Sunday, November 24, 2013

மருந்துகள் பற்றிய தகவல்கள் ஏன் இந்திய மொழிகளில் இல்லை

ஒரு மருந்து விற்பனைக்கு வர முன், அந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பெருந்தொகையான ஆவணப்படுத்தல் பணிகளைச் செய்ய வேண்டும்.  மருந்து தொடர்பான ஆய்வுகள், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு (Drug Regulatory Organizations, எ.கா US FDA, Health Canada) அனுப்ப வேண்டிய சமர்ப்பித்தல்கள் (Submissions), மருத்துவர்களுக்கு, நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள், மருந்துப் பொதி தாங்கி இருக்க வேண்டிய அடையாளங்கள் (Labels) எனப் பெருந்தொகை ஆவணங்களை சீர்தரங்களுக்கு ஏற்ப (எ.கா Standard Product Labeling - SPL) அந்த நிறுவனம் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான பெரும் அறிவுச் சொத்து ஆகும். 

வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, யப்பான், அரபு நாடுகள் ஆகியவற்றில் ஒரு மருந்து விற்க அனுமதி பெற வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டுச் சட்ட சீர்தர முறைமைகளுக்கு ஏற்ப பெருந்தொகை ஆவணங்களை ஒரு நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.  எ.கா ஐரோப்பிய ஒன்றியத்தில் மருந்து பற்றிய ஆய்வுகளும், அடையாளங்களும் 27 மொழிகளில் சமர்பிக்கப்பட வேண்டும்.  ஒரு மருந்து பற்றிய விபரங்கள் அந்த நாட்டு மொழியில், அதனைப் பயன்படுத்தும் மக்களின் மொழியில் இருக்க வேண்டும் என அந்த அந்த நாடுகள் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை.  ஒருவர் ஒரு மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அந்த மருந்தால் விளையக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் அவரது தாய்மொழியில் அமைவது அவரது நலத்துக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான தகவல்கள் ஆகும். 

இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மொழிபெயர்ப்பு வசதிகளைச் சிறப்புக் கவனம் எடுத்து ஆவண உருவாக்க மென்பொருட்கள் (Authoring Tools), ஆவண மேலாண்மை மென்பொருட்கள் (Document Management Systems), செயலாக்க மேலாண்மைத் தொகுதிகள் (Workflow Management Systems) பல உள்ளன.  இவற்றில் தொகுக்கப்படும் தகவல்கள் பொதுமக்கள், துறைசாரார் அணுகக் கூடிய முறையில் பொருளுணரப்பட்டு (semantically extracted) வலைவாசல்களாக அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பல நாடுகள் அந்த அந்த நாட்டு மொழிகளில் மருந்து பற்றிய ஆய்வுகளையும் தகவல்களையும் வழங்க இந்தியா அப்படிச் செய்வதில்லை.  இந்தியச் சட்டத்தின் (Drug and Cosmetics Act) படி ஒரு மருந்து அனுமதி தொடர்பான பொறுப்பு நடுவன் அரசைச் சார்ந்தது, உற்பத்தி விற்பனை தொடர்பான பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்தது.  இரு நிலைகளிலும் இந்திய மொழிகளில் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்ற எந்த விதிகளோ(Regulations), பரிந்துரைகள் கூட இல்லை.  குறைந்த பட்சம் இந்த இரு நிலைகளின் வலைத்தளங்கள் கூட (http://cdsco.nic.in, http://www.tnhealth.org/) கூட பன்மொழியில் இல்லை. 

ஒரு நிறுவனம் ஐரோப்பாவில், சீனாவில், யப்பானில், அரபு நாடுகளில், இசுரேலில் அந்த அந்த நாட்டு மொழியில் தனது தகவல்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருந்தால், அதே நிறுவனம் இந்தியாவில் அப்படி ஏன் செய்ய முன்வராது.  இது ஒரு நுட்ப அல்லது நிதிச் சிக்கல் இல்லை.  இந்திய அரசின் விதிமுறைகள் சார்ந்த ஒரு சிக்கலே. 

மருத்துவம் (Medicine), நலம் (Health), மருந்துகள் (Drugs) தொடர்பான தகவல்கள் மக்களின் மொழியில் இருத்தல் அவசியமானதாகும்.  விக்கியில் இவற்றின் தகவல்களைத் தொகுப்பதில் அவை இந்திய மொழிகளில் இல்லாமல் இருப்பது பெரும் தடையாக அமைகிறது.  சிறிய மொழிபெயர்ப்புச் செலவுடன், ஒரு பெரும் பலனைத் தரக் கூடிய இந்த மாதிரி விதிகள் தொடர்பாக அறிவு அணுக்கம் தொடர்பான செயற்திட்டங்கள் (Centre for Internet Society's Access To Knowledge - http://meta.wikimedia.org/wiki/India_Access_To_Knowledge) கவனத்தில் கொள்ள வேண்டும்.

Sunday, November 10, 2013

இத் தலைமுறையின் கடமை: பிரஞ்சுத் தமிழ்ப் படைப்புகள்

ஈழப் போராலும், பொருளாதார நலிவாலும் மேற்குநாடுகளுக்கு பெருந்தொகைத் தமிழர்கள் ஈழத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் குடியேறியுள்ளார்கள்.  சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குநாட்டினர் எம்மிடம் வந்து, எமது மொழியைக் கற்று, எம்மை ஆய்ந்து போன்ற ஒரு வாய்ப்பை நாம் இப்பொழுது பெற்று இருக்கிறோம்.  ஒரு நாட்டின் புவியியல், வரலாறு, அரசியல் சட்ட முறைமைகள், வாழ்வியல், பண்பாடு, இனங்கள், மொழிகள், இலக்கியம், கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு தகவல்களை நேரடியாக வாழ்ந்து, ஆய்ந்து, அவதானித்து, தொகுத்து தமிழில் பதிவுசெய்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பை நாம் பெற்று இருக்கிறோம். 

இந்த வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது, குறுகிய கால எல்லையைக் கொண்டது.  பல காரணங்களால் புகலிடத் தலைமுறைப் பிள்ளைகள் தமிழ் மொழியை இழந்து வருகிறார்கள்.  பேச்சு மொழியாகக் கூடத் தமிழ் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரிடம் அருகி வருகிறது.  அதனால் தமிழில் வாசிக்க, எழுத, நுணுக்கமாக ஆயும் திறமையை முதலாம் தலைமுறையினர் மட்டுமே பெரும்பாலும் கொண்டு இருக்கிறார்கள்.  இதனாலேயே இந்த அறிவுச் செல்வங்களை தமிழுக்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு, கடமை இவர்களிடம் இருக்கிறது.  "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.  இறவாத புகழு டையபுது நூல்கள் தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" என்ற பாரதியின் வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பை இத் தலைமுறை மட்டுமே கொண்டுள்ளது. 

புலம்பெயர் இலக்கியம் என்பதற்கு அப்பால் மொழிபெயர்ப்பில், திறனாய்வில், கலைச்சொல்லாக்கத்தில், அறிவியல் தமிழில் இத் தலைமுறையினரிடம் நாம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறோம்.  அந்த வகையில் பிரான்சில் வெளிவந்த ஆக்கங்கள் சில சிறப்பான எடுத்துக்காட்டுக்களாக இருக்கின்றன.  சதாசிவம் சச்சிதானாந்தம் எழுதிய "பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு" என்ற நூல்  பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து தரும் ஒரு சிறு கலைக்களஞ்சியம் ஆகும்.  இந்த நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு யேர்மனி, நோர்வே, டென்மார்க், பின்லாந்து என ஒவ்வொரு நாடுசார் செய்திகளையும் நாம் தொகுக்க முடியும்.  க. வாசுதேவன் எழுதி இந்த ஆண்டு வெளிவந்த "பிரஞ்சுப் புரட்சி" என்ற நூல் இன்னுமொரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.  இன்றைய அரசியல் சட்ட முறைமைகள் வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிய படைப்பு அங்கு சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்ற ஒருவரின் விபரிப்பில் கிடைக்கிறது.  க. வாசுதேவனின் "19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்" என்ற மொழிபெயர்ப்பு நூல் பிரஞ்சு இலக்கியத்தின், பண்பாட்டின், சிந்தனையின் வேறு ஒரு பக்கத்தைப் பகிர்கிறது.  பல தமிழ்-பிரஞ்சு-தமிழ் அகராதிகள் வெளிவந்துள்ளன.  நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, கலாமோகன் போன்ற பல எழுத்தாளர்கள் பிரான்சில் இருந்து தமிழுக்கு பல படைப்புக்களை வழங்கி உள்ளார்கள்.

பிரஞ்சுப் பாண்டிச்சேரி, குட்டி யாழ்ப்பாணம் என்று அறியப்படும் லா சப்பல், தமிழ் வம்சாவழியினர் பெரிது வாழும் பிரஞ்சுக் குடியேற்றவாத நாடுகளான மொரிசியசு, ரியூனியன் என்று தமிழர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமான தொடர்பு நீண்டது, பரந்தது, அடக்குமுறைகள் நிறைந்தது.  உலக நாகரிக, பண்பாட்டு, சிந்தனை வளர்ச்சியின் உயரிய ஓர் வடிவமாகக் கொள்ளப்படும் பிரான்சிடம் இருந்து நாம் இத் தொடர்பு ஊடாகக் பெற்றுக் கொள்ளக் கூடிய உச்ச மதிப்பான ஒன்றாக அவர்களது அறிவே அமையும்.  அந்த அறிவை நேரடியாக, நுணுக்கமாக, எமது மொழியில் எமது பார்வையில் தொகுத்து தரும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் மட்டுமே கொண்டுள்ளார்கள்.  மேலே சுட்டப்பட்ட படைப்புக்கள் போதாது.  இது மாதிரி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புக்கள் எமக்கு வேண்டும்.  நூறாயிரம் வரையில் தமிழர்கள் வாழும் பிரான்சில் இருந்து ஒரு தமிழ் விக்கி பங்களிப்பாளர் கூட அமையாதது ஒரு பெரும் குறையே.  வருவீர், உங்கள் அறிவைப் பகிர்வீர்.

Saturday, October 26, 2013

அக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் - புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி

தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 28 அக்டோபர் 2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

Tuesday, October 15, 2013

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா பயிலரங்கம்

சேலம் பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட விரும்புவோருக்கும் ஓர் சிறப்பு வாய்ப்பு. தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களை அனைவருக்கும் கொண்டுசெல்லவும், அது பற்றிய எளிய செய்முறை விளக்கத்தை மக்களுக்கு அளிக்கவும் பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை நிகழ்த்த உள்ளது. அனுமதி இலவசம் (முன்பதிவு அவசியம்)

படிமம்:A photo of Periyar Hall.JPG
நிகழ்விடம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கம்.
நாள், நேரம்:
26.10.2013, 09.11.2013 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை:
பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி , ஒருங்கிணைப்பாளர் , பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம்.
தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை: பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து, பதிவாளர் பெரியார் பல்கலைக்கழகம்.
வாழ்த்துரை:
திரு. ம. கோ. கொ. விஜய குமார், தலைவர், சேலம் சுழற்சங்கம்.
பேராசிரியர் முனைவர். கே. தங்க வேல், துறைத்தலைவர் கணினி அறிவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம்
முனைவர். விஷ்ணு வர்தன், திட்ட இயக்குநர், The Centre for Internet& and Society, பெங்களூரு
திரு. கதிர்வேல், மண்டல இணை இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை- தமழ்நாடு அரசு.
சிறப்புரை:
திரு. மா. தமிழ்ப்பரிதி, துணைப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை
விக்கிமீடியா கருத்தாளர்கள்: திரு. தகவல் உழவன், திருமதி. பார்வதிஸ்ரீ
நன்றியுரை: திரு. த. சௌந்தராஜன், செயலர், சேலம் சுழற்சங்கம்.

பயிலரங்கப்பொருண்மைகள்
இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க
இந்நிகழ்வில், பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை தமிழகம் தளத்திலோ அல்லது 9750933101, 9442105151 ஆகிய எண்களிலோ தங்களின் பெயரை 21.10.2013 க்குள் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்கலாம்.

Wednesday, October 2, 2013

கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் வரும் 11 அக்டோபர் 2013 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.  ஈடுபாடுள்ள அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.

நோக்கம்
கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல், தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்முறை விளக்கம் அளித்தல், ஐயங்களைதல்.

இடம்
கருத்தரங்கக்கூடம் , அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயிலாச்சேரி, கும்பகோணம்-612503

திகதி, நேரம்
11 அக்டோபர் 2013 (11.10.2013), வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • வரவேற்புரை - திரு. அருள் பிரான்சிஸ், முதலாமாண்டு மாணவர்
  • சிறப்புரை: முனைவர்.ச. மணி, முதல்வர், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • தலைமையுரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி
  • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம்
  • நன்றியுரை: திரு. ப.சிவராமன், முதலாமாண்டு மாணவர்
  • நாட்டுப்பண்
நிகழ்வுப் பொருண்மைகள்
இந்நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
காட்சித்தொடர்பியல் துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தொடர்பு
ஆர்வமுள்ளவர்கள் இங்கு அளிக்கப்பெற்றுள்ள எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் பெயரைப் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம். தொடர்பு எண்கள்: 9047655025, 9750933101

Sunday, September 29, 2013

புதிர்ப் போட்டி விடைகள்

தமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டிக்கான விடைகள்:

1. விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸின் விக்கிப்பீடிய பயனர் பெயரென்ன?
விடை:Jimbo_Wales மேற்கோள்: https://en.wikipedia.org/wiki/User:Jimmy_wales

2. விக்கிப்பீடியாவின் இலச்சினையில் மறைந்துள்ள தமிழ் எழுத்து என்ன?
விடை:வி மேற்கோள்:https://ta.wikipedia.org/s/4ai

3. ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்து விக்கிப் பயனர்களும் ஓன்று கூடி விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வுக்குப் பெயரென்ன?
விடை:விக்கி மாரத்தான் மேற்கோள்:https://ta.wikipedia.org/s/h06

4. இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய தமிழ் விக்கிப்பீடியா பக்கம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?
விடை:11:14, 16 மார்ச் 2005‎ மேற்கோள்: வரலாறு

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கேள்வி:வயலுக்கு மாடு ______ சொன்னது இல்லை
குறிப்பு:உருமாறிய ஒரு விக்கிமேற்கோள்
விடை:நன்றி மேற்கோள்: https://ta.wikiquote.org/s/8y

6. இப்படம் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தக் கட்டுரைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது? (செப் 25 2013 வரை)
விடை:பம்பை (இசைக்கருவி) அல்லது கரகாட்டம் மேற்கோள்: https://ta.wikipedia.org/s/d5y https://ta.wikipedia.org/s/2yp

7. கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஓன்று கீழுள்ள கட்டங்களுக்குள் ஒளிந்துள்ளது. அதுஎன்ன?
விடை:குரீஇப்பூளை அல்லது பூளை மேற்கோள்: https://ta.wikipedia.org/s/dqz

8. தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு இலத்தீன் பெயர்ச் சொல்லின் தமிழ்ப் பொருள் கொண்டு ஒளிந்துள்ள வார்த்தை எது?
விடை:பூச்சியியல் மேற்கோள்: https://ta.wiktionary.org/s/1jsh

9. மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பும் கருவிநூலாகக் கொண்டு விக்கிமூலத்தில் உருவாக்கப்பட்ட நூல் எது?
விடை:அகத்தியம் மேற்கோள்: https://ta.wikisource.org/s/1op

10. CIS-A2Kவின் விரிவாக்கம் என்ன?
விடை:Centre for Internet Society's Access To Knowledge


11. கூகிள்+ சமூகத்தளத்தின் பகிர்வுப் பட்டையைத்[sharer] தனது பக்கங்களில் கொண்டுள்ள விக்கித் திட்டம் எது?
விடை:விக்கி செய்திகள்

12. இப்படம் இடம் பெற்றுள்ள தமிழ் விக்சனரி பக்கம் எது?
விடை:பொட்டாசியம் மேற்கோள்:https://ta.wiktionary.org/s/1nxb

13. வ,த,த,தா,ன,ந்,ம் - இவ்வெழுத்துக்கள் எல்லாம் கொண்டு தமிழ் விக்சனரியில் இடம் பெற்றுள்ள ஒரு சொல் கூறுங்கள்
விடை:தந்ததாவனம்

14. இந்தப் படம் எந்த விக்கித் திட்டத்தினை மறைமுகமாகக் குறிக்கிறது?
விடை:விக்கிவோயேஜ்

15. மெய்க்கீர்த்தி என்ற கட்டுரையும் தண்டம்பட்டு நடுகல் என்ற கட்டுரையும் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தப் பொதுவான பகுப்பின் கீழுள்ளன?
விடை:கல்வெட்டியல்

16. பெப்ரவரி 24 2013 அன்று தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரை எது?(ஏதேனும் ஓன்று)
விடை:பாண்டியர் செப்பேடுகள் அல்லது சோடியம் மேற்கோள்:https://ta.wikipedia.org/s/2cgh https://ta.wikipedia.org/s/6ri

17. பன்னிரு ஆழ்வார்களில் யாருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் முதல் பக்கம் எழுதப்பட்டது?
விடை:ஆண்டாள் கட்டுரை மட்டுமே 2005 ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள் எழுதப்பட்டது. மற்ற கட்டுரைகள் எல்லாம் ஓராண்டுக்குப் பிறகே எழுதப்பட்டது.

18. 2012 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை பயனர்கள் திருத்தம் செய்தனர்?
விடை:812 இங்கு கேள்வி எத்தனை திருத்தம் அல்ல எத்தனை பயனர்கள் மேற்கோள்:http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm

19. தாலொவாலீ - 1 = ? (தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு சொல்)
விடை:தலைவலி - ஓர் எழுத்து முன்னே உள்ள எழுத்துக்கள்

20. விக்கிமீடியாவும், இன்டச்(INTACH) நிறுவனமும் சேர்ந்து 2012ல் நடத்திய ஒரு புகைப்படப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படத்தை எடுத்தவர் யார்?
விடை:Naga Praveen Sharma மேற்கோள்:http://www.wikilovesmonuments.in/winners/


வெற்றியாளர்கள்:
தமிழினியன் (15 புள்ளிகள்)
தமிழ்ப்பிரியன் (12 புள்ளிகள்)
முத்து ராமன் (10 புள்ளிகள்)

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் வாழ்த்துக்கள். தங்கள் அஞ்சல் முகவரியை tamil.wikipedia @ gmail.com அல்லது neechalkaran @ gmail.com என்ற முகவரிக்குத் தெரிவுபடுத்தினால் பரிசுகள் அனுப்பிவைக்கப்படும்.

Wednesday, September 25, 2013

தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி


வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையோட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையப் பயனர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்தப் புதிர்ப் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியா குழு வழங்குகிறது. மூன்று சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது.

எந்த வித தடையுமில்லாமல் அனைவரும் இப்புதிரில் பங்கு கொள்ளலாம்.
போட்டி விதிகள்:
மொத்தமுள்ள இருபது கேள்விக்கு உங்கள் விடைகளை எண்ணிட்டுக் கீழுள்ள மறுமொழிப் பெட்டியில் இடவும்.
ஒருவர் ஒரு கேள்விக்குக் கடைசியாகச் சொன்ன விடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விடைகள், விழா நாளன்று வெளியிடப்படும் அதுவரை விடைகள் கொண்ட மறுமொழிகள் மட்டும் மட்டுறுத்தல் செய்யப்படும்.
புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 திருத்தங்களுக்கு மேல் செய்தவர்கள் கௌரவப் போட்டியாளர்களாகக் கணக்கில் கொண்டு பரிசுப் போட்டியில் சேர்க்கப்படாது.
ஏனையோரில் எந்த வயதினரும், எந்த மொழியினரும், எந்த நாட்டினரும் பரிசுப் போட்டிக்குத் தகுதியானவர்களே.
விக்கிப்பீடிய பயனராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


1. விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸின் விக்கிப்பீடிய பயனர் பெயரென்ன?


2. விக்கிப்பீடியாவின் இலச்சினையில் மறைந்துள்ள தமிழ் எழுத்து எது?


3. ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்து விக்கிப் பயனர்களும் ஓன்று கூடி விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வுக்குப் பெயரென்ன?


4. இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய தமிழ் விக்கிப்பீடியா பக்கம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?


5. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கேள்வி:வயலுக்கு மாடு ______ சொன்னது இல்லை
குறிப்பு:உருமாறிய ஒரு விக்கிமேற்கோள்


6. இப்படம் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தக் கட்டுரைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது? (செப் 25 2013 வரை)7. கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஓன்று கீழுள்ள கட்டங்களுக்குள் ஒளிந்துள்ளது. அதுஎன்ன?8. தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு இலத்தீன் பெயர்ச் சொல்லின் தமிழ்ப் பொருள் கொண்டு ஒளிந்துள்ள வார்த்தை எது?


9. மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பும் கருவிநூலாகக் கொண்டு விக்கிமூலத்தில் உருவாக்கப்பட்ட நூல் எது?


10. CIS-A2Kவின் விரிவாக்கம் என்ன?


11. கூகிள்+ சமூகத்தளத்தின் பகிர்வுப் பட்டையைத்[sharer] தனது பக்கங்களில் கொண்டுள்ள விக்கித் திட்டம் எது?


12. இப்படம் இடம் பெற்றுள்ள தமிழ் விக்சனரி பக்கம் எது? (செப் 25 2013 வரை)
13. வ,த,த,தா,ன,ந்,ம் - இவ்வெழுத்துக்கள் எல்லாம் கொண்டு தமிழ் விக்சனரியில் இடம் பெற்றுள்ள ஒரு சொல் கூறுங்கள்


14. இந்தப் படம் எந்த விக்கித் திட்டத்தினை மறைமுகமாகக் குறிக்கிறது?


15. மெய்க்கீர்த்தி என்ற கட்டுரையும் தண்டம்பட்டு நடுகல் என்ற கட்டுரையும் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தப் பொதுவான பகுப்பின் கீழுள்ளன?


16. பெப்ரவரி 24 2013 அன்று தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரை எது?(ஏதேனும் ஓன்று)


17. பன்னிரு ஆழ்வார்களில் யாருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் முதல் பக்கம் எழுதப்பட்டது?


18. 2012 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை பயனர்கள் திருத்தம் செய்தனர்?


19. தாலொவாலீ - 1 = ? (தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு சொல்)


20. விக்கிமீடியாவும், இன்டச்(INTACH) நிறுவனமும் சேர்ந்து 2012ல் நடத்திய ஒரு புகைப்படப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படத்தை எடுத்தவர் யார்?


போட்டி பற்றிய புதிய அறிவிப்புகளுக்கு இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்

பரிசு:
அதிக சரியான விடைகளைக் கூறிய மூவர் அல்லது அனைத்து விடைகளையும் சொன்னவர்களில் மூவருக்கு(குலுக்கல் முறையில்) பரிசுவழங்கப்படும்.
வெற்றி பெரும் அந்த மூன்று நபர்களுக்கு இந்திய ரூபாய் 500 மதிப்புள்ள பரிசு, விழா அரங்கில் அல்லது போட்டியாளர் அளிக்கும் இந்திய/இலங்கை முகவரிக்கு தபாலில் வழங்கப்படும். போட்டியாளர்களின் ஆர்வம் கருதி பரிசு மதிப்பு அதிகரிக்கப்படலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக் கூடல் கொண்டாட்ட அரங்கில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இடம்:கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை நாள்:செப்டம்பர் 29
மேலும் கூடல் பற்றி அறிய இங்கே வாருங்கள் போட்டி தொடர்பாக சந்தேகங்களுக்கு neechalkaran @ gmail.com என்ற முகவரியில் அணுகலாம்

உதவிக்குறிப்புகள்:
விக்கித்திட்டப் பக்கங்கள், விக்கித்திட்ட நுணுக்கங்கள், கூகிள், படிப்பாற்றல், சொல்லாற்றல், சிந்தனையாற்றல் ஆகியவை உங்களுக்கு உதவலாம்.

இப்புதிரை சமூகத் தளங்களில் #tawiki10 கொண்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thursday, September 5, 2013

எழுத்து மட்டும் அறிவன்று: விக்கியில் வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்புக்கள்

விக்கியூடகங்களுக்கு வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.  விக்கி சின்னங்கள், கட்டுரைகளுக்குத் தேவையான வரைபடங்கள், நிலப்படங்கள், இலச்சினைகள், செயற்திட்டங்களுக்கு தேவையான அடையாளச் சின்னங்கள், பாதகைகள் என்று பல வகைகளில் வரைகலைப் பயனர்களின் பங்களிப்புக்கள் அமைகின்றன.  இந்தப் பங்களிப்புக்கள் உள்ளடக்கத்தை விரிவாக்குகின்றன, எளிமைப்படுத்துகின்றன, அழகுபடுத்துகின்றன, பரந்துபட்ட பயனர்களுக்கு எடுத்துச் செல்லுகின்றன. 

அந்த வகையில் தமிழ் விக்கியிலும் எமது வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்புக்கல் மெச்சும் வகையில் அமைந்துள்ளன.  குறிப்பாக தாரிக், அன்ரன், செந்தில், செல்வா, மயூரநாதன் போன்றின் பங்களிப்புகளைச் சொல்லாம். 

தற்போது தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்ட வடிவமைப்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.  இதில் நீங்களும் கலந்து கொள்ளலாமே.  வழமையான பல விக்கிச் செயற்பாடுகள் போன்று நீங்கள் தொழில்சார் வரைகலைக் கலைஞராக இருக்க வேண்டியதில்லை.  ஏற்கனவே இருக்கும் வரைபடங்களை தமிழில் ஆக்கலாம்.  புதிய சின்னங்களை, வரைபடங்களை, நிகழ்படங்களை உருவாக்கலாம்.  வடிவமைப்புக்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்.

சில எடுத்துக்காட்டுக்கள்:
பயனர்:Drsrisenthil


பயனர்:Tharique

பயனர்:Anton

பயனர்:செல்வா

பயனர்:Mayooranathan

 

Friday, August 30, 2013

ஒரு பொது, திறந்த, இணையத் தமிழ் நூற்பட்டியலின் (Catalog) தேவை

தமிழ் நூல்கள் பற்றிய தகவல்கள் தனித் தனித் தீவுகளாகத் தொகுக்கப்படுகின்றன.  தமிழம், நூலகத் திட்டம், மதுரைத் திட்டம், படிப்பகம், தமிழ் விக்கியூடகங்கள், கன்னிமரா நூலகம், ரோசா முத்தையா நூலாகம், விருபா, இணையத் தமிழ் நூற் கடைகள், பதிப்பகங்கள் போன்றவை இணையத்தில் தமிழ் நூல்கள் பற்றிய மீதரவை (metadata) அல்லது நூற்பட்டியலைத் (catalog) தருகின்றன.  இந்த அமைப்புக்கள் வெவ்வேறு ஆயினும் இவை ஒரு பொது நோக்கத்தைக் கொண்டுள்ளன.  அதாவது தமிழ் நூல்களைப் பற்றிய தகவல்களைத் தருவது.  இதை இந்த அமைப்புக்கள் தனித் தனியே செய்யாமல் இணைந்து செய்வது இன்று பல காரணங்களால் அவசியமாகிறது. 

பொதுவாக நூற்பட்டியலை வெளியிடுவது, ஆவணப்படுத்துவது அரசுகளின் ஒரு முக்கிய கடமை ஆகும். ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, உருசியா, செருமனி போன்ற நாடுகள் பெரும் வளங்களை ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்கின்றன.  எடுத்துக்காட்டாக பல மேற்குநாடுகளில் இயங்கும் பதிப்பகர்கள் எல்லாம் காங்கிரசு நூலகத்துக்கு (Library of Congress) அல்லது தமது தேசிய ஆவணகங்களுக்கு நூல்களையும் நூல்களைப் பற்றிய தகவல்களையும் கட்டாயம் அனுப்ப வேண்டும்.  இத் தகவல்களை நூலகக் கூட்டமைப்புக்கள் தொகுத்துப் பகிர்கின்றன.  குறிப்பாக Online Computer Library Center, Inc (OCLC) கூட்டமைப்பே உலகின் அதிக உசாத்துணைகளை (Bibliography) கொண்ட இலாப நோக்கமற்ற கூட்டமைப்பு ஆகும். 

ஆனால் தமிழ்ச் சூழலில் அரசுகள் இந்தப் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இந்திய அளவில் ஆவணகவியலும் நூலகவியலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட திணைக்களங்கள் ஆகும்.  தமிழ்நாடு அரசும் இத் துறையைக் கவனிக்க வில்லை.  எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக தமிழ் நூற்பட்டியல்கள் வெளியிடப்படவில்லை.  இலங்கையில் பல கால கட்டங்களீல் அரசுகள் திட்டமிட்ட முறையில் தமிழ் தகவல் வளங்களை அழித்து வந்துள்ளது.  ஈழத்தில் உருவாக்கப்பட்ட பெளதீக ஆவணகங்களும் போரில் அழிந்துவிட்டன.  செல்வராஜாவின் நூல் தோட்டம் போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் விதிவிலக்காக தமிழ் நூற்பட்டியல் (catalog) இன்னும் தொகுக்கப்படவில்லை.  இந்தச் சூழலில்தான் ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலின் தேவையை தன்னார்வ அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் சேர்ந்து உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.  இணையக் கட்டமைப்புக்கள் இதற்கான ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. 


நாம் தனித்தனியே தமிழ் நூற் தகவல்களைத் தொகுப்பதால் வளங்கள் வீணாகும்.  தகவல் முழுமை பெறாது. அவரவர் பயனர்கள் விரிவான சேவையைப் பெற முடியாது.  ஆனால் நாம் இணைந்து ஒரு பொது, திறந்த, இணைய தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்துப் பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறலாம்.  எமது தேவைகள் வேறுபட்டால், நாம் அனைவரும் ஒரு பொது அடிப்படையிலாவது (டுப்பிளின் கருவகம் - Dublin Core) சேர்ந்து இயங்கி, பின்னர் மேலதிக தகவல்களை எமது தேவைகளுக்கு ஏற்ப இணைக்கலாம். 
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பல.  யார் தொகுப்பது,  அதற்கான கட்டமைப்பு என்ன.  என்ன சீர்தரத்தைப் பயன்படுத்துவது. எப்படிப் பகிர்வது.  மிக யாதார்த்தமான சிக்கல்களே.  ஆனால் உலக அரங்கில் பலர் திறனாக நிறைவேற்றிய தீர்வுகள் உண்டு.  நுட்பம் இதில் ஒரு சிக்கல் இல்லை.  எமக்கு இருக்கும் உண்மையான சிக்கல் பல தரப்பட்டவர்களை இணைத்து இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதுத்தான்.  இந்தப் பணியை ரேசா முத்தையா நூலகம், நூலகத் திட்டம், உத்தமம் முன்னின்று எடுக்க வேண்டும்.  தமிழ் விக்கிச் சமூகமும் இதில் ஒரு முக்கிய பங்கேற்கும். 

Monday, August 26, 2013

2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டி

2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.  தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.

மேலும் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/WP:2013contest

Tuesday, August 20, 2013

தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை

இந்தக் கிழமை தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. அண்மைய பல ஊடகக் கட்டுரைகளைக் காட்டிலும் தெளிவாகவும் சரியாகவும் இருப்பது சிறப்பு.

http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/India-today-tamil-wikipedia-1.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5b/India-today-tamil-wikipedia.jpg