mother tongue or English?

Sunday, February 20, 2011

காமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் இலக்கியம், திரைத்துறை, ஊடகங்கள், தமிழியல் மாநாடுகள், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாலும் ஒரு தமிழ் உலகம் உண்டு. இந்தத் தமிழ் உலகம் இயல்பானது, நிரந்தரம் அற்றது, தன்னார்வலர்களால் பேணப்படுவது. தமிழின் துணைப் பண்பாடுகள் இவை. இவற்றைப் பற்றி இந்த சிறிய சமூகங்கள் சாராதவர்கள் அறிந்திருப்பது அரிது. ஆனால் இவர்களை அறியாமல், இவர்கள் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு அரியது. இவர்களின் உலகங்களே தமிழ் காமிக்சு, ராப், குறும்படம், உறுமி ஆகியன.

தமிழர்கள் பல நாடுகளில் பரவத் தொடங்கினார்கள். பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை எதிர் கொண்டார்கள். இவற்றின் தாக்கங்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்ட ஆக்கங்களே இவை. நாட்டுப்புறவியலுக்கு ஒத்த, ஆனல் அதை விட சிறிய ஒரு பரப்பு இவற்றுக்கு உண்டு.

தமிழ் காமிக்சு அல்லது சித்திரக்கதைகள் எனப்படுபவை ஒரு கால கட்டத்தில் மாணவர்களை மாயப் பிடிப்பில் வைத்திருந்த உலகம் ஆகும். 1950 கள் தொடக்கம் தமிழில் வரைகதைகள் உண்டு. 1970 இருந்து 1990 முற்பகுதி மட்டும் தமிழ் வரைகதைகளின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் லயன் காமிக்சு, ராணி காமிக்சு (1984-1995), வாணுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. இந்தக் கதைகள் ஊடாக தமிழ் படித்தவர்கள், வெளி உலகை அறிந்து கொண்டவர்கள், ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என பல ஆயிரம் பேர் உள்ளார்கள். தொலைக்காட்சி, நிகழ்பட விளையாட்டுக்களின் வருகை, ஆங்கில வழிக் கல்வியின்-வாசிப்பின் ஆதிக்கம் தமிழ் காமிக்சு உலகை தகர்த்தன. எனினும் இன்றும் தமிழ் சித்திரக்கதைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

1970 அமெரிக்க கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாக, குறிப்பாக சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் குரலாக் எழுந்த ராப் இசை 90 களில் தமிழில் உருவாகத் தொடங்கியது. தமிழ்ப் பாட்டு என்றால் சினிமாப் பாட்டுத்தான் என்றிருந்த சூழ்நிலையில் தமிழ் ராப் இசை அதன் பிடிக்கு சற்று வெளியே உருவானது. சினிமா ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இது முதன்மையாக வெளிப்படவில்லை. மாற்றாக மலேசியாவிலும் புகலிட நாடுகளில் இது வெளியானது. யோகி பி உடன் நட்சத்ரா, சக்ரசோனிக். சுயித், சைன் என தமிழின் சிறந்த ராப் கலைஞர்களுக்கு என ஒரு தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் பாடு பொருட்கள் விருந்து இருக்கின்றன. இளைஞர்களை தமிழ் மீது ஈர்த்து வைக்க தமிழ் ராப் இசை ஒரு முக்கிய களம் ஆகும்.

தமிழ் குறும்பட, ஆவணப்பட உலகம் பரந்த தமிழ்ச் சமூகம் இன்னும் அறியாத ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 90 களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகக் குறைந்த பணச்செலவில், உயர்ந்த தரமான குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் உருவாகக் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கியது. இணையத்தின் விரிவாக்கம் அந்தப் படைப்புகளை உலகமெங்கும் உள்ள தமிழர்களோடு பகிர வழி செய்தது. இதுவரை பேசப்படாத பல தலைப்புகளில், பல பார்வைகளில், பல மூலைகளில் இருந்து தமிழ் குறும்பட/ஆவணப்பட படைப்பாளிகள் ஆக்கங்களைத் தந்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பல குறும்பட விழாக்களை நடத்துகிறார்கள். இணையத்தில் மட்டும் அல்லாமல், தமிழ் தொலைக்காட்சிகளின் ஒரு முக்கிய கூறாகவும் இந்த குறும்படங்கள்/ஆவணப்படங்கள் அமைந்து வருகின்றன.

தமிழ் நாட்டுப்புறவியலின், தமிழிசையின் ஒரு கூறு உறுமி மேளம் ஆகும். சிறுதெய்வ வழிபாட்டில் உறுமி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் பாட்டுப் பாட, பலர் கூட்டாக உறுமி மேளத்தையும் இதர இசைக் கருவிகளையும் வாசிப்பர். மலேசியாவில் பிறந்து வாழும் இளைஞர்களுக்கு உறுமி மேளம் மீது இருக்கும் ஈடுபாடு அதீதமானது. கூட்டாக உறுமி வாசிப்பது இவர்கள் பலரின் ஈடுபாடாக இருக்கிறது. மலேசியாவில் பல கோயில்களில் உறுமி மேளக் குழுக்கள் உள்ளன. தேசிய உறுமி மேள போட்டி போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. உறுமி மேளத்தின் பாட்டுக்கள் ஊடாக இசையின் ஊடாக இவர்களின் உலகம் தமிழோடு இணைப்புப் பெறுகிறது.

இவ்வாறு தமிழிற்கு பல்வேறு துணைப் பண்பாடுகள் உள்ளன. தமிழ் மொழியும், இசையும், பண்பாடும், அடையாளமும் இந்த சிறு சிறு கூறுகளால் பேணப்படுகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய போதிய அக்கறையோ, ஆய்வோ பொதுத் தமிழ்ச் சமூகத்திடமோ, கல்வியாளர்களிடமோ இல்லை. எமது இலக்கியங்களை, நாட்டுப்புறவியலை, தொழிற்கலைகளை புறக்கணித்தோமோ, அது போலவே தற்போது தமிழின் நிகழ்கால கூறுகளைப் பற்றியும் எம்மிடம் அக்கறை இல்லை. எனினும் இவற்றைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல தளமாக விளங்குகிறது. தகவல்களைப் பதிந்து, ஆய்வுகளுக்கு உதவி, பொதுத் தமிழ்ச் சமூகத்திடம் எடுத்துச் செல்ல விக்கிப்பீடியா ஒரு தளமாக அமையும். இதப் பணியில் இந்த உலகங்களைச் சார்ந்தவர்கள் நேரடியாகப் பங்களித்து உதவிட வேண்டும்.

Thursday, February 3, 2011

சென்னை, புதுச்சேரி, திருச்சியில் விக்கிப்பீடியா பட்டறைகள்

இம்மாதம் சென்னை, புதுச்சேரி, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள், கூட்டங்கள் நடைபெற உள்ளன. விவரங்களுக்குக் கீழ்க்காணும் பக்கங்களைக் காண்க:

* பிப்ரவரி 6 - சென்னை
* பிப்ரவரி 20 - திருச்சி
* பிப்ரவரி 20 - புதுச்சேரி.

ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.

Monday, January 10, 2011

சென்னையில் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா - சனவரி 15, 2011

சென்னையில் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா - சனவரி 15, 2011