Saturday, November 8, 2008

16000 கட்டுரைகளை நோக்கி, தமிழ் 67 வது நிலையில்

தமிழ் விக்கிப்பீடியா 16000 கட்டுரைகளை விரைவில் எட்டிவிடும். ஆங்கிலத்தில் 2600000 கட்டுரைகளுக்கு மேலே உண்டு. அப்படி பாக்கையில் தமிழ் ஒரு துளிதான். ஆங்கிலம் தவிர்த்து மற்ற 22 மொழிகளில் 100 000 மேலே கட்டுரைகள் உண்டு. இவற்றுள் சீனம், ஜப்பானிஸ் தவிர்த்து மற்ற எல்லாம் ஐரோப்பிய மொழிகளே.

இந்திய மொழிகளில் கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு, இந்தி, மாராத்தி 20000 கட்டுரைகளுக்கு மேலே கொண்ண்டுள்ளன. தரத்தில் மலையாளம், தமிழ் விக்கிகள் சிறப்பு.

பேசும் மக்கள் தொகை அடிப்படையிலும், மொழியின் விருத்தி அடிப்படையிலும் தமிழ் முதல் 15மொழிகளில் ஒன்று எனலாம். 6000 மேற்பட்ட மொழிகள் வழங்கும் இன்றைய சூழலில் அது ஒரு நல்ல நிலையே. அப்படி இருந்தும் தமிழ் விக்கிப்பீடியா 67 நிலையில் இருப்பது கவனத்துக்குரியது. ஏன் என்று பார்த்தால் தமிழ் இணையம் இன்னும் விரிவாக தமிழ் சமூகத்திடம் செல்ல வில்லை என்பது ஒர் அடிப்படைக் காரணம். அது தவிர்த்து தமிழ் விக்கிப்பீடியா பற்றி தமிழ் இணையச் சமூகம் இன்னும் முற்றிலும் விளங்கிக் கொள்ளவில்லை. மற்றொரு காரணம் தமிழ் பற்று ஆர்வம் மிகுந்த பலர் "வாய் சொல்லில் வீரர்" ஆக மட்டும் இருப்பது.

தமிழ் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் பெரும் குறை அறிவியல் தொழில்நுட்ப விடயங்களைப் பகிர்வது கடினம் எனபதாகும். இது வரைக்கும் தமிழ் அறிஞர் சில நூறாயிரம் சொற்களை ஆக்கி உள்ளார்கள். ஆனால் அந்த சொற்கள் கருத்து சூழலில் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. கருத்து தொடர்புள்ள சொற்களை மீயிணைப்பு மூலம் இணைத்து பல துறை சார் கருத்து விரிவாக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் எளிது. மேலும் தமிழ்நாட்டு கலைச்சொற்களுக்கும், இலங்கை கலைச்சொற்களுக்கு சில வேறுபாடுகள் உண்டு. இந்தக் குறையை தீர்க்க தமிழ் விக்கிப்பீடியா ஓர் அரிய களம்.

இது முற்றிலும் ஒரு புலமைசார் களம் இல்லை. யாரும் இணையலாம். யாரும் அவருக்கு ஏற்ற நேரத்தில், ஈடுபாடு கொண்ட துறையில், இணையம் மூலம் பங்களிக்கலாம். அனைவருக்கும் நல்வரவு.

Wednesday, September 10, 2008

உங்களுக்கு விரும்பிய தலைப்புகள்

தமிழ் விக்கிப்பீடியா என்றால் எதாவது கனமாகத் தான் எழுத வேண்டும் என்று சிலர் எண்ணக்கூடும். சில தகவல்களுக்கு நாம் கூடிய கவனம் எடுத்து தொகுக்க முனைவது உண்மை. அதற்காக தலைப்புகள் எல்லாம் கனமாக இருக்க வேண்டியதில்லை.

உங்களுக்கு விருப்பமான நூல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உணவுகள், உடைகள், இடங்கள், சுற்றுலா ஈர்ப்புகள், நபர்கள், விளையாட்டுக்கள், புதிர்கள், கருத்துருக்கள் மற்று பல விடயங்கள் பற்றி நீங்கள் கட்டுரைகள் எழுதலாம்.

உங்களுக்கு பழமொழிகள் தெரியுமா, விடுகதைகள் தெரியுமா, உவமைகள் தெரியுமா அவற்றையும் நீங்கள் பட்டியல்களில் சேர்க்கலாம்.

உங்களுக்கு வேறு மொழி தெரியுமா. அந்த மொழியுடன் தமிழை ஒப்பிட்டு ஒரு அட்டவணை தயாரிக்கலாம்.

நீங்கள் ஒரு வரைகலைக் கலைஞரா. கருத்துருக்களை விளக்கி வரைபடங்களை சேர்க்கலாம்.

எனவே அன்பர்களே, தயங்காமல் வந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள்.

இது ஒரு கூட்டாக்கம். இதில் குறைகள் இருந்தால் நீங்கள் நேரடியாக பங்களித்து சரியெல்லாம். நுட்ப, கலைச்சொல், எழுத்து உதவிகள் தேவை என்றால் நாம் இயன்றவரை உதவுவோம். அனைவருக்கும் நல்வரவு.

Sunday, August 17, 2008

தமிழ் விக்கிப்பீடியா 15000 கட்டுரைகளை எட்டிவிட்டது

செல்வா கருத்து
இன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல் ஆக வேண்டும். மலையாள விக்கியில் ஏறத்தாழ 50 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகளாக அறிவித்து இருக்கின்றார்கள். நெடிய கட்டுரைகளாகவும் (80-100 கிலோபைட் போன்ற அளவில்) அவை இருக்கின்றன. உள்ளடக்கத்தின் சிறப்பை ஓரளவுக்கு உணரமுடிந்தாலும், எழுத்துநடையின் சிறப்பு என்னவாக உள்ளது என்பதை நான் அறியேன். பொதுவாக மலையாளமும், அண்மையில் இந்தியும் மிக நன்றாக முன்னேறி வருவதாக உணர்கிறேன். இதுகாறும் தமிழ் விக்கி அடைந்துள்ள முன்னேற்றம், தரம் பெருமை உடையதாக உள்ளது. பங்களித்த யாவரும் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். வரும் ஓராண்டில் குறைந்தது 7,000 புதிய கட்டுரைகளும் (முடிந்தால் 10,000மும்), பெருமை சேர்க்கும் ஒரு 100 அருமையான நடுநீள (30-50 கி'பைட்), அல்லது நெடிய (>50 கி 'பைட்) கட்டுரைகளும் நம் பங்களிப்பாளர்கள் ஆக்க முற்பட வேண்டும் என்பது என் அவா! பங்களிப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்!--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:02, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

மயூரநாதன் கருத்து
செல்வா சொல்வது சரிதான். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் ஆகப்போகின்றன. 15,000 கட்டுரைகளையும் எட்ட இருக்கிறோம். ஏறத்தாழ சராசரியாக ஓராண்டுக்கு 3,000 கட்டுரைகள். நவம்பர் 2007 தொடக்கம் இன்று வரையான சுமார் 10 மாதகாலத்தில் 3,000 கட்டுரைகள் எழுதியிருப்பது சராசரியிலும் கூடவாக இருப்பினும், ஏற்பட்டிருக்க வேண்டிய வளர்ச்சி வீதத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது வேகம் போதாது என்பது உண்மைதான். செல்வா குறிப்பிட்டது போல், மலையாள விக்கி பல அம்சங்களிலும் சிறப்பாக முன்னேறி வருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய கட்டுரைகளை அவர்கள் எழுதி வருகிறார்கள். அந்த விக்கியின் "Depth" 117 ஆக இருக்க தமிழ் விக்கியின் "Depth" 20 மட்டுமே. இது அவர்களது பங்களிப்புச் செறிவைக் காட்டுகிறதா எனத் தெரியவில்லை. எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் விக்கியில் கட்டுரை ஆக்க வேகத்தைக் கூட்டவேண்டும். தானியங்கிக் கட்டுரை ஆக்க விடயத்தில் ஓரளவு கவனம் செலுத்தலாம். ஆனால், நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுத முயலவேண்டும். திட்டமிட்டுச் செயல்பட்டால் தற்போதுள்ள வளங்களுடனேயே கூடிய பயனைப் பெறலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியிலும் தற்போது நீளம் கூடிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எனது பங்குக்கு நானும் ஏற்கெனவே இருக்கும் சில கட்டுரைகளை விரிவு படுத்துவதுடன் புதிய சில பெரிய கட்டுரைகளை எழுதவும் எண்ணியுள்ளேன். கட்டுரையின் நீளம் கூடுதலாக இருப்பது மட்டுமன்றி அவை முழுமையானவையாகவும் இருக்கவேண்டும். அத்துடன், சான்றுகள் கொடுத்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 16:09, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

நற்கீரன் கருத்து
முக்கிய கருத்துருக்களும் (concepts) தலைப்புகளுக்கும் கவனம் தாருங்கள். [[கோயில்]] என்ற கட்டுரை முக்கியம். ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கும் கோயில்கள் பற்றி தீவர பங்களிப்பாளர்கள் எழுதுவது அவசியமில்லை (ஆர்வம் இருந்தால் நிச்சியம் எழுதலாம், ஆனால் தரம் எண்ணிக்கை என்ற நோக்கில் அப்படி எழுத தேவையில்லை). அதற்கு அவை பற்றி சிறப்பு ஈடுபாடுள்ள பயனர்கள் வந்து எழுதலாம். நிச்சியமாக தமிழில் எல்லா [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]] பற்றியும் கட்டுரைகள் எழுதப்பட கூடிய சாத்தியக் கூறு குறைவு. ஆனால் நாம் [[கணிதம்|கணிதத்]] துறையின் முக்கிய தலைப்புகள் அனைத்திலும் கட்டுரைகளை எழுத முடியும், எழுத வேண்டும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:46, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

கோபி கருத்து
15,000 கட்டுரைகளை எட்டும்போது நாம் அவற்றில் எத்தனை கலைக்களஞ்சியக் கட்டுரையாகக் கருதப்படக் கூடியன என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. கட்டுரை அளவு 2 கி'பைட் என்றாலும் 20 கி'பைட் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையாக இருப்பது முக்கியமென நினைக்கிறேன். முக்கிய கட்டுரைத் தலைப்புக்கள் அனைத்திற்கும் குறைந்தது 2 கி'பைட் அளவிலேனும் கட்டுரைகள் வேண்டும். அவற்றில் பல தொடங்கப்படாமலேயே உள்ளன. (பொருத்தமான இணைய இணைப்பின்மையால் பங்களிக்க முடியாதுள்ளேன். இனிவரும் காலங்களில் அவ்வப்போதேனும் பங்களிக்க முயல்கிறேன்.) நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 16:59, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

உமாபதி கருத்து
திருகோணமலையில் தங்கியிருக்கும் இடத்தில் ஒழுங்கான இணைப்பு இல்லை. [[டயல்-அப் இணைப்பு|டயல்-அப் இணைப்பில்]] தான் பங்களித்து வருகின்றேன். மோசமான ஆமைவேக இணைப்பால் பெரும்பாலும் இரவு காத்திருந்தே பங்களிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றேன். திருகோணமலையில் அகலப்பட்டை இணைப்பை வழங்க ஆரம்பித்து விட்டனர். தற்போது அலுவலகங்களுக்கு மாத்திரமே வழங்கிவருகின்றனர். தொடர்ந்து வீடுகளுக்கு வழங்குவார்கள் என திடமாக நம்புகின்றேன். இணைப்பு ஒழுங்காகியுடன் நிச்சமாயாக என்பங்களிப்பை அதிகரிக்க முயல்கின்றேன். --[[User:உமாபதி|உமாபதி]] \[[User talk:உமாபதி|பேச்சு]] 17:05, 16 ஆகஸ்ட் 2008 (UTC)


www.ta.wikipedia.org