Friday, August 30, 2013

ஒரு பொது, திறந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலின் (Catalog) தேவை

தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தனித் தனித் தீவுகளாகத் தொகுக்கப்படுகின்றன.  தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை இணையத்தில் தமிழ் நூல்கள் பற்றிய மீதரவை (metadata) அல்லது நூற்பட்டியலைத் (catalog) தருகின்றன.  இந்த அமைப்புக்கள் வெவ்வேறு ஆயினும் இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன.  அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது.  இதை இந்த அமைப்புக்கள் தனித் தனியே செய்யாமல் இணைந்து செய்வது இன்று பல காரணங்களால் அவசியமாகிறது. 

பொதுவாக நூற்பட்டியலை வெளியிடுவது, ஆவணப்படுத்துவது அரசுகளின் ஒரு முக்கிய கடமை ஆகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, உருசியா, செருமனி போன்ற நாடுகள் பெரும் வளங்களை ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்கின்றன.  எடுத்துக்காட்டாக பல மேற்குநாடுகளில் இயங்கும் பதிப்பகர்கள் எல்லாம் காங்கிரசு நூலகத்துக்கு (Library of Congress) அல்லது தமது தேசிய ஆவணகங்களுக்கு நூல்களையும் நூல்களைப் பற்றிய தகவல்களையும் கட்டாயம் அனுப்ப வேண்டும்.  இத் தகவல்களை நூலகக் கூட்டமைப்புக்கள் தொகுத்துப் பகிர்கின்றன.  குறிப்பாக Online Computer Library Center, Inc (OCLC) கூட்டமைப்பே உலகின் அதிக உசாத்துணைகளை (Bibliography) கொண்ட இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு ஆகும். 

ஆனால் தமிழ்ச் சூழலில் அரசுகள் இந்தப் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இந்திய அளவில் ஆவணகவியலும் நூலகவியலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட திணைக்களங்கள் ஆகும்.  தமிழ்நாடு அரசும் இத் துறையைக் கவனிக்க வில்லை.  எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக தமிழ் நூற்பட்டியல்கள் வெளியிடப்படவில்லை.  இலங்கையில் பல கால கட்டங்களீல் அரசுகள் திட்டமிட்ட முறையில் தமிழ் தகவல் வளங்களை அழித்து வந்துள்ளது.  ஈழத்தில் உருவாக்கப்பட்ட பெளதீக ஆவணகங்களும் போரில் அழிந்துவிட்டன.  செல்வராஜாவின் நூல் தோட்டம் போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் விதிவிலக்காக தமிழ் நூற்பட்டியல் (catalog) இன்னும் தொகுக்கப்படவில்லை.  இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலின் தேவையை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.  இணையக் கட்டமைப்புக்கள் இதற்கான ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. 


நாம் தனித்தனியே தமிழ் நூற் தகவல்களைத் தொகுப்பதால் வளங்கள் வீணாகும்.  தகவல் முழுமை பெறாது. அவரவர் பயனர்கள் விரிவான சேவையைப் பெற முடியாது.  ஆனால் நாம் இணைந்து ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்துப் பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறலாம்.  எமது தேவைகள் வேறுபட்டால், நாம் அனைவரும் ஒரு பொது அடிப்படையிலாவது (டுப்பிளின் கருவகம் - Dublin Core) சேர்ந்து இயங்கி, பின்னர் மேலதிக தகவல்களை எமது தேவைகளுக்கு ஏற்ப இணைக்கலாம். 
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பல.  யார் தொகுப்பது,  அதற்கான கட்டமைப்பு என்ன.  என்ன சீர்தரத்தைப் பயன்படுத்துவது. எப்படிப் பகிர்வது.  மிக யாதார்த்தமான சிக்கல்களே.  ஆனால் உலக அரங்கில் பலர் திறனாக நிறைவேற்றிய தீர்வுகள் உண்டு.  நுட்பம் இதில் ஒரு சிக்கல் இல்லை.  எமக்கு இருக்கும் உண்மையான சிக்கல் பல தரப்பட்டவர்களை இணைத்து இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதுத்தான்.  இந்தப் பணியை ரேசா முத்தையா நூலகம், நூலகத் திட்டம், உத்தமம் முன்னின்று எடுக்க வேண்டும்.  தமிழ் விக்கிச் சமூகமும் இதில் ஒரு முக்கிய பங்கேற்கும்.



 

Monday, August 26, 2013

2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டி

2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.  தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.

மேலும் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/WP:2013contest

Tuesday, August 20, 2013

தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை

இந்தக் கிழமை தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. அண்மைய பல ஊடகக் கட்டுரைகளைக் காட்டிலும் தெளிவாகவும் சரியாகவும் இருப்பது சிறப்பு.

http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/India-today-tamil-wikipedia-1.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5b/India-today-tamil-wikipedia.jpg