Tuesday, October 27, 2009

பதிவுகளுக்கும் த.வி கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுகள்

தமிழ் பதிவர்கள் இப்புவியின் பல பகுதிகளிலுருந்தும் பல்வேறு துறைகளில் பதிவுகள் இட்டுவருகையில் கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவர்களது பங்காற்றல் இருக்குமானால் அதன் செறிவும் வளர்ச்சியும் போற்றத் தக்கதாக இருக்கும். கணினியில் தமிழை படிக்கவும் எழுதவும் நன்கு அறிந்த தமிழ்பதிவர்கள் விக்கிப்பூடியா பங்காற்றலில் எதிர்கொள்ளும் சில வேற்றுமைகளை சக பதிவர் என்ற முறையில் இங்கு பட்டியலிட முயல்கிறேன்.

நடை:முதலாவதாக நாம் காணும் வேற்றுமை எழுதும் நடையிலாகும். பதிவுகளில் முன்னிற்பவருடன் உரையாடும் முன்னிலையில் எழுதலாம்; த.வியில் படர்க்கையில் பாடபுத்தக நடையில் எழுதப்பட வேண்டியுள்ளது. காட்டாக,"மயிலாப்பூரில் கபாலி கோவில் போயிருப்பீங்க,அங்க.." என்பதை த.வியில் "[[சென்னை]], [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] அமைந்திருக்கும் கபாலீசுவரர் கோவிலில்.." என்று எழுத வேண்டி யுள்ளது.

தவிர தேவையற்ற வருணனைகள்,மரியாதை மொழிகள் மற்றும் பட்டப்பெயர்கள் தவிர்க்கப் பட வேண்டும். "துள்ளி விளையாடும் கயல்கள் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் பூஞ்சோலைகளுக்கிடையே அமைந்த அழகிய சாரதா தேவி கோவில்" என்றில்லாமல் "[[கர்நாடகா ]] மாநிலத்தில் [[சிருங்கேரி]] யில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் சாரதாதேவி கோவில் அமைந்துள்ளது"என்று எழுதுதல் வேண்டும்.வேண்டுமானால் அழகான சூழலில் என்று சேர்க்கலாம். விக்கிப்பீடியாவின் நடை கையேட்டை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

உசாத்துணைகளும் சான்றுகளும்:விக்கிப்பீடியாவின் அடித்தளமே சரிபார்க்கக்கூடிய தரவுகளை பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளே. இக்கட்டுரைகள் பலரால் உருவாக்கப் படுவதால் தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளும் சார்புகளும் கட்டுரையில் இடம் பெறுவதைத் தவிர்க்க எந்தவொரு உண்மைக்கும் சான்று கொடுத்தல் இன்றியமையாயதது. இந்திய அரசு நிருவாக அமைப்புகளின் திறனில் முதலாவதாக (கடைசியில்) தமிழகம் திகழ்கிறது என்று எழுதினால் பதிவுகளில் சான்று கொடுப்பதில்லை.ஆனால் விக்கியில் <ரெஃப்> மீயுரை ஆணைகளுக்கிடையே இந்த நாளன்று வெளியிட்ட இந்திய உள்துறை அறிக்கை எண்.. என்ற சான்றினை அளிக்க வேண்டும்;அல்லது செய்தி வந்த நம்பத்தகுந்த பதிப்புகளின் விவரம் வேண்டும்.
உணர்ச்சி வயப்படும் பதிவர்கள் இந்த சான்று தேவை என்ற குறிப்பினால் பாதிக்கப்படுவதையும் பார்க்கலாம். வாக்கு கொடுத்தல் என்பது இந்திய கலாசாரத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதால் தங்கள் வாக்கிற்கு சான்று கோருதல் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுவோரும் உண்டு. ஆங்கில விக்கிப்பீடியர்களுக்கு சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்பதற்கும் சான்று இணைப்பது இயல்பாக உள்ளது.

வடிவமைப்பு:பதிவுகள் எண்ணவோட்டதின் ஒழுக்கோடு எழுதப்படுபவை.ஆயின்,விக்கி கட்டுரைகளில் முகவுரை (சுருக்கம்), ஆரம்ப காலத்திலிருந்து கால ஓட்டத்துடன் இயைந்த வளர்ச்சி,தாக்கங்கள்,சாதனைகள் என பல்வேறு பத்திகளாக பிரிக்கப்படுதல் முதன்மையான தேவையாகும். பல கட்டுரைகளில் தகவற்பெட்டி வார்ப்புரு ஒன்றில் சுருக்கமான தகவல்களை அளிக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் தொடர்புடைய இணைப்புகள்,மேலும் அறியக்கூடிய உசாத்துணைகள் இவற்றை வெளியிடுதல் கட்டுரையை வளப்படுத்தும்.இந்த விக்கிப்பீடியா பக்கம் உங்களுக்கு உதவும்.

உரிமை இல்லாமை:விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் குனூ தளையறு ஆவண உரிமத்தின் கீழ் அளிக்கப்படுவன. எளிய மொழியில் இக்கட்டுரைகளை யாரும் நகலெடுக்கவோ,மாற்றவோ இயலும். விக்கிப்பீடியாவின் எந்தப் பயனரும், பதியாத வருனருட்பட, கட்டுரைகளில் தவறுகளை திருத்தவோ, செம்மையுறச் செய்யவோ இயலும். இந்நதிலையில் பதிவுகளில் தமது ஆக்கங்களுக்கு முழு பொறுப்பேற்றிருந்த பதிவர்கள், அவ்வாறின்றி தங்கள் விக்கி ஆக்கங்கள் பலவாறு மாற்றமடையும்போது வருந்துவதும் உண்டு. பலரும் ஒருங்கிணைந்து ஆற்றும் பணியிது என்பதை எண்ணத்தில் கொள்ள மறந்தவர்கள் இவர்கள். அதே நேரம்,ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள உரையாடல் கீற்றில் (tab), மாற்றங்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பாலனவர்களின் கருத்து ஏற்கப்படுகிறது.

பின்னோட்டம் இல்லாமை:பதிவர்களின் முதன்மையான மற்றொரு மனத்தடங்கல் தாம் எழுதியவை குறித்த பின்னூட்டம் இல்லாமை. பதிவுலகில் தமது எழுத்தின் தாக்கத்தினைக் குறித்த மறுமொழிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிந்தவர்கள், விக்கியில் சிறப்பான ஒரு ஆக்கத்தை அளித்தும் அது குறித்த எந்த பின்வினையும் இன்றி உற்சாகம் இழக்கிறார்கள். சக விக்கிப்பீடியர் அவரது பயனர் பக்கத்தில் பாராட்டி உற்சாகப்படுத்தினாலும், படிப்பவர் எதிர்வினை யின்றி வெறுமையாக உணர்கிறார்கள். பயனை எதிர்நோக்காது தமிழன்னைக்கு செய்யும் வழிபாடாக கொள்ளுதல் வேண்டும்.

காப்புரிமையற்ற படிமங்களை இணைத்தல்:கட்டுரையை வளப்படுத்த படிமங்கள் அவசியம். பதிவுகளுக்கு இணையத்தில் கிடைக்கும் எந்த படிமத்தையும் இணைக்கிறோம். ஆனால் விக்கிப்பீடியா தளத்தில் இணைக்கப்படும் படிமங்கள் காப்புரிமை அற்றவையாக இருக்க வேண்டும். பொதுவாக நாமே எடுத்த,வரைந்த,ஆக்கிய படிமங்களுக்கு அளிப்புரிமை அளித்தல் எளிது. இணையத்தில் இருந்து எடுத்ததாயின் அதன் காப்புரிமை குறித்து அறிந்து,வேண்டுமாயின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று இணைத்திட வேண்டும். இதற்கான விதிமுறைகள் சற்றே கடினமாக உள்ளது.

விக்கி மென்பொருள் இயக்கம்:பெரும்பான்மையான தமிழ் பதிவர்களுக்கு இது ஒரு தடையாக இல்லாதபோதும் ஒருசிலருக்கு இதுவும் ஒரு தடையாக உள்ளது. இதனை போக்குவதற்கு பல விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மிக நல்ல கட்டுரை மணியன்.

**

புதிய பங்களிப்பாளர்கள் உள்ளிணைப்பு தருதல், தடித்த எழுத்துகளில் எழுதல் போன்ற விக்கியாக்கங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற பங்களிப்பாளர்கள் திருத்தி உதவுவார்கள்.

**

இயன்ற அளவு நல்ல தமிழில், தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து எழுத வேண்டும்.

**

பதிவுகள் போல் அடிக்கடி கிடைக்கும் மறுமொழிகள், பிற வெளிச்சங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து நல்ல முறையில் பங்களிப்பவர்களைத் தற்போது முதற் பக்கத்தில் அறிமுகப்படுத்துகிறோம். இது இன்னும் பலரைப் பங்களிக்க ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

செல்வா said...

மிக அற்புதமாக எழுதி அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் மணியன். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

"தமிழன்னைக்கு செய்யும் வழிபாடாக கொள்ளுதல் வேண்டும்." என்பதை விரும்பாதவர்களும் இருப்பார்கள். உண்மையில், கற்றவர்கள், தெரிந்தவர்கள், தங்கள் மொழியில் மற்றவர்களுக்கான
பொறுப்பான கருத்துப் பகிர்வு, ஆக்கம், "தொண்டு"
என்று நினைக்கலாம்.

இன்னொரு முக்கியமான உண்மை என்னவென்றால், யார் பங்களித்தார்கள், என்ன பங்களித்தார்கள் என்பதை மறுக்க ஓண்ணாதவாறு துல்லியமாக தானியங்கியாய்ப் பதிவாகி வைத்திருக்கும். கட்டுரை பற்றிய முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுவதும்,
அது பற்றி வளர்முகமாகக் கருத்தாடுவதும், நன்னோக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு உரையாடுவதும் குறிப்பிடத்தகுந்தவை.

RAGUNATHAN said...

மிக நல்ல கட்டுரை. புதியவர்களை இங்கே (விக்கியில்) வந்து பங்களிக்கச் செய்ய வேண்டும். எனவே இன்னும் எளிமையாக விக்கியின் செயல்பாட்டை உங்களைப் போன்றோர் எழுதினால் அவர்களுக்கு ஊக்கம் அளிக்ககூடும். நாம் இங்கு எழுதும் போதே விக்கியின் நடையில் எழுதினால் இவிங்க இப்படிதான் என்று நினைக்க வைத்துவிடும்.

மணியன் said...

ரவி,செல்வா,ரகு..பாராட்டுகளுக்கு நன்றிகள்!! இதனால் பதிவர்கள் விக்கிப்பீடியர்கள் ஆவார்களாயின் மட்டுமே பயனளித்ததாகும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ரகு, நீங்கள் சொல்வது முக்கியமான கருத்து. விக்கி நடையை இன்னும் எளிமைப்படுத்த முயல்வோம். குறிப்பாக, உதவிக்கட்டுரைகளையாவது. தகுந்த இடங்களில் ஒளிப்படங்கள், நிகழ்படங்கள் சேர்ப்பதும் உதவும்.

Post a Comment