Sunday, August 17, 2008

தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகளை எட்டிவிட்டது

செல்வா கருத்து
இன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல் ஆக வேண்டும். மலையாள விக்கியில் ஏறத்தாழ 50 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகளாக அறிவித்து இருக்கின்றார்கள். நெடிய கட்டுரைகளாகவும் (80-100 கிலோபைட் போன்ற அளவில்) அவை இருக்கின்றன. உள்ளடக்கத்தின் சிறப்பை ஓரளவுக்கு உணரமுடிந்தாலும், எழுத்துநடையின் சிறப்பு என்னவாக உள்ளது என்பதை நான் அறியேன். பொதுவாக மலையாளமும், அண்மையில் இந்தியும் மிக நன்றாக முன்னேறி வருவதாக உணர்கிறேன். இதுகாறும் தமிழ் விக்கி அடைந்துள்ள முன்னேற்றம், தரம் பெருமை உடையதாக உள்ளது. பங்களித்த யாவரும் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். வரும் ஓராண்டில் குறைந்தது 7,000 புதிய கட்டுரைகளும் (முடிந்தால் 10,000மும்), பெருமை சேர்க்கும் ஒரு 100 அருமையான நடுநீள (30-50 கி'பைட்), அல்லது நெடிய (>50 கி 'பைட்) கட்டுரைகளும் நம் பங்களிப்பாளர்கள் ஆக்க முற்பட வேண்டும் என்பது என் அவா! பங்களிப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்!--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:02, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

மயூரநாதன் கருத்து
செல்வா சொல்வது சரிதான். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் ஆகப்போகின்றன. 15,000 கட்டுரைகளையும் எட்ட இருக்கிறோம். ஏறத்தாழ சராசரியாக ஓராண்டுக்கு 3,000 கட்டுரைகள். நவம்பர் 2007 தொடக்கம் இன்று வரையான சுமார் 10 மாதகாலத்தில் 3,000 கட்டுரைகள் எழுதியிருப்பது சராசரியிலும் கூடவாக இருப்பினும், ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி வீதத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது வேகம் போதாது என்பது உண்மைதான். செல்வா குறிப்பிட்டது போல், மலையாள விக்கி பல அம்சங்களிலும் சிறப்பாக முன்னேறி வருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய கட்டுரைகளை அவர்கள் எழுதி வருகிறார்கள். அந்த விக்கியின் "Depth" 117 ஆக இருக்க தமிழ் விக்கியின் "Depth" 20 மட்டுமே. இது அவர்களது பங்களிப்புச் செறிவைக் காட்டுகிறதா எனத் தெரியவில்லை. எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் விக்கியில் கட்டுரை ஆக்க வேகத்தைக் கூட்டவேண்டும். தானியங்கிக் கட்டுரை ஆக்க விடயத்தில் ஓரளவு கவனம் செலுத்தலாம். ஆனால், நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுத முயலவேண்டும். திட்டமிட்டுச் செயல்பட்டால் தற்போதுள்ள வளங்களுடனேயே கூடிய பயனைப் பெறலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியிலும் தற்போது நீளம் கூடிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எனது பங்குக்கு நானும் ஏற்கெனவே இருக்கும் சில கட்டுரைகளை விரிவு படுத்துவதுடன் புதிய சில பெரிய கட்டுரைகளை எழுதவும் எண்ணியுள்ளேன். கட்டுரையின் நீளம் கூடுதலாக இருப்பது மட்டுமன்றி அவை முழுமையானவையாகவும் இருக்கவேண்டும். அத்துடன், சான்றுகள் கொடுத்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 16:09, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

நற்கீரன் கருத்து
முக்கிய கருத்துருக்களும் (concepts) தலைப்புகளுக்கும் கவனம் தாருங்கள். [[கோயில்]] என்ற கட்டுரை முக்கியம். ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கும் கோயில்கள் பற்றி தீவர பங்களிப்பாளர்கள் எழுதுவது அவசியமில்லை (ஆர்வம் இருந்தால் நிச்சியம் எழுதலாம், ஆனால் தரம் எண்ணிக்கை என்ற நோக்கில் அப்படி எழுத தேவையில்லை). அதற்கு அவை பற்றி சிறப்பு ஈடுபாடுள்ள பயனர்கள் வந்து எழுதலாம். நிச்சியமாக தமிழில் எல்லா [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]] பற்றியும் கட்டுரைகள் எழுதப்பட கூடிய சாத்தியக் கூறு குறைவு. ஆனால் நாம் [[கணிதம்|கணிதத்]] துறையின் முக்கிய தலைப்புகள் அனைத்திலும் கட்டுரைகளை எழுத முடியும், எழுத வேண்டும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:46, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

கோபி கருத்து
15,000 கட்டுரைகளை எட்டும்போது நாம் அவற்றில் எத்தனை கலைக்களஞ்சியக் கட்டுரையாகக் கருதப்படக் கூடியன என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. கட்டுரை அளவு 2 கி'பைட் என்றாலும் 20 கி'பைட் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையாக இருப்பது முக்கியமென நினைக்கிறேன். முக்கிய கட்டுரைத் தலைப்புக்கள் அனைத்திற்கும் குறைந்தது 2 கி'பைட் அளவிலேனும் கட்டுரைகள் வேண்டும். அவற்றில் பல தொடங்கப்படாமலேயே உள்ளன. (பொருத்தமான இணைய இணைப்பின்மையால் பங்களிக்க முடியாதுள்ளேன். இனிவரும் காலங்களில் அவ்வப்போதேனும் பங்களிக்க முயல்கிறேன்.) நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 16:59, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

உமாபதி கருத்து
திருகோணமலையில் தங்கியிருக்கும் இடத்தில் ஒழுங்கான இணைப்பு இல்லை. [[டயல்-அப் இணைப்பு|டயல்-அப் இணைப்பில்]] தான் பங்களித்து வருகின்றேன். மோசமான ஆமைவேக இணைப்பால் பெரும்பாலும் இரவு காத்திருந்தே பங்களிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றேன். திருகோணமலையில் அகலப்பட்டை இணைப்பை வழங்க ஆரம்பித்து விட்டனர். தற்போது அலுவலகங்களுக்கு மாத்திரமே வழங்கிவருகின்றனர். தொடர்ந்து வீடுகளுக்கு வழங்குவார்கள் என திடமாக நம்புகின்றேன். இணைப்பு ஒழுங்காகியுடன் நிச்சமாயாக என்பங்களிப்பை அதிகரிக்க முயல்கின்றேன். --[[User:உமாபதி|உமாபதி]] \[[User talk:உமாபதி|பேச்சு]] 17:05, 16 ஆகஸ்ட் 2008 (UTC)


www.ta.wikipedia.org

4 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புடையீர் வணக்கம்.
விக்கிபீடியா தமிழ்க்கட்டுரைகள் பற்றி அறிய நேர்ந்தது.என் வலைப்பக்கத்தில் தமிழறிஞர்க்கள் பற்றிய பல கட்டுரைகள் உள்ளன.அவற்றை, என் பக்கத்தில் உள்ளது என்ற குறிப்புகளுடன்,இணைப்புகளுடன் விக்கியில் இணைக்கலாம்.ஆர்வமுடையவர்கள் இப்பணியில் ஈடுபடலாம்.
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி
http://muelangovan.blogspot.com/

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றி, இளங்கோவன். உங்கள் கட்டுரைகள் சிலவற்றை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். மிகவும் விரிவாக இக்கட்டுரைகளை எழுதித் தந்தமைக்கு நன்றி. நீங்களே நேரடியாக விக்கிப்பீடியாவில் இணைந்து அவ்வப்போதாவது பங்களிக்க இயலுமானால், மிகவும் நன்றாக இருக்கும். நன்றி

சுப.நற்குணன்,மலேசியா. said...

//இதுகாறும் தமிழ் விக்கி அடைந்துள்ள முன்னேற்றம், தரம் பெருமை உடையதாக உள்ளது.// தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகின்ற அன்பர்கள் அனைவருக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது என்றால் மிகையன்று. மின்னியல் ஊடகத்தில் தமிழ் விக்கி சிறந்து விளங்கட்டும்.

ஆதவன் said...

தமிழ் விக்கிபீடியா தமிழாக வளரட்டும்! தமிழை வளர்க்கட்டும்!

Post a Comment