விக்கிமேனியா மதுரை 2022
மதுரை அண்ணா நகர் சக்ரா ரெசிடென்சியில் ஆகஸ்ட் 14 அன்று நடந்த இந்த விக்கிமேனியா என்ற நிகழ்வில் தமிழக அளவிலான விக்கிமீடியர்கள் 40 பேரும் கல்லூரி மாணவர்கள் இதர தமிழ் ஆர்வலர்களுமாக சேர்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துரையாடினர். இவ்வாறான விழா மற்றும் சந்திப்பு என்ற வகையில் தமிழகத்தில் நடந்த முதல் நிகழ்வு இதுவாகும். விழாவில் பங்கேற்போர் அறிமுகம், தமிழ் விக்கித்திட்டங்கள் அறிமுகம் என்ற தலைப்பில் நீச்சல்காரனும் பள்ளிகளில் விக்கத்திட்டங்கள் என்ற பெயரில் ஸ்ரீதரும் விக்கிமூலம் திட்டங்களில் பங்களிப்பது அதன் ஆவணங்களை பிற திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வது என்ற தலைப்பில் தகவல் உழவனும் பேசினர். பிற்பகலில் விக்கிமீடியா நூலகத்திட்டத்தினைப் பற்றி விக்கிமீடியா அறக்கட்டளையின் சார்பில் நிகழ்வில் பங்கேற்ற விபின் உரையாற்றினார். விக்கிமீடியா அறக்கட்டளை எவ்வகை நிகழ்வுகளுக்கு நிதி நல்கை வழங்குகிறது? அந்நிதிநல்கையைப் பெறுவதற்கான விதிமுறைகள் யாவை? அதை தமிழ் விக்கிமீடிய சமூகம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? என்பது தொடர்பாக பாலாஜி உரையாற்றினார். பின்னர் புதிய விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? விதிமுறைகளுக்குட்பட்டு புதிய ஆக்கங்களைச் சேர்ப்பது எவ்வாறு? விக்கிப்பீடியா போன்ற முதன்மைத் திட்டத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் திட்டமிடல் குறித்து செல்வசிவகுருநாதன் தலைமையில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் மேனாள் தமிழகத் தொல்லியல் துறை உதவி இயக்குநர் முனைவர் திரு சொ. சாந்தலிங்கம் பங்கேற்று தமிழுக்கு ஆவணமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் திராவிடம், தமிழ் வார்த்தைகளுக்கிடையேயான தொடர்பு குறித்து உரையாற்றினார். பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னார்வமாக எழுதிவரும் மூத்த பயனர்களான செங்கைப் பொதுவன்(வயது 87), உலோ. செந்தமிழ்க்கோதை (வயது 78) ஆகிய இருவரையும் கவுரவிக்கும் வகையில் நினைவுப் பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆறாயிரம் கட்டுரைகளைத் தொடங்கிய கி. மூர்த்தி, ஐயாயிரம் கட்டுரைகளைத் தொடங்கிய எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கு. அருளரசன் ஆகியிருக்கும் ஆயிரமாவர் விருதளித்து கவுரவிக்கப் பட்டனர். மேலும் விக்கிமூலம் திட்டங்களில் சுமார் 35000 திருத்தங்களைச் செய்த தகவலுழவன் மற்றும் பாலாஜி ஜெகதீஷ் ஆகியோருக்குச் சிறப்புப் பங்களிப்பாளர் விருதளிக்கப்பட்டது.
பின்னர் கலந்து கொண்ட பயனர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கபட்டன. இத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
இந்நிகழ்வினை நீ்ச்சல்காரன், மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், முகம்மது அம்மார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment