Sunday, November 22, 2009

தமிழ் விக்கியின் 20 000 கட்டுரைகள் மைல்கல்

தமிழ் விக்கிப்பீடியா 20 000 கட்டுரைகளை நவம்பர் 22, 2009 இல் தாண்டியது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இன்று இணையத்தில் பல்துறைத் தகவல்களைப் பகிரும் பெரும் தமிழ் வலைத்தளம் தமிழ் விக்கிப்பீடியா ஆகும். ஒருங்குறியில் தமிழில் தேடினால் பல குறி சொற்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் முதல் தேர்வாக வருகின்றன. இந்திய மொழிகளில் 1.5 கிபைட் மேற்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கையில் தமிழ் முதலாவதாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு Regional analysis of South Asian languages and their Wikipedias.

மேற்கூறியது நல்ல வளர்ச்சி எனினும் தமிழின் வளங்களுடன் ஒப்பிடுகையில் போதாது. தமிழ் பேசும் மக்கள் தொகை (70+ மில்லியன்) அடிப்படையில், மொழியியல் (2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கண, இலக்கிய வளர்ச்சி) நோக்கில் தமிழ் வளங்கள் நிறைந்த மொழி. இப்படிப்பட்ட வளங்கள் குறைந்த பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளை விட தமிழ் தேக்க நிலையில் உள்ளது. இதற்கு காரணங்கள் என்ன.

தமிழ் விக்கிப்பீடியா இன்னும் பெரும்பான்மைத் தமிழ் இணையச் சமூகத்துக்கோ, அல்லது பொதுத் தமிழ்ச் சமூகத்துக்கோ அறிமுகம் ஆகவில்லை. பெரும்பான்மைத் தமிழ் மக்களுக்கு இணைய இணைப்பு இன்னும் இல்லாமையே முதன்மைக் காரணம் ஆகும். அப்படி இருந்தாலும் தமிழ்க் கணிமை பற்றி அறிந்திராமை இன்னுமொரு காரணம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய பல செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழ் விக்கிப்பீடியாவை பஞ்சாபி, வங்காளம், இந்தி போன்ற வளங்கள் நிறைந்த இந்திய மொழிகளுடன் ஒப்பிடுதல் தகும். இந்த ஒப்பிடுதலில் இருந்து தெரிவது என்னவென்றால், அனைத்து இந்திய மொழி விக்கிப்பீடியாக்களும் அதிக வளர்ச்சி அடையாத திட்டங்களாகவே உள்ளன. பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா இன்னும் முறையாக தொடங்கப்படவே இல்லை. வங்காள மொழியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலை நிலவுகிறது. இந்தி தற்போது நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது, ஆனால் அவர்களின் வளங்களோடு ஒப்பிடுகையில் போதாது. மலையாளம் விக்கி மட்டும் இந்திய மொழிகளில் குறைந்த வளங்களோடு நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. அவர்களது தரம் சிறந்தது. ஆனால் தற்போது 11 400 வரையான கட்டுரைகளையே கொண்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவை தொடந்து பரந்த உலகளாவிய தமிழ்ச் சமூகத்து அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்கள் பங்களிப்பையும் நீங்கள் நல்க வேண்டும்.

2 comments:

மணி மு. மணிவண்ணன் said...

வாழ்த்துகள். இது ஊக்கம் தரும் ஒரு ஏணிப்படி. ஊரிலேயே உயர்ந்த கட்டிடத்தின் மாடியில் ஏறியிருக்கிறோம். சற்றுச் சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் ஏறத் தொடங்குவோம். இமயத்தின் உச்சி காத்திருக்கிறது. தொண்டர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்.

நடராசா உமாசங்கர் said...

பயனுள்ள விடயம். நன்றி மயுரன்.

Post a Comment