Monday, January 5, 2009

2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

நவம்பர் 2008 இல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவானது. ஒரு சில பயனர்களின் தொலைநோக்கில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது சில பத்து பயனர்களின் தொடர்ந்த பங்களிப்பால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 16,000 க்கும் மேலாக கூடியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 5400 க்கும் மேலாக கூடியுள்ளது. இணையத்தில் தமிழில் பல்துறைசார் தகவல்களைப் பகிரும் மிகப் பெரிய வலைத்தளம் தமிழ் விக்கிப்பீடியாவே. பயனர் வரவு தரவுகளின் படி நாள்தோறும் 52,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்வையிடுகின்றனர். [1]

இந்த ஆண்டு தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப விக்கிபீடியா என்றிருந்த பெயர் விக்கிப்பீடியா என்று மாற்றப்பட்டது. மிகப்பல படங்கள் வகைப்படுத்தப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்பில்லாத உரிமங்கள் கொண்ட படங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய 2008ஆம் ஆண்டு மாநாட்டின் பயிற்சிப் பட்டறையிலும் விழா மலரிலும் தமிழ் விக்கிப்பீடியா இடம்பெற்றது. டிசம்பர் 2008 இல் பெங்களூரில் நடந்த ஒரு விக்கிப்பீடியா மாநாட்டில் விக்கியூடக நிறுவனர் சிம்போ வேல்சு, தற்போதைய செயலாக்க தலைவர் சூ கார்டனர் ஆகியோரைச் பயனர் சுந்தர் சந்தித்து நன்றியைத் தெரிவித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளையும் விபரித்தார்.

2008 ஆம் ஆண்டில், முதற்பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, செய்திகள், இன்று, சிறப்புப் படம் ஆகிய பகுதிகளை அவ்வப்பொழுது புதுப்பித்து சிறப்பாக இற்றைப்படுத்தினோம். 2008 ஒலிம்பிக் போட்டிகள், தேர்தல்கள், ஈழப் போர், இந்தியா மீதான தாக்குதல்கள் ஆகியன ஆவணப்படுத்தபட்டன. அனைத்து நாடுகள் பற்றியும் ஒரு குறுங்கட்டுரையாது ஆக்கும் விக்கி திட்டம் நாடுகள் நிறைவேறியது. விக்கி திட்டம் தனிமங்கள் முன்னேறியுள்ளது ஆனால் இன்னும் நிறைவு பெறவில்லை. முக்கிய கட்டுரைகளாக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள் கவனமெடுத்து எழுதப்பட்டன. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வாழும் விலங்குகள் பற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதப்பட்டன. கருநாடக இசை பற்றிய பல கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

கடந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவை நோக்கி பிறமொழிச் சொற்கள், கிரந்தம், இறுகிய நடை பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதே எமது கொள்கை. முதலில் பயன்படுத்தப்பட்ட சொல்லை விட வேறு சிறந்த மாற்றுச் சொல்லை பின்னர் அறிந்தால் விக்கியில் நாம் எளிதாக தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். தமிழ்ச் சொற்கள் தெரியாவிட்டால் கட்டுரையில் ஆங்கில சொற்களையோ பிற மொழிச் சொற்களையோ பயன்படுத்தலாம். மற்ற பயனர்கள் தமிழ் சொற்கள் இட்டு மேம்படுத்துவர். எங்கெங்கு கிரந்தம் கையாள்வது நல்லது என்பது தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் இறுதியான ஒரு கொள்கை இன்னும் இல்லை. இயன்றவறை தமிழ் ஒலிப்புமுறையைப் பேணி சொற்களை எழுதுவதே முறை என்று கருதப்படுகின்றது. தகவல்களை ஆதாரபூர்வமாக பகிர்ந்து, படர்க்கையில் எழுதவதே விக்கி நடை. எவ்வளவு எளிமையாக பகிரமுடியுமோ அப்படி பகிர்வது நன்று. எனினும் கணிதம் போன்ற துறைகளில் துல்லியமான கட்டுரைகளைப் படிக்கும் பொழுது பயனர் ஓரளவாவது துறை சார் பின்புலம் கொண்டிருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தமிழில் கலைச்சொற்கள் பலகாலமாக ஆக்கப்பட்டன. அவற்றின் பெரும் தொகுதி தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தரவுதளத்தில் இருந்தது. இவற்றின் எழுத்துருக்கள் ஒருங்குறியில் இருக்கவில்லை. இவை பல வேறு பட்டியல்களாக இருந்தன. இப்படிப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் தானியங்கி மூலம் விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டமான தமிழ் விக்சனரியில் சேர்க்கப்பட்டன. தற்போது தமிழ் விக்சனரி சொற்தொகை அடிப்படையில் உலக மொழிகளில் ஏழாவது நிலையில் இருக்கிறது. இது தமிழ் விக்கியூடகத் திட்டத்துக்கு ஒரு முக்கியமான மைல்கல். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கத்துக்கு இந்த கலைச்சொற்கள் மிகவும் உதவியாக அமைந்துள்ளன.

தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிசெய்திகள், தமிழ் விக்கிநூல்கள், தமிழ் விக்கிமேற்கோள் ஆகியவை தொடக்கக்கட்ட நிலையில் இருக்கும் மற்ற தமிழ் விக்கியூடகத் திட்டங்கள். இணையத்தில் தமிழில் விரிவான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இவை மிகவும் உதவக்கூடிய திட்டங்கள். இப்போது முன்னோடியாக சில செயற்பாடுகள் நடைபெற்றாலும், மேலும் பல பயனர்கள் இணைந்து செயற்பட்டாலே இத்திட்டங்கள் வளரும்.

2005 2006, 2008 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.

இந்த 2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2008 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2009 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்க்களைப் பாக்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

பாக்க:
http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

3 comments:

ஆதித்தன் said...

உங்களது பெரு முயற்சி சங்கம் வைத்து தமிழ்வளர்த்த செயலுக்கு ஈடானது. தமிழ் மறந்துபோகும் தமிழ்ச்சந்ததி உருவாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்கள் பணி நம் இனத்துக்கு இன்றியமையாதது. தமிழ்விக்கிப்பீடியாவால் நம் சமூகம் பெற்ற, பெறுகிற, பெறப்போகிற நன்மைகள் அளவிடற்கரியது. இதயத்தால் இயம்புகிறேன் நன்றிகள் பல கோடி!

ILA (a) இளா said...

நன்றி!

நம்பி.பா. said...

மகிழ்ச்சியான தகவலை அறியத் தந்திருக்கிறீர்கள்!
நன்றி!

Post a Comment