Thursday, October 29, 2009

[தமிழ் விக்கிப்பீடியா] தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூட பங்களிப்பு குறைவே. நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.

அவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து, நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்?

(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)

எஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர்? அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட்பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன.

அவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை? மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.

அவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?

அப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு?

... என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.

தொலைநோக்கின்மை

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும் பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.

அதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. "நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது" என்று எண்ணச் செய்கிறது.

நான்

"நான்" என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.

மாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம்.

தொல்லைத் தலைவர்

ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.

திட்டத்தின் தனித்துவம், தேவை

இணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.

திட்டத்தின் அளிப்புரிமை


திட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.

திட்டத்தின் வணிகப் பெறுமதி

திறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

தமிழர் பண்பு

தமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்றும் சிலர் கருதுகின்றனர். பார்க்க - தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.

**

எல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா?

எல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.

சிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.

சரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா?

அப்படியும் சொல்ல இயலாது :) கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.

பொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு!!).

இன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.

சரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி?

ஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.

இயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.

திட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.

அவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.

**

இக்கட்டுரை மீள்பதிப்பாக இடப்படுகிறது. முதற்பதிப்புக்கான மறுமொழிகளைப் பார்க்க:

தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

6 comments:

தமிழநம்பி said...

ஐயா,
வணக்கம்.

கட்டுரைகளை 'விக்கிபீடியா'வில் எப்படி இணைப்பது எனபதைத் தெளிவாக விளக்கி ஓர் பதிவு தந்தால் பயனாக இருக்கும்.

விக்கிபீடியாவில் சென்று பார்த்தால், சரியாக விளங்கவில்லை.

எளிமையாகப் புரியுமாறு ஒர் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வணக்கம் ஐயா,

கட்டுரை உருவாக்குவது குறித்த இந்த உதவிப் பக்கம் பயன்படுகிறதா பாருங்கள்? கட்டுரை உருவாக்கும் முறையை இன்னும் இலகுவாக விளக்க முயல்கிறோம். நன்றி.

நற்கீரன் said...

Also see:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF(%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)

RAGUNATHAN said...

//எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.//
ஆனால் அவர்கள்தான் நிறைய பங்களிப்பு செய்துள்ளார்கள். நாம் அமைதியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதால் தான் தமிழின் அருமை உணராமல் தமிழ்நாட்டு பங்களிப்பாளர்கள் குறைவாக உள்ளனரோ?

மிக நேர்த்தியான கேள்விகள் நடு நிலை மாறா பதில்கள் ரவி :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ரகு,

போர்ச்சூழலில் நேரடியாக அகப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களையே குறிப்பிட்டேன். அவர்களால் உடனடியாக, நேரடியாக பங்களிக்க இயலாதல்லவா?

நிழலில் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் தமிழின் அருமையை ஈழத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நூலகம் திட்டம், விக்கிப்பீடியா திட்டம் ஆகியவற்றில் ஈடுபடும் பல நண்பர்களுக்கு யாழ் நூலக எரிப்பு போன்ற நிகழ்வுகள் உந்துதல் அளிக்கின்றன.

தமிழ்நாட்டுத் தமிழர்களோ, கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிக்கும் தண்ணீருக்குள் உட்கார்ந்திருக்கும் தவளைகள் போல் இருக்கிறோம் :(

RAGUNATHAN said...

//தமிழின் அருமையை ஈழத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.//

ஆம் ரவி, நாம் தான் டமில் படிக்கிறோம். ஒர்க் பண்ணி, போன் பண்ணி, மீட் பண்ணி டமில் பேசுகிறோம். பண்ணி தமிழ் ஆகிவிட்டது. உலக அளவில் சுற்றி, பணியாற்றிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிறைய பேர் குறிப்பிடத்தக்க அளவில் விக்கியில் தமிழ் தொண்டு செய்கிறார்கள். ஆனால் இங்கே பிழைக்கும் தமிழர்கள் அவர்தம் குழந்தைகள் "என்கு டமில் தேர்யாத்து" என்கிறார்கள். அப்பாவும், அம்மாவும் மம்மிகளாகவும், டாடிகளாகவும் ஆனா தமிழ் எப்படி தழைக்கும்? :(

Post a Comment