Sunday, November 29, 2009

தமிழ் உங்களின் தெரிவு

தமிழ் மொழியைப் பயன்படுத்துவதும், மேம்படுத்துவதும் ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள ஒரு தெரிவு, முடிவு. மொழி ஒரு நாட்டின் குடியுருமை போல் அல்ல, பிறந்தால் பெறுவதற்கு. பெற்றோர் தமிழ், அதனால் நான் தமிழ் என்ற மொழி அடையாளம் வலுவானதல்ல. தமிழ் ஒரு கட்டாய மொழியாக எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், இலங்கையில் சிங்களத்தில், மலேசியாவில் மலேய மொழியில் ஒருவர் தனது கல்வியைப் பெறலாம். தமிழ் முற்றிலும் உமது தெரிவு.

தமிழ் ஒரு சமுதாய மொழி. ஒரு மூதை நாகரீகத்தின் உயிர்த் துடிப்பு. சிந்தனை ஊற்றுக்களின், கலைகளின் களம். தமிழ் கற்பதால் பொருளியல் நோக்கில் நீங்கள் பெறுவது சிறிதே. சமுதாய, மொழியியல், கருத்து நோக்கில் நீங்கள் நன்மைகள் பெற முடியும். இதே நன்மைகளை நீங்கள் பிற மொழிகளைக் கற்றும் பெற முடியும். என்றாலும் இன்று பெரும்பான்மைத் தமிழர்களின் மொழியாக தமிழ் இன்னும் உள்ளது.

மலேசியாவில் வெளிவரும் தமிழ் ராக் இசை, தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ் அறிவியல் கருத்தரங்கம், சிங்கப்பூரில் மேடையேற்றப்படும் தமிழ் நாடகம், மொரிசியசில் நடைபெறும் தமிழ் வகுப்பு, அமெரிக்காவில் நடைபெறும் தமிழ்ச் சங்க மாநாடு, இலண்டனில் வெளியாகும் தமிழ் ராப் இசை, இலங்கையில் ஆக்கப்படும் தமிழ் மின்னூலகம், பிரான்சில் வெளிவந்த அறிவுக்களஞ்சியம், அமீரகத்தில் நடைபெறும் தமிழ் கணினிப் பயிலரங்கம், கனடாவில் நடைபெறும் கலைச்சொல்லாக்கம், யேர்மனியில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு என பல மில்லியன் மக்களின் தெரிவாக தமிழ் உள்ளது.

எனினும் மாறிவரும் பொருளாதார, அரசியல் சூழல் தமிழை இடர் நிலைக்கு தள்ளி வருகிறது. தமிழ் தமிழருக்கு ஒரு தெரிவாக இருக்கும் வாய்ப்பு அருகி வருகிறது. மொழியியல் நோக்கில் தற்காலத் தேவைகளுக்கும், அறிவியல் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சி போதாமல் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழைத் தேர்ந்து, தமிழில் பேசுவோரை இழிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அடிப்படைவாதிகளின் மொழி என்று அடையாள அரசியலில் சிக்கவைத்து சிதறடிக்கப்படுகிறது.

எமது மொழியை நாம் வளப்படுத்த வேண்டும். விரும்புவோர் எல்லோரும் கற்க வாய்ப்புக்கள் தொடர்ந்து பேணப்பட வேண்டும். உங்களின் தெரிவாகத் தமிழ் இருந்தால், தமிழ் வெல்லும்.

3 comments:

Thekkikattan|தெகா said...

//எல்லாவற்றுக்கும் மேலாக தமிழைத் தேர்ந்து, தமிழில் பேசுவோரை இழிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அடிப்படைவாதிகளின் மொழி என்று அடையாள அரசியலில் சிக்கவைத்து சிதறடிக்கப்படுகிறது.//

முன்பிற்கு இப்பொழுது இளைஞர்களின் விழிப்புணர்வு இந்த மொழி சார்ந்து சற்றே பிரகாசமாக இருப்பதாக படுகிறதே... அப்படியில்லையோ? மேலும், இந்த ஆங்கில வழியில் படிக்க வைக்கப் போராடும் தமிழ் பெற்றோர்கள் தங்களுக்கு அம்மொழி சார்ந்து அடிப்படை ஞானமே இல்லாமல் ஏதோ ஒரு பள்ளியில் தங்களின் குழந்தைகளை அடைத்து வைத்து அக் குழந்தைகளும் எந்தப் பக்கமும் சேராமல் அது 'கோவிரிகளாக' ஆகிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம்...

ரவிசங்கர் said...

//முன்பிற்கு இப்பொழுது இளைஞர்களின் விழிப்புணர்வு இந்த மொழி சார்ந்து சற்றே பிரகாசமாக இருப்பதாக படுகிறதே... அப்படியில்லையோ?//

விழிப்புணர்வு மங்கி வருவதே உண்மை.

//இந்த ஆங்கில வழியில் படிக்க வைக்கப் போராடும் தமிழ் பெற்றோர்கள் தங்களுக்கு அம்மொழி சார்ந்து அடிப்படை ஞானமே இல்லாமல் ஏதோ ஒரு பள்ளியில் தங்களின் குழந்தைகளை அடைத்து வைத்து அக் குழந்தைகளும் எந்தப் பக்கமும் சேராமல் அது 'கோவிரிகளாக' ஆகிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம்...//

ம். அப்படிப் பார்த்தால் ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தவர்களின் பிள்ளைகள் மட்டும் தான் ஆங்கில வழியில் படிக்கலாமா? அது இன்னும் மோசமான சமூக விளைவுகளைத் தரும். பெற்றோர்களின் கல்வி நிலைக்கு அப்பாற்பட்டு ஆங்கில வழியப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்க வலியுறுத்த வேண்டும். அதே வேளை தமிழ் வழியக் கல்வியின் தரம், பொருளாதார பயனையும் உயர்த்துவதன் மூலமே அனைவரையும் தமிழ் வழியத்தில் படிக்க வைக்க இயலும்.

Thekkikattan|தெகா said...

வணக்கம் ரவிசங்கர்,

//ம். அப்படிப் பார்த்தால் ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தவர்களின் பிள்ளைகள் மட்டும் தான் ஆங்கில வழியில் படிக்கலாமா?//

:) ஓ! இப்படியும் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா? நான் அந்த பொருளில் கூறவரவில்லை. அந்த மோகத்தைத்தான் கூற எத்தனித்தேன். வீட்டில் பிள்ளைகள் இன்று பள்ளியில் என்ன படித்து வந்தது அல்லது அவைகளுடன் படித்த விசயங்களை பகிர்ந்து கொள்வதற்குக் கூட ஒரு வாய்ப்பில்லாமல் அல்லது சோதிச்சுப் பார்த்துக் கொள்ள ஒரு வழிவாகை இல்லாமல் போய்விடுகிறதே என்ற வருத்தத் தொனியிலேயே ...

//அது இன்னும் மோசமான சமூக விளைவுகளைத் தரும்.//

புரிகிறது என்ன சொல்ல வருகிறீர்களென்று... நன்றி, ரவி.

Post a Comment