Monday, October 26, 2009

அறிவியல் தமிழின் தேக்க நிலை

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.

இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

வால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை.


இதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.


இதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன் விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:
கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை..


இந்த அறிஞர்களின் கூற்று அறிவியல் தமிழின் தேக்க நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

அறிவியல் தமிழ் பற்றிய கருத்தாடலில், முதலில் அறிவியல் தமிழ் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும். மொழியியல், சமூகவியல் நோக்கில் இத்துறைகளில் தமிழ் மொழி வளர்ச்சி அடையாவிடின் அது பயன் இழந்து வெகு விரைவில் இறந்து போகும்.

அறிவியல் தமிழ் முக்கியம் என்று தெரிகிறது. அது தேக்க நிலையில் இருப்பது தெரிகிறது. ஏன் இந்த நிலை?

"அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் தமிழில் குறைவே. காரணம் அவற்றை புழங்கும் சூழல் இங்கு இல்லை." என்று எழுத்தாள் ஜெயமோகன் தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா? என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அறிவியல், தொழில்நுட்ப சொற்கள் ஆங்கில மொழியோடு ஒப்பு நோக்குகையில் குறைவே. ஆனால் பல இலட்ச சொற்கள் உள்ளன. விக்சனரியில் தற்போது ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றை புழங்கும் சூழல் இல்லை என்பது மிகச் சரியே. இதற்கு சமூகவியல், மொழியியல் காரணங்கள் உள்ளன.

அண்மைக் காலம் வரை தமிழ்ச் சமூகம் படிப்பறிவு குறைந்த சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றும் தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். பொதுச் சமூகத்தில் அறிவியல் நோக்கிய ஈடுபாடு மிகக் குறைவானதே. எனவே அறிவியல் தமிழில் புழங்க வேண்டியதற்கான தேவை எளவில்லை. இச்சூழல் அறிவியல் துணுக்குகள் நூறு போன்று மிக மோலாட்டமான படைப்புகளுக்கு மட்டுமே வழிவகுத்தது.

தமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபான்மையினர் இத்துறைகளில் சிறப்பு பெற்றவர்கள். நடைமுறையில் தமிழ் மொழி மூலம் இத்துறைகளைக் கற்றவர்களும் உண்டு. எனினும் பெரும்பாலனவர்கள் இத்துறையைகளை ஆங்கிலத்திலேயே கற்றுப் பயன்படுத்துகிறவர்கள். இவர்களுக்குள் தமிழ் மொழி தகவல் பரிமாற்றம் சிறிய அளவிலேயே உண்டு.

மொழியியல் நோக்கில் அறிவியல் தமிழிழுக்கு பல தடைகள் உண்டு. பல இலட்சம் சொற்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை கருத்துச் சூழலில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுக்கள் அரிதாகவே இருக்கின்றன. அறிவியல் தமிழை நெறிப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எ.கா தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் இடையே உள்ள வேறுபாடுகள். அறிவியல் எழுத்து, நுட்ப எழுத்து பற்றிய அறியாமை.

நாம் செம்மொழித் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதை விட முக்கியத்துவம் அறிவியல் தமிழுக்கு தர வேண்டும். வளங்களை ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை பாதிப்பு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமே.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள்.//

தமிழகத்தில் பல்கலைக்கழக அளவிலும் முதுகலை வரை அறிவியல், கலை, சமூகவியல் பாடங்களைத் தமிழில் படிக்கலாம். தமிழ் வழி இளங்கலையில் படித்து விட்டு முதுகலை ஆங்கில வழிக்குச் சென்றவர்கள் தமிழில் விடை எழுதினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகச் சொல்லிக் கேள்வி. தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்புகளும் தமிழில் படிக்கலாம். (diploma, certificate courses in ITI, Polytechnic)

ஆனால், தமிழ் வழியில் கற்றாலும் உயர் ஆராய்ச்சி, வேலை என்று வரும் போது ஆங்கிலத்தின் தேவை உள்ளது.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளும் முழுக்க ஆங்கிலம் சார்ந்து உள்ளது.

கையேடு said...

//எ.கா தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் இடையே உள்ள வேறுபாடுகள்.//

இக்குறைபாடு விக்கிபீடியாவிலும் இருக்கிறது. சில தொழில்நுட்ப வார்த்தைகள் மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன. உதா.. உலோகம் - மாழை

இதை எப்படிக் களைவது என்பதற்கான சிந்தனைக்காகவே இப்பின்னூட்டம், குறை கூறவல்ல.

கலை said...

சிந்திக்க வைக்கும் கட்டுரை.

தமிழில் அறியியல் அவசியமில்லை என்ற எண்ணம் பலரிடமுள்ளது. எனக்கு சிலசமயம் சில எளிய தமிழ் அறிவியற் சொற்களே தெரியாமலோ, அல்லது மறந்துபோயோ இருப்பது மிகுந்த சங்கடத்தை தருகிறது.

செல்வா said...

நல்ல கட்டுரை. உண்மையில் எந்தக் கருத்தடர்வான அறிவியல் அல்லது பிற துறையாயினும் ஆங்கிலத்தில் இருப்பதற்கு ஈடாகவோ அல்லது அதனைவிடத் தெளிவாகவோ தமிழில் கூற இயலும். ஆனால் ஆங்கிலத்தில் ஒன்றைக் கற்கும் (அல்லது அறிய முற்படும்) போது உள்ள மனப்பாங்குக்கு ஈடான நேர்மையான ஈடுபாடு வேண்டும் . கட்டாயம் நாம் ஆங்கிலத்தில் இருந்தோ, பிறமொழிகளில் இருந்தோ முதலிலோ தொடர்ந்தோ கருத்துகளை அறிய வேண்டியிருக்கும். இது உண்மை. (இது ஆங்கிலத்துக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). ஆங்கிலேயரும் (ஆங்கில மொழியை ஏற்றவரும்) டாய்ட்சுலாந்தில், பிரான்சில், நிப்பானில் என்ன என்ன நடக்கின்றன என்று தொடர்ந்து அறிந்தும், தம் மொழியில் தொடர்ந்து ஆக்கிக்கொண்டும்தான் இன்றளவும் உள்ளனர். இலக்கியம் மட்டுமன்றி இசை, பிற கலைகள், பொறியியல், மருத்துவம் என்று பிற துறைகளிலும் தமிழில் நூல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் இருந்திருக்க வேண்டும் (சிலவே இன்று கிடைத்துள்ளன). பல ஆக்கங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்தும் போயுள்ளன. கிரேக்க நூலறிவும், பழம் சீன மொழி நூலறிவும் கூட மெள்ளத்தான், கடும் உழைப்பால் சில அறிஞர்கள் பொது மன்றுக்குக் கொண்டு வந்தனர். இன்றைய தமிழர்களுக்கும், வருங்காலத் தமிழர்களுக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன!

செல்வா

Yuvaraj said...

அறிவியல் தமிழ்

http://3.bp.blogspot.com/_-PZDvw9Dmbc/SUZv-6kbeQI/AAAAAAAAAJc/7iTkiOkt7lY/s1600-h/5.jpg

Post a Comment