Sunday, August 22, 2010

ஆப்பிரிக்க மொழிகளின் விக்கிப்பீடியாக்கள்

மனித இனத்தின் வரலாறு ஆப்பிரிக்காவிலேயே தொடங்கியது. இன்று ஆப்பிரிக்காவில் உலகின் 15 வீத மக்கள் வாழுகிறார்கள். 54 நாடுகளையும் பல்வேறு இனக்குழுக்களையும் கொண்டுள்ள இந்த கண்டத்தில் 2000 மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

நீண்ட காலமாக அரபிய, ஐரோப்பிய குடியேற்ற ஆதிக்கத்து உட்பட்டு மிகவும் பின் தங்கிய, அரசிய பொருளாதார வளம் அற்ற ஒரு சமூகமாக ஆப்பிரிக்கா உள்ளது. இன்றும் சீனா, மேற்குநாடுகள், அரபு நாடுகளின் சுரண்டிலில் இருந்து ஆப்பிரிக்கா மீளவில்லை. இதனால் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி தமது வாழ்க்கை முறைகளையும், பாரம்பரிய அறிவையும், மொழிகளையும் இழந்து நிற்கிறது.

இன்று ஆப்பிரிக்காவில் குடியேற்றவாத பிரெஞ்சு, ஆங்கிலம், டச்சு, அரபு மொழிகளே பல நாடுகளில் ஆட்சி மொழிகளாகவும், வணிக கல்வி மொழிகளாகவும் உள்ளன. ஆப்பிரிக்கர்களின் மொழிகள் மிகவும் நலிந்த நிலையிலேயே உள்ளன. இந்த பின்புலத்திலேயே ஆப்பிரிக்க விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவில் பேசப்படும் 2000 மேற்பட்ட மொழிகளில் 15 வரை மட்டுமே 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. அந்த மொழி விக்கிப்பீடியாக்களின் விபரம் பின்வருமாறு.

* கிசுவாகிலி - (50+ மில்லியன் மக்கள் - கிழக்கு ஆப்பிரிக்கா) - 20, 046 கட்டுரைகள்
* அவுசா - (39 மில்லியன் மக்கள் - நைசர், நைசீரியா) - 154 கட்டுரைகள்
* சுலு - (26 மில்லியன் - தென் ஆப்பிரிக்கா) - 141 கட்டுரைகள்
* அம்காரிக் - (25 மில்லியன் - எதியோப்பியா) - 4509 கட்டுரைகள்
* ஒரொமோ - (25 மில்லியன் மக்கள் - எதியோப்பியா) - 207 கட்டுரைகள்
* யொரூபா - (25 மில்லியன் மக்கள் - நைசீரியா) - 9603 கட்டுரைகள்
* இக்போ - (25 மில்லியன் மக்கள் - நைசீரியா) - 658 கட்டுரைகள்
* அகன் - (19 மில்லியன் மக்கள் - கானா) - 113 கட்டுரைகள்
* சோனா - (17 மில்லியன் ? - சிம்பாப்வே) - 64 கட்டுரைகள்
* சோமாலி (16 மில்லியன் மக்கள் - சோமாலியா) - 1379 கட்டுரைகள்
* கின்யருவாண்டா (~12 மில்லியன் மக்கள் - உருவாண்டா) - 111 கட்டுரைகள்
* மலகாசி (10 மில்லியன் மக்கள் - மடகாசுகர்) - 2452 கட்டுரைகள்
* ஃபுலா - (10+ மில்லியன் - மேற்கு ஆப்பிரிக்கா) - 56 கட்டுரைகள்
* சுவா - (10 மில்லியன் - மலாவி) - 75 கட்டுரைகள்

மேலே உள்ள புள்ளி விபரங்களை நோக்கினால் ஒரே ஒரு ஆப்பிரிக்க மொழி விக்கிப்பீடியா மட்டுமே 20 000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டுள்ளது என்றும், மற்ற அனைத்தும் 10 000 கட்டுரைகளுக்கு குறையவே என்பதும் தெரியவருகிறது. மேலும் பெரும்பாலனவை 1000 கட்டுரை அளவையே எட்டவில்லை. பெரிய ஆப்பிரிக்க மொழிகளுக்கே இந்த நிலை என்றால், சிறிய ஆப்பிரிக்க மொழிகள் இன்னும் தொடங்கப்படவில்லை, அல்லது மிகக் குறைவான அளவு கட்டுரைகளையே கொண்டிருக்கும்.

ஆப்பிரிக்க மொழிகள் பெரும்பாலனவை அண்மைக் காலத்திலேயே எழுத்துமுறையைப் பெற்றவை. பெரும்பாலனவை இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றன. எனவே தொழில்நுட்பம் இங்கு ஒரு தடையாக இல்லை.

ஆனால் ஆப்பிரிக்காவில் இணைய வசதி மிகக் குறைவு. பெரும்பான்மை மக்கள் இன்னும் போதிய கல்வி அறிவைப் பெறவில்லை. இவை இந்த விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி ஒரு முக்கிய தடை.

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஐரோப்பிய மொழிகளே அலுவல் மொழிகளாக உள்ளன. கல்வி கற்றோர் ஐரோப்பிய மொழி விக்கிப்பீடியாக்களைப் பயன்படுத்தி, அல்லது அவற்றுக்கு பங்களித்து ஆப்பிரிக்க மொழிகளைப் புறக்கணித்து இருக்கலாம்.

ஆப்பிரிக்க மொழிகள் பல எழுதப்பட்ட இலக்கிய மரபு அற்றவை. இதனால் உரைநடை, அல்லது எழுத்து மொழி விருத்தி பெறாமல் இருககலாம். இந்த நிலை விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கலாம்.

ஆப்பிரிக்க மொழிகளின் இந்த நிலைமை அந்த கண்டத்தின் அரசியல் பொருளாதார நிலைக்கு ஒத்தது. சிறிய, ஆனால் பலம் மிக்க இசுரேல் நாட்டின் எபிரேய மொழியில் ஒரு இலட்சத்துக்கு மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் பல மில்லியன் மக்கள் பேசும் ஆப்பிரிக்க மொழிகளிலேயே ஆயிரம் கட்டுரைகள் வரை கூட இல்லை என்பது இந்தப் புறக் காரணிகளாலேயே. ஆப்பிரிக்க மொழிகளின் நிலை இந்திய மொழிகளுக்கும் ஓரளவு பொருந்தும். இதை விட மிக மோசமான நிலையில் இருப்பவை அமெரிக்க முதற்குடிமக்களின் மொழிகள் ஆகும்.

ஆப்பிரிக்க விக்கிப்பீடியாக்களில் நிலைமை தனித்துவம் மிக்க மொழிகளும், அவை சார்ந்த அறிவும் பண்பாடும் அழிந்து வருகின்றன என்பதை சுட்டுகின்றது. தமிழர்கள் தமிழ் மொழியையும், அது சார்ந்த அறிவையும், பண்பாட்டையும் மேலும் உறுதியுடன் பாதுகாக்க, மேம்படுத்த இது ஒரு எச்சரிக்கையாக அமைகிறது. இது மொத்த மனித இனத்தின் தேவையாகவும் அமைகிறது.

உசாத்துணைகள்:
* http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
* http://en.wikipedia.org/wiki/Languages_of_Africa

Monday, August 16, 2010

பஞ்சாபி மொழியும், பஞ்சாபி விக்கிப்பீடியாக்களும்

இந்திய மொழிகளில் இந்தி, வங்காளத்துக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பேசும் மொழி பஞ்சாபி ஆகும். உலகில் சுமார் 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பஞ்சாபி மொழியைப் பேசுகிறார்கள். பாகிசுத்தானில் 76 மில்லியன் மக்களும், இந்தியாவில் 29 மில்லியன் மக்களும், ஐக்கிய இராச்சியத்தில் 2.3 மில்லியன் மக்களும், கனடாவில் 1.1 மில்லியன் மக்களும் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் பல மேற்கு, மத்திய கிழக்கு நாடுகளில் பஞ்சாபி பேசும் மக்கள் வாழுகிறார்கள். இந்தியாவிலும், பாகிசுத்தானிலும் மாநில மொழிகளாக இது உள்ளது. சீக்கிய சமயத்தின், பஞ்சாபி மக்களின் பண்பாட்டின் மொழியாக இது உள்ளது. ஆனால் இந்த மொழி விக்கிப்பீடியாக்களின் நிலை மிக மோசமானது.

கிழக்குப் பஞ்சாபி மொழி சமசுகிருத சொல்வாக்குக்கு உட்பட்டது. இது தேவநாகரி எழுத்து முறையிலும், குருமுகி எழுத்து முறையிலும் எழுதப்படுகிறது. மேற்கு பஞ்சாபியில் அரபு, பாரசீக மொழிகளின் செல்வாக்கு அதிகம். அதனால் மேற்குப் பஞ்சாபி உருது மொழி எழுதப்படும் எழுத்து முறைக்கு ஒத்த எழுத்து முறையில் எழுதப்படுகிறது. இதனால் கிழக்கு பஞ்சாபி விக்கிப்பீடியா, மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியா என இரு விக்கிப்பீடியாக்கள் உள்ளன. ஒரு தரப்படுத்தப்பட்ட எழுத்து முறை இல்லாதது பஞ்சாபி மொழியை இரு அல்லது முப்பெரும் தீவுகளாக ஆக்கி உள்ளது. இந்த நிலை தமிழ், மலையாள நிலைக்கு ஒத்தது.

தற்போது கிழக்கு பஞ்சாபி மொழியில் 1923 கட்டுரைகளும், மேற்கு பஞ்சாபி மொழியில் 5390 கட்டுரைகளும் விக்கிப்பீடியாக்களில் உள்ளன. மிகக் குறைந்த நிலை பங்களிப்பையே இரு விக்கிப்பீடியாக்களும் பெறுகின்றன. இதற்கு அரசியல், மொழியியல், சமய காரணங்கள் உள்ளன.

பஞ்சாபி மொழி பல வட்டார வழக்குகளாகவும், பல எழுத்துமுறைகளையும் கொண்டிருப்பது பஞ்சாபி மொழியின் வளங்களைச் சிதறடிக்கிறது. அவர்கள் திறமையாக கூட்டியங்குவதைத் தடுக்கிறது.

பாகிசுத்தானில் அதிகம் பேசப்படும் மொழி பஞ்சாபி என்றாலும், அங்கு சமய அரசியல் காரணங்களால் உருதும், ஆங்கிலமுமே தேசிய மொழிகளாக ஆக்கப்பட்டன. பஞ்சாபி மொழியில் கல்வி பெறுவது பாகிசுத்தானிலும், இந்தியாவிலும் சிரமமானது, அருகி வருகிறது. திரைப்படத்துறையிலும் பஞ்சாபி வலுவாக இல்லை.

இந்திய தரவெடுப்பில் பல இந்து பஞ்சாபிகள் அவர்கள் தாய் மொழி பஞ்சாபி என்றாலும், தாம் இந்தி என்று கூறுகிறார்கள். சீக்கியர்கள் பஞ்சாபியை ஒரு சமய மொழியாக முன்னிறுத்தியதே பஞ்சாபி இந்துக்குக்கள் இப்படிக் கூற ஒரு முக்கிய காரணம். இன்று பஞ்சாபி பேசுபவர்கள் இந்தி மொழி பேசுபவர்களுக்குள் உட்படுத்தப்பட்டு, இந்தியாவில் இந்திக்கு ஆதரவான ஒரு மொழிக் கொள்கையை உருவாக்க உதவிற்று. இதனால் பஞ்சாபி மொழியும் பாதிக்கப்பட்டது.

அரசியலால், சமயத்தால், மொழியியல் போதாமைகளால் சிதறடிக்கப்பட்ட ஒரு மொழியாகவே பஞ்சாபி உள்ளது. அதன் ஒரு வெளிப்பாடே பஞ்சாபி விக்கிப்பீடியாக்கள். ஆனாலும் அங்காக்கே பஞ்சாபி மொழியை புதுப்பிக்க, பாதுக்காக்க, வளர்க்க அமைப்புகள் பாடுபடுகின்றன. இவர்கள் எந்தளவு வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு விக்கிப்பீடியாக்கள் அறிகுறியாக அமையும்.

ஆதாரங்கள்
* Language Conflict and National Development: Group Politics and National Language Policy in India
* List of Wikipedias
* Punjabis Without Punjabi
* The Future of Punjabi
* Punjabi: story of a script’s decline

Tuesday, August 10, 2010

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்

தமிழின், தமிழரின், பிறரின் வரலாற்றை, கலைகளை, நுட்பங்களை, அறிவியலை எண்மிய பல்லூடக முறையில் தமிழில் ஆவணப்படுத்திப் பகிர்வது தமிழ்ச் சமூக வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய செயற்பாடுகளில் ஒன்று. சங்க காலம், சோழ-பாண்டிய பேரசுக் காலங்களை நோக்குகையில் தமிழர்கள் பல் துறைகளில் உயர்ந்த அறிவைப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. உலக நாகரிகங்களில் ஒரு முக்கிய ஊற்று தமிழர்களுடையது. ஆனால் தமிழர்கள் வெல்லப்பட்டு அடக்கி வைக்கப்பட்டபோது நாம் எமது அறிவை இழந்தோம். எமது ஆவணப்படுத்தலின், பாதுகாத்தலின் போதாமைகளும் எமது அறிவை நாம் இழக்கக் காரணமாயின. இதனால் நாம் பண்பாட்டு, அரசியல், பொருளாதார முனைகளில் பல பாதிப்புக்களைச் சந்தித்தோம்.

எனினும் பிற பல மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்கு தொன்று தொட்டே எழுதப்பட்ட இலக்கியங்கள் உண்டு. கல்வெட்டுக்கள், சிலைகள், கட்டிடங்கள், தொல்பொருட்கள் ஆகியவை தமிழர் அறிவியலைச் அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. வாய் மொழி இலக்கியம், கலைகள், தொழில்கள் தமிழிர் அறிவின் வாழும் ஆதாராங்களாக உள்ளன. இன்று இந்த அறிவு எண்மிய பல்லூடக முறையில் ஆவணப் படுத்தப்படுவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது.

19 ம் நூற்றாண்டில் ஏட்டில் இருந்தல் தமிழ் இலக்கியங்கள் அச்சுப் பதிக்கப் பட்டமை தமிழரின் மறுமலர்ச்சிக்கு ஒரு வளமாக அமைந்தது. 20 ம் நூற்றாண்டில் பலர் மேற்கொண்ட நாட்டாரியல் ஆய்வுகள் எமது பழமொழிகளை, பாடல்களை, வழக்கங்களை, இன்னும் பல கூறுகளைப் பதிவு செய்து தமிழ்ச் சமூகத்தின் உயர்நாடி ஒன்றைப் பாதுக்காத்தது. ஆனால் இதே போன்ற செயற்பாடுகள் தமிழர் தொழில்நுட்பங்கள், அறிவியல் நோக்கிச் செயற்படுத்தப்படவில்லை. இன்று எமது சூழல், அது சார்ந்த உற்பத்திகள் பற்றி நாம் கொண்டிருந்த இயல்பான அறிவை இழந்து நிற்கிறோம். மீண்டும் மேற்குநாடுகள் வழியே இயற்கை வேளாண்மை, பேண்தகு மீன்பிடிப்பு, மர வேலை, கட்டிடக்கலை போன்ற அறிவுகளை அறிய தள்ளப்பட்டிருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் நாம் எமது அறிவை அவணப் படுத்தல் அவசியமாகும்.

எமது அறிவு மட்டும் அல்லாமல் வேகாமாக மாறும் உலகின் பல்துறை அறிவும் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழர்கள் அந்த அந்த நாட்டு புவியியல், பண்பாடு, கலைகள், இலக்கியங்கள் பற்றி மட்டும் அல்லாமல், அங்கு உள்ள சமூக அமைப்புகள், சட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவையும் பகிர வேண்டும். இது எமக்கு இன்று இருக்கும் ஒரு அரிய வாய்ப்பு.

இந்த அறிவுகளை நாம் இணையம் மூலம், பல்லூடக வழிகளில் ஆவணப் படுத்திப் பகிர வேண்டும். இன்று காட்சி ஊடகமே முக்கியம் பெற்று வருகிறது. பல பத்திகளில் சொல்வதை, ஒரு காட்சியில் காட்டி விட முடியும். ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), படங்கள் (images), தரவுகள் (data), எழுத்து (text) என எண்மிய பல்லூடக முறையில் நாம் ஆவணப் படுத்தி, எளிய முறையில் பகிர வேண்டும்.

இந்த கூட்டறிவு ஆவணப் படுத்தலை, உற்பத்தியை நாம் கூட்டாக, பரவலான முறையில், சேர்ந்தியங்க உதவும் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யலாம். எமது விளைச்சல்களை கூட்டாக உரிமைப் படுத்தி அனைவரும் பயன் பெறலாம்.

இந்த செயற்பாடுகளில் தமிழ் விக்கியூடகங்கள், மதுரைத் திட்டம், நூலகத் திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற பலர் செயற்படுகிறார்கள். இவற்றில் பல நிறைகளும் குறைகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்தி, மேலும் பல களங்களை அமைக்க வேண்டியது எமது இன்றைய தேவையாகிறது.

Monday, August 2, 2010

மலையாளம், தமிழ், இந்தி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

இந்திய மொழிகளில் மலையாளம், தமிழ், இந்தி ஆகியவை கட்டுரைகள் எண்ணிக்கை, தரம், பயனர் எண்ணிக்கை, பயனர் பங்களிப்பு ஆகிய மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்னிலையில் நிற்கின்றன. இவற்றை ஒப்பிட்டு வேறுபடுத்தி கருத்துக் கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.

தமிழ், மலையாளத்தை விட அதிக கட்டுரைகளைக் கொண்டிருக்கும் தெலுங்கு விக்கிப்பீடியாவின் (45,209) தற்போதைய பங்களிப்பு நிலை, தரம், வளர்ச்சி ஆகியவை நன்றாக இல்லை. தொடக்கத்தில் வேகமாகச் செயற்பட்டு வந்த வங்காள விக்கியும் தற்போது தேக்க நிலையிலேயே உள்ளது. மாராத்தி விக்கியில் 30 000 வரையாக கட்டுரைகள் உள்ளன என்று புள்ளிவிபரம் தெரிவித்தாலும், பல ஒரு வசனம் அல்லது சொல் உள்ள வெற்றுப் பக்கங்கள். குசராத்தி, கன்னடம், பஞ்சாபி உட்பட்ட இந்திய மொழிகள் இன்னும் தொடக்க கட்ட வளர்ச்சிப் பருவத்தையே அடையவில்லை. இந்த பின்புலத்திலேயே மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளின் நிலைகளை நாம் ஆய வேண்டும்.

இன்று தரம், பயனர் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னிலையில் இருப்பது மலையாள விக்கிப்பீடியா ஆகும். 13, 500 வரையான கட்டுரைகளையே கொண்டிருந்தாலும், தர அடிப்படையில் (கட்டுரைகளின் ஆழம் = 373) மலாயாள விக்கிப்பீடியாவே முதல் நிலையில் உள்ளது. 207 தீவர பங்களிப்பாளர்களையும், 17 நிர்வாகிகளையும் மலையாள விக்கிப்பீடியா கொண்டுள்ளது. மலையாள விக்கியின் தொகுப்புகளின் எண்ணிக்கை 864,594 ஆகும். எனவே ஒரு சராசரி கட்டுரை பல முறை விரிவாக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்படுகிறது. தற்போது 47 பயனர்கள் மிகத் தீவரமாகப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

இன்று தரம், பயனர் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருப்பது தமிழ் விக்கிப்பீடியா ஆகும். தமிழ் விக்கிப்பீடியா 23,520 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. குறுங்க் கட்டுரைகளே பெரும்பான்மையாக இருந்தாலும், தனி வரிக் கட்டுரைகளோ அல்லது அதிக தானுந்துக் (bot articles) கட்டுரைகளே தமிழ் விக்கியில் இல்லை. ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக் கட்டுரைகள் நல்ல வளர்ச்சி பெற்ற கட்டுரைகள். பகுப்புமைப்பும், ஒழுங்கமைப்பும் தமிழ் விக்கியில் சிறப்பாக உள்ளது. தமிழ் விக்கியில் 222 தீவர பங்களிப்பாளர்களும், 15 நிர்வாகிகளும் உள்ளார்கள். தமிழ் விக்கியின் தொகுப்புகளின் எண்ணிக்கை 577,558 ஆகும். எனவே ஒரு சராசரி கட்டுரை சில முறைகளே தொகுக்கப்படுகின்றன. தற்போது 45 பயனர்கள் மிகத் தீவரமாகப் பங்களிப்புப் செய்து வருகிறார்கள்.

இன்று கட்டுரைகள் எண்ணிக்கை, பயனர் பங்களிப்பு, எதிர்கால வளர்ச்சிக் குறிகள் அடிப்படையில் இந்திய மொழிகளில் இந்தி மூன்றாம் நிலையில் உள்ளது. 55,729 கட்டுரைகளுடன் இந்திய மொழிகளில் அதிக கட்டுரைகளை இந்தியே கொண்டுள்ளது. எனினும் இவற்றில் பெரும் விழுக்காடு ஒரு வரிக் கட்டுரைகள், அல்லது ஒரே துறை தானுந்துக் (இந்தியாவில் உள்ள இடங்கள்) கட்டுரைகள். 240 தீவர பங்களிப்பாளர்களும், 24 நிர்வாகிகளும் இந்தி விக்கியில் உள்ளார்கள். எனினும் தற்போது 25 பயனர்களே மிகத் தீவரமாகப் பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

இந்தி மொழியை சுமார் 350 மில்லியன் மக்கள் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். மேலும் நூறு மில்லியனுக்கு மேற்ப்பட்ட மக்கள் தமது இரண்டாம் மொழியாக கொண்டுள்ளார்கள். மொத்த இந்தியாவின் ஒரேயொரு இந்திய அலுவல் மொழி இந்தி ஆகும். எனவே இந்திய மொழிகளில் இந்திக்கே தற்போது அதிக மக்கள், அரச வளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி பெறுவதற்கு இந்தி விக்கிப்பீடியாவிற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் அதன் தற்போதைய நிலை மிக மோசமானது. 240 பங்களிப்பாளர்களில் 24 நிர்வாகிகளாகப் பெறுப்பேற்றிருப்பது பொறுப்புப் பரவலாக்கலைக் காட்டுகிறது. அது நல்ல அறிகுறி எனினும், அடிப்படைப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்க வேண்டும்.

36 மில்லியன் மக்களால் பேசப்படும், கேரளாவில் மட்டும் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் மலையாளம் தர, பங்களிப்பு அடிப்படையில் முன்னிற்கு நிற்பது வியக்கத்தக்கது. கேரள மக்கள் 95 % படிப்பறிவு பெற்றுள்ளமை, அவர்களுக்கு தீவர இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வம் போன்ற சூழல் காரணிகள் இதை ஓரளவு விளக்கலாம். நாள் தோறும் அதிகம் தொகுக்கப்படும் இந்திய விக்கி மலையாள விக்கியே. அவர்கள் திறமையாக கூட்டாகச் செயற்படுகிறார்கள். நிர்வாப் பொறுப்பும் பரவாலாக உள்ளது.

இந்தி மொழிக்கு அடுத்த படியாக அதிக வளங்களைக் கொண்டுள்ள மொழி தமிழே. நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா) அரச ஆதரவு உண்டு. 66 மில்லியன் மக்கள் தாய் மொழியாக தமிழைப் பேசுகிறார்கள். 74% மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களும், 90% மேற்பட்ட ஈழத் தமிழர்களும் படிப்பறிவு பெற்றவர்கள். இந்த அடிப்படைகளில் தமிழ் விக்கியின் வளர்ச்சி போதாது. குறிப்பாக மலையாள விக்கியுடன் ஒப்பிடும் போதே இந்தக் குறை தெளிவாகத் தெரிகிறது. நாளாந்த தொகுப்புகள், நிர்வாகப் பரவல் ஆகியவற்றில் வளர்ச்சி போதாது.

இன்று கூகிளில் இந்திய மொழிகளில் சொற்களை இட்டால், அதன் முதல் 10 தரவுகளில் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் இடம் பெறுகின்ற்னா. எனவே விக்கிப்பீடியாக்களின் பெறுமதி கணிசமானது. தற்போது விக்கியூடக அறக்கட்டளை இந்திய விக்கிகளை வளர்ப்பதில் கூடிய அக்கறை காட்டுகிறது. அதை நாம் பயன்படுத்தி மேலும் வளர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அனைவரும் எமக்கு ஈடுபாடுள்ள துறைகளில், எமக்கேற்ற முறையில் (ஆக்கம், திருத்தம், படம் சேர்த்தல், பராமரிப்பு) எங்கிருந்தாலும் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

குறிப்புகள்/தரவுகள்:
* மேலே குறிப்பிட்ட தரவுகள் ஆகத்து 2, 2010 நாளில் பெறப்பட்டவை.
* http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
* மலையாள விக்கித் தரவுகள்