Wednesday, October 28, 2009

தமிழ்த் தாத்தா, தமிழ் விக்கி, தமிழ் பதிவர்

பல்வேறு தாக்குதல்களுக்கும், அழிப்பு வேலைகளுக்கும் இடையே தமிழ் தழைத்தோங்கி 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்று சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

இந்த நூற்றாண்டில் உலகெங்கும் பரவி வேரோடி வாழும் தமிழ்ச் சமூகம் தங்கள் தாய்மொழிக்குத் தன்னளவிலான தொண்டினைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. கணினியின் வரவுக்குப் பிறகு எல்லாம் ஆங்கில மயமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அதிலும் தங்களது மொழியின் வளத்தைக் கொண்டு செல்ல ஏராளமான தனி நபர்கள் தங்கள் நேரம், பொருள், உழைப்பு எனச் செலவிட்டு இன்று தமிழை இணையத்தில் ஏற்றி உலகெங்கும் விரவிக் கிடக்குமாறு செய்துவிட்டனர்.

மற்ற மொழிகளுக்கு அழிவு ஏற்படும் நேரத்தில் மட்டுமே தமிழுக்கும் அவ்வாறு நிகழ வாய்ப்புண்டு. இல்லையேல் இனி தமிழை அதன் வளத்தை அழிப்பது என்பது இயலாத செயலாகிவிடும். அந்த அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால இலக்கியச் செல்வங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள், தகவல்கள் போதுமானவையா என்று கேட்டால் யானைப் பசிக்கு சோளப் பொரி என்றுதான் கூற வேண்டும்.

மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்றவற்றில் இலக்கியச் செல்வங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை எவராலும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள தேர்ந்த கட்டுரைகள் தமிழிலும் கிடைக்க வேண்டுமானால் அதை நாம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அல்லது அதே போன்ற கட்டுரைகளை தமிழில் எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அது ஒருவரின் வலைத் தளத்திலோ, வலைப்பதிவிலோ மட்டும்தான் வைக்கப்படும். ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் ஒரு நூலகம் போல யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றிருந்தால் அதன் வீச்சு எவ்வாறிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு பொது அமைப்புதான் விக்கிப் பீடியா.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இன்று 30 லட்சம் கட்டுரைகள் உள்ளன. சில மொழிகளில் லட்சத்துக்கும் மேலான கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. உள்ளடக்கத்தில் தமிழில்தான் சிறந்த கட்டுரைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற மொழியினருடன் போட்டியிடுவதற்கு அல்ல. ஆனால், நாம் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன என்பதை உணர்த்துவதற்கு இது தேவையான ஒன்றுதான்.

விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், திருத்தலாம், தொகுக்கலாம். இதில் எழுதினால் நம் பெயர் வருமா என்பதே பெரும்பாலானோர் கேள்வி. பெயர் வராது. ஆனால் தொகுத்தல் வரலாற்றில் நாம் செய்யும் ஓரெழுத்துத் திருத்தம் கூட நம் பயனர் பெயரில் (user login) பதிவாகிவிடும். இது மீண்டும் அழிக்கப்பட முடியாதது. எனவே நம் முத்திரை அதிலிருக்கும்.

என்ன பயன் என்ற அடுத்த கேள்வி. சற்றே பின்னோக்கி எண்ணிப் பாருங்கள். எத்தனை முயற்சி செய்து, எவ்வளவு கடினமாக உழைத்து தனியொருவர் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ஓலைச் சுவடிகளை கேட்டுப் பெற்றார். எத்தனை பேர் அதை கொடுக்க மறுத்து போகிப் பண்டிகையில் தீயிலிட்டுக் கொளுத்தினர். அதையும் மீறி கிடைத்தவையே தமிழில் படித்து முடிக்க முடியாத அளவிற்கு குவிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் பிரதிபலன் பார்த்தா அவர் செயல்பட்டார். அவரை தமிழ்கூறும் நல்லுலகு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று அழைக்கிறது. இன்னும் அழைக்கும். இங்கு அவர் பின்புலம் பற்றி விவாதிக்காமல் அவர்தம் தமிழ்த் தொண்டு பற்றி மட்டும் சிந்திப்போம்.

எண்ணிப் பார்த்தால் அவருக்கு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டோ, மந்திரிப் பதவியோ, சொத்துகளோ இத் தமிழ்த் தொண்டால் கிடைத்துவிடவில்லை. ஆனால் அவரை இன்றும் நினைவு கூர்கிறோம்.

அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து நாம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் எளிதில் கிடைக்கும் கலைச் செல்வங்களை தமிழில் மொழி பெயர்த்தோ, அல்லது தமிழிலேயே கிடைக்கும் செல்வங்களை பொது இடமான விக்கியில் சேர்ப்பதன் மூலம் தமிழுக்கு நாமும் தொண்டாற்றியவர்கள் ஆவோம். வெறும் தமிழ் தமிழ் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயன் இல்லை.

தமிழ் விக்கிப்பீடியாவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சான்றாக, புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப் பீடியாவில் தகவல் பெற்று பாடக் குறிப்புகள் எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மேலும் அதிகமான மாணவர்கள், உயர் வகுப்பு, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் குவிந்துள்ளனவா என்றால், இப்போதைக்கு இல்லை. அதற்கான வளர்ச்சிப் பாதையில் விக்கிப்பீடியா சென்று கொண்டிருக்கிறது எனலாம்.

ஒரு சிறுகட்டுரையைக் கூட நம்மால் எழுத முடியும். நம் ஊர், உறவு முறைகள், சடங்குகள், பண்பாடு, மரம் , செடி, கொடி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப எழுதலாம். இது ஒரு இணையக் கலைக்களஞ்சியம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் எதைப் பற்றியும் எழுத முடியும்.

இன்றைக்கு 6 ஆயிரம் தமிழ் பதிவர்கள் உள்ளனர். இவர்களில் அன்றாடம் பதிவு எழுதுவோர் 10 சதம் என்று எடுத்துக் கொண்டாலும் 600 பேர் இருக்கிறார்கள். இதில் நேரமும், வாய்ப்பும், வசதியும் கொண்டவர்கள் 300 பேர் என்று கொண்டால், அவர்கள் நாளொன்றுக்கு ஒரு கட்டுரை எழுதினால் கூட போதும். இதற்கு அரை மணி நேரமே செலவாகும்.

தங்களுக்குப் பிடித்த எத்துறை என்றாலும் எழுதலாம். எத்தடையும் இல்லை. மேலும் தகவல் பெற தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவை அணுகலாம். விக்கிப்பீடியா ஆலமரத்தடியை அணுகலாம். ஆக, ஒரு நாளுக்கு 300 கட்டுரை எனில் ஒரு மாதத்துக்கு 9 ஆயிரம் கட்டுரை. ஓராண்டுக்கு 72 ஆயிரம் கட்டுரை. ஏதோ காமெடி போலத் தோன்றும். வெகு சிலரின் பங்களிப்பு மூலமே இது வரை 20 ஆயிரம் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தும் ஒரு இளைய தலைமுறையும் புதுக்கோட்டை அருகே அடையாளம் காணப்பட்டுவிட்டது. எனவே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பொருந்தும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார்.

எட்டுத் திக்கும் சென்றுவிட்டீர்கள்.... கலைச் செல்வங்கள் யாவையும் எப்போது கொணர்ந்து சேர்ப்பீர்கள்?

10 comments:

தாமிரபரணி said...

well said ragunath,
1st of all very sorry for commenting in english(due to some problem in w3.wktamil.com the one which I used to type tamil).
let me come to the point of tamil vazharchi,
I agree fully with u but does this alone will help to promote tamil, I don't think so(correct me if wrong) since I feel insecure of speaking tamil among tamilians itself, in my point of view tamil language will grow itself if and if only if it able to create employement,
so the 1st point is creating employement,
the next one tamilnadu should become independent(don't think me a anti-indian) i.e tamil language should be independent, we need a separate inpendent country, with tamil as administrative/national lang
say my mother tongue is X and my country's(a country which form by union of many country/state one among is my country/state) administrative language is Y, also my country is promoting it's language Y in all sort of ways by national anthem, national song, cinemas, ads, channel, news, sign boards, schools, scholarship,research etc added that they providing jobs in railways, central govt banks, Lic(here policies name will be of lang Y), gas & oil corporation, post office, in airways, in military, in navy, in passport, pancard,
ISRO(all the invention/research name will be in lang Y),IAS etc in each and evey thing they made language their Y as mandatory there's no room for my language X in any of the way. the country earned and earning money from allover the state but promoting only their language
this is really a big scandal of the whole world
whatever exam held by central govt it's in lang Y and Z(people use call that as a global lang i.e english), if they able to conduct a exam in their language Y why not in my language X?
unless the language X is under language Y there's no use of talking language X's growth and promotion everthing will go vain.
By protesting against hindi and studying english to some extent we have saved our language, still we have to go

குறும்பன் said...

நல்லா சொன்னிங்க இரகுநாதன்.

ரவிசங்கர் said...

//மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்று சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.//

ஒரு குறிப்புக்கு: இதுவே பிழையாகச் சுட்டப்படும் ஒரு மேற்கோள் தான். மெல்லத் தமிழினிச் சாகும் என்று ஒரு பேதை உரைத்தான் என்று தான் பாரதி பாடல் வருகிறது.

//மற்ற மொழிகளுக்கு அழிவு ஏற்படும் நேரத்தில் மட்டுமே தமிழுக்கும் அவ்வாறு நிகழ வாய்ப்புண்டு. இல்லையேல் இனி தமிழை அதன் வளத்தை அழிப்பது என்பது இயலாத செயலாகிவிடும்.//

அப்படி இறுமாந்திருந்து விட முடியாது. தமிழின் வளம் அதன் தொன்மையில் மட்டுமில்லை. தொடர்ச்சியிலும் இருக்கிறது.

//இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. உள்ளடக்கத்தில் தமிழில்தான் சிறந்த கட்டுரைகள் உள்ளன என்று கூறப்படுகிறது//

மலையாள விக்கி மிக வேகமாகவும் தரமாகவும் வளர்ந்து வருகிறது. வங்காள மொழியும் ஒப்பீட்டளவில் நன்கு உள்ளது. இந்த இரண்டுமே இடது சாரிகள் ஆண்டு வரும் "அறிவாளி" மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் விக்கியின் வளத்திலும் இலங்கைத் தமிழரின் பங்கு மிகக் கணிசமானது. அவர்கள் இல்லையேல் நாம் இந்த அளவு கூட முன்னேறி இருக்க மாட்டோம். ஒரு சமூகத்தின் பொதுவான விழிப்புணர்வுக்கும் மொழிக் ஈடுபாட்டுக்கும் தொடர்புள்ளதோ?

//வெகு சிலரின் பங்களிப்பு மூலமே இது வரை 20 ஆயிரம் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளன//

தரவுகளின் படி இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை 37 மட்டுமே! இன்னும் ஒரு 100 பேர் முனைப்பாக பங்களித்தாலே நாம் எவ்வளவோ முன்னேற முடியும்.

ரவிசங்கர் said...

தாமிரபரணி,

தங்களின் ஆதங்கம் புரிகிறது.

//I agree fully with u but does this alone will help to promote tamil, I don't think so//

பல வழிகளிலும் இதுவும் ஒன்று. இதனை வலியுறுத்த காரணம், எல்லா தமிழர்களாலும் எந்தச் சிரமமுன்றி தங்கள் ஓய்வு நேரத்தில் கூட இதில் பங்களிக்கலாம் என்பதால் தான். தமிழ் வளர்ச்சிக்குச் செய்யப்பட வேண்டிய இன்னும் பெரிய பணிகள் நிறைய உள்ளன.

தமிழ் படித்தோர், தமிழ் வழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பைக் கூட்டுவது தமிழ் வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவும். அதே போல் தமிழ் விக்கி போன்ற அறிவு மூலங்களை வளர்ப்பது, தமிழரின் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இந்த வளர்ச்சி வேலைவாய்ப்புகளுக்கும் உதவும் அல்லவா? அறிவு வளர்ச்சிக்கு ஆங்கிலம் தெரிவது அவசியம் என்ற நிலை மாற வேண்டும்.

இந்திய ஒன்றியம், இந்தித் திணிப்பின் தாக்கம் புரிகிறது. ஆனால், இருக்கும் அமைப்புக்குள்ளேயே தமிழ்நாடு அரசும் மக்களும் பல்கலைக்கழகங்களும் "நினைத்தால்" செய்யக்கூடிய பணிகள் நிறைய உள்ளன. அதனைச் செய்வதே நல்ல தொடக்கமாக இருக்கும்.

தமிழகம் தனிநாடானால் தமிழ் தழைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் புறக்காரணிகள் அளவுக்கு, தமிழர்களின் தமிழை மதிக்கா உளப்பாங்கே பெரும் தடையாக உள்ளது. முதலில், இந்த உளப்பாங்கு மாற வேண்டும்.

ரகுநாதன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி தாமிரபரணி

//IAS etc in each and evey thing they made language their Y as mandatory there's no room for my language X in any of the way.//

இது தவறான புரிதல்...இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதில் வேண்டுமானாலும் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதலாம். நேர்முகத் தேர்வும் தாய்மொழியில் எதிர் கொள்ளலாம். அப்படி ஐ.ஏ.எஸ். அலுவலர் ஆன என் நண்பர் திருப்பத்தூரில் சார் ஆட்சியராக உள்ளார். இன்னும் வெற்றிக்காக முயற்சி செய்து கொண்டிருப்போரும் உள்ளனர்.

தமிழ் இலக்கியத்தை இத் தேர்வுக்கு ஒரு பாடமாக எடுத்து படித்து வெற்றி பெற்று IAS அதிகாரிகளாக உள்ள ஏராளமானோரை சான்றுகளாக பகர முடியும்.

ரகுநாதன் said...

நன்றி குறும்பன்

ரகுநாதன் said...

//அப்படி இறுமாந்திருந்து விட முடியாது. தமிழின் வளம் அதன் தொன்மையில் மட்டுமில்லை. தொடர்ச்சியிலும் இருக்கிறது.//

இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் :)

பழமையின் அடித்தளத்தில் தன்மைக்கேற்பவே புதுமையின் தொடர் வளர்ச்சி இருக்கும். இன்றைய நவீன தொழினுட்பதுக்கெல்லாம் என்றோ கண்டுபிடித்த பழைய கோட்பாடுகள் ஆதாரமாக இருப்பது போல (உதாரணம் சரியா இருக்கா ரவி :)

ரகுநாதன் said...

//தமிழகம் தனிநாடானால் தமிழ் தழைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் புறக்காரணிகள் அளவுக்கு, தமிழர்களின் தமிழை மதிக்கா உளப்பாங்கே பெரும் தடையாக உள்ளது. முதலில், இந்த உளப்பாங்கு மாற வேண்டும்.//

சரியாக கூறினீர்கள் ரவி

செல்வா said...

இரகுநாதன், உங்கள் கட்டுரையின் கருத்துகளும், கருத்தோட்டமும், எளிமையான, நேர்த்தியான நடையும் வியப்பூட்டின. பலரும் நல்லுணர்வுடன் ஈடுபாடுகொள்ளுமாறு மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி. தமிழ் விக்கிப்பீடியா மொத்த பை'ட் அளவிலும், 500 பை'ட் அளவைத் தாண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கை அளவிலும் இந்திக்கு அடுத்ததாக உள்ளது. இந்தி மொழி விக்கி கடந்த பிப்பிரவரி மாதம்தான் தமிழ் விக்கியை விஞ்சியது. தமிழர்களில் இன்னும் 20-40 பேர் வந்து கூட்டுழைப்பு நல்கினால் தமிழ் விக்கிப்பீடியா முதல் 20 மொழிகளில் ஒன்றாக இருக்கும். நாம் உலக மொழிகளில் முதல் 8 மொழி விக்கிகளில் ஒன்றாக இருக்கவும் நல்ல வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வளவு பயனுடையதாக இருக்ககூடும் என்று எண்ணினால் உடனே செய்ய வேண்டும் என்னும் உந்துதல் பிறக்கும்! எதைப்பற்றி என்றாலும் தமிழில் தரமான தகவலும் விளக்கமும் கிடைக்கும் என்னும் நிலை வர வேண்டும். வரும் என்றே திண்ணமாக நம்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பன்னூறு தமிழ் மக்கள் பங்களிக்கும் காலம் மிக
விரைவில் வரும்.
உங்கள் மிக அருமையான கட்டுரைக்கு மீண்டும் நன்றி, பாராட்டுகள்.

செல்வா

ரகுநாதன் said...

செல்வா ஐயா,

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விக்கிபீடியா பற்றி முன்னரே அறிந்தும் தமிழ் விக்கி பற்றி தெரியாமல் இருந்தேன். தற்செயலாக தமிழ் விக்கி பக்கம் வந்து அது பற்றி அறிந்து வியந்து கட்டுரைகள் வரைகிறேன்.. இருந்தும் நேரத் திட்டமிடல் இல்லாததால் சரிவர பங்களிக்க முடியவில்லை. இந்த காரணம் ஏனையோருக்கும் பொருந்தும்.

//எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வளவு பயனுடையதாக இருக்ககூடும் என்று எண்ணினால் உடனே செய்ய வேண்டும் என்னும் உந்துதல் பிறக்கும்! எதைப்பற்றி என்றாலும் தமிழில் தரமான தகவலும் விளக்கமும் கிடைக்கும் என்னும் நிலை வர வேண்டும். வரும் என்றே திண்ணமாக நம்புகிறேன்.//

ஆம். கடையை விரித்து நல்ல பொருட்களை வைப்போம். கொள்வதற்கு மட்டுமல்ல அதை அழகுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் ஆட்கள் வருவார்கள் என நம்புவோம்.

உங்கள் பாராட்டுகள் மேலும் விக்கியில் பங்களிக்க ஊக்கம் அளிப்பதாய் உள்ளது. நன்றி :)

Post a Comment